04_2008.jpgமகாரஷஹ்டிர அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவதை மறுக்கின்றது


மும்பய்க் கலவரம் நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டுப் பலரைக் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருக்கிறது.

எனினும், அரசியல் செல்வாக்குமிக்க குற்றவாளிகளுள் ஒருவர்கூட இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாகக் கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை.


""நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறீ கிருஷ்ணா கமிசன் அறிக்கையை அமல்படுத்துவோம்'' என்ற வாக்குறுதியை அள்ளி வீசி அதிகாரத்தைப் பிடித்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் மும்பய்க் கலவரம் தொடர்பான 1,371 வழக்குகள் போலீசு விசாரணையின் பொழுதே குழிதோண்டி புதைக்கப்பட்டன. 539 வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்; 253 வழக்குகள் நீதிமன்ற விசாரணை நாடகத்தில் சிக்கிக் கொண்டுள்ளன; 93 வழக்குகள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படாமல், அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.


பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவரும் இப்படிப்பட்ட நிலையில், சிறீகிருஷ்ணா கமிசன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் உச்சநீதி மன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநில காங்கிரசு கூட்டணி அரசு, இவ்வழக்கு தொடர்பாக கடந்த சனவரி 16 அன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், இந்து மதவெறிக்குக் காங்கிரசு பாதுகாவலனாக இருந்து வருவதை மீண்டும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.


மும்பய்க் கலவரம் தொடர்பாக, சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே மற்றும் அக்கட்சியின் நாளேடு ""சாம்னா'' மீதும் ஒன்பது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மூன்று வழக்குகள் அரசாலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன; நான்கு வழக்குகளில் குற்றப் பத்திரிகை வினையப்படாததால் (Framing of charges) பால் தாக்கரேயும், பிற குற்றவாளிகளும் அவ்வழக்குகளில் இருந்து 1996ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டு விட்டனர்; மீதமுள்ள இரண்டு வழக்குகளிலும், பால் தாக்கரே நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.


இவ்விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு, மகாராஷ்டிரா உயர்நீதி மன்றத்தால் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. ""பழைய வழக்குகளை மீண்டும் தோண்டுவதால், நீதி வழங்கிவிட முடியாது; மாறாக, அது மத ரீதியான இறுக்கத்தைத்தான் உருவாக்கும். ஏற்கெனவே காலம் கடந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில், பால் தாக்கரேயை விடுதலை செய்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தவறு காண முடியாது'' என உயர்நீதி மன்றம் தத்துவார்த்த விளக்கம் வேறு அளித்தது.


மகாராஷ்டிர மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ""பால் தாக்கரே மீதான மேல் முறையீட்டு வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததில் தவறு காண முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ""பால் தாக்கரே தொடர்பான மூன்று வழக்குகளில், குற்றச்சாட்டு குறித்த உண்மைத் தன்மையை நிரூபிக்க முடியாது; எனவே, இவ்வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுப்பது சாத்தியமற்றது'' எனக் கூறி, அவ்வழக்குகளை ஒரேயடியாகப் புதைத்து விட்டது.


மும்பய்க் கலவரத்தின்பொழுது, பால் தாக்கரேயின் தளபதியாகச் செயல்பட்டவர் மதுக்கர் சர்போத்தர். அவர், கலவர சமயத்தில் இராணுவத்திடம் பிடிபட்ட பொழுது, அவர் பயணம் செய்த ஜீப்பில் இருந்து உரிமம் பெறப்பட்ட துப்பாக்கி ஒன்று; உரிமம் பெறாத இரண்டு துப்பாக்கிகள், கொலைவாட்கள், ஹாக்கி மட்டைகள் உள்ளிட்டுப் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாகப் பதியப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்தும் மதுக்கர் சர்போத்தர் 199899ஆம் ஆண்டுகளிலேயே நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டு விட்டார். ""மேல் முறையீடு செய்வதற்குத் தகுதியற்ற வழக்குகள் இவை'' என உச்சநீதி மன்றத்திடம் கூறி, மதுக்கர் சர்போத்தருக்கு நிரந்தர பாதுகாப்பு அளித்துவிட்டது, காங்கிரசு கூட்டணி ஆட்சி.


