Language Selection

இதழ் 2
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் தொடருகின்ற இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் எதிராக வாக்குப்போடுவதன் மூலமும், அமெரிக்காவை நம்புவதன் மூலமும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியுமா? இப்படி செயற்படும் எமது அரசியல் சரியானதா? இதில் முள்ளிவாய்க்கால் வரை நம்பிய அரசியல் ஏன் தோற்றுப் போனது என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் நம்பும் அரசியலின் தோல்வியையும் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் நாம் எப்படிப் போராடவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.   

நாம் எப்படிப் போராடக் கூடாதோ, அதற்கொரு உதாரணந்தான் முள்ளிவாய்க்கால். அத்துடன் இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படும் என்பதை 1980 முதல் 2009 வரை முன்கூட்டியே சொன்னவர்கள், எப்படிப் போராடவேண்டும் என்பதையும் முன்வைத்தனர். அவை யாவும் புறக்கணிக்கப்பட்டன. மாறாக முள்ளிவாய்க்கால் வரையான போராட்டம் எந்தத் தீர்வையும் பெற்றுத் தரவில்லை. மனித அழிவையும், சொத்தழிவையும், சமூகச் சீரழிவையுந்தான் அது தந்தது. தொடர்ந்தும் சமூகமாக இருக்கும் அடிப்படையைத் தகர்த்தும் வருகின்றது. இதைப் பரிசாகத் தந்த முள்ளிவாய்க்கால் அரசியல்தான் என்ன? அதன் படிப்பினைதான் என்ன?

இன்று சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையும், இன அழிப்பும் தொடர்கின்ற நிலையில், அது நாட்டின் முழுமக்கள் மேலான சர்வாதிகாரமாக மாறிவருகின்றது. இதிலிருந்து எவரும் தப்பி வாழ முடியாதவண்ணம் அரசு இயங்குகின்றது. இதையின்று நாம் எதிர்கொள்வது எப்படி? நடந்த போராட்டம் தொடர்பாகவும், அதன் தோல்வி குறித்த படிப்பினையையும் கற்றுக்கொள்வதில் இருந்துதான் எம் மீதான ஒடுக்குமுறையை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும்.

கடந்தகால குறுந்தேசிய அரசியல்தான், முள்ளிவாய்க்காலில் தோற்பதற்கான முழுமையான காரணமாகும். இதை நம்மில் பலர் தெரிந்து கொண்டுள்ளோமா? அத்துடன் மற்றைய எல்லாக்; காரணங்களும், இந்தத் தவறான குறுந்தேசிய அரசியல் மேல் வெற்றிகரமாக செயற்பட்டவைதான்.

இந்தக் குறுந்தேசிய அரசியல் என்பது, தன் சொந்த ஒடுக்கப்பட்ட மக்களை நம்பவில்லை. அவர்கள் மக்களின் சொந்தப் போராட்டத்தை மறுத்தனர். அதனைக் குழுக்களின் போராட்டமாக்கினர். தனிப்பட்ட சிலரது நலனை முதன்மைப்படுத்தினர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமூகப் பிரிவுகளுக்கும் எதிராக, ஒடுக்கும் பிரிவைச் சார்ந்து நின்றனர். இப்படி மக்களை மந்தையாக்கியதன் மூலம், தம்மை வழிபட வைத்தனர். அதேநேரம் அன்னிய சக்திகள் மூலமாக, பணத்தின் மூலமாக, ஆயுதங்கள் மூலமாக விடுதலை கிடைக்குமென மக்களை நம்பவைத்தனர். இதற்காக மக்களைப் பலியிட்டனர். இப்படி மற்றவர்களைக் கொன்றதன் மூலம், எதிரியின் பின் அவர்களை அணிதிரள வைத்தனர். முஸ்லீம் மக்களை எதிரியாகக் காட்டி ஒடுக்கியதன் மூலம், தமிழ் மக்களுக்கு எதிராக இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். சிங்கள மக்களை தமிழ் மக்களின் எதிரியாக காட்டியதன் மூலம், சிங்கள மக்களை அரசின் பின் அணிதிரளுமாறு கோரினர். எல்லையோர மக்களைக் கொன்றதன் மூலம், அவர்களைக் கொண்டு தமிழ்மக்களைச் சுற்றி வளைக்குமாறு பார்த்துக் கொண்டனர். இப்படி மனிதவிரோத செயல்களைச் செய்தும், சொந்த மக்களையே ஒடுக்கியும், சர்வதேசரீதியாகவும் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக்கொண்டனர். இப்படித்தான் குறுந்தேசியம், முள்ளிவாய்க்காலில் தனது சொந்தப் புதைகுழிக்குள் வீழ்ந்து மடிந்தது.
    
