"வர்த்தக அமைப்பின் பரிந்துரைகள் என்ற பெயரில் முழு உலகத்தையும் அழிப்பதற்காக இராட்சதன் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறான்"
ஒரு கவிஞன் கூறியதைப் போன்று எமது ஊர், தோட்டம், துரவுகள் மிகவும் செழிப்பானவை. அவற்றில் எதைப் போட்டாலும் துளிர்விட்டு வளரும். சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு சிங்களப்பாடல் இருக்கிறது. 'மொனவத முத்தே" (என்ன தாத்தா) என்று. வருங்கால சந்ததியினருக்காக மரம் வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் அந்தப் பாடலின் மூலம் உணர்த்தப்படுகிறது.
நாம் சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையையும் விதைக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சட்டத்தின் மூலம் மாங்கொட்டை, பலாக்கொட்டை, அந்த விதை, இந்த விதை என்று கூறி எவற்றையாவது விதைகளாக பயன்படுத்துவது சிறை செல்வதற்கான பாதையாக அமையலாம். '2013 விதைகள் மற்றும் நடுகைப் பொருள் சட்டமூலம்" என்ற பெயரிலான புதிய சட்டத்தின் மூலம், தற்போது அமுலிலிருக்கும் '2003ன் 22ம் இலக்க விதைகள் சட்டமூலம் இரத்துச் செய்யப்பட்டு புதிய சட்டம் அமுலுக்கு வரவிருக்கின்றது.
மேற்படி சட்டம் பத்து வருடங்களுக்கு முன்னமேயே உலகின் ஏனைய நாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்புகளின் பரிந்துரைகளுக்கு அமைவாக அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் விவசாயிகளுக்கு என்ன நடந்திருக்கிறது? அதற்கு சிறந்ததும் பிரபல்யமானதுமான உதாரணம் கனடாவிலிருந்து கிடைக்கின்றது.
அந்த சட்டத்தின்படி ஒரு கனேடிய விவசாயி கைது செய்யப்படுகிறார். அவருக்கெதிரான குற்றம் என்னவெனில் சட்டவிரோதமாக பட்டு விதைகளை உற்பத்தி செய்ததுதான். அந்த விவசாயி காற்றில் அடித்து வரப்பட்ட பட்டு விதைகளைப் பயன்படுத்தி அடுத்த போகத்திற்காக விதைகளை உற்பத்தி செய்திருந்தார்.
விதைகளை உற்பத்தி செய்யும் உரிமை சட்டப்படி விவசாயிகளுக்கு இல்லை. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மாத்திரமே அந்த உரிமை கிடைக்கிறது. கடைசியில் விவசாயி குற்றவாளியாக்கபட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இதனை எதிர்த்து உலகம் பூராவும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பே அவர் விடுதலை செய்யப்பட்டார். என்றாலும் உலகின் பெரும்பாலான நாடுகளில் விவசாயிகளுக்கு இந்த கசப்பான அனுபவத்திற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது இலங்கையிலும் அதற்கான வழிமுறைகள் விவசாயிகளுக்காக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தின் 1ம் பகுதியில் 2வது உறுப்புரையின்படி இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குப் புறம்பாக எந்தவொரு நபரும் விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விற்பனைக்காக வைத்திருப்பதோ,வர்த்தக நோக்கத்தில் வேறு நபர்களுக்கு வழங்குவதோ பரிமாற்றம் செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டமூலத்தின் பகுதி 11 (1) உறுப்புரையின்படி 'அனைத்து விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களை பயன்படுத்துபவர்" என்பதன் அர்த்தம் சட்டமூலத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, விதை உற்பத்தியாளர், இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர், விநியோகஸ்தர், ஒழுங்குபடுத்துபவர், மீள் பொதியிடுபவர், களஞ்சியப்படுத்துபவர், பிரதிநிதி, மொத்த விற்பனையாளர், சில்லறை வியாபாரி, எடுத்துச் செல்பவர், நடமாடும் விற்பனையாளர் என்ற வகையில் பல செயற்பாடுகள் சட்டமூலத்தில் அடங்கியுள்ளன.
