ஒரு நாடு இன்னொரு நாட்டில் உளவு பார்ப்பதை அறிவோம். அவ்வாறு உளவு பார்க்கப் பகைமை மட்டும் காரணமல்ல. அரசியல், ராணுவ உளவு பார்த்தலை விட வணிக, தொழிற்துறை உளவு பார்த்தல்களும் அரசின் உதவியுடனோ இல்லாமலோ நடக்கின்றன. ஓரு வல்லரசோ ஏகபோகக் கம்பனியோ தனக்குப் பாதகமான மாற்றங்கள் எங்கு நிகழ்வதையும் விரும்பாது. எனவே, பலவேளைகளில் உளவு, தகவல் சேகரிப்புடன் நிற்பதில்லை. அது ஆட்சிக் கவிழ்ப்பு வரை போகலாம்.
அரசு என்பது அதிகாரத்திலுள்ள ஒரு வர்க்கம் தன் ஆட்சியைப் பாதுகாப்பாகத் தொடர்வதற்கான அடக்குமுறைக் கருவி. எனினும், ஒரு அரசை ஜனநாயக அரசெனக் கூறும்போது, மக்கள் சில விடயங்களை எதிர்பார்க்கின்றனர். வாழ்வாதார உரிமைகட்கும் தனிமனிதப் பாதுகாப்புக்கும் அப்பால், கருத்துச் சுதந்திரமும், தகவல்களைப் பெறுவதற்கான சுதந்திரமும் அரசின் குறுக்கீடற்ற அந்தரங்க வாழ்க்கையும் மக்களின் பொதுவான எதிர்பார்ப்புக்கள்.
சோஷலிஸ நாடுகளில் அத்தகைய சுதந்திரங்கள் இருந்ததில்லை என்போர் இன்னமும் உள்ளனர். எனினும், அமெரிக்க மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் விக்கிலீக்ஸ் அம்பலமாக்கிய பின்பு அமெரிக்கா எடுத்துவந்துள்ள அதிரடி நடவடிக்கைகள் இன்று அமெரிக்க அரசைப்போற் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் வல்லரசு சமகால வரலாற்றில் இல்லை எனத் தெளிவாக்கியுள்ளன.
அமெரிக்க மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் பகிரங்கமான பின்பு, குற்றவாளிகளைத் தண்டிப்பதை விடுத்து, மிகுந்த தீவிரத்துடன் விக்கிலீக்ஸ் பொறுப்பாளர் ஜூலியன் அஸாஞ்ஜைத் தண்டிக்க அவரை அமெரிக்காவுக்குக் கடத்த முயன்று, ஈக்குவடோர் நாடு அவருக்குத் தஞ்சம் வழங்கிய நிலையில், ஏமாந்த அமெரிக்கா அவருக்குத் தகவல் வழங்கிய பிரட்லி மனிங் என்ற படைவீரரைக் கைதுசெய்து வதைத்துத் தேசத்துரோகக் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. தான் செய்த எதையும் மனிங் மறுக்கவில்லை. தனது செயல்கள் ஜனநாயக விழுமியங்கட்கும் அமெரிக்க மக்களின் நலனுக்கும் கேடான அரச வஞ்சகத்திற்கெதிரான தேசபக்தியுடைய செயல்களென மனிங்கின் தைரியமாகக் கூறுகிறார்.
மனிங் மீதான வழக்குத் தொடங்கியுள்ள நிலையில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அந்நியர்களின் தொலைபேசி, மின் ஊடக உரையாடல்களைக் ஒட்டுக்கேட்கத் தனக்கு வழங்கப்பட்ட உரிமையை அமெரிக்க அரசு துஷ்பிரயோகித்துள்ளதுடன் அமெரிக்கக் குடிகளின் தொலைபேசி, மின் ஊடக உரையாடல்களின் விவரங்களையும் பெற்று வருகிறதென்பதை லண்டன் கார்டியன் நாளேடு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. சி.ஐ.ஏ.யின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகரான எட்வட் ஸ்னோடன், அமெரிக்கவிலிருந்து வெளியேறி, ஆதாரங்களை வழங்கியதற்கான பொறுப்பை ஏற்றார்.
