அள்ள அள்ள
அள்ளிக் கொண்டேயிருக்க
ஜீ... பூம்பாச் சுரங்கமல்லவா...
வெளிநாட்டார் பலரும்
உள்நாட்டார் சிலரும்
அள்ளி அள்ளித் தங்களைச்
சொற்கமாக்கிய மண்ணல்லவா...
அதனாற்றான் இலங்கையை
சொற்கபுரி என்கிறார்களோ..!
மனிதவதைத் திருடர்கள்.
ஆயினும் இச் சொற்கத்தில்
எந்தவித நரகமும் இல்லை
என்கிறார்களே சிலர்..?
ஆம்
இது சொற்கந்தான்.
ஆயிரம் ஆயிரம்
பல்லாயிரம் உடல்களை
உயிரிகளின் வதை புதைந்த
சொற்கந்தான் இது.
உலகக் காலனியர்
தினந் தினமாய்க் கன்னமிடும்
எமது நாடு சொற்கந்தான்.
உலகத்து இயமனுகள் இணைந்து
இலங்கையில் மனித மனங்களை
வதமாடிய இடம் சொற்கந்தான்.
அத்தனை வல்லாதிக்கரும்
அள்ளி அணைத்து
இனங்களைப் பிரித்த பின்னணியில்
இப்போ எஞ்சி இருப்பது
சாதியப் படிமுறையின் பலுக்கல்களும்
மனிதம்மேல் உரிமையற்ற பேதங்களும்
அறிவியலைத் தூசணிக்கும் மதச்சேறும்
அலுக்கோசர் வன்கொடுமை அரசியலாய்...
இவை நான்கும் இணைந்து நின்று
மானிடத்தை மௌனத்தினால் கட்டிவைத்து
சொர்க்கம் சொர்க்கம் சொர்க்கமெனச்
சொல்கின்ற சொர்க்கவாதிகளால்
சபிக்கப்பட்ட நிலத்தினிலே நரகவரலாறு - அவை
மறைக்கப்பட்ட கறைகளாகவும்
மறுக்கப்பட்ட குறைகளாகவும்
மௌனத் துயரங்களுள்
மோனித்துக் கிடக்கிறது.
- மாணிக்கம்