மார்க்சியத்தை தெரிந்து கொள்ளாமல், உலகை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் மனித சமூகத்தின் நிலவும் சமூக அறியாமையையும், கற்பனைகளையும் மட்டும் போதித்த தத்துவமல்ல. மனித துன்பங்களும் துயரங்களுக்கும் காரணமான சமூக காரணங்களை மட்டும் விளக்குவதுடன் நிற்கவில்லை, அதற்கான தீர்வுகளையும் கூட விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்றது.
மனித சமூகம் குறித்தான் சமூக விஞ்ஞானத்தை தெரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் முனையும் போதுதான், மனிதன் மனிதனாக மாறுகின்றான். மனித சமூகத்துக்கு வெளியில் பொருட்கள் குறித்த மனிதனின் விஞ்ஞானஅறிவு அதை மாற்றுவது போல்,மனித சமூகம் குறித்தான விஞ்ஞான அறிவு சமூகத்தை மாற்றும்.
"மார்க்ஸ் இயற்கை குறித்த அறிவை மனித சமூகம் குறித்த அறிவாக்கி"யதை எடுத்துக்காட்டி விளக்கும் லெனின் "இயற்கை பற்றிய மனித அறிவு எப்படி அவனிடத்தில் அவனுக்கு அப்பாற்பட்டு உள்ளதோ அதே போன்றுதான் மனிதனின் சமூக அறிவும் சமூகத்தின் பொருளாதார அமைப்பைக் காட்டுவதாகவே அமைகிறது." என்றார்.மனித அறிவு சார்பானது.
மனித அறிவு மனிதனுக்கு அப்பால் உள்ளது. அதைப் பற்றிய அறிவுதான் மனித அறிவாகின்றது. ஆகவே முரணற்ற வகையில் மனித சமூகத்தை தெரிந்து கொண்டு வாழ்வது தான், மனிதன் மனிதனாக வாழ்வதற்குரிய ஒரு இடத்தை இந்த இயற்கையில் பெற்றுத்தருகின்றது.
இந்தவகையில் சமூக விஞ்ஞானமாக இருப்பது மார்க்சியமாகும். நாம் மார்க்சியத்தை அறிந்து கொள்ளாமல், நாம் வாழும் உலகை முழுமையாக ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது.
மார்க்சியம் குறித்து லெனின் "இது மனிதர்களுக்கு ஒருங்கினைந்ததொரு உலகக் கண்ணோட்டத்தை தருகின்றது. இக் கண்ணோட்டம் எந்தவிதமான மூடநம்பிகை, பிற்போக்குத்தனம், முதலாளித்துவ ஒடுக்குமுறையை பாதுகாத்தல் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாது" என்றார். சமூகம் சார்ந்த எந்த விடையத்துக்கும், மார்க்சியம் முரணற்ற வகையில் ஒருங்கினைந்த ஒரு உலகக் கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றது. அது கற்பனையில் மனிதனை கனவு காணவைப்பதில்லை. மனிதனுக்கு வெளியில் தீர்வைக் காண்பதில்லை. வெறும் தத்துவவுமும் அல்ல, மாறாக செயலுக்குரிய வழிகாட்டியாக இருக்கின்றது.
"மார்க்சிய தத்துவம் என்பது பொருள் முதல்வாதமேயாகும்" என்றார் லெனின். மார்க்ஸ் கண்டுபிடித்த இயங்கியல் பொருள் முதல்வாதமும் வரலாற்று பொருள் முதல்வாதம், அரசியல் பொருளாதாரமும், விஞ்ஞான சோசலிசமும் என்பன, மனிதன் சமூகமாக வாழ்தற்கேற்ற உலமாக மாற்றக் கோரும் சமூக விஞ்ஞானமாகும்.
இந்த வகையில் மார்க்ஸ்
1.வரலாறு பற்றிய பொருள்முதல்வாதம்
2.உபரி மதிப்பை
3.வர்க்கப்போராட்டம் என்ற ஒருங்கினைந்த விஞ்ஞானத்தை கண்டுபிடித்ததார்.
