sep_2007.jpg

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள அகரம் என்கிற குலதீபமங்கலம் கிராமத்திலுள்ளது தர்மராஜா திரௌபதையம்மன் கோவில். அரசுக்குச் சொந்தமான இப்பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களைத் தடுத்து தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர், வன்னியர் உடையார் சாதிவெறியர்கள்.

வருடந்தோறும் தேரோட்டத்தை மையப்படுத்தி உருவாகி வந்த பிரச்சினை, இவ்வாண்டு தாழ்த்தப்பட்டோர் தேருக்கு மாலைபோட்டு வழிபடும் உரிமையையே பறிக்கும் வகையில் முற்றிவிட்டது. தேர் ஊர்வலப் பாதுகாப்புக்காக வந்த போலீசார், ஊர்வலத்தன்று நள்ளிரவில் சாதிவெறியர்களால் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட்டதைத் தடுக்கவில்லை. சாதிவெறியர்களைக் கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்த தாழ்த்தப்பட்டோரை, 144 தடையுத்தரவு பிறப்பித்து விரட்டியடித்தனர். கோயிலும் பூட்டப்பட்டு ""சீல்'' வைக்கப்பட்டது. அதன்பிறகு முகையூர் எம்.எல்.ஏ.வான கலியவரதன் தலைமையில் திரண்ட வன்னிய சாதிவெறியர்கள் அரசு பூட்டுப் போட்டு வைத்த ""சீலை'' உடைத்து வெறியாட்டம் போட்டபோதும் அரசு கைகட்டி நின்றது. தாழ்த்தப்பட்டோர் கோயிலில் வழிபடும் உரிமையையும் மறுத்து வருகிறது.

 

தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்து கொட்டமடிக்கும் சாதிவெறியர்களை எதிர்த்து, தொடர்ந்து இப்பகுதியில் பிரச்சாரம் செய்த வி.வி.மு., அதன் தொடர்ச்சியாக 13.8.07 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குலதீபமங்கல கிராம மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

 

இதைத் தொடர்ந்து 27.8.07க்குள் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குச் சென்று வழிபட அரசு உரிய ஏற்பாடு செய்யும் என்று மாவட்ட வருவாய்த்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், சாதிவெறியர்கள் இதை நீர்த்துப் போக வைத்து, தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லாவகையான சதிகளிலும் இறங்கியுள்ளனர். இதற்கெதிராக தாழ்த்தப்பட்டோரை அணிதிரட்டிவரும் வி.வி.மு. அடுத்தகட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.