Language Selection

இதழ் 2
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ராசையா ஒரு தோட்டத் தொழிலாளி. ஹல்வத்துர தோட்டத்தில் வேலை செய்கிறார். 28 வயது. 3 குழந்தைகள். வழமைபோல் வேலைக்குச் செல்கிறார். அவர் வேலை செய்யும் இடத்தில் காய்ந்து இற்றுப்போன மரமொன்று இருக்கின்றது. அந்த மரத்திற்கு பட்டும் படாமலும் 33000 வாட்ஸ் மின்சார கடத்திக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. வேலை பார்க்கும் சுபவைசர் வந்து அந்த மரத்தை வெட்டும்படி ராசையாவிடம் கூறுகிறார். மின்சாரக் கம்பி இருப்பதால் அதனை வெட்டுவது ஆபத்தை வலிய அழைத்துக் கொள்வதாக இருக்கும் எனவே அதை வெட்ட ராசையா மறுத்துவிடுகிறார். தொழிலாளி தனது ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான ஆக வேண்டுமென்ற இறுமாப்போடு மரத்தை வெட்டாவிட்டால் வேலை தராமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சுபவைசர் பயமுறுத்தவும் ராசையா ஒருகணம் யோசிக்கிறார், வேலையை விட்டு தூக்கிவிட்டால் தனது குடும்பம் பட்டினியால் துன்பப்படும். பிள்ளைகளின் படிப்பு நின்றுவிடும். யோசிக்கிறார். ' என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ மரத்தை வெட்டு" என்று சுபவைசர் தையிரமூட்டுகிறார். என்ன நடந்தாலும் நடக்கட்டும். மரம் என்ன தலையிலா விழப்போகிறது என்று கோடரியால் மரத்துக்கு இரண்டு வெட்டுதான் கொடுத்தார். மரம் சாய்ந்து மின்சாரக் கம்பியில் பட்டுவிட்டது. மரத்தில் கைவைத்த ராசையா ஐம்பதடி தூரத்திற்கு தூக்கி வீசப்படுகிறார். மரம் மாத்திரமல்ல அதோடு அவரது வாழ்க்கையும் சாய்ந்து விட்டது.

அவசரமாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராசையா கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியாமல் மல்லாந்து படுத்த நிலையிலேயே இரண்டு வருடங்களாக இருக்கிறார். அவருக்கு ஊட்டுவது பருக்குவது எல்லாமே மனைவிதான். காப்புறுதித் தொகையாக அவருக்கு 3½இலட்சம் கிடைத்துள்ளது.

விபத்து சம்பந்தமாக போலிஸில் முறையிட வேண்டாமெனவும், 10 இலட்ச ரூபா நட்டயீடு வாங்கித் தருவதாகவும் அவர் அங்கத்துவ பணம் செலுத்தும் தொழிற்சங்கப் பிரதிநிதி கூறியிருக்கின்றார். ராசையாவிற்ககு 3 1/2 இலட்சம் காப்புறுதிப் பணம் கிடைத்துள்ளது. ஆனால் தொழிற்சங்கவாதி கூறியதைப் போன்று 10 இலட்ச ரூபா இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக தொழிற்சங்கப் பிரதிநிதியிடம் கேட்டபோது காப்புறுதிப் பணம் 3 1/2 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதால் 10 இலட்சம் இழப்பீட்டு பணம் பெற்றுத்தர முடியாதென கூறியுள்ளார். இது தான் இன்றைய மலையக தோட்டத் தொழிலாளியின் நிலை.

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து மாதா மாதம் 240 ரூபா சந்தாப் பணம் அறவிடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளி விபத்தில் சிக்கிவிட்டால் அவனை அம்போ என்று கைவிட்டுவிடுவதற்கு மேற்படி சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியான நூற்றுக் கணக்கான சம்பவங்கள் தோட்டப் பகுதிகளில் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான அநீதிகளிலிருந்து தோட்டத் தொழிலாளி பாதுகாக்கப்பட வேண்டுமாயிருந்தால். முதலில் தான் யார் என்பதை தோட்டத் தொழிலாளி உணர வேண்டும். தான் யாருக்காக, எதற்காக நாய்படாத பாடுபட்டு உழைக்கின்றோம் என்பதையும், தனது உழைப்பின் பலன் யாருக்கு போய் சேருகிறது என்பதையும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இன்றைய நிலையில் தோட்டப்பகுதியை எடுத்துக் கொண்டால், அவர்களது வாழ்க்கை நிலை படு மோசமாகவே இருக்கின்றது. ஒருபுறம் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதோடு, புதியதொரு கலாச்சாரம் தோட்டப் பகுதிக்குள் புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 8'x10' அறைக்குள் முடங்கிக் கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றான் தோட்டத் தொழிலாளி. அவனால் நீட்டி நிமிர்ந்து படுத்துத் தூங்க முடியாது. குடும்ப அங்கத்தினர்கள் அதிகம்.