தன் கண்டுபிடிப்பு என்னஎன்பது பற்றி மார்க்ஸ் "நவீன சமுதாயத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ, அந்த வர்க்கங்களுக்கு இடையே போராட்டம் நடப்பதையோ நான் கண்டு பிடித்தவை அல்ல. முதலாளித்துவ வரலாற்றாய்வாளர்களும், பொருளாதார நிபுணர்களும் வெகுகாலத்துக்கு முன்பே இதனை கண்டறிந்து விட்டனர். நான் கண்டறிந்ததில் புதிது என்னவெனில்
1.வர்க்கங்கள் இருந்து வருவது உற்பத்தியின் வளர்ச்சியில் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் தொடர்புடையது
2.வர்க்கப் போராட்டம் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திக்கே இட்டுச் செல்கிறது. 3.இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கங்களை ஒழிப்பதற்கான வர்க்கங்களற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான மாறுதல் கட்டமாகும் என்பவற்றை நிரூபித்ததே ஆகும்" என்றார்.
இந்த் சமூக விஞ்ஞனாம் மார்க்சியமானது. இதைநிறுவ உதவிய முந்தைய தத்துவங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மார்க்சியத்துக்கு முந்தைய கற்பனைவாத சோசலிசம் பற்றி இது சமூக எதார்த்தம் பற்றி, எதார்த்ததுடன் தொடர்பற்ற வகையில் கற்பனையில் சமூகத்தை மாற்றி அமைப்பது பற்றிய கோட்பாடாகும்.
மக்களுடனும்,வர்க்கப் போராட்டத்துடன் தொடர்பற்ற வகையில், மாற்றத்தை பற்றிப் பேசியது. சமூகத்தில் நிலவிய துன்பதுயரங்களை பேசியதுடன்,வர்க்கமற்ற சமூகங்களை பற்றியும், அதை இந்த சமூக அமைப்பின் உள்ளயே மாற்றிவிட முடியும் என்று நம்பியவர்களின் கோட்பாடு தான் கற்பானாவாத சோசலிசம்.
இந்த வகையில் தமாஸ் மோர்(1478-1535), தாமஸா கம்பனேல்லா(1568-1639) இருவரும் தனிவுடமை இல்லாத, மனிதனை மனிதன் சுரண்டுதல் இல்லாத, அனைவரும் உழைத்து வாழ்வது பற்றிய கருத்தை முன்வைத்தனர்.
தாமஸா கம்பனேல்லா சோம்பேறிகளையும், செல்வந்தர்களையும் எதிர்த்து கடுமையாக எழுதினார். தமாஸ் மோர் "ஒரு உடல் பருத்த முட்டாள், ஒரு கழுதையைக் காட்டிலும் அதிகமான மூளையைப் பெற்றிராத நபர், பல அறிவாளிகளையும் நல்ல மனிதர்களையும் தனக்கு கீழ்ப்படிபவர்களாகவும் அடிமைகளாக வைத்திருக்க முடிவது ஒரேயொரு காரணத்தினால் மட்டுமே, அதாவது அவர் தங்கக் குவியலை வைத்திருப்பதுதான்" என்றார். இப்படி சமூகத்தின் அவலத்திற்கான காரணத்தை இனம் காட்டி, அதைஎள்ளி நகையாடினார்.
இப்படி சோசலிச கருத்தை முன்வைத்த இவர்கள், அதை எப்படி அடைவது என்பதை முன்வைக்க முடியவில்லை. இதனால் இவர்களை கற்பனைவாத சோசலிஸ்ட்டுகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் எல்லோரும் உழைப்பது பற்றி, உழைப்பைச் சமூகத்திடம் ஓப்படைப்பது பற்றி,அதை பொது பண்டகசாலையில் அவரவர் தேவைக்கு பகிரப்பட்டுவது பற்றியும், தனிவுடமை இன்மை பற்றியும் கூட பேசினர். உழைப்பு தனிவுடமையில் கடுந்தண்டனையாக, துன்பமாக இருப்பதாக கூட இவர்கள் எடுத்துக்காட்டினர். இது பொதுவுடமையில் மகிழ்ச்சியாக, பெருமிதமாக, புகழ் சார்ந்த ஒன்றாக இருக்கும் என்பதைக் கூட எடுத்துக் காட்டுகின்றனர்.
இப்படி இவர்கள் முன்வைத்த கற்பனா சோசலிசத்தை அடுத்து வந்த தலைமுறை சேர்ந்தவர்களான பிரான்சில் குலோட் அன்ரீ சான்-சிமோன்(1760-1825), ஷார்ல் ஃபூரியே(1772-1837), பிரிட்டனில் ராபர்ட் ஒவன்(1771-1858) ஆகிய இவர்களும், தனிவுடைமை சமூக அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்தனர். எதிர்கால கம்யூனிச சமூகம் பற்றிய பல கருத்துக்களை உருவாகினார்கள். மக்கள் தங்கள் கருத்தை அறிந்து கொண்டவுடன், ஒரு இலட்சிய பூர்வமான சமூக அமைப்பை படைக்க முடியும் என்று கூட நம்பி அதை பிரச்சாரம் செய்தனர்.
