இப்போது வடக்கில் பெண்களிற்கு விடுதலை கிடைத்து விட்டதா?
அந்தக் கண்ணீர்த்துளிகள் இன்னும் சூடாகவே இருக்கின்றன. அது தனக்கு நெருக்கமானவருக்காக சிந்தப்பட்ட கண்ணீர். இழக்கப்பட்டது தமது துணையை அல்லது மகனை, மகளை அல்லது தாய், தந்தை அல்லது அண்டை வீட்டாராக இருக்கலாம். யாருமே அவளுக்காக எஞ்சியிருக்கவில்லை. அவளுக்கு அவளே இல்லாமலாகியிருக்கும் தருணத்தில் அரசாங்கம் அவளுக்காக எதை வழங்கியிருக்கிறது? அபலையின் கண்ணீருக்குத் தீர்வாக அரசாங்கம் தேர்தலை தந்திருக்கிறது. இப்போது அவளுக்கு வேட்டுக்குப் பதிலாக வோட்டு கிடைத்திருக்கிறது.
வடக்கில் இன்னும் பிண நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் தருணத்தில், வாக்களிப்பதற்குள்தான் பதிலிருப்பதாக அரசாங்கம் பெருமையடிக்கிறது. நடக்கப்போகும் தேர்தல் பல்வேறு குழுக்களின் மோதல்களுடனான கண்காட்சியாக இருக்கப்போகிறது. வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பெண்கள் இந்த தேர்தல் கண்காட்சிகளைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே அவள் தேர்தலைக் கேட்கவில்லை. வாழ்க்கையைத்தானே கேட்டாள்.
யுத்தத்துக்குப் பலியான அவள் பொருளாதாரத்துக்கும் பலியாகியுள்ளால். அதேபோன்று அவள் பாலியல் பலிக்கடாவாகவூம் ஆகியுள்ளாள். அரசியலுக்கும் பலியாகிறாள். இனி வாக்களிப்பதால் அந்த பலிபீடத்திலிருந்து மீள முடியுமா? நவ தாராளமயத்தின் பல்வேறு வண்ண ஆடைகள் A 9 பாதை வழியாக இழுபடும்போது அவற்றுக்கு மயங்கிடாமல் உறுதியாக இருப்பது அவளது பொறுப்பாகும்.
அதற்காக அவள் போராட வேண்டியது உண்மைதான். அந்தப் போராட்டத்தை ஓட்டுகளினாலோ, வேட்டுகளினாலோ நடத்த முடியாது. அது கூட்டாக புரிந்துணர்வோடு செய்ய வேண்டிய போராட்டம். நாளை மேலும் அதள பாதாளத்துக்குள் செல்லும் முதலாளித்துவ சமூக பொருளாதார முறைமை சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டுறவுடன் உயிரூட்டப்பட்டு அடித்து நொறுக்கப்படும் தருணத்தில் அவளது வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கும். அப்போது மேலும் எங்களால் "இனி அவளை"ப் பற்றி கதைக்க வேண்டிய தேவை இருக்காது.
வடக்கிலும் கிழக்கிலும் கைகோர்த்து பலம் பெறாதவரை முதலாளித்துவ முறைமையின் தூக்கு மரம் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களைப் போன்றே அவளது கழுத்தையும் நெரிக்கும். ஒடுக்கப்பட்டோரின் கூட்டுறவு சக்திபெறும் முதல் சந்தர்ப்பத்திலேயே முதலாளித்துவத்தின் விலங்குகளை தகர்த்தெறிவதற்கு எல்லா தோழியர்களும், தோழர்களும் தம்மை பிரித்து வைத்திருக்கும் சகலவித பிணைப்புகளையூம் தோற்கடித்து ஒன்றுசேர வேண்டுமென்பதை 'சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு' சுட்டிக் காட்டுகிறது.
-சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு