Language Selection

இதழ் 8
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்பாராமல் வந்த பயணம். அப்படி இப்படி என்று ஒரு மாதிரி வெளிக்கிட்டுப் புறப்பட்டு வந்து விட்டேன். மூவாயிரம் அடி உயரத்துக்கு மேலே பிளேன் பறந்து கொண்டிருந்தது. ஏதோ நல்ல காலம், யன்னல் அருகே இடம் கிடைத்ததாலும் எனது பக்கத்தில் யாரும் இல்லாதனாலும் பெரிய வசதியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. வெளியே எட்டிப்பார்க்கிறேன் எல்லாம் நல்ல வெண்பஞ்சு மேகம். போட்டோ எடுக்கப் பாவிக்கிற லைற்றுக்கள் பூட்டிய மாதிரி நல்ல வெளிச்சம். பார்ப்பதற்கு நல்ல அழகாகவும் ரம்மியமாகவும் இருந்தது. அப்படியே நடந்து போய்க் கொண்டிருக்கிறேன். பஞ்சு மேகங்களுக்குள்ளே மிரிச்சுக் கொண்டு நடக்க சிலவேளை கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்தாலும், ஏதோ நல்ல மணற்தெருவிலே வெறுங்காலோடு நடப்பது போன்று... நடக்க ஆசையாக இருந்தது.

இப்ப சாமத்திய வீடுகளில் பிள்ளை வரும் போதும், கலியாண வீடுகளில் மாப்பிளை பெம்பிளை வரும் போது புகையடிப்பது போல வழியெல்லாம் புகை புகையாய் வந்து கொண்டிருந்தது. என்னாலே நம்ப முடியாமல் இருந்தது. எனக்கு முன்னாலே கழுத்திலே ஒரு கிற்றாரைக் கட்டித் தொங்கியபடி ஒரு ஆள் வந்து கொண்டிருந்தார்.

அது வேறு யாருமல்ல... நாரதரே தான்... பார்ப்பதற்கு சிவாஜி கணேசனைப் போலவும். இடைக்கிடை ரீ.ஆர். மகாலிங்கத்தைப் போலவும் காட்சியளித்தார்.

என்ன, நான் காண்பது கனவா... அல்லது நினைவா... ஐயோ....! அல்லது நான் செத்துத்தான்..... மேலே வந்திட்டேனோ...?

வணக்கம் மானிடா! வணக்கம்... நீ இப்போது என்ன நினைக்கின்றாய் என்பது எனக்கு நன்றாகவே புரிகின்றது. நீ செய்த புண்ணியத்தினாலும் நீ செய்த தவத்தின் பயனாலுமே தான் இங்கே வந்திருக்கிறாய் பக்தா... ஒன்றும் கவலை கொள்ளத் தேவையில்லை உரிய இடத்திலும், சரியான நேரத்திலும் தான் வந்திருக்கிறாய்.

கொஞ்சம் மனது சந்தோசப்பட்டது.

ஒரு சின்ன வேண்டுகோள்.... உங்களை நான் எப்படி அழைப்பது. ஏனென்றால் பொதுவாக தமிழாக்கள், முதலில் ஒரு கொஞ்சம் வயது கூடியவர் போல் தெரிந்தால் அண்ணை என்றும் இளையவர் போல் தோன்றினால் தம்பியென்றும் அழைப்பது தானே வழக்கம்... அது தான்..... உங்களை நாரதர் அண்ணா என்று அழைக்கவா......?

இல்லை பக்தா... நீ நாரதா என்றே அழைத்துக் கொள். ஏனென்றால் இங்கே எல்லா இடங்களிலும் சம உரிமை நிலைத்திருக்கிறது. இப்ப புலம்பெயர் நாடுகளிலும் ஒருவரையொருவர் பெயர் சொல்லி, அழைப்பது தானே ஸ்ரையில்...

நீ ஒரு அதிஸ்டசாலி பக்தா... இன்று எல்லாத் தெய்வங்களையும், மும்மூர்த்திகளையே ஒன்றாய் சந்திக்கும் வாய்ப்பு உனக்கு மட்டும் தான் கிட்டியிருக்குப் பக்தா.... எத்தனையோ முனிவர்களும் ரிசிகளும் காலம் காலமாக தவங்கிடந்தும், அவர்களுக்கே கிடைக்காத அந்தப் பாக்கியம் உனக்கு கிடைத்திருப்பது உன் முன்னோர் செய்த புண்ணியம் பக்தா....

இந்த வருடத்துக்கான தேவலோகத்து கொம்பியூட்டர் தேர்வில் உன் பெயரல்லவா தெரிவு செய்திருக்கின்றது. இந்தத் தேவலோகமே உன் வரவுக்காய் காத்திருக்கின்றது.

அப்ப..... எங்கள் மூத்த கடவுள் முக்கண்ணன், மூத்த பரம்பொருள் மிஸ்ற்ரர் சிவபெருமானையும் சந்திக்கலாமா.....?

என்ன பக்தா இப்படிக் கேட்டுவிட்டாய்.....? சிவன் தானே இன்றைய கூட்டத்துக்கே தலைமை தாங்குகின்றார்.

நல்லது நாரதரே, முதலிலே எனக்கு பசியாயும் தாகமாயும் இருக்கிறது. உந்த றயன் எயாரில் குடிக்க ஒரு தண்ணி கூடத் தரவில்லை. இங்கே ஏதாவது பக்கத்திலே மக்டோனால்ஸ்..... பேக்கர் கிங் போன்று ஏதாவது இருக்குமா.... நாரதரே...

மகனே என்ன....? இந்தக் கேள்வி கேட்டு விட்டாய், இந்தத் தேவலோகத்தில் எல்லாம் கிடைக்கும் போது போயும் போயும் ஒரு மக்டோனால்ஸ்.....  எனக்குச் சிரிப்புத் தான் வருகின்றது.

நாங்க தான் விட்டாலும் உந்த அமெரிக்கா சும்மா விடுமா...? பிறகு ஏதாவது... இரசாயனம் என்றும் கெமிக்கல் ஆயுதங்கள் என்றும் பொய்ச்சாட்டுக்களை எம்மீது சுமத்திப் போட்டுவிட்டு இந்தத் தேவலோகத்திலுமல்லவா சண்டையைக் கிளப்பி விடுவார்கள்.

இன்னும் இரண்டு நிமிடங்களுக்குள் கூட்டம் நடக்கும் இடத்தை அடைந்து விடுவோம், அங்கேயே உனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். நீ விரும்பியது போல் கேள்விகளை கேட்டு உனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

நாரதருடன் போய் உள் நுழைய அது ஒரு பெரிய மண்டபம். திருவிளையாடல், சரஸ்வதிசபதம் கந்தன்கருணை போன்ற படங்களில் பார்த்த மாதிரியான தோற்றம் கொண்ட பெரிய அரச சபை. பெரிய பெரிய அலங்காரங்கள் கொண்ட தூண்களால் மண்டபம் தாங்கி உயர்ந்து நின்றது.

ஒவ்வொருவரும் சோடி சோடிகளாய் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சிவனுக்குப் பக்கத்திலே பார்வதி. உமையவளைப் பார்க்க முடியாமல் இருந்தது. அவ்வளவும் ஒரே நகை. சாமத்தியவீடு கலியாண வீடுகளில் எங்கடை பெண்கள் போடுவது போலவே.... பார்வதியும் கழுத்து நிறைய அள்ளி நிறைத்திருந்தாள்.

