இலங்கைக்கு பாரிய கடற் பிரதேசம் இருந்தும், இலங்கைஇன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 - 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப் பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செயய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடிகூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.
அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி.அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சிலமாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித் தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது. இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில் நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக்கொண்டது.
அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள் சிறுவள்ளங்களுக்கும், கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரைகடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படு .இதற்கான முக்கிய காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம்.
1. தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ காலத்தில் இருந்தே மிகநன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைத்த தனிநபர்களுக்கிடையிலான வட்டிக்கு வழங்கும்முறை, இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகைசெய்தது.
2. பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர் மரப்படகு கட்டும் தொழில்நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தம் பிற்காலத்தில் யா-ஏல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலைசி ங்களதொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்)
3. நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீநோர் நிறுவனம் காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடிநார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவு விலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களை பெறமுடிந்தமை (இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில் நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது.)
இந்தசந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் தென்இலங்கையர்க்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக யா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடிநார் இழைப்படகுகளை தமிழ் இயக்கங்கள் பயன்படுத்தின. அப்படகுகள் காரைநகர் படகுகளைவிட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக்கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி புளட் இயக்கக் கொள்ளையினால்நி றுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம் புளட் இயக்கத்தாலும், புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.
4. மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தள மேடை என்று சொல்லப்படும் Continental shelf, ஆழ்கடலுக்கும் பரவைகடல் களம், களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும் பகுதி கடலடித்தள மேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன்நீளம் 480 கிலோமீற்றராகவும் அகலம் 22 கிலோமீற்றர் இல் இருந்து 60 கிலோமீற்றர்வரை உள்ளது. ஆகவே இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தளமேடை கேரளா கரையோரம் உள்ளது. அதனால்தான் கேரளம் மிகமுக்கிய மீன்பிடி பிரதேசமாகவுள்ளது.)
இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் சீவிப்பதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது.
5. வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவாக விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தைவாய்ப்பும் கிடைத்தது அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டது. இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது. 1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமானமீனவர்கள் இந்த சாதனையை செய்தனர்என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
-தொடரும்