இச் செய்திகள் சிலரை அதிரவைத்திருக்கலாம். ஆனால், அமெரிக்கா 1950களின் முற்பகுதியில் செனெற்றர் மக்கார்த்தியின் கம்யூனிஸ்ற் வேட்டையைக் கண்ட நாடு. கம்யூனிஸ்ற்றுக்களல்லாத பலரையும் அவ் வெறி பலிகொண்டது. அமெரிக்கா அதினின்று மீண்டு “சனநாயகத்திற்குத்” திரும்பியபோதும், இடதுசாரிகள் இன்னமும் ஓரங்கட்டப்படுகின்றனர். ஏலவே இருந்துவந்த சி.ஐ.ஏ., எவ்.பி.ஐ. ஒட்டுக்கேட்டல்கள் பல சட்டவிரோதமானவை. எனினும் 2001இல் நடந்த 9/11 தாக்குதலின் பின்பு நிறைவேறிய “தேசபக்தச் சட்டம்” அவ்வாறான பல ஒட்டுக்கேட்டல்களையும் வேறும் பல மீறல்களையும் சட்டரீதியாக்கியது. குறிப்பிட்ட சூழல்களில் அமெரிக்கரல்லாதோருக்கு மட்டுமான இவ் அனுமதியைத் தாண்டி, அமெரிக்கக் குடிகளும் மீறல்கட்குட்பட்டுள்ளனர். தனியார் தொலைபேசி உரையாடல்கள் பற்றிய தகவல்களும் மின் ஊடகக் கருத்துப் பரிமாறல்களும் இன்று அமெரிக்க அரசிற்கு எட்டக்கூடியன. நாட்டின் பாதுகாப்பின் பெயரில் இரகசியத்தன்மையான ஒரு கண்காணிப்பு அரசு இயங்கி வருவதையே அஸாஞ்ஜ், மனிங், ஸ்னோடன் ஆகியோர் அம்பலப்படுத்தினர். எனினும், சட்டவிரோதமாய் நடந்து நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைத்தோர் தண்டிக்காமல், அமெரிக்க அரசு, அத் தவறுகளைஅம்பலப்படுத்தியோரை வேட்டையாடுகிறது.
நாட்டின் பாதுகாப்பு என்பது, மக்களின் பாதுகாப்பாக அன்றி அரசினதும் அது காத்துநிற்கும் அதிகார வர்க்கத்தினதும் பாதுகாப்பாக மட்டுமே உள்ளமையை ஒவ்வொரு முதலாளிய நாட்டிலும் நாம் காணுகிறோம். முக்கியமான பாடம் ஏதென்றால் பிற நாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குட்படுத்த முனையும் எந்த அரசும் தன் கண்காணிப்பை அந்நிய எதிரிகட்கு மட்டுப்படுத்தாது. ஆக்கிரமிப்பு நோக்கம் அரசின் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது. எனவே தன்னுடைய மக்களையும் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் தேவை ஏற்படுகிறது. மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உண்டாக்கித், தமது பாதுகாப்பின் பெயரில் அரசு தம்மைக் கண்காணிப்பதை அவர்கள் விரும்பி ஏற்கும் நிலை உருவாக்கப்படுகிறது.
இன்று தொடர்பாடலிற் பெருமளவு நவீன தொழில் நுட்பத்திற் தங்கியுள்ளதால் அத் தொழில் நுட்ப உதவியுடன் அமெரிக்காவில் ‘மக்கர்த்தி யுகம்’ மீள நிலைபெறுகிறது. எனவே இக் கண்காணிப்பு அமெரிக்காவின் எதிரிகளை விட அமெரிக்க மக்களுக்கே அதிகம் கேடானது.
இந்திய இணைத்தளப் பாவனையாளர்களையும் அமெரிக்க அரசு தனது கண்காணிப்பு வலைக்குட் கொண்டுள்ள பின்னணியில், இந்திய அரசு, தன் கண்காணிப்பு இயந்திரத்தை வலுப்படுத்த, ‘மத்தியப்பட்ட தெரிவிப்பி முறைகள்’ என்ற கண்காணிப்பு அமைப்பை நிறுவியுள்ளது.
அதன் கண்காணிப்புச் செயற்பாடுகள் அமெரிக்காவினதைப் போன்று தொலைபேசி வலையமைப்புகக்கள் முதல் மின் தகவற் பரிமாற்றம் வரை விரிவன. அவை இந்திய அரசியற் சூழலில் சட்டவிரோதமான அரச நடவடிக்கைகட்கும் பாரிய துஷ்பிரயோகங்கட்கும் பயன்படலாம என்பதால் அதைப் பற்றிப் பல கோணங்களிலுமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும் நாட்டிற்கெதிரான உள்நாட்டு, அந்நிய மிரட்டல்களின் நீண்ட பட்டியல் இந்திய அரசிடம் உள்ளது. எனவே, ஆட்சித் தலைமைகள் மாறினும் அரசாங்கங்கள் மாறினும், குடிகள் மீதான கண்காணிப்பை அரசு வலுப்படுத்திக்கொண்டே போகும்.
முற்கூறியவற்றின் அடிப்படையில், இலங்கை அரசு இப்போது அச்சு, மின் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளைத் திணிப்பதை, ஏலவே வலுப்பெற்றுள்ள அரச அடக்குமுறையுடனும் ஃபாஸிஸம் நோக்கிய அரசியல் முனைப்புடனும் சேர்த்தே கவனிக்கவேண்டும். அத்துடன் அமெரிக்க, இந்தியக் கண்காணிப்பு வலைகளையொத்த தொழில்நுட்ப வாய்ப்பு வசதிகளற்ற ஒரு அரசு அவ் வலைகளால் தானும் பயன்பெற முனையலாம். எனவே இங்கே உருவாகக்கூடிய கண்காணிப்பு அரசு தன்னையும் மக்களையும் ஏகாதிபத்திய, மேலாதிக்கக் கண்காணிப்பு வலைகட்குள் உட்படுத்தும் அபாயம் பற்றி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அந்நியத் தகவல் அமைப்புக்கள் உட்பட்ட அயல் நிறுவனங்கள் பற்றி நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
-செம்ப்பதாகை
ஏப்ரல் - ஜூன் 2013