மனிதர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களைப் பெறுவதற்கான மனித உழைப்புக்குள்ளும், நுகர்வுக்குமுள்ளுமான முரண்பாடுகள் பற்றி முரணற்ற வகையில் விளக்குகின்றது மார்க்சியம். உழைப்பு மற்றும் நுகர்வில் இருந்து மனிதனை அந்நியமாக்கும் முரண்பாடுகள், மனித உறவுகளை வர்க்கரீதியான உறவாக்குகின்றது. மனிதனுக்கு எதிரான இந்த தனிவுடமை சமூக அமைப்பை, மார்க்சியம் தலைகீழாகப் புரட்டிக் காட்டுகின்றது. சாராம்சத்தில் மனித வாழ்விற்கான வர்க்கப் போராட்டமாகவே மனித வாழ்வு இருப்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டுவதால், மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது. மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமே ஒழிய, வெறும் அறிவு சார்ந்த தத்துவமல்ல. வர்க்கப் போராட்டத்தின் மீதான இயங்கியல் தான் மார்க்சியம். வர்க்கங்களற்ற சமுதாயத்தை படைக்கும் போராட்டமாகவே வாழ்வுக்கான மனிதப்போராட்டம் இருப்பதை, சமூக விஞ்ஞானமான மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைத்து அமைப்பாக்கி இருக்கின்றது.
வர்க்கப் போராட்டத்துக்கு அடிப்படையான தனிவுடமை சமூக அமைப்பு, மனித உழைப்பிலான பொருள் மீதான தனிவுடைமையில் இருந்தே உருவானது. இது மனிதனை வாழ்விற்கான அவனின் உழைப்பில் இருந்தும், உழைப்பிலான நுகர்பொருளிலிருந்தும் அந்நியமாக்கி இருக்கின்றது. இது உருவாக்கும் வர்க்க முரண்பாடுகள் வர்க்கப் போராட்டமாகவும், வர்க்கப் போராட்டங்கள் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் வெளிப்படுகின்றது. மார்க்சியம் இதை முரணற்ற வகையில் எடுத்துக்காட்டுவதுடன், பொதுவுடமை கொண்ட சமூக அமைப்பாக புரட்டிப் போட வழிகாட்டுகின்றது. மனித உழைப்பிலான உற்பத்தி மீது உழைப்பவனின் உரிமையைக் கோருவதுடன், அதன் மீதான சமூகத் தன்மையை (மீள) நிலைநாட்டக் கோருகின்றது. தனிவுடமைக்கு பதில் பொதுவுடமையாக்கக் கோருகின்றது. இதன் மூலம் சமூகம் சார்ந்த ஒன்றாகஇ மனித வாழ்வியலை மாற்றியமைக்கக் கோருகின்றது.
இயற்கையைச் சார்ந்து தான் மனிதன் இருக்க முடியுமே ஒழிய, மனிதன் சார்ந்து இயற்கை இருப்பதில்லை. இயற்கையின்றி மனித வாழ்வில்லை. இயற்கை மீதான மனித உழைப்பின்றி மனித வாழ்வில்லை. மனிதனாக இருப்பதற்கும், வாழ்வதற்கும் உழைப்பு அனைவருக்கும் அடிப்படையானது. இந்த இயற்கையையும் மனித உழைப்பையும் தனிவுடமையாக்குவதும், உழையாமல் மற்றவன் உழைப்பை சுரண்டி வாழ்வதும்இ இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரானது.
இன்றைய மனித வாழ்வின் மீது தனிவுடமை உருவாக்கும் சமூக முரண்பாடுகள் பற்றி மார்க்சியம் பேசுகின்றது. சமூக அவலங்கள் ஏன்? எப்படித் தோற்றுகின்றது என்பதை, முரணற்றவகையில் ஆராய்கின்றது. தனி மனிதனுக்கு பதில் சமூகத்தை முன்னிறுத்தி அணுகுகின்றது. தனிவுடமைக்கு பதில் சமூகவுடமையை முன்னிறுத்தி ஆராய்கின்றது. சமூகத்தைப் புரட்டிக் காட்டி, நடைமுறையுடன் புரட்டிப் போட வழி காட்டுகின்றது.