ஷார்ல் ஃபூரியே முதாலாளித்துவ சமூக அமைப்புக்கு முந்தைய சமூக அமைப்பு மறைந்தது போல், முதாலாளிதுவ அமைப்பும் மறையும் என்று கூட நம்பினார். அதனிடத்தில் தானாக ஒரு புதிய சமூகம் தோன்றும் என்று நம்பினார். சான்-சிமோன் தன்னுடைய இந்தக் கருத்தை அரசர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் தன் கருத்தை முன்னெடுக்க உதவி புரிவர்கள் என்று கூட நம்பினார். ஷார்ல் ஃபூரியே புதிய சமூகத்தை படைக்க பணம் உதவி செய்யுமாறும் செல்வந்தர்களை கோரியதுடன், அதை பத்திரிகையில் விளம்பரம் செய்தார். இதை முன்னெடுக்க பண உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து, நாள் தோறும் நண்பகல் வீடு செல்வார். இப்படி கற்பனையில் தன் கருத்துடன் வாழ்ந்தனர்.
ராபர்ட் ஒவன் தன் கருத்தை வெளியிடுவதுடன் நின்று விடாது,அதற்கான செயல் முறையில் ஈடுபட்டார். அவர் தனது கூட்டு உடைமையான தொழிற்சாலையில் துணிச்சலாக பரிசோதனையில் கூட இறங்கினார். அவர் அங்கு வேலை நேரத்தைக் குறைத்தார். ஊதியத்தை உயர்த்தினார். குழந்தைகளுக்கான பாடசாலையை நிறுவினார். 1824 அமெரிக்கா சென்று தொழிலாளர் கூட்டு வாழ்க்கைகான குடியேற்றத்தை நிறுவினார். சிறிது காலத்தில் அது அழிந்துவிட்டது. இப்படி சமூகத்துக்கு வெளியில் கற்பனையில் கருத்துகளையும், கருத்துகளை கொண்ட சிலர் முன்னுதாரணமிக்க வாழ்க்கை அமைப்பதன் மூலம் சமூகத்தை மாற்றிவிட முடியும் என்று நம்பினர்.
இவர்கள் பற்றி எங்கெல்ஸ் கூறும் போது "சான்-சிமோன், ஃபூரியே, ஒருவனுடைய விசித்திரமான கருத்துகளும் கற்பனாவாதமும் எப்படி இருந்தாலும் அவர்கள் எல்லாக்காலங்களையும் சேர்ந்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் முக்கியமானவராக இருக்கிறார்கள்" என்றாhர். மனித அவலம் பற்றிய அக்கறையுடன், அதை மாற்ற வேண்டும் என்று கனவு கண்டார்கள். இதை எப்படி மாற்றுவது, யார் மாற்றுவது என்பதை மார்க்சியம் சமூக விஞ்ஞனமாக முன்வைக்கின்றது. இதற்கு உறுதுணையாக அடிப்படையாக இருந்தது தான் இயங்கியல், பொருள் முதல்வாதம் மற்றும் பொருளாதாரம் பற்றி அறிவு.
மார்க்சியத்துக்கு முந்தைய இயங்கியல், பொருள் முதல் வாதம், பொருளாதாரம் பற்றி ஒரு பொருள் மாறிக்கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை மறுத்துதான் கருத்துகள், சிந்தனைகள், தத்துவங்கள் முன்வைக்கப்பட்டன. இயக்கத்தையும், மாற்றத்தையும் மறுப்பதைசாரமாக கொண்ட இயங்கியல் மறுப்பாக, மறுதளத்தில் இதுவே கருத்து முதல்வாதமாக இருந்தது.
இந்த வகையில் இயங்கியல் மறுப்பை தத்துவதளத்தில் தகர்த்தவர் கியோர்க் ஹெகல்(1770-1831) ஆவார். கருத்து முதல்வாதத்தை தகர்த்து பொருள்முதல்வாதத்தை முன்வைத்தவர் லுட்விக் ஃபாயர்பாஹ்(1804-1872) ஆவர். இந்த வகையில் மார்க்சிய தத்துவத்தை வளர்தெடுக்க இவர்களின் கோட்பாடுகள் காரணமாக இருந்தபோதும்,அது குறைபாடு கொண்டதாக இருந்தது.