அவ்வளவும் சிங்கப்பூர் நகைகள் போலிருக்க வேண்டும். லேற்ரசாய் வந்த டிசைன் நகைகள். சிவனின் உழைப்பு முழுவதும் பார்வதியின் உடம்பிலே ஜொலித்துக் கொண்டிருந்தது. நிச்சயமாய் சிவன் இரண்டு வேலை செய்ற ஆளாய் தான் இருக்க வேண்டும். இல்லையேல் நல்ல சீட்டுப்பிடிக்கிறவராய் இருக்க வேண்டும்.

அதுக்குப் பக்கத்திலே சரஸ்வதி. பாக்கிறதுக்கு அவ கொஞ்சம் லுக்காத்தான் இருந்தா. முந்திப் பார்த்த மாதிரி அப்படியே இருந்தா. நான் சொல்லுறது, முந்தி எங்கடை ஊரிலே தோசை சுட்டுவிக்கிற வள்ளியாச்சியின்றை தங்கையான அந்தச் சரஸ்வதியல்ல இவ எல்லாருக்கும் கல்வியை அள்ளி வழங்கிய மனுசி.

ஏதோ ஜிம்முக்குப் போவது போல உடம்மை நல்லா தான் வைச்சிருந்தா. எனக்கு அந்த மனுசியிலே சொல்ல முடியாத கோபமும்., ஆத்திரமும். இந்த மனுசி சரியா இருந்து, அந்த நேரத்திலே எனக்குப் ஒரு நல்ல படிப்பைத் தந்திருந்தால்... நான் எங்கேயோ........போயிருப்பேன்... சரி சந்தர்ப்பம் கிடைச்சா இது சம்பந்தமாகவும் கேட்டுவிட வேண்டும். மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அடுத்ததாக கிருஷ்ணன் இருந்தார். அவற்றை கையிலே இப்பவும் அந்தக் டிஸ்க் சுழண்டு கொண்டிருந்தது. கடைசியாய் வர இருக்கிற ஏதோ புதிய தமிழ்ப் படம் ஒன்றின் சீடி போல இருக்க வேண்டும். சரஸ்வதியை விட இவரிலே தான் எனக்குச் சரியான கோபம். இவர் தானே ராமராக வந்து ஒழிச்சிருந்து சுக்கிரீபனைச் சுட்டவர்.. அவர் இதுவரையும் தானோ, அல்லது தன்ரை இயக்கத்தாலேயோ, இன்னும் உரிமை கோராதது எனக்கு இன்னும் ஆத்திரமாயிருக்கு.

இவராலே தான் முந்தி, முத்துவேலு மாஸ்ரர் என்னை வகுப்புக்கு வெளியாலே பிடிச்சு விட்டவர். ஏனெண்டால் அவர் ஏதோ சந்தேகம் கொண்டு தன்ரை மனிசி சீதாவை தீக்குளிக்கச் சொன்னவர் என்று மாஸ்ரர் படிப்பிச்சுக் கொண்டிருக்கும் போது, அவற்றை தகப்பனுக்கு மூன்று மனைவிகள் இருந்தும் சந்தேகம் வரவில்லை. ஒரு மனைவியை வைச்சுக் கொண்டு இவர் சந்தேகப்படுவது நியாயமோ....? அல்லது கடவுள் எண்டு இருக்கிற இந்த ராமனுக்கு.... அந்த உண்மை பொய் தெரியாமல் போச்சோ, எண்டு கேட்டதுக்குத் தான் முத்துவேலு மாஸ்ற்ரர் கோவிச்சது மட்டுமல்ல தன்ரை பாடத்துக்கு இனிமேல் வகுப்பில் இருக்கக் கூடாது எண்டு கலைச்சு விட்டவர்.

எனக்குத் தெரிந்த கன கடவுள்மார் சுற்றிவர இருந்தனர். யார் யாரண்டு அடையாளம் காண முடியாமல் இருந்தது. இந்த இந்துக் கடவுள்களில் எல்லாமாக எத்தனை பேர் என்ற புள்ளிவிபரம் எனக்கு இதுவரையிலும் தெரியாது.

எல்லோரும் முன்பு சின்னனிலே கண்டது போல அப்படியே இருப்பது ஆச்சரியமாய் இருந்தது. ஒருவருக்கும் தலையில் மயிர் கொட்டியிருப்பது போலவோ.. அல்லது ஒருவராவது கண்ணாடி போட்டது போலவே தெரியவில்லை.

ஓ...ஓ அப்படியே மாறாமல் இருந்தார்கள். இவர்கள் கடவுள் அல்லவா....

பக்தனே... இந்த வருடத்தில் எங்கள் கொம்பியூட்டர் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றது. எங்களுக்குள் வேறு பல விடையங்கள் கதைக்க இருந்தாலும் உனக்கு இங்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. நீ எது வேண்டுமானாலும் கேட்டுக் கொள் என்று சிவபெருமான் வேண்டிக் கொள்ள மண்டபம் எங்கும் சிவனின் குரல் கணீரெண்டு ஒலிக்க நானும் எழும்ப முயன்றேன்.

பக்தா.... நீ இருந்து கொண்டே உன் பேச்சைத் தொடரலாம். கேள்விக் கணைகளையோ சந்தேகங்களைக் கேள் குழந்தாய்...

இல்லை எனக்கு கொஞ்சம் கவலையாகவும், பயமாகவும் இருக்கின்றது. முத்துவேலு மாஸ்ரர் என்னைப் பிடிச்சு வெளியாலே விட்டது போல் பிடித்துத் தள்ளிவிடுவீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது....

இல்லை அப்படியொண்டும் நடக்காது. இன்று உனக்குத் தான் முதலுரிமை. நீதான் சிறப்பு விருந்தினர்...

இல்லை எங்கடை நாட்டிலே உங்களுக்காக வீதிக்கு வீதியும் ஒழுங்கைக்கு ஒழுங்கையும் ஒரே கோயில்களும் கோபுரங்களும் தானே இருக்கிறது. அத்துடன் வீடுகளிலுமல்லவா உங்களுக்கென்று பிரத்தியேக பூசை அறைகள். எங்கடையாக்கள் தங்களுக்கு சாப்பிட வழியில்லாவிட்டாலும் மற்றவனும் அயலவனும் பட்டினியாலே செத்துக் கொண்டிருந்தாலும் உனக்காக நாலு காலபூசையும் நைவேத்தியங்களும் வைக்க ஒரு போதும் தவறியதில்லையே.

ஆனால் நீங்களோ.... போரெண்டு, தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையிலும் வந்து முடிஞ்சு போய் எவ்வளவோ அழிவுகளும் அக்கிரமங்களும் நடந்து முடிந்தும் இன்று வரையிலும் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்......? என்ன செய்து கொண்டிருந்தீர்கள்......?

உங்கடை பெயரிலே குடம் குடமாய் பாலூற்றி அபிசேகம் செய்து கொண்டிருக்கும் போது உலகத்தின் இன்னொரு மூலையில் நிமிடத்துக்கு நிமிடம் வினாடிக்கு வினாடி பாலின்றி பச்சைக் குழந்தைகள் மடிந்து கொண்டிருக்கின்றார்களே. ஏன்.....,? இந்தப் பாகுபாடுகள்....?

உங்கடை பேராலே மதம் என்றும், சமயம் என்றும் சொல்லி.... எத்தனை அழிவுகளையும், இழிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மாடாய் உழைத்து உழைத்து மண்டியிட்டுக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மந்திரம் சொல்லியே மடியை நிரப்பிக் கொண்டிருக்கிறது இன்னொரு கூட்டம். எது இன்று என்னுடையதோ அது நாளை மற்றவர்களுடையதாகின்றது என்று நீங்கள் தானே சொல்லியிருக்கின்றீர்கள்.... ஆனால் ஆட்சியும் இந்த அதிகாரங்கள் கொண்ட இந்த அரசுகளும், இந்த முதலாளித்துவத்திடமே எப்போதும் இருந்து கொண்டிருக்கு.... இது தொழிலாளர்களது கைக்கு எப்போ மாறும்... இந்தப் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏன் படைத்தீர்கள்.... இறைவா....?