மற்றும், இன்னொரு இன மக்களுக்கு எதிரான போராட்டமல்ல தேசியம். ஆனால் குறுந்தேசியமோ  இன்னுமொரு இனத்துக்கு எதிரான போராட்டமாக அதைக் காட்டியது. சிங்கள இனத்துக்கு எதிரான, முஸ்லீம் மக்களுக்கு எதிரான தமிழன் போராட்டமாக அதைக் காட்டியது. இது மட்டுமல்ல பிரதேச, சாதி மேலாதிக்க சக்திகளின் நலன்சார்ந்த போராட்டமாக அதைக் குறுக்கியது.

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களினதும், ஒடுக்கப்பட்ட சமூகங்களினதும் போராட்டமாக தேசியப் போராட்டம் நடைபெறுவதைத் தடுத்து, ஒடுக்கும் வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தி அதை தேசியமாகக் காட்டியது. இதன் மூலம் எதிரியைப் பலப்படுத்தும் எல்லாவிதமான மக்கள்விரோதச் செயலையும் செய்தது.  எதிரியின் மனிதவிரோத செயலை மிஞ்சும் வண்ணம், மக்களை ஒடுக்கியதன் மூலம் தமிழ்மக்களை முதலில் தோற்கடித்தது.  

இதற்கு ஏற்ப தன் தேசிய அரசியலை துறந்த பின்னணியில், தேசிய நலனென்று ஒன்றையும் அது முன்னிறுத்தவில்லை. சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான யுத்தத்தை மட்டும் முன்னிறுத்தி, அதை தேசியம் என்றது. ஆனால் அதுவோ இனவழிவு யுத்தமாகியது.

அது சமாதானம் மீதான மக்களின் கோரிக்கைகளை மறுத்தது. இனவாத இனவழிப்பு யுத்தத்தை மக்கள் மேல் திணித்தது. அவர்களின் குழந்தைகளை யுத்தத்தில் பலிகொடுத்தது. இதற்காகப் பலாத்காரமாக குழந்தைகளை இழுத்துச் சென்றவர்கள், பிணத்தைக் கொண்டு வந்து காட்டினர். இறுதியாக மக்களை பணயக் கைதியாக்கி, அவர்களையும் பலியிட்டனர். பிணத்தைக் காட்டி பிரச்சாரம் செய்து, தாம் தப்பிப்பிழைக்க முனைந்தனர். இறுதியாக தம் சொந்த இயக்கவிதிக்கு முரணாக அவர்களே துரோகமிழைத்தபடி சரணடைந்தனர்.

இந்தக் குறுந்தேசிய அரசியல் என்பது 1980 முதலே மக்களுக்கு எதிராக இருந்தது. ஆயுதத்தை நேசித்தவர்கள், மக்களை நேசிக்கவில்லை. பணத்தை மதித்தவர்கள், மக்களை மதிக்கவில்லை. அன்னிய சக்திகளை நம்பியவர்கள், மக்கள் சக்தியை நம்பவில்லை. எதிரியை உற்பத்தி செய்;தவர்கள் நண்பர்களை உருவாக்கவில்லை.