இந்த வகையில் மனித சமூகத்தினது உழைப்பு சார்ந்த அறிவுச் செல்வத்தில் இருந்து, அறிவியல் பூர்வமாக அறிவுக்கு உகந்ததை முரணற்ற வகையில் சாரமாக பிழிந்து அளிக்கப்பட்ட தத்துவம் தான் மார்க்சியம். இதற்கு முந்தைய தத்துவங்கள் அனைத்தும் உலகத்தை விமர்சிக்கவும் விளக்கவும் மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் இதை மட்டும் செய்யவில்லை, அதை மாற்றவும் கோருகின்றது. அதாவது வர்க்க சமூகத்தின் வர்க்கப் போராட்டத்தை தன்வசப்படுத்தியதன் மூலம், மனிதவாழ்விற்கான போராட்டத்துடன் மார்க்சியம் ஒன்றிணைந்து விட்டது.
இந்த வகையில் மார்க்சியத் தத்துவம், அரசியல், பொருளியல், மதம், அறிவியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, போராட்டம்,.. என அனைத்தையும் விமர்சனபூர்வமாக அணுகி விளக்குவதுடன், மாற்றத்துக்கு வழிகாட்டும் தத்துவமானது. சமூகத்தின் எல்லாத் தளத்திலும் தன்னை முன்னிறுத்தி முரணற்று அணுகுவதும் மாற்றத்துக்கு வழிகாட்டுவதால், சமூக விஞ்ஞானமாகவே மார்க்சியம் மிளிர்கின்றது.
சமூகத்தில் நிலவும் மாயையான வெளித்தோற்றத்தை நியாயப்பபடுத்தவில்லை. அதை அனுதாபத்துடன் காட்டி அணுக முற்படவில்லை. அதைக் கண்டு களிப்பு கொண்டு கொண்டாடவில்லை. மாறாக இவை முரணாக தோன்றுவதற்கான காரணகாரியங்களை கண்டறிந்ததன் மூலம், மாற்றுவதைக் கோருகின்றது.
இந்த சமூகம் ஏன் இப்படி முரணாக இயங்குகின்றது என்று தேடிய மார்க்ஸ், தனது இளைமைக் காலத்திலில் தன் காதலியான ஜென்னிக்கு எழுதிய கவிதையில் இதை வெளிபடுத்துகின்றார்.
"என்னைக் கட்டிய தலைகளை நொறுக்கி எழுந்தேன் எங்கே செல்கிறாய்? எனக்கொரு உலகம் தேடி! இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும் கீழே கடல்களும் மேலே விண்மீன்களும் இல்லையா? உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும். என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும். என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும். என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும். நான் நெடுந்தூரம் ஊர்ந்து சென்றேன், திரும்பினேன், கீழும் மேலும் உலகங்கள். விண் மீன்களும் கதிரவனும் துள்ளின. மின்னல் வெட்டியது நான் மடிந்தேன்”
இப்படி காதல், வாழ்க்கை இரண்டையும் ஒன்றாக்கிய மார்க்ஸ், அனைத்தையும் சமூக கூறாக்கி தேடிய போது எழுதிய கவிதை இது. சமூக முரண்பாடுகளும், அது உருவாக்கும் மனித அவலங்களும், ஏன்? எப்படி தோன்றுகின்றன என்ற மார்க்சின் தேடுதல்தான், முரணற்ற சமூக விஞ்ஞானமான மார்க்சியமானது.
சமூகம் பற்றி சொந்த அறிவை தனிமனித நலனுக்கு கீழ்ப்படுத்தாது, அறிவை சமூகத்துக்காக அர்ப்பணித்தவர் கார்ல் மார்க்ஸ். இதன் மூலம் தனிவுடமை சமூகத்துக்கே சவால் விடுத்தார். கார்ல் மார்க்ஸ் வார்த்தையில் இதை கூறினால் "நம்முடைய முந்தைய தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால், தத்துவஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவது தான்." என்றார். தத்துவமும் சரி, மனித அறிவும் சரி, சமூகத்தை மாற்றுவதற்கு தான். இதை விடுத்து தான் போராடாது, மற்றவன் போராடுவதற்கல்ல தத்துவம்;. இந்த வகையில் மார்க்சியம் சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது.
