அந்தக் கோழைகள் பின்பக்கமாக நின்று கொண்டு அவரது பெயர் சொல்லி அழைத்தனர். அவர் சைக்கிளில் இருந்தபடியே திரும்பி அவர்களைப் பார்த்தார். அவரை ஒரு துப்பாக்கி கொலைவெறியோடு குறி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஒரு மருத்துவராக, இயக்க ஆதரவாளராக காயம்பட்ட இயக்க உறுப்பினர்களிற்கு சிகிச்சை அளித்தவரை நோக்கி அவர்கள் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தார்கள். தனது வெற்றுக்கைகளினால் நெற்றியை மறைக்க முயன்றவரை அந்த மிருகங்கள் எதுவிதமான சலனமும் இன்றி கொன்றனர். போராட்டம் என்றால் கொலை செய்வது தான் என்பதை இயக்கத்தின் முதலாவது விதியாக வைத்திருப்பவர்களிற்கு ஒரு நிராதரவான பெண்ணை கொல்கிறோம் என்ற தயக்கம் ஏன் வரப்போகிறது.
ராஜினி தனது நண்பர் ஒருவருக்கு எழுதினார். "என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமுகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு மகனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்". அவர் எழுதியபடி தான் நடந்தது. அவர் எழுதியதற்காகத் தான் கொன்றார்கள். உண்மையை எழுதியதற்காக கொன்றார்கள். அவர்களிற்கு உண்மைகள், விமர்சனங்கள் எப்பொழுதுமே பிடிப்பதில்லை என்பதனால் அவரைக் கொன்றார்கள். அவர் சூடுபட்டு கீழே விழுந்த பின்பும் பின்னந்தலையில் மறுபடி இருமுறை சுட்டார்கள். அவரும், அவரது விமர்சனங்களும் மறுபடி எழுந்து விடக்கூடாது என்பதற்காக மறுபடி அந்த பெண்ணை சுட்டார்கள்.
இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க புறப்பட்ட எமது சமுதாயம், அந்நிகழ்வுப்போக்கில் முழுச்சமுதாயத்தின் ஆத்ம சக்தியையும் வலுவிழக்கச் செய்யும் உள்ளார்ந்த பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு திணறியது. துப்பாக்கிகளின் முன் மெளனிகளாக்கப்பட்ட மக்கள் கூட்டம் விடுதலை, போராட்டம், தியாகி, துரோகி என்னும் வெற்றுச்சொற்களின் மந்திரத்தில் கட்டுண்டு கிடக்கிறது. இக்காலகட்டத்தில் தான் மக்கள் மனம் திறந்து உறுதியுடனும் நேர்மையுடனும் உண்மைகளைத் தேடும் உந்துதலிற்கான இடைவெளியினை உருவாக்கும் சிறிய முயற்சியாகவே "முறிந்த பனை" என்னும் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்ற ஆசிரியர்களின் முன்னுரைக்கு ஏற்ப தமிழ்மக்களின் துயரங்களையும், அவைகளிற்கு காரணமானவர்களையும் ராஜினியும், அவரது சக ஆசிரியர்களும் பதிவு செய்தனர்.
எழுபத்தேழு, எண்பத்துமூன்று தமிழ் இனப்படுகொலைகளின் சூத்திரதாரியான பயங்கரவாதி ஜெயவர்த்தனா, அவனின் அடியாட்களான சிறில் மத்தியு, அனுரா பஸ்தியான், காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி, பிரேமதாசா போன்றவர்களின் கொடுங்கோல்கள் புத்தகத்திலே விரிவாக பதியப்பட்டுள்ளன. "நாங்கள் இங்கு கோலிக்குண்டு விளையாட வரவில்லை" என்று ஒரு இந்திய ராணுவ தளபதி சொன்ன வார்த்தைகளின் மூலம் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்களின் அழிவுவேலைகளைகளையும், ராஜிவ் காந்தியின் ஆதிக்கவெறிக்கு பலியான மக்களின் மரணங்களையும் பதிவு செய்துள்ளனர்.
யாழ்,பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா புலிகளால் கொல்லப்பட்டமை, சுழிபுரத்தில் ஆறு இளைஞர்களை "புளோட்" இயக்கத்தினர் கொன்றத, பாரளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கத்தையும், ஆலாலசுந்தரத்தையும் ரெலோவினர் கொன்றது, இந்திய ராணுவத்துடன் சேர்ந்து E.P.R.L.F செய்த அட்டூழியங்கள் என்று எல்லா இயக்கங்களின் வன்முறைகளையும், மக்கள் விரோத அரசியலையும் அவர்கள் விமர்சித்துள்ளனர். எல்லாவிதமான அடக்குமுறைகளையும் அவர்களது எழுத்து பதிவு செய்தது.
தவறுகளை சுட்டிக் காட்டியதற்காக அவர் கொல்லப்பட்டார். விடுதலைப் போராளிகள், இலட்சியவாதிகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொண்ட அந்த வீராதி வீரர்கள் அவரின் கொலைக்கு உரிமை கோரவில்லை. ஆதரவற்ற பெண்பிள்ளைகளிற்காக மருதனார்மடத்தில் "பூரணி" என்ற இல்லத்தை நடத்தி வந்தார் என்பதற்காக கொன்றோம் என்று சொல்ல முடியுமா? எரிந்து கொண்டிருந்த இலங்கை என்ற நாட்டில் இருந்து பலரும் வெளிநாடுகளிற்கு உயிர்தப்ப வெளியேறிக் கொண்டிருந்த போது இங்கிலாந்தில் மருத்துவராக தொழில் செய்து கொண்டிருந்த ராஜினி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உடற்கூற்றியல் துறைக்கு பேராசிரியர் தேவை என்பதனால் வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்தார் என்பதற்காக கொன்றோம் என்று சொல்ல முடியுமா?
தமிழ் மக்களின் விடுதலையை குத்தகைக்கு எடுத்தவர்களின் பத்திரிகை இரண்டு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. வாஜ்பாஜ் மாதிரியே குஜராத் முஸ்லீம்களை படுகொலை செய்த நரேந்திரமோடியும் ஈழத்தமிழ்மக்களிற்காக பாடுபடுவார் என்று கங்காருக்களை விட வேகமாக தாவக்கூடிய வை.கோபாலசுவாமி தமிழ்மக்களிற்கு உறுதியளித்துள்ளார். சாதிவெறியனும், ஊழல் கொள்ளைக்காரனுமாகிய நடராசன் தான் ஈழமக்கள் பிரச்சனை குறித்து எழுதியுள்ள புத்தகத்தை உலகமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து ஈழப்பிரச்சனையை சர்வதேசத்திற்கு எடுத்து செல்வதாக உறுதியளித்துள்ளார். ராஜினிக்கு எப்படி புத்தகம் எழுத வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை.