Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.

யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக் கோடரியினால் தாக்கி உள்ளனர். 4.12.13 அன்று நள்ளிரவு கற்பக பிள்ளையார் கோவிலடி-உடுவில் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகநாதன் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 50 வயதுடைய செல்லத்துரை சண்முகநாதன், அவரது மனைவியான 45 வயதுடைய நாகேஸ்வரி இவர்களது மகனான 20 வயதுடைய யதுசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் யதுசன் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.

யாழ் இந்துக் கல்லூரி மாணவனான யதுசன் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மருத்துவ பீடத்திற்கு செல்லக் கூடிய பெறுபேறுகளை எடுத்திருந்தார். கடந்த மாவீரர் தின நிகழ்வுகளின் போது அதில் இவர் ஈடுபாடு காட்டியதான தகவல்கள் குறித்து இலங்கைப் புலனாய்வுப் படைப்பிரிவினர் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர் எனவும் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலை என செய்திகள் இணையங்களில் வெளிவந்திருந்தது.

யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணச் செய்தி யாழ் இந்து இணையத்தளத்தில் வெளிவரவில்லை. மாணவர்கள், பழைய மாணவர்கள், மாணவர்களின் குடும்பத்தினர் காலமாகும் போது அஞ்சலி செலுத்தும் யாழ் இந்து இணையத்தளம் யதுசனின் கோர மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லை. அவனின் மரண வீட்டிற்கு கல்லூரி சார்பாக மாணவர்களை அழைத்துச் செல்லவுமில்லை. யாழ் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினர் மெளனமாகியதன் காரணம் அச்சுறுத்தல் என்பதைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

யாழ் போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கு சி.ஈழவளவன் என்பவர் தலைமை தாங்கினார். போராட்டங்கள் நடந்தபோது பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள அவரின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. அவரின் இருசக்கரவாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது. மக்கள் சத்தம் கேட்டு திரண்டு வர தாக்குதல் நடத்தியவர்கள் ஓடி விட்டார்கள். இல்லாவிட்டால் அங்கும் ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கும்.

பிரித்தானிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள் எந்தவிதமான சட்ட அங்கீகாரங்களும் இல்லாமல் தொலைபேசி உரையாடல்கள், இலத்திரனியல் ஊடகங்களில் அனுப்பப்படும் செய்திகளை உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் உளவாளி எட்வேர்ட் சினோடென் வெளிவிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (National Security Agency) Dishfire என்னும் மென்பொருள் மூலம் 200 மில்லியன் செய்திகளை தினமும் சேமித்து வைக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேற்குநாடுகள் தொழில்நுட்பம் ஊடாக உளவு பார்க்கின்றதென்றால், இலங்கை அரசு தனக்கு கைவந்த கலைகளான கொலைகள், கொள்ளைகளினூடாக அச்சுறுத்துகிறது. கொள்ளை அடிக்கப் போவது போல் போய் அந்த இளங்குருத்தை கொலை செய்திருக்கிறார்கள். கொள்ளை, களவு என்றால் இராணுவமும், அரச ஒட்டுண்ணிகளும் தான் என்ற உண்மையை மறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் களவெடுத்த, காடைத்தனம் செய்த ஆவா என்றவனின் குழுவை கைது செய்து விட்டார்களாம் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு மிக்க இலங்கையரசின் காவல்துறையினர். பல்லாயிரக்கணக்கில் முப்படைகளும், காவல்துறையினரும் நீக்கமற நிறைந்திருக்கும், தடக்கி விழுந்தால் ஒரு படையினன் மீது தான் விழ வேண்டும் என்ற அச்சநிலை இருக்கும் தமிழர் பகுதிகளில் ஏழெட்டு பேர் கொண்ட ஒரு குழு எதுவிதமான பிரச்சனையும் இல்லாமல் களவெடுத்ததாம். நம்புங்கள்.

தென்னிலங்கையில் தமது அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக பாதாள உலகக்காடையரை பாவித்து விட்டு பின்பு அவர்களை கொன்று சாட்சியங்களை அழித்தார்கள். தங்களது கூட்டாளிகளை, தங்களது இரகசியங்கள் தெரிந்தவர்களை கொன்று விட்டு குற்றவாளிகளை விடமாட்டோம் என்று நியாயவான்கள் வேடம் போட்டார்கள். ஆவா கோஸ்டியை கைது செய்ததும் இதே போன்றதொரு நாடகம் தான்.

டேவிட் கமரோன் யாழ்ப்பாணத்திற்கே வந்து இலங்கை அரசை கேள்வி கேட்டார். தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாக உலகநாடுகளின் விசாரணைக்கு இலங்கை அரசு மறுமொழி சொல்லியே ஆக வேண்டும். சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பன தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு, பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு சொல்லப்படும் ஏமாற்றுவார்த்தைகள். இலங்கை அரசும் மேற்குநாடுகளும் சேர்ந்து நடிக்கும் நாடகங்கள். தமிழ்மக்களின் பிரச்சனைகளை விசாரணைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைப்போம் என்று சொல்லுவதன் மூலம் மக்களை மெளனமாக இருக்க சொல்லும் நாடகங்கள். இவை நாடகங்கள் என்பதை வேறு யாரும் நிரூபிக்க தேவையில்லை. இலங்கையின் கொலைவெறி அரசு தனது மக்கள் விரோத நடவடிக்கைகள் மூலமும் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. யாரும் வந்து தடுக்கவில்லை. மக்களின் இடையறாத போராட்டங்களின் மூலமே இந்த அரசை ஒழித்துக் கட்டி வாழ்வில் அமைதியை நிலவ வைக்க முடியும்.