மக்களுக்காக தாம் போராடுபவர்கள் என்று கூறிக்கொண்டு, இவர்கள் மக்களுக்கு வெளியில் மக்கள் விரோத குழுவாக இயங்கினர். இவர்கள் தனிநபரை மையப்படுத்தி, தனிமனித வழிபாடு தான் இவர்களின் போராட்டமாகியது. இதுவே அரசியல் அளவுகோலாகியது. இதில் தனிநபர் சார்ந்த மிகை விம்பத்தை முன்வைப்பது தேசியமாகியது. இச் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை ஒடுக்குவதே அதன் தேசியக் கடமையாகியது. இப்படித்தான் குறுந்தேசியம் என்பது தேசியத்தை மக்களிடமிருந்து தோற்கடித்தது

அத்துடன் ஒரு குழுவின் சொந்த நலன்சார்ந்த போராட்டம், தேசியப் போராட்டமாக காட்டப்பட்டது. இதனிடத்தில் தனிநபர் நம்பிக்கை, விசுவாசம், வழிபாடு, இயக்கவாதம்.., என்பன தேசியமாக இரகசியமாக சதியாக பொய்யாக நேர்மையீனமாக வன்முறைமாக அவதூறுகளாக.., இவைகளே இவர்களின் தேசிய அறமாக எஞ்சியது. இதை வைத்துப் பிழைத்துக் கொள்ளும் எல்லா வகையான சந்தர்ப்பவாதிகளும் இதைச் சூழ்ந்துகொண்டு, இதை தங்கள் வியாபாரமாக்கினர். இப்படித் தேசியத்தைக் குழிவெட்டிப் புதைத்தவர்கள், போராட்டத்துக்கான அடிப்படைகளை இல்லாதாக்கி மக்களைத் தோற்கடித்தனர். மக்கள் தமக்காகத் தாம் போராடாததும், அரசியலற்ற குறுந்தேசிய வெற்றுடலைத்தான், அரசு மிக இலகுவாகத் தோற்கடித்தது. இதுதான் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த கதை.

இந்த அரசியலின் தோல்வியை 1980களிலிருந்து சொன்ன பலரைக் கொன்றனர். ஆனால் அதைத் தொடர்ந்து 2009வரை முன்கூட்டியே இத் தவறுகளைத் தட்டிச் சொன்ன போதும் இவர்கள் அவற்றைக் கண்டு கொள்ளவில்;லை. இப்படி வீங்கி வெம்பியதை நம்பியவர்கள், அதைப் போராட்டமாக முன்னிறுத்தியவர்கள் தான், முள்ளிவாய்க்காலில் தம்மைத் தாமே தோற்கடிக்கும் வரை வழிபட்டனர்.          

இதில் மக்கள் தமக்காகத் தாமே போராடவேண்டும் என்பதை இவர்கள் நிராகரித்ததன் மூலம், இதனைத் தோற்கடித்ததன் மூலம், தம்மைத் தாம் தனிமைப்படுத்தித் தோற்கடித்;தனர். மக்களை அணிதிரட்டும் வண்ணம், மக்களின் நலனை முன்னிறுத்தி இவர்கள் போராடவில்லை. இவர்களால் மக்கள் தமக்காகத் தாம் போராடவில்லை. இதனால் சொந்த மக்களுக்கு எதிரானதாக இவர்கள் மாறியதன் மூலம் இப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இன்றும் இதுதான் தொடருகின்றது. மக்கள் தாமாகப் போராடுவதற்கு குறுந் தேசியம் வழிகாட்டவில்லை. இனவொடுக்குமுறை, இனவழிப்பும் தொடரும் நிலையில், அதை உணரும் மக்களை போராடுவதற்கு வழிகாட்டுவதா அல்லது அதிலிருந்து அவர்களை அன்னியப்படுத்திவிடுவதா ஒரு சரியான அரசியல்?

இவர்கள் மக்களை பார்வையாளராக்கி விடுவதன் மூலம், மீட்பாளர்கள் பற்றிக் கனவு காணவைக்கும் அதே குறுந்தேசிய அரசியல்தான் இன்றும் தொடருகின்றது. எமக்கு வாக்குப் போட்டால் சரி, தாம் காட்டும் அமெரிக்காவை நம்பினால் சரி.., என்று மக்களை இதிலிருந்து அன்னியப்படுத்தும் குறுந்தேசியம் தான் தொடருகின்றது.    