இவற்றில் மிக முக்கியமான பகுதி என்னவென்றால், உற்பத்தியாளர், ஒழுங்குபடுத்துபவர் என்ற சொற்களாகும். பொதுவாக விவசாயிகள் ஒரு போக விளைச்சலில் அடுத்த போகத்திற்காக விதைகளை ஒதுக்கிக் கொள்கின்றனர். அதாவது விதைளை உற்பத்தி செய்கின்றனர். புதிய சட்டத்தின்படி விதைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதாயிருந்தால், இதற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக மாற வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் விதைநெல் அல்லது பரங்கிக்காய் விதையை அல்லது அவ்வாறான வேறு விதைகளை உற்பத்தி செய்வதும், எடுத்துச் செல்வதும் அருகில் வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. விதைகள் மாத்திரமல்ல சட்டமூலத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 'பணம் பெற்றுக் கொள்வதற்கான மரமாக வளரக்கூடிய மரக்கிளை, வேர், மரப்பட்டை போன்ற எதனையும் வைத்திருப்பதும், எடுத்துச் செல்வதும் தண்டனைக்குறிய குற்றமாகும்.
இந்த சட்டத்தின்படி, ஒரு நண்பரின் வீட்டிலிருந்து மரக்கிளை, மரக்கன்றுகள் நடுவதற்காக எடுத்து வருவதும் தண்டனைக்குறிய குற்றம். சட்டமூலத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4(6) உறுப்புரைக்கு ஏற்ப விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கும் மேலும் பல அதிகாரிகளுக்கும் அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் 13 (1) உறுப்புரைக்கு ஏற்ப, விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் இருக்கக்கூடும் என அவர்கள் கருதும் எந்தவொரு இடத்திற்கும் அனுமதியின்றி நுழையக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு உண்டு. அது மாத்திரமல்லாது, வாகனங்களை சோதனையிடவும், பொருட்களை திறந்து சோதனையிடவும், ஆவணங்களை கைப்பற்றவும், உரிமையாளர் எதிர்க்கும் பட்சத்தில் கதவுகளை பலவந்தமாக திறப்பதற்கும் நபர்களை கைது செய்வதற்கும் அதிகாரம் உண்டு.
இப்படியாக,விதை உற்பத்தியாளர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். சட்டமூலத்தின் 20(1) உறுப்புரைக்கு ஏற்ப விதைகள் உற்பத்தி, எடுத்துச் செல்லல் மட்டுமல்ல, அவற்றை சோதனையிடுவதை எதிர்த்தல் அல்லது வேறொருவரை தூண்டுதல் ஆகியன தண்டனைக்குறிய குற்றங்களாகும். குற்றவாளிகள் 1 முதல் 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனைக்கோ அல்லது 50000 ரூபா தண்டப்பணம் செலுத்துவதற்கோ அல்லது இரண்டுக்குமோ உட்படுத்தப்படலாம்.
சட்டமூலத்தின் 20 (8) (அ) உறுப்புரையின்படி அவ்வாறான விதைகள் அல்லது நடுகைப் பொருட்களை அழிப்பதற்கான செலவையும் குறித்த நபர் ஏற்க வேண்டும். சட்டமூலத்தின் 20 (3) உறுப்புரையில் கூறப்படுவதாவது எதிர்காலத்தில் நடக்கும் தவறுகளுக்காக 'நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலேயே அதே இடத்தில் தண்டப்பணத்தை அறவிடுவதற்கான முறையொன்று தயாரிக்கப்படும். அதாவது, வாகனங்களில் தண்டப்பணம் அறவிடப்படும் விதத்தில் விவசாயிகளிடமும் 'தண்டப்பண விளையாட்டில்" அரசாங்க அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவர்.