பிள்ளைகளுக்கு படிப்பதற்கான வசதிகள் கிடையாது. வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு உடை மாற்றிக் கொள்ள அறை கிடையாது. அறையில் சுத்தமான காற்று வருவதற்கு வழி கிடையாது. '"எட்டடி குச்சுக்குள்ளே கந்தையா எத்தனை நாளிருப்பேன். ஒருமச்சு வீடு தாருமையா மகிழ்ந்து நானிருப்பேன்" என்று ஒரு பழைய பாடல் நினைவிற்கு வருகிறது.

தோட்டத் தொழிலாளி மச்சு வீடு கேட்கவில்லை. தனது குடும்பத்தோடு வாழ்வதற்கு வசதியான வீடுதான அவனுக்குத் தேவை. தோட்டப் பகுதியில் சுகாதார வசதியோ சொல்லுந்தரமன்று. பெயரளவிலான மருத்துவ மனைகள் இருந்தாலும் அங்கு தகுதிவாயந்த மருத்துவர்கள் இல்லை. இருக்கும் ஒருசிலரும்கூட தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் மருந்து கொடுக்க மட்டுமே தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை. ஆதலால், ஓரளவு வசதி படைத்த மாணவர்கள் படிப்பைத் தேடி வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்கள். இருக்கும் பாடசாலைகளில் கூட விஞ்ஞானகூட வசதிகள் கிடையாது. பிள்ளைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலை தேடி இளைஞர்களும் யுவதிகளும் கொழும்புக்கு வருவதை ஒரு பாஷனாக கருதுகிறார்கள். கொழும்புக்கு

செல்லும் இளைஞர்கள் தமது உழைப்பை குறைந்த கூலிக்கு நாளாந்தம் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது உழைப்பை சுரண்டுவதற்காகவே பணமுதலைகள் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து வாய்பிளந்துக் கொண்டிருக்கிறார்கள். கொழும்புக்கு வரும் யுவதிகள் தவறான நபர்களிடம் சிக்கிக்கொண்டு அல்லாடுவதை நாள்தோறும் வரும் செய்திகள் மூலமாக அறிய முடியும்.

குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் குறைந்த சம்பளத்திற்கு வரும் தோட்டப்பகுதி இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்ட சம்பவங்களும் செய்திகளாக வந்து தோட்டப்பகுதியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும் அது அப்படியே அடங்கிப்போய் விடுகிறது. வீட்டு வேலைகளுக்க வந்த இளம் பெண்கள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவங்களும், கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளன.

கொழும்புக்கு வேலை தேடி வரும் இளைஞர்கள் புதியதொரு கலாச்சாரத்தை தோட்டப்பகுதிக்குள் எடுத்துச் செல்கிறார்கள். போதை வஸ்துக் கலாச்சாரம் தோட்டப்பகுதிகளில் இன்று பரவலாகக் காணப்படுகிறது. தோட்டப்பகுதியே போதை வஸ்துக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி சீரழிந்துவிடுமோ என்ற அச்சம் நலன் விரும்பிகள் மத்தியில் ஏற்பட்டிருப் ஆச்சரியப்படக்கூடியதல்ல.

இவ்வளவுக்கு மத்தியிலும் தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தால் உண்டு கொழுக்கும் தொழிற்சங்க அரசியல் தலைமைகளும், தோட்டப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து அவர்களது வாக்குகளை கொள்ளையடித்து அரசியல் அதிகாரத்திற்கு சென்றுள்ள அமைச்சர்களும் மந்திரி பிரதானிகளும் என்ன செய்துக் கொண்டிருக்கின்றார்கள். தோட்டத்திற்கு பத்து தொழிற்சங்களை வைத்துக் கொண்டு லயத்திற்கு பத்து தலைவர்களை வைத்துக் கொண்டு ஜாதிக்கு ஒரு தொழிற்சங்கத் தலைவனையும் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை கூறுபோட்டு கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, தொழிலாளி தன்னைத் தானே அறிய வேண்டும். தான் தொழிலாளி, தனக்கு ஜாதியில்லை, மதமில்லை, இனமில்லை, மொழியில்லை, குலமில்லை என்று எப்போது உணர்கின்றானோ அதுவரை அவனுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கப் போவதில்லை. குறுகிய சிந்தனையோட்டத்திலிருந்து விடுதலை கிடைக்கப்போவதில்லை. சிறந்ததொரு வாழ்க்கை கிடைக்கப்போவதில்லை. அதுவரை போலி தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் நீங்கள் சுரண்டப்படுவதையும் சீரழிக்கப்படுவதையும் தடுக்க முடியாது. ஆகவே தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து துறைகளையும் சார்ந்த தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று அநீதிக்கும், அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடாத வரை தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும், முதலாளிகளும் தொழிலாளர்களை மிதித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.