இயற்கையுடனான மனித உறவுகளும், மனிதரிடையேயான மனித உறவுகளும்
இயற்கையுடனான மனித உறவும், மனிதனுடனான மனித உறவுகளும் வர்க்க அமைப்பில் வர்க்கம் சார்பானது. உழைப்புக்கு ஆதாரமான விஞ்ஞானம், வர்க்க அமைப்பில் வர்க்க சார்பானது. மனித அறிவு வர்க்கம் சார்ந்து, தனிவுடமை சமூகத்தில் இயங்குகின்றது.
இன்றைய இந்த தனிவுடைமையிலான வர்க்க அமைப்பு உருவாக முன்பு அனைத்து மனிதனும், தனது வாழ்வுடனான போராட்டத்தில் இணைந்து பாடவும், ஆடவும், உழைக்கவும், பொருளைக் கண்டறியவும், கருத்துக் கூறவும் கூட்டிய, ஒரு கூட்டு வாழ்க்கை முறையை கொண்ட மனிதனாகவே மனிதன் வாழ்ந்தான். சமூகத்தின் ஒரு உறுப்பாகவும், அனைத்தையும் கண்டறியும் சமூக விஞ்ஞானியாகவும் மனிதன் இருந்தான்.
அனைவரும் உழைத்து வாழ்பவராக, சமூக உறுப்பாகவும் இருந்தனர். மார்க்ஸ் கூறியது போல் "உழைப்பைச் சாபக்கேடாகவும் ஓய்வைச் சுதந்திரமாகவும் உணர்தல் மனிதத் தன்மையல்ல." என்பதே, அன்றைய மனிதனின் கூட்டுவாழ்கை முறையின் அடிப்படை. வாழ்விற்கான உழைப்பில் இருந்து பிரியாத மனிதனின் அறிவு, மனிதனுக்கு மனிதன் எதிராக இருந்ததில்லை. மனித அறிவு சமூகம் சார்ந்ததாக இருந்ததே ஒழிய, இன்று போல் தனிமனித நோக்கு சார்ந்ததாக இருக்கவில்லை.
மனிதன் தன்னைச் சுற்றிய பொருளை இனங்காணவும், பொருளைக் கூட்டாக பயன்படுத்தவும் தெரிந்து கொண்ட போது, அது சமூக விஞ்ஞானமாகியது. உதாரணமாக மனிதனின் ஆரம்ப பயன்பாட்டில் ஒன்றான தடியை எடுத்தால், தடியை வளைக்க, ஊன்றுகோலாக பயன்படுத்த, எதிரியை தாக்க, தோண்ட, உணவைப் பிடிக்க, பொருளைப் புரட்ட, தங்குமிடத்தை அமைக்க, பாரங்களைத் தூக்க, நீரோட்டத்தை எதிர்த்துச் செல்ல...., தடி சார்ந்து உருவான மனித கூட்டு உழைப்பு உருவாக்கிய அறிவு சமூக விஞ்ஞானமாகியது. இதேபோல் கல்லை எடுத்தால், தாக்க, கீற, வெட்ட, அரைக்க, அரண் அமைக்க, இறைச்சியை வாட்ட..., கல்லு சார்ந்த உழைப்பு உருவாக்கிய அறிவு சமூக விஞ்ஞானமானது. பொருள் சார்ந்த மனித அறிவு விஞ்ஞானமானது. பொருள் பற்றிய அறிவு விஞ்ஞானமாக, அதற்கிடையிலான மனித உறவுகள் தொடர்பான அறிவும் இணைந்த போது அது சமூக விஞ்ஞானமானது. கூட்டுவாழ்வின் அடிப்படையாக, கூட்டுழைப்பு இருந்தது. இது மனித உறவுகளை உருவாக்கியது.