இதற்கு முந்தைய கிரேக்க தத்துவியலாளர்கள், இயற்கையான இயங்கியலாராக இருந்தனர். அரிஸ்டாட்டில் மாபெரும் அறிவுஜீவியாக இருந்தார். இவர் இயங்கியல் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து இருந்தார். கிரேக்க தத்துவவியலரான ஹெராக்லிட்ஸ் எல்லாம் இருக்கின்றது அதே நேரத்தில் எல்லாம் இல்லாமலும் இருக்கின்றது. ஏனெனின் ஒவ்வொன்றும் நிலைப்பாடற்றதாய் இருக்கின்றது, தொடர்ந்து மாறிக் கொண்டும், மறைந்து கொண்டும் தோன்றிக் கொண்டு உள்ளது என்றார். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக நிறுவ முனைந்த போதும், இயற்கையைத் தாண்டி முன்னேறவில்லை.
இதன்பின் இயங்கியலை வெளிப்படுத்திய அறிவாளிகளில் டேக்கார்ட், ஸ்பினோஸா இருந்த போதும், சமூக இயக்கம் படிப்படியாக இயக்க மறுப்பியலாகி விட்டது. இதன் பின் இயங்கவியல் தத்துவதுக்கு வெளியில் காணப்பட்டது. இதை மாற்றி அமைத்தவர் தான் ஹெகல்.
ஹெகல் இயங்கியலை முன்வைத்த போது அதை கருத்துமுதல் வாதம் ஊடாகவே முன்வைத்தார். இதன் மூலம்உலகத்துக்கு வெளியில்,வேறு ஒன்று இருப்பதாக கற்பித்தார். ஃபாயர்பாஹ் பொருள் முதல்வாதத்தை முன்வைத்த போது, இயங்கியலை மறுத்தார். உலகத்தை இயக்கமற்ற ஒன்றாக காட்டினார். வளர்ச்சியை நிராகரித்து, அளவு ரீதியான மற்றத்தை மட்டுமே அங்கீகரித்தார்.இப்படி இருவருடை தத்துவத்தின் குறைபாட்டை கடந்துதான் மார்க்சியம், ஒரு சமூக விஞ்ஞானத் தத்துவமானது.
மார்க்சியத்தை வளர்த்தெடுக்க உதவியது பொருளாதாரம் பற்றி அறிவு.இந்த வகையில் ஆடம் ஸ்மித்(1723-1790), டேவிட் ரிக்கார்டோ(1772-1790) ஆகியோர், உழைப்புதான் அனைத்து செல்வத்தின் தோற்றுவாய் என்பதை நிறுபித்தார்கள். இந்த அடிப்படையைக் கொண்டு தான் மார்க்ஸ் விஞ்ஞான பொருளாரத்தை நிறுவினார். இந்தமுதலாளித்துவ பொருளதாரவாதிகள் பொருட்களின் உறவைக் (பொருளை மாற்றிக் கொள்வது பற்றி) கண்டுபிடிக்க, மார்க்ஸ் மனிதர்களுக்கு இடையிலான உறவைக் கண்டுபிடித்தார். இப்படி மார்க்சியம் சமூக விஞ்ஞனமானது. மனிதர்களுக்கு இடையிலான உழைப்பின் உறவைக் கண்டு பிடித்தன் மூலம், உபரி மதிப்பு கோட்பாட்டை மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதுதான் முதலாளித்துவ பொருளாதார கொள்கையில் முக்கிய தூண். இது தான் முதலாளித்துவ பொருளாதார விதிகளை,முரணற்ற வகையில் விளக்கியது.
இப்படி மார்க்சியம் கற்பனையில் தோற்றவில்லை. தனக்கு முந்தைய அறிவையும்,மனித வாழ்வையும், வாழ்வதற்கான மனிதன் நடத்திய போராட்டத்தையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு தான், எதார்த்தம் மீது, நடைமுறை மீதுதன்னை சமூக விஞ்ஞானமாகியது. இதைத்தான் எங்கெல்ஸ் "எங்கள் போதனை செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வரட்டுச் சூத்திரம் அல்ல" என்றார். லெனின் "மார்க்சியம் உயிரற்ற வரட்டு சூத்திரமல்ல... செயலுக்கு உயிருள்ள வழிகாட்டி" என்றார்.