ஒரே அமைதி.... எல்லோரும் அமைதியானார்கள், சீ... இப்படி இங்கே தான் வருவேன் என்று தெரிந்திருந்தால், ரண்டு பெக் போட்டிட்டு வந்திருந்தால் இன்னும் கொஞ்சம் விளாசியிருக்கலாம் என்று மனம் நினைத்துக் கொண்டது.

பக்தா நீ ஆவேசப்படுவது எங்கள் எல்லோருக்கும் நன்கு விளங்குகின்றது. ஆனால் எதற்கும் ஒரு எல்லையிருக்குத் தானே.... என்று முடிக்க முதல்.....

நிறுத்துங்கள்...... என்ன.... கதைக்கின்றீர்கள்.... எதற்கு காலம்... அப்போதே நான் சொன்னனான், இது நான் விட்ட தவறு, உங்கள் எல்லோர் ஆலோசனைகளையும் எதிர்பாராமல் போருக்குப் புறப்பட வேண்டியது என் கடமை. தமிழ் கடவுள் என்று நான் இருப்பதில், இருந்ததில் எந்த விதப் பிரயோசனமும் இல்லாமல் போய் விட்டதே. எனது அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாய் மடிந்து கொண்டிருந்ததை சும்மா பார்த்துக் கொண்டிருந்து விட்டேனே என்ற பழிச்சொல் எனக்கு வந்து விட்டதே....

சிவனும் உமாதேவியும் மகன் முருகன் கலங்குவதைக் கண்டு ஒருகணம் நிலைகுலைந்து போனார்கள்.

முருகா... சாந்தம் கொள்... அன்று ஈழத்திலே ஜேவிபி கிளர்ச்சி என்று வந்தபோது எத்தனையோ ஆயிரமாயிரம் அப்பாவி சிங்கள மக்களும், இதே போல்த் தான் கொல்லப்பட்டு, ஆற்றிலேயும் குளங்களிலேயும் வீசியெறியப்பட்ட போது, அப்போதும் நாங்கள் மௌனம் தானே காத்தோம், ஒருவரும் போய் ஆவன செய்யவில்லைத் தானே..

அவர்களும் உங்களைப் போலவே என் குழந்தைகள் தான். இதை யாரும் மறந்து விடக்கூடாது. மறுத்து விடவும் முடியாது.

பக்தா!! கவனமாகக் கேள்... நீங்கள் மாறி மாறி சண்டைப்பட்டுக் கொண்ட போதெல்லாம் இதெல்லாம் சகோதரச் சண்டை என்று தான் நான் எண்ணியிருந்தேன். உங்களுக்குத் தெரியாமலே உங்கள் பாதுகாவலராய் இருக்கின்றோம் என்று சொல்லித்திரியும் உங்கள் இருபக்கத் தலைவர்களும் தான் தங்கள் சொத்துக்களை சேர்ப்பதற்காகவும் தங்கள் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் உங்களை எதிரியாக்கி, இந்த நாசவேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எதிரிகள் அல்ல. நீங்கள் சகோதரர்கள் என்பதை மறவாதே.

சகோதரராகிய நீங்கள் இருபகுதியினரும் ஒன்றுபடுவதன் மூலம் தான், உங்கள் எதிரியை விரட்ட முடியும். உங்கள் ஒற்றுமை மூலம் தான் நீ ஏற்கனவே கேட்டுக் கொண்ட ஆட்சியதிகாரங்களைப் பிடித்துக் கொள்ளலாம். இன்று அவர்களுடையது என்றிருப்பது நாளை உங்களுடையதாக மாறும், இது தான் வரலாறு, இது தான் இயங்கியலும் கூட. இதே போல் ஆட்சி உலகெங்கும் வந்தால் பிறகு அபிசேகப் பிரச்சினைகளும் முடிந்து விடும். பால் பிரச்சினைகளும் முடிந்துவிடும்.