மார்க்ஸ் கூறியது போல் ”இயற்கையை மாற்றியமைத்த போதே நீயும் மாற்றியமைக்கப்பட்டாய்" ஆம், அனைத்தும் மாறத்தொடங்கியது. மனித உறவுகள் மாறத்தொடங்கியது. உழைப்பிலான அறிவு வளர வளர, உழைப்பு வடிவங்கள் மாறின. இதனால் நுகர்வின் அளவும், தன்மையும், பொருளும் ... கூட வேறுபடத் தொடங்கியது.
மார்க்ஸ் கூறியது போல் ”இயற்கையுடனான உனது உறவு மாறியபோது சக மனிதனுடனான உனது உறவும் மாறியதே. உன் உடலின் மீதே உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்டபோது நீ அடிமை நிலத்திலிருந்து அந்நியப்பட்டபோது பண்ணையடிமை. இப்போது உன் உழைப்பிலிருந்தே அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறாய், நீ பாட்டாளி” என்றார். உழைப்பு சார்ந்து வரலாற்று இயங்கியலை, மார்க்ஸ் அழகாகவே எடுத்துக் காட்டுகின்றார். உடல், நிலம், உழைப்பு என்ற மூன்று வெவ்வேறு தளத்தில், வெவ்வேறு கால கட்டத்தில் மனிதன் அந்நியமான போது, மனிதனின் நிலை இதுதான். தனிவுடமை இது சமூக அமைப்பின் வெட்டு முகம். உடல், நிலம், உழைப்பை, மனிதன் மீண்டும் தனதாக்கும் போது பொதுவுடைமை உருவாகும். அது வர்க்கமற்ற அமைப்பாக மட்டும் தான் இருக்கும். மனித போராட்டங்கள் தன் உடல், நிலம், உழைப்பை பாதுகாக்கும் போராட்டமாகவும், மீள பறித்தெடுக்கும் போராட்டமாகவும் இருப்பதை அடிப்படையாக கொண்டு தான், மார்க்ஸ் தனிவுடமையிலான மனித வரலாற்றை வர்க்கப் போராட்ட வரலாறாக எடுத்துக் காட்டுகின்றார்.
தனிவுடைமைக்கு முந்தைய அமைப்பில் இயற்கை சார்ந்த பொருள் பற்றிய மனித அறிவு விருத்தியான போது, உழைப்பும் வேறுபடத் தொடங்கியது. பொருள் பற்றிய அறிவும் வேறுபடத் தொடங்கியது. அதற்கு இடையிலான மனித உறவுகள் வேறுபடத் தொடங்கியது. உழைப்பும், உழைப்பு சார்ந்த அறிவும் மனிதரிடையே பிரிந்து தனிமனிதனின் தனி உரிமையான போது, வர்க்க அமைப்பு தோன்றுகின்றது. வர்க்கம் சார்ந்ததாக அறிவு மாறுகின்றது. சமூக உடமையிலான சமூக அமைப்பு, தனிவுடமை சமூகமாகியது. தனிவுடமை அமைப்பின் முரண்பாடுகள் என்பது, சமூக முரண்பாடுகளாக வர்க்க முரண்பாடுகளாக மாறியது. இதை முழுமையாக முரணற்ற வகையில் விளக்கி நிற்பதே சமூக விஞ்ஞானம். ஒட்டுமொத்த உற்பத்திக்கும் அதன் மீதான உழைப்புக்கும் இடையிலான உறவுகளையும், அது உருவாக்கும் சமூகக்கூறுகளையும் முரணற்ற வகையில் விளக்கும் போது சமூக விஞ்ஞானமாகின்றது. இது தான் மார்க்சியம்.
மார்க்ஸ் கூறியது போல் "வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்திச் செய்யும் முறைதான் வாழ்க்கையின் சமுதாய, அரசியல், அறிவியல் போக்குகளை நிர்ணயிக்கிறது." இதைத் தாண்டி அல்ல. வர்க்கமற்ற சமூக அமைப்பில் சமூகம் சார்ந்ததாக இருந்த அறிவு, வர்க்க அமைப்பில் வர்க்கம் சார்ந்ததாக பிரிந்துவிடுகின்றது.
தொடரும்
மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01
இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02