மருது சகோதரர்கள், சிங்காரவேலன், ஜீவானந்தம், ஈ.வே.ராமசாமி போன்ற போராளிகள், மக்களிற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் மனிதர்கள் களமாடிய தமிழ்மண்ணின் முதல்வர் பன்னீர்செல்வமும் அம்மாவின் தொண்டர்களான மந்திரிகளும் (அம்மாவின் குண்டர்கள் என்று மாறி வாசிக்கக் கூடாது) கடை கடையாக தேடி அலைகிறார்கள்.
மக்களிற்காக, நாட்டிற்காக போராடி தலைவர்களாகும் அரசியல் எல்லாம் தேவையில்லை அம்மாவின் முன்னால் குனிந்தால் போதும் என்று ஒரு புதுவழியை கண்டு பிடித்து இரண்டு முறை முதல்வராகிய மாண்புமிகு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மிகவும் களைத்து போயிருந்தார். மனைவியின் குங்குமப்பொட்டை விட பெரிதான அவரது குங்குமப்பொட்டு வியர்வையில் கரைந்து போயிருந்தது. (குங்குமப்பொட்டு வைத்தால் என்ன, நான் பிராமணத்தி தான் என்று சாதித்திமிர் பேசினால் என்ன அவங்களும் திராவிடக் கட்சி தான் என்று சான்றிதழ் தர "தமிழ் உணர்வாளர்கள்" தயாராக இருக்கிறார்கள்) தேடியது கிடைக்காததால் உள்ளே இருக்கும் அம்மாவிடம் தயங்கியபடியே சொல்கிறார்கள் "அம்மா எல்லா இடமும் தேடி விட்டோம் ஜாமீன் என்று ஒரு மீன் கடலிலேயே இல்லையாம்".
இந்த வடிவேலின் பகிடி அ.தி.மு.க என்னும் முட்டாள், அடிமை, குண்டர்களின் கூட்டத்தில் நடப்பதற்கு எல்லாவிதமான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சில "தமிழ் உணர்வாளர்களும் சில ஈழத்தேசியவாதிகளும் புலம்பெயர் தமிழரின் சமய, சமுதாய பெரும் காய்களும் மக்கள் சொத்தை கொள்ளையடித்து உள்ளே போயிருக்கும் ஊழல் தாய் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக கூவும் கூச்சல்கள் அ.தி.மு.க அடிமைகளையே கதிகலங்க வைத்து விடும்.
தன் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தைரியம் இல்லாமல் பதினேழு வருடங்கள் இழுத்தடித்த ஜெயலலிதாவை சீமான், நெடுமாறன், வை.கோபாலசாமி கும்பல் சிங்கள அரசை எதிர்க்கும் வீரப்பெண்மணி என்றது. ஒரு ரூபாய் சம்பளம் என்று நாடகம் போட்டுக் கொண்டு தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்த தமிழ்நாட்டு மக்களின் பணத்தையே கொள்ளையடித்த ஜெயலலிதா ஈழமக்களை காப்பாற்ற வந்த ஈழத்தாய் என்று இந்தக் கும்பல் அழிவின் விளிம்பில் இருக்கும் ஈழமக்களை ஏமாற்றியது. ஈழமக்களின் துயரம் கண்டு தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்புக்குரல் கொடுப்பதை தடுப்பதற்காகவே கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலலிதா போன்ற பெருந்தலைகள் எல்லாத்தையும் புடுங்குவார்கள் மற்றவர்கள் ஆணியே புடுங்க தேவையில்லை என்ற வசனத்தை இந்த "தமிழ் உணர்வாளர்கள்" பொறி பறக்க பேசுவார்கள்.
தமது சக்தியை எல்லாம் மக்களிற்காக கொடுத்து தலைவர்கள் ஆன தமிழ்சமுதாயத்தில் தொண்டை கிழிய கத்தி கத்தி பேசி தனது சத்தத்தை கொடுத்து தலைவர் ஆகியவர் செந்தமிழன் சீமான். ஜெயலலிதாவின் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அருள்வாக்கு சொன்னவர் ஆளையே காணவில்லை. தமிழ்மக்களின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அண்ணனின் நரம்புகள் புடைக்கவில்லை. தொண்டையிலிருந்து ஒரு சொல்லுக்கூட வரவில்லை. "காத்து தான் வருகுது".
'தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பதவியினை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. செல்வி ஜெயலலிதா அவர்கள் 2011 ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக நான்காவது தடவை பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான, உறுதியான, துணிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வந்தவர். ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவர். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கும் தமிழீழத் தாயக மக்களால் தமக்கான ஒரு பாதுகாப்புக் கவசமாக உணரப்பட்டவர். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழ் மக்களின் பெயரால் இன்னும் எத்தனை முட்டாள்தனங்களை, அயோக்கியத்தனங்களை இவர்கள் செய்யப்போகிறார்கள். தனது ஊழல் வழக்கை இழுத்தடிப்பதற்காக புலிகளால் தனக்கு பெங்களூரில் ஆபத்து வரலாம் என்ற பச்சைப் பொய்யை நீதிமன்றத்திற்கு சொன்ன ஜெயலலிதா ஈழமக்களின் பாதுகாப்பு கவசமாம் "பிரதம மந்திரி" உருத்திரகுமாரன் சொல்கிறார். சிங்களப் பெருந்தேசியவாதிகளின் கொலைக்கரங்களிற்கு தப்பி தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த ஈழத்தமிழ் மக்களை இராணுவமுகாம்கள் போன்ற முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ஜெயலலிதா ஈழமக்களிற்கு ஆதரவானவராம் அண்ணன் சொல்கிறார்.
ஜெயகுமாரி என்ற தாய் தனது பிள்ளைகளை காணாமல் செய்த இலங்கை அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக பொய்வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அந்த தாய்க்கு மிஞ்சி இருந்த சின்னஞ்சிறு குழந்தை விபூசிகாவையும் பிரித்து வைத்திருக்கிறார்கள். சப்புரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் சுதர்சனை எந்தவித காரணமும் இன்றி சிறையில் வைத்திருக்கிறார்கள். இவர்களின் துன்பங்களும், துயரங்களும் "பிரதமர்" உருத்திரகுமாரனிற்கும், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று லண்டனில் பிரார்த்தனை கூட்டம் போட்ட கோமாளிகளிற்கும் தெரியவில்லை. அவர்களை விடுதலை செய்ய சொல்லி நடந்த போராட்டங்கள் இவர்களின் கண்களிற்கு தென்படவில்லை. ஆனால் ஜெயலலிதாவை ஊழலிற்காக கைது செய்தவுடன் இவர்களிற்கு கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இலங்கை அரசுடன் சேர்ந்து இலங்கைத்தமிழ் மக்களைக் கொன்ற அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் மகிந்த ராஜபக்சவை தண்டிப்பார்கள், தமிழ் மக்களிற்கு தீர்வு பெற்று தருவார்கள் என்று சொல்லும் நாடு கடந்த பிரதம மந்திரி உள்ளூர் கூட்டாளி ஜெயலலிதாவிற்காக கண்ணீர் விடுவது இயல்பான ஒன்று. கள்ளரை கள்ளரே காமுறுவர்.