ஷாநவாஸ் வாக்லே என்ற பதின்வயதுச் சிறுவன், கலவரத்தின்பொழுது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ""இது பச்சைப் படுகொலை'' எனக் குறிப்பிட்டுள்ள சிறீகிருஷ்ணா கமிசன், இச்சம்பவம் பற்றித் தனியாக விசாரணை நடத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. ஆனால், மும்பய் போலீசோ, இப்படுகொலை தொடர்பாக வழக்கு கூடப் பதிவு செய்யாமல், விசாரணை நிலையிலேயே இவ்வழக்கை ஊத்தி மூடி விட்டது. அதேசமயம், கொல்லப்பட்ட, ஷா நவாஸ் மீது போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


கலவரம் நடந்த சமயத்தில் பைகுல்லா போலீசு நிலைய ஆய்வாளராக இருந்த வாஹுலே என்ற மிருகம்தான் ஷாநவாஸைச் சுட்டுக் கொன்றான் என்பது ஊருக்கே தெரிந்த உண்மை. ஆனால், ""வாஹுலே, ஷாநவாஸைச் சுடவில்லை; அவருக்கும் இக்கொலைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை'' என மகாராஷ்டிரா அரசு சான்றளித்து, வாஹுலே மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகிறது.


""ஷாநவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டதை அச்சிறுவனின் தங்கை யாஸ்மின் நேரடியாகப் பார்த்திருக்கிறார்; மேலும் இச்சம்பவம் முழுவதற்கும் யாஸ்மின்தான் நேரடி சாட்சி'' என சிறீகிருஷ்ணா கமிசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிர மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ""ஷாநவாஸ் போலீசாரால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லாததால், போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ளது.


""ஸ்டார் மெட்டல்'' என்ற ஆலை வளாகத்தினுள், கலவரத்தின் பொழுது 11 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் 1996ஆம் ஆண்டே தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இவ்வழக்கிலும் மேல் முறையீடு செய்ய முடியாதென பிரமாணப் பத்திரத்தின் மூலம் மறுத்துவிட்டது, காங். அரசு.


மும்பய்க் கலவரத்தின்பொழுது இணை போலீசு கமிசனராக இருந்த ஆர்.டி.தியாகி, ஆய்வாளர் பி.டி. லஹானே ஆகிய இருவர் தலைமையில் சுலைமான் பேக்கரிக்குள் நுழைந்த போலீசு பட்டாளம், அப்பேக்கரியைச் சேர்ந்த ஒன்பது தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது. இப்படுகொலையை நடத்திய ஆர்.டி. தியாகியும், லஹானேயும், மற்ற ஏழு போலீசுக்காரர்களும் விசாரணை நீதிமன்றத்தால் நிரபராதிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இத்தீர்ப்பு வந்து ஐந்து ஆண்டுகள் ஓடிய பிறகு, ""மேல் முறையீடு செய்வதற்கு இவ்வழக்கு தகுதியுள்ளதுதானா?'' என ஆராயப் போவதாக பிரமாணப் பத்திரத்தில் ஒரு வெற்று வாக்குறுதியை அளித்திருக்கிறது, காங். கூட்டணி ஆட்சி.


ஹரி மசூதிக்குள் போலீசு படையோடு நுழைந்து அங்கு தொழுகை செய்து கொண்டிருந்த ஏழு முசுலீம்களைச் சுட்டுக் கொன்ற நிகில் காப்ஸே என்ற போலீசு ஆய்வாளர் மீது துறை ரீதியாகக் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும், பிரமாணப் பத்திரத்தில், ""இவ்வழக்கை விசாரிக்க மையப் புலனாய்வுத் துறையை ஏற்கெனவே அணுகியதாகவும், சி.பி.ஐ. விசாரிக்க மறுத்துவிட்டதாகவும், தற்பொழுது இவ்வழக்கை சி.பி.ஐ. வசமே ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க ஆலோசித்து வருவதாகவும்'' கூறி, தனது மெத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறது, காங். கூட்டணி.


மகாராஷ்டிர அரசால் கைகழுவப்பட்ட 1,317 வழக்குகளை மீண்டும் நடத்துவது பற்றி பிரமாணப் பத்திரத்தில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை; நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட 539 வழக்குகளில், 379 வழக்குகள் மேல் முறையீடு செய்வதற்குத் தகுதியற்றவை என்றும், 50 வழக்குகள் தொடர்பாக மேல்முறையீடு செய்வது பற்றி மாநில அரசின் சட்டத்துறை ஆராய்ந்து வருவதாகவும் கூறி, குற்றவாளிகளுக்குச் சாகதமாக நடந்து கொண்டுள்ளது, காங். கூட்டணி ஆட்சி. சுருக்கமாகச் சொன்னால், மும்பய்க் கலவரம் தொடர்பான வழக்குகளில் தாமதமாகவாவது நீதி கிடைக்கும் என்று யாராவது நம்பிக் கொண்டிருந்தால், பிரமாணப் பத்திரத்தின் மூலம் அந்த நம்பிக்கையில் நெருப்பை அள்ளிப் போட்டுவிட்டது, "மதச்சார்பற்ற' காங்கிரசுக் கட்சி!


· அன்பு