தேர்தலுக்காக இனவாதத்தினை முன்னெடுத்தல்
இவ்வருடம் மார்ச் கடைசி வாரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில், இலங்கையின் நடைபெற்ற யுத்தகால மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணையை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன. போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஊடாக மார்ச் மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளை வெற்றி கொள்வதே இதன் நோக்கமாக இருக்கிறது.
அரசாங்கத்தோடு நெருக்கமாக உள்ள இனவாதக் குழுக்கள் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்துவதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளன. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை பிளவுபடுத்தி, அவர்களுக்கிடையில் குரோதத்தை வளர்க்க முயற்சிக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியலை தோற்கடிக்க வேண்டுமென சம உரிமை இயக்கம் கூறுகிறது. எதிர்வரும் காலங்களில் அந்த இனவாத நடவடிக்கைகளுக்கு எதிரரக விரிவான மக்கள் செயற்பாடொன்றை தயாரித்திருப்பதாகவும், அந்த வேலைத்திட்டத்தை இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியிலும் எடுத்துச் செல்வதற்கு தயாராகி வருவதாகவும் சம உரிமை இயக்கம் மேலும் கூறுகிறது.