இப்போது நாளொன்றில் விதிக்கப்படும் தண்டப்பணச் சீட்டுக்களின் எண்ணிக்கைகளின் இலக்கு பொலிஸாருக்கு வழங்கப்படும் விதத்தில், அவ்வாறான இலக்கு விவசாய அதிகாரிகளுக்கும் வழங்கப்படக்கூடும். சட்டத்தின் 16ம் உறுப்புரைக்கமைய தண்டப்பணம் இதனை விட அதிகரிக்கப்படலாம். அதற்கேற்ப பரீட்சிப்பதற்கான கருவிகளை குறித்த இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கான செலவையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்க வேண்டும். 16(4) உறுப்புரையின்படி அந்தத் தண்டப்பணத்தை 'அந்த நீதிமன்றம் தனது நீதிமன்ற அதிகாரத்தை பொதுவாக செயற்படுத்தும்போது, விதிக்கப்படக் கூடிய தண்டத்தின் அளவைவிட அதிகமானாலும்,அதனை பொருட்படுத்தாது அறவிடப்பட முடியும்". தற்போதைய பொது சட்டத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு தண்டனை விதிக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. விதைகள் உற்பத்தி, விற்பனை, பரிமாற்றம் ஆகியன இதற்குப் பின்னர் நிறுவனங்களால் மாத்திரமே மேற்கொள்ளப்படும். சட்டத்தின் 10(2) உறுப்புரையின்படி பார்த்தால், அது தனியார்மயமாவதோடு, தனியார் நிறுவனங்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்காக அரச நிறுவனங்களும் பயன்படுத்தப்படும் என்பது தெரிகிறது.
சுருக்கமாகச் சொல்வதாயிருந்தால், சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் விதை உற்பத்தி செய்தல் அல்லது இதுவரை நடந்ததைப் போன்று ஏனைய விவசாயிகளோடு அவற்றை பரிமாறிக் கொள்ளுதல் தடை செய்யப்படும். விதைகள் அல்லது நடுகைப் பொருட்களை தாமே உற்பத்தி செய்யாது நிறுவனங்களிலிருந்து விலைக்கு வாங்க வேண்டும். அதற்காக பேஷர், ஹேலீஸ், மொனசன்டோ போன்ற பல்தேசியக் கம்பனிகள் முன்வருவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த விவசாயமும் அவற்றால் வழிநடத்தப்படும். நவதாராளமய முதலாளித்துவம் செயற்படுவதாயின் விவசாயத்தை பாரிய விவசாய கம்பனிகளிடம் ஒப்படைக்க வேண்டியதுடன் விளைச்சலையும் முற்றுமுழுதாக விற்பனைப் பண்டமாக்கப்படல் வேண்டும். ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நீர் முகாமைத்துவ சட்டத்தின் நோக்கம் தண்ணீரை விற்பனைப் பொருளாக்குவதுதான்.
போலி பசுமைப் புரட்சியின் ஆரம்பக்கட்டத்தில் பசளை உற்பத்தி, கிருமி நாசினி போன்ற துறைகள் வியாபாரமயமாக்கப்பட்டு பசளை, கிருமிநாசினி, களைக் கொல்லி போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கொழுத்த இலாபத்தை பெற்றுக் கொள்வதற்காக வழிசமைக்கப்பட்டது. அதன்படி அதிக விலை கொடுத்து இரசாயனப் பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயத் தொழில் தள்ளப்பட்டது. விவசாயத்திற்கான செலவுகளை தேடிக்கொள்ள முடியாமல், வங்கிக் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்ய வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இரசாயனப் பொருட்களால் சூழல் மாசடைந்தது. அதன் விளைவாக பிரதானமாக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பசுமைப் புரட்சியின் ஆரம்பகாலத்தில் அந்த இரசாயன பொருட்களுக்கு ஏற்ற வகையிலான விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது பாரம்பரிய நெல்வகைகள் அழிக்கப்பட்டு ர்-5 போன்ற இரசாயனப் பொருட்களை பயன்படுத்த வேண்டிய நெல் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டமை.
ஆனால் இப்போது விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களின் உற்பத்தி முற்றாக கம்பனிகளிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன. இதனால் விவசாயிகள் சுரண்டப்படுவது மட்டுமல்ல, உணவு பன்முகமும் வரையறுக்கப்படும். உலகில உணவுக்காக பயன்படும் தாவரங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதோடு அவற்றில் 120 வகைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. என்றாலும் தற்போதைய பாரியளவிலான விவசாயத்தின் காரணமாக அவை 12 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது கோதுமை, அரிசி, சோளகம், உருளைக்கிழங்கு ஆகிய தாவரங்களின் மீதே உலக மக்களின் பட்டினி தங்கியுள்ளது. அந்த ஒவ்வொரு தாவரத்தினதும் பன்முகம் வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இலங்கையில் பாரம்பரிய நெல் வகைகள் ஆயிரக்கணக்கில் இருந்தபோதிலும், 6 வகையான அரிசியையே நாங்கள் உணவுக்காக எடுக்கின்றோம். விவசாயிகள் பயிரிடுவதற்காக பயிர்களை தெரிவு செய்யும்போது சுவை, குணாம்சம், கலாச்சார பன்முகம் போன்றவற்றை முக்கியமாக கருதிய போதிலும், நீண்டகாலம் களஞ்சியப்படுத்தக்கூடிய விதைகள், இரசாயனப் பொருட்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய விதைகள், அதிக விளைச்சலைத் தரக்கூடிய விதைகள் ஆகியவற்றிற்கே கம்பனிகள் முக்கியத்துவமளிக்கின்றன.
