அண்மையில் நடந்து முடிந்த பேரழிவுகளுக்கு அடிப்படைவாத அமைப்புகளும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த அரசாங்கமுமே பொறுப்பேற்க்க வேண்டும். இதிலிருந்து இருதரப்பும் விடுபட முடியாது. மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற தலைப்பில் ஜூலை 18 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்க்கு முன்பாக சம உரிமை இயக்கம் நடாத்திய ஆர்பாட்டத்தி;ன் போது அந்த இயக்கத்தின் அமைப்பாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அளுத்கம, பேருவளை நகரங்களில் இடம்பெற்ற இனவாத, மதவாத வன்முறைகள் தற்போது நாட்டின் வேறுபகுதிகளுக்கும் பரவியுள்ளது. எமது நாடு வரலாறு பூராவும் பின்பற்றி வரும் பிழையான சமூக, பொருளாதார, அரசியல் கொளகைகளின் பிரதிபலனாக, நாடு 30 வருட காலம் பாரிய அழிவுகார யுத்தத்திற்குள் தள்ளப்பட்டது. இந்த யுத்தம் காரணமாக நாடும், நாட்டு மக்களும் பாரிய உயிரிழப்புகளுக்கும், பொருளாதார அழிவுகளுக்கும் முகம்கொடுக்க நேர்ந்தது. இன்னமும் இவ்வாறான நிலமைக்கான சூழல் எமது மண்ணை விட்டு அகலவில்லை. இன்னமும் எம்மத்தியில் இனவாத, மதவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கம் இவ்வாறான அமைப்புகளை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. இந்த போக்கு நாட்டுக்கு பேரழிவுகளையே கொண்டு வரும். இதற்கான பொறுப்பை அடிப்படைவாத அமைப்புகளும் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் அரசாங்கமுமே பொறுப்பேற்க்க வேண்டும். அரசாங்கம் எக்காரணம் கொண்டும் இதிலிருந்து விடுபடமுடியாது.
இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட முடிவது இனவாத, மதவாத, அடிப்படைவாத அமைப்புகளை துவம்சம் செய்வதுடன், தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் முறைமைகளை முற்றாக மாற்றியமைப்பதன் மூலமுமேயாகும். இதனை வென்றெடுப்பதற்காக்காக இனவாத, மதவாத, பிரதேசவாதங்களை புறம்தள்ளி நாம் அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். இதன் மூலம் மட்டுமே மேலும் பல பத்தாண்டுகளுக்கு தொடரக்கூடிய அழிவுகார யுத்தத்தை தோற்கடிக்க முடியும். இத்தேவையின் வெற்றிக்காக செயல்பட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.