பக்தா... நாமெல்லாம் சும்மாய் இருக்கிறம் எண்டு மட்டும் யோசித்து விடாதே.. எத்தனை காலத்துக்குத் தான் இந்த ஒரே தேவாரங்களையும் திருவாசகங்களையும் கேட்டுக் கொண்டிருக்க முடியும். திரும்பத் திரும்பக் கேட்டு புளிச்சுப் போச்சு. ஏன் இந்தப் புலம்பெயர் தேசத்திலேயும் வந்து உந்தப் புளிச்சுப் போன அதே தேவாரங்களைத் தானே பாடுறையள். ஒரு காதுக்கினிமையாய் எங்கேயாவது பாடுறையளே... அது தான் நாங்களும், இப்படி இடைக்கிடை சண்டைகளும் ஏற்படுத்தினா தான் எங்களுக்கும் பொழுது போகும்.

இப்படிச் சண்டைகள் வருகிற போது தான் மக்களும் யார் யார் எங்கே நிக்கிறார்கள் என்பதை இனம் கண்டு கொள்ளுவார்கள். இப்ப பார்த்தையள் தானே. இந்தப் போர் என்று ஒன்று வந்ததால் எத்தனை பேர் தங்கடை வயித்தையும் வாயையும் நிரப்பி தங்கடை சொந்த வாழ்க்கையை அல்லவா மேம்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். போரெண்டு போய் தங்களுடைய வாழ்வைத் துலைத்த இளைஞர்களும் யுவதிகளும் ஒருநேர உணவுக்கே கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை வைத்துக் கொண்டு இந்தப் புலம்பெயர் தேசத்திலே எத்தனை திருவிழாக்களையும் எத்தனை கூத்துக்களையும் நடாத்திக் கொண்டிருக்கினம்.

மக்கள் என்ற ஒரு விடையம் இருக்கு என்பதை மறந்தே போய் விட்டார்கள் பக்தா. பக்தா இது தான் சரியான நேரம். தமிழ் சிங்களம் என்ற பேதங்களைக் கலைந்து எல்லோரும் ஒன்று சேருங்கள்.

ஆற்றல் மிகு கரங்களிலே ஆயுதம் ஏந்துதலே மாற்றத்துக்கான வழி என்ற கொள்கையைத் தான் நாங்களும் ஏற்றுக் கொண்டவர்கள். இதோ பார் அம்மன் கையில் வாள், முருகன் கையில் வேல், பார் எங்கள் ஒவ்வொருவர் கையிலேயும் ஒவ்வொரு ஆயுதம். எங்களில் யார் கையில் ஆயுதம் இல்லை.

இந்தா ஏற்றுக் கொள் பக்தா, என்று தன் சூலாயுதத்தை எடுத்து வேகமாய் வீச படையப்பா படத்திலே ரஜனி மாட்டை நிறுத்த வேலை எறிந்தது போல் அது என் முன்னே வந்து குத்தி நின்றது.

நான் எழுந்து நின்று சூலாயுதத்தை எடுத்து உயர்த்த எல்லாத் தெய்வங்களும் எழுந்து நின்று தங்கள் தங்கள் கைகளிலே உள்ள ஆயுதங்களையெடுத்து ஆரவாரம் செய்தார்கள்.

ஒரு மிருதுவான கையொன்று முதுகிலே வந்து தட்டி பிளேன் இறங்கப் போகுது பெல்ற்றை இறுக்கிப் போட்டுக் கொள் என்று சொல்லியபடியே விலகிச் சென்றது.

பிளேன் தரைநோக்கி கீழே பறந்து கொண்டிருந்தது.

முற்றும்