ஆகவே பன்முகத்தன்மை காலாவதியாக்கப்படுகிறது. அது புதிய முறையில் கிருமிநாசினிகளின் ஆக்கிரமிப்புக்கு வழி சமைக்கிறது. உலக வர்த்தக அமைப்பினால் தயாரிக்கப்பட்ட TRIPS (வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துக்களின் உரிமை) பிரகடனத்தின் மூலம் முழு உலகத்தினதும் விவசாயத்திற்குத் தேவையான விதைகளை மட்டுப்படுத்தி, அவற்றின் தனி உரிமை கம்பனிகளிடம் ஒப்படைக்கப்படும். அதற்குச் சமமாக பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டுவிடும். இறுதியாக சிறு மற்றும் நடுத்தர கிராமிய விவசாயிகளின் பொருளாதாரம் சிதைந்து கம்பனிகளின் சுரண்டலுக்கு விவசாயிகள் ஆட்படுத்தப்படுவார்கள்.
இன்று உலகம் பூராவும் 2 பில்லியன் சிறு விவசாயிகள் இருப்பதோடு, உலக உணவு உற்பத்தியில் 88 வீதம் 2 ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளினால் பூர்த்தி செய்யப்படுகிறது. அவர்களையும் அவர்களது விவசாயத்தையுமே உலக வர்த்தக அமைப்பு இலக்கு வைக்கிறது. புதிய சட்டமூலமும் அதற்கு ஏற்றவாறே நிறைவேற்றப்படுகிறது. உலகம் பூராவுமுள்ள மக்களின் பாரம்பரிய உணவு முறைக்கான உரிமை, மரபணுவுக்கான உரிமை, உணவு பாதுகாப்புக்கான உரிமை இரத்துச் செய்யப்படுவதோடு, உணவு உற்பத்தி மற்றும் உணவு உண்ணுதலை மூலதனத்தின் தேவைக்கு ஏற்ற விதத்தில் ஒழுங்குபடுத்துவதற்கான உலக நடவடிக்கைக்கு இதன் மூலம் இலங்கையின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. கம்பனி ஆதிக்கத்திற்குள் சிக்குவது அல்லது சிறை தண்டனையை அனுபவிப்பது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலை இலங்கை விவசாயிகளுக்கும் ஏற்படப்போகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தான் கனடாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பட்டு உற்பத்தி செய்த விவசாயி. பல்தேசியக் கம்பனிகளின் இலாப நடவடிக்கை என்ற முதலை வாயைப் பிளந்து கொண்டு விவசாயத்தை நோக்கி வருவது தெரிகிறது. அதற்கு அடிபணிவதா இல்லை சிறைப்படுவதா என்ற கேள்வி மக்கள் முன் இருக்கிறது.
எதிர்காலத்தில் உணவு உண்ணும் அனைவருக்கும் மாற்று நடவடிக்கையொன்று இருக்கிறது. அது போராடுவதுதான். உலக வர்த்தக அமைப்பின் பரிந்துரைகள் என்ற பெயரில் முழு உலகத்தையும் அழிப்பதற்காக இராட்சதன் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறான். அவனுக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, போராட்டம் என்பது முதலைக் கண்ணீர் வடிக்கும் அத்துரலியே ரத்தன தேரரோ அல்லது விமல் வீர்வன்சவோ காட்டும் பாதையல்ல. அவர்கள் காட்டும் பாதைக்கு நேரெதிரான பாதையாகும்.{jcomments on}