இதைத் தவிர எதையும் செய்யமுடியாது என்ற அவநம்பிக்கையை மக்களுக்கு ஊட்டி, வாக்குப் போடக் கோருகின்றது. இதன் மூலம் மேற்கு நாடுகளும், இந்தியாவும்.., எங்களை மீட்கும் எனக்கூறி, தாம் மீட்பாளராகச் செயற்பட முடியும் என்ற நம்பிக்கை ஊட்டும் அரசியல் தான் காணப்படுகின்றது. இது தான் 60 வருடமாக தமிழ் மக்களை, மீண்டும் மீண்டும் தோற்கடித்த அரசியல்.

மக்கள் தமக்காக தாம் போராட முடியாதா? காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தம் உறவுகளைத் தேடி நடத்தும் போராட்டம், மீனவர்கள் நடத்தும் போராட்டம், சம்பூர் மக்களின் நிலப் போராட்டம்.., என்பன இதில் இருந்து வேறுபட்டவை. மக்கள் தாங்கள் வாழ்வதற்காக தம் சொந்தப் பலத்தில் நம்பிக்கை கொண்டு எப்படிப் போராடுகின்றனரோ, அப்படித்தான் அனைத்துக்காகவும் மக்கள் போராட வேண்டும்;.

மக்கள் தமக்காகத் தாமே போராடவேண்டும். தங்கள் நியாயமான உரிமைகளைப் பற்றி சிங்கள மக்களுடன் பேசுவதன் மூலம் சேர்ந்து போராடவேண்டும். பேரினவாத அரசு வேறு சிங்கள மக்கள் வேறு என்பதை மறுத்த எமது கடந்தகாலத் தவறைத் திருத்தி, அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து எம் உரிமையை வென்று எடுக்கவேண்டும்;. தமிழ் மக்களை ஒடுக்குவது நியாயம் என்று, சிங்கள மக்களிடம் அரசு தொடர்ந்து கூறுவதை அனுமதிக்க முடியாது. நாம் சிங்கள மக்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக இணைந்து போராடும் வண்ணம், நாம் போராடவேண்டும்;.

குறுகிய தேசியவாதத்தை, குறுகிய இனவாதத்தைக் களையவேண்டும். அது தமிழ் மக்களை மற்றைய இன மக்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுத்திருக்கின்றது. பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்வதை, மற்றைய இனங்களுக்கு எதிராகச் செய்வதன் மூலம், எதிரியைப் பலமாக்கித் தமிழ் மக்களை தனிமைப்படுத்துவதே இதனால் நடந்தேறும். இதன் மூலம் பேரினவாதத்துக்கு மறைமுகமாக துணை போபவராகவே நாம் இருப்போம். இந்த வகையில் கடந்தகால சரி பிழைகள் அனைத்தையும் நாம் தெளிவாகப் பேசியாக வேண்டும். தவறுகளையும், குறுந்தேசிய வக்கிரங்களையும் முன்னிறுத்தி, எதிரி தன் இன மக்களிடம் இனவெறுப்பை தூண்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இதை எதிர்த்துப் போராடுவதன் மூலந்தான் சரியான மக்கள் போராட்டம் தொடங்குகின்றது.

இதை இன்று யார் செய்யவில்லையோ, சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்று எவரெல்லாம் இன்று கூறுகின்றனரோ, அவர்கள் நிச்சயமாக தமிழ்மக்களுடன் கூட சேர்ந்து போராடவும் வாழவும் மறுப்பவர்கள் தான். இதுதான் கடந்தகால உண்மை மட்டுமல்ல, இன்றைய உண்மையும் கூட. தமிழ்மக்களின் சொந்த தப்பபிப்பிராயங்களை நீக்காமல், சிங்களமக்களின் தப்பபிப்பிராயங்களை எம்மால் நீக்க முடியாது. மக்கள் தமக்காக தாம் போராடுவது மட்டும் தான், தோற்கடிக்க முடியாத பாதை. இதை ஒடுக்கவும், அடக்கவும்  முடியாது.  இதுதான் மனித வரலாறு கூட. சிந்திப்போம். செயற்படுவோம்;.