இன்றைய அரசியல் அமைப்பும் அதன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நடைமுறையில் இருக்கும் வரை தேசிய இனப் பிரச்சினைக்கோ அல்லது தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கோ தீர்வுகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை.
அதேபோன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை ஆள் மாற்றம் செய்வதாலும் எவ்வித பயனும் ஏற்படமாட்டாது. எனவே இன்றைய அரசியலமைப்பு முற்று முழுதாக உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் உரியனவாக மாற்றியமைக்கப்படுவதன் மூலமே நிறைவேற்று அதிகார சர்வாதிகாரத்தை ஒழிக்க முடியும். இதனைத் தேர்தல்கள் மூலம் ஒழித்துக் கட்ட முடியாது. இன்று நிறைவேற்று அதிகாரம் பாசிசமாகவே முன்னெடுக்கப்படுகின்றது. அதனை எதிர்த்து நிற்பதற்கு மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வும் வெகுஜனப் போராட்ட அணிதிரட்டலும் அவசியமானதாகும். அதற்கு ஜனநாயக சக்திகளும் இடதுசாரி முற்போக்கு இயக்கங்களும் ஐக்கியப்பட்டு தலைமைத் தாங்க வேண்டும்.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் நான்காவது வருடாந்த நிறைபேரவைக் கூட்ட முடிவில் கட்சியின் 36வது ஆண்டு நினைவாக யாழ் நகரில் ஆற்றிய உரையில் அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் குறிப்பிட்டார். தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படிக் கூட்டத்தில் தோழர் செந்திவேல் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது.
நாட்டின் இன்றைய நிலையில் பொருளாதாரப் பிரச்சினைகள் அடிப்படை முரண்பாடு கொண்ட பிரச்சினையாகவும் தேசிய இனப் பிரச்சினை பிரதான முரண்பாடுடைய பிரச்சினையாகவும் இருந்து வருவதைக் காண முடிகின்றது. இவற்றால் நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மோசமான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி நிற்கின்றனர். அவற்றுக்குத் தீர்வு காணும் திட்டம் எதுவும் இன்றைய ஆட்சியினரிடம் இல்லை. அதேவேளை தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் மற்றும் சிறு சமூகங்களை உள்ளடக்கியுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கு ராஜபக்ஷ சகோதரர்களது ஆட்சி தீர்வு காணப் போவதும் இல்லை.
யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் அரசியல் தீர்வு காணும் நல்லெண்ணம் அரசாங்கத் தரப்பிலும் சிங்கள் பௌத்த பேரினவாதிகளிடமும் காணப்படவில்லை. சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளும் மதவெறிக் கொண்டவர்களும் மேன்மேலும் தமது தீய எண்ணங்களையும் நோக்கங்களையுமே வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் தேசிய இனங்களை ஒடுக்கும் ஒடுக்குமுறையாளர்களே காணப்படுகின்றனர்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் நவதாராள பொருளாதாரக் கொள்கையும் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவைகளாகவே ராஜபக்ஷ சகோதர ஆட்சியினால் திட்டமிட்ட வழிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்போது கடும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டும் வருகின்றன. ஜனநாயகம் மனித உரிமைகள், எழுத்து, பேச்சு, கூட்டம் கூடும் சுதந்திரம் என அனைத்தும் நிறைவேற்று அதிகாரத்தால் அடித்து வீழ்த்தப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கும் சட்ட ஆட்சியும் கேலிக்குரியனவாக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் ராணுவ நிலை கொள்ளல் நீடிக்கின்றது. மக்களது நிலங்கள், குடியிருப்புகள் ராணுவப் பிடிக்குள் இருந்து வருகின்றன. உதாரணமாக வடக்கில் வலி வடக்கும் கிழக்கில் சம்புருமாகும். வடக்கு மாகாணசபை அரசாங்கத்திற்கு ஆதரவு தராத ஒரு சபை என்பதால் ஏனைய சபைகளுக்கு இருக்கும் அற்ப அதிகாரங்கள் கூட வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. வடக்கு கிழக்கில் யுத்த அழிவுகளும் இழப்புகளும் மீட்கப்படவில்லை. அரசாங்கம் அது பற்றி அதிக அக்கறை காட்டுவதாகவும் இல்லை. யாவும் பேரினவாத அளவுகோல் கொண்டே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ராஜபக்ஷ சகோதரர்களது ஆட்சியையும் அதன் மோசமான பேரினவாத நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு பரந்த சக்திகளை ஐக்கியப்படுத்தி வெகுஜனப் போராட்டத்தில் முன்செல்லக்கூடிய ஆற்றலைத் தமிழர் தரப்புக் கட்சிகள் கட்டியெழுப்ப முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் கடந்த கால வரலாற்றுப் பட்டறிவைக் கொண்டு புதிய கொள்கைகளையோ புதிய வேலைத் திட்டங்களையோ உருவாக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றார்கள். அவர்களது பிரதான இலக்கு பாராளுமன்ற ஆசனங்களும் மாகாண, உள்ளுராட்சிப் பதவிகளுக்கானவையாக மட்டுமே இருந்து வருகின்றன. அவர்களிடம் தமிழ்த் தேசியத்தைத் தமக்குரிய கருவியாகப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர அதனைப் பழைமைவாதக் கருத்தியல் சிந்தனைத் தடத்திலிருந்து நகர்த்தி முற்போக்கானத் தமிழ்த் தேசியமாக முன்னெடுக்கத் தயாராக இல்லை. மீண்டும் பழைமைச் சிந்தனை, இன உணர்வு, இனவாதம், இனவெறி என்பனவற்றைக் கைப்பிடித்தே பயணித்து வருகிறார்கள். சிங்கள உழைக்கும் மக்களையும் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளையும் நேச அணிகளாகக் கொள்வதற்கு உரியக் கொள்கை அவர்களிடம் இல்லை. சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கும் சாதாரண ஒடுக்கப்படும் சிங்கள மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காணத் தமிழ்த் தேசியவாதப் பழைமைச் சிந்தனை பெரும் தடையாகவே இருந்து வருகின்றது.
அதேவேளை இந்திய, அமெரிக்க, மேற்குலக ஆட்சிகள் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுத் தேடித் தருவார்கள் என்ற நம்பிக்கையில் இன்னமும் தமிழ்க் கட்சிகள் இருந்து வருகின்றன. இத்தகைய சர்வதேச வல்லாதிக்க சக்திகளை நம்பி உலகில் எங்குமே ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உண்மையான விடுதலையைப் பெற்றதாக வரலாறு இல்லை. சர்வதேச விசாரணையும் சர்வதேசம் எனப்படும் நாடுகளும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு கொண்டுவர மாட்டாது. எனவே சொந்த மக்களை அரசியல் விழிப்புணர்வுக்குட்படுத்தி பரந்துபட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதே ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் அனைத்து மக்களுக்கும் முன்னால் உள்ள மாற்று அரசியல் பாதையும் பயணமுமாக இருக்க முடியும். இதில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரள்வதை முன்னிறுத்தியே எமது கட்சி செயல்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.