Language Selection

இதழ் 4
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மே தினம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் சென்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தினமாகும். சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினமாகும்.1886 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட சதுக்கத்தில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் தமக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோஷமெழுப்பினார்கள்.

இந்த கோஷத்தைக் கண்டு கொதித்தெழுந்த முதலாளிகள் தமது ஏவல் நாய்களை அவிழ்த்துவிட்டனர் துப்பாக்கியைக் கையிலேந்திய அந்த ஏவல் நாய்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அவ்விடத்திலேயெ சுருண்டு விழுந்த பல தொழிலாளர்களின் இரத்தத்தால் அந்தச் கதுக்கமே இரத்தக்காடாகியது. அன்றைய தினம் உயிர் நீத்த தொழிலாளர்களை உலகம் பூராகவுமுள்ள தொழிலாளர்கள் ஒன்று சேரும் தினமாகும்.

உலகம் மனித உழைப்பைக் கொண்டே உருவாக்கப்படுகிறது. அந்த உழைப்பை சிந்துபவர்கள் உழைக்கும் மக்கள். சரியாகச் சொல்வதாயிருந்தால் தொழிலாளர்கள். இந்த உலகை கட்டியெழுப்பும் மனிதர்களுக்காக ஒரே ஒரு நாள் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாள் கூட முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம் மனமிறங்கி பெற்றுத்தந்த ஒன்றல்ல. போராடி பெற்றுக் கொண்ட தினம். தொழிலாளர்கள் போராடி பெற்றுக் கொண்ட அந்த நாளைப் பற்றிய கதைகள் போதுமான அளவிற்கு வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. ஆகவே அந்த கதையை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதற்குப் பதிலாக இன்றைய நிலையை குறித்தே பேச வேண்டியிருக்கிறது.

வருடத்தின் 365 நாட்களிலும் தமக்கென ஒரு நாள் ஒதுக்கப்பட்ட தினத்திலிருந்து அந்த தினத்தை நினைவு கூறுவதற்காக மே மாதம் முதலாம் திகதி உழைக்கும் மக்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலம் போனார்கள். அதில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களின் போர்க் குணத்தால் அந்த ஊர்வலங்கள் களைகட்டப்பட்டன. ' உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருவீர்' தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடு "சோஷலிஸ அகிலம் ஓங்குக" என்ற கோஷங்சள் வானைப் பிளக்கும்

இன்றைய நிலையில் சில அரசியல் கட்சிகள்; தமது பலத்தைக் காட்டுவதற்காக சோற்றுப் பார்சலையும் சோமபானத்தையும் கொடுத்து கட்சி ஆதரவாளர்களையும் அங்கத்தினர்களையும் திரட்டிக் கொண்டு ஊர்வலம் போகிறார்கள்.

அலலங்கார மேடைகளை அமைத்து அரசியல்வாதிகளும் தொழிற் சங்கத் தலைவர்களும் தொண்டை கிழியக் கத்துகிறார்கள். முதலாளிவத்திற்கு முட்டுக் கொடுத்து உல்லாசத்தை அனுபவிக்கும் செஞ்சட்டைக் காரர்களும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அதே முதலாளித்துவ மேடைகளில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி பேசுகிறார்கள். வெட்கம் கெட்ட ஜென்மங்கள். ஆதரவாளர்கள் மேடைகளுக்கு அருகில் இருந்து கொண்டு கை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். கூட்டம் முடிந்த பின்னர் வீட்டுக்குப் போய் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். அதோடு மே தினம் முடிந்து விட்டதா? தமது கட்சித் தலைவர்களுக்கும் கட்சிக்கும் தமது ஆதரவை தெரிவித்து விட்டோம். இனி அடுத்த மே தினம் வரை எந்த ஆர்ப்பாட்டமோ போராட்டமோ கிடையாது என்ற எண்ணத்திலா நிம்மதியாக உறங்குகிறார்கள். அது தான் இல்லை. மறுநாள் வாழ்வாதாரத்திற்காக ஓடி ஓடி உழைக்க வேண்டுமே.

இதே நேரத்தில் நாங்கள் இன்னொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதுதான் ஊர்வலங்களில் எழுப்பப்படும் கோஷம். இந்தக் கோஷங்களில் பொருளாதார மற்றும் நலன்புரி கோரிக்கைகளே பெரும்பாலும் காணப்படுகின்றன. அவை மிகவும் கவர்ச்சிகரமான வார்த்தைகளால் அலங்கரிக்கப்படுகின்றன. எங்களுக்கு ஆகக் குறைந்த வாழ்க்கை நிலையையோஆகக் குறைந்த மனித உரிமைகளையோ தராத ஆட்சியாளர்களிடமே நாங்கள் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கின்றௌம். ஆனாலும்இ இந்தக் கோரிக்கைகள் கோஷங்களாக முன்வைக்கப்பட்டாலும் ஆட்சியாளர்கள் அவற்றை நிறைவேற்றப் போவதில்லை. அவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் அவர்களுக்கு கிடையாது. அதற்கான ஆற்றலும் அவர்களுக்குக் கிடையாது.

அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவருக்குக் கீழ் ஊழியம் செய்கிறார்கள். பொதுவாக எடுத்துக் கொண்டால் அவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளகளேயன்றி தொழிலாளர்களல்ல. ஆகவே அவர்கள் தொழிலாளர்கள் என்ற வகையில் ஊர்வலத்தில் கலந்து கொள்வதில்லை. குறித்த கட்சியின் ஆதரவாளர் செயற்பாட்டாளர் என்ற வகையிலேயே கலந்து கொள்கின்றனர். இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் சரி ஆதரவாளர்களும் சரி ஊர்வலம் செல்வதில் தவறேதும் கிடையாது. அதுவும் வர்க்கத்தை பிரதிநித்துவம் செய்யும் விதத்தில் என்றால் மட்டுமே. அதை விடுத்து கட்சியின் பலத்தைக் காட்டுவதற்காகவோ உறுப்பினர்களை ஆகர்ஷித்துக் கொள்வதற்காகவோ அப்படிச் செய்வதாயிருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. என்றாலும் இன்றைய மே தினம் அப்படித்தான் நினைவு கூறப்படுகிறது என்பதை சொல்லித்தான ஆக வேண்டும். அதனால் தான் மே தினத்திற்காக தொழிலாளர்களை அணிதிரட்ட செல்லும் இடதுசாரி கட்சிகளின் தோழர்களால் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியாதுள்ளது. தொழிலாளர் தினத்தின் உண்மையான தார்ப்பரியத்தை அறியாத வரை அரசியல் ரீதியான அறிவு அவர்களுக்கு வழங்கப்படாத வரை உண்மையான தொழிலாளர்களை உண்மையான இடதுசாரிகளோடு ஊர்வலத்தில் அணிவகுக்கச் செய்ய முடியாதுள்ளது.

அப்படியானால் இடதுசாரி இயக்கதிற்கு உள்ள கடமைதான் தொழிலாளர்கள் முன்னிலையில் தமது இயலாமையையும் ஆற்றலின்மையையும் அவசியமின்மையையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு நிமிடத்திலும் தொழிலாளிக்கு இந்த முதலாளித்துவத்தின் சுபாவத்தை புரிய வைக்க வேண்டும் மே தினத்தையோ அல்லது போராட்டக் களத்தையோ அந்த விளக்கத்தை பெற்றுக் கொடுக்கும் கல்விக் கூடமாக மாற்றாத வரை நிறைவேற்ற முடியாத கோஷங்களை ஏந்திக் கொண்டு ஊர்வலம் செல்ல தொழிலாளர்கள் வருவார்கள் என்பது நகைப்புக்கிடமான விடயாமாகும்

எனவே தொழிலாளர் வர்க்கத்தோடு நகைச்சுவை நாடகம் நடத்தாமல் அவர்களுக்கு அரசியல் அறிவை பெற்றுக் கொடுப்பதற்காக செயலில் இறங்க வேண்டும். அதற்கு இடதுசாரிகள் தயாராக இருக்க வேண்டும். பொருளாதார கோரிக்கைகளையும் தாண்டிச் செல்லக் கூடிய அரசியல் போராட்டத்திற்காக தொழிலாளர்களை முன்வரச் செய்வது இடதுசாரிகளின் கடமையாக இருக்கின்றது. அதற்காக ' என்ன செய்ய வேண்டும் ' என்பதை நாங்கள் சொல்லாவிட்டாலும் லெனின் அதனை குறிப்பிட்டுச் சென்றுள்ளார் என்பதை மட்டும் குறிப்பிட வேண்டியுள்ளது.

"கட்சி அணிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் மக்களுக்கும் சரியாக பயிற்சியளிப்பதற்கு சரியான வழி கட்சியின் தவறுகளை மனப்பூர்வமாக வெளிப்படுத்தி அது தோன்றிய காரணங்களை ஆய்வு செய்து அதை களைவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறுவதாகும்"

--- தோழர் லெனின் ---

குறிப்பு: மே மாத வெளியீடான "போராட்டம்" பத்திரிகையில் வெளிவந்துள்ளது இந்த மேதினம் குறித்த ஆக்கம்