Language Selection

செம்பதாகை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை மீதான பூரண ஆதிக்கத்துக்கான போட்டி யாருக்கிடையிலானது?

இன்று தென்னாசியாவின் மீது பூரண ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி வலுப்படுகிறது. அதில் பூகோள மற்றும் மூலோபாய ரீதயில் இலங்கை மீதான ப+ரண ஆதிக்கத்துக்கான போட்டி முக்கிய இடத்தில் உள்ளது. இப் பின்னணியில் ஒருபுறம் சீன மிரட்டல் பற்றிய எச்சரிக்கைகள் விடப்படுகிறன. மறுபுறம் அமெரிக்காவைத் தமிழருக்காகப் பயன்படுத்துவது பற்றியும் இந்தியாவை நம்ப வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசப்படுகிறது. இன்று, இலங்கை மீதான பூரண கட்டுப்பாட்டுக்கான போட்டி அடிப்படையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானதே. சீன மிரட்டல் அதற்கு வசதியாகப் பாவிக்கப்படுகிறது.

தமிழ்ப் பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளை எழுதும் சில ஆய்வறிவாளர்களும் புலனாய்வாளர்களும் இலங்கை மெதுமெதுவாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் இலங்கை மீதான ஆதிக்கப் போட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலானது என்றும் எழுதுவதோடு, இந்தியாவின் பங்கை அடக்கி வாசிக்கிறார்கள். இது புதிதல்ல. ஆனால் உண்மையில் இலங்கை மீதான பூரண ஆதிக்கத்தை வேண்டி நிற்பவர்கள் யார் என்ற கேள்விக்கு நிகழ் நிலைகளின் அடிப்படையிலும் ஆராய்வின் அடிப்படையிலும் விடை தேடுவது நல்லது. நாம் விளங்க வேண்டிய உண்மைகளைத் திரிப்பின்றிச் சொல்வது காலத்தின் தேவை. தமிழ்ப் பத்திரிகைள் சீன விரோதப் போக்கிற் சொல்லியுள்ள உண்மைகளை விடச் சொல்லாது விட்ட உண்மைகள் அதிகம். இலங்கையில் நடந்து முடிந்த போருக்கு ஆயுதங்களை வழங்கித் தமிழர்களைக் கொன்றொழித்தது சீனாதான் என்று தொடர்ந்தும் எழுதப்படுகிறது. இலங்கை அரசுக்கு ஆயுதங் களையும் தொழில்நுட்பங்களையும் செய்மதிவழியாகத் தகவல்களை யும் முன்னின்று வழங்கிய நாடுகள் அமெரிக்காவும் இந்தியாவுமே ஒழியச் சீனாவல்ல. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகளைத் தடைசெய்த நாடுகளில் சீனா ஒன்றல்ல.

இன்று இலங்கை-சீன உறவு நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான வர்த்தக அடிப்படையிலானது. சீனா இதுவரை எந்த நாட்டின் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தவில்லை. சீனா சோஷலிச நாடாக இருந்த போது வகுத்த அயற் கொள்கையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இனி மாறுமா என்பது வேறு விடயம். சீனா இதுவரை இலங்கையின் உள் அலுவல்களிற் தலையிடவில்லை. அவ்வாறே அது இதுவரை வேறெந்த நாட்டின் உள் அலுவல்களிலும் தலையிடவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அவ்வாறல்ல.

இலங்கையில் ராணுவ மேலாதிக்கத்திற்காகஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிற் பல தசாப்தங்களாக இருந்து வந்துள்ள போட்டி இப்போதும் தொடர்கிறது. கொலனியத்தின் இறுதிச் சுவடுகள் போன பின்பு இலங்கை மண்ணில் அடிபதித்த படைகள் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அல்லாமல் வேறெந்த நாட்டினவையும் அல்ல. 1971ல் நேரடிக் குறுக்கீட்டுக்கு ஆயத்தமாய் இருந்த இந்தியப் படைகள், 1987ல் நேரடியாகக் குறுக்கிட்டன.

இந்தியா இலங்கையின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவதற்குச் சீன மிரட்டல் காரணமாக இருக்கவில்லை. அது இப்போது ஒரு வசதியாக்கப்பட்டுள்ளதே ஒழிய உண்மைக் காரணங்கள் வேறு. இலங்கையின் அணிசேராக் கொள்கை முழுமையானதாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியத் தரப்பிலேயே இலங்கை நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு முரணாக 1962 வரை எதுவும் நடக்கவில்லை. எனினும் 1961இல் இந்திய-சீன எல்லை மோதலின் போதும் 1971இல் இந்திய-பாக்கிஸ்தான் மோதலின் போதும் இலங்கை வகித்த நடுநிலையை இந்தியா வெறுத்தது. குறிப்பாக, மேற்குப் பாக்கிஸ்தானில் இருந்து கிழக்குப் பாகிஸ்தானுக்கு (இன்று பங்களாதேஷ்) பாக்கிஸ்தான் விமானங்கள் இலங்கையில் எரிபொருள் நிரப்ப நின்று போனதை இந்தியா வெறுத்தது. எனினும் ஒரு நேச நாடு தனது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தனது படைகளைக் கொண்டுசெல்ல உதவுவது இந்திய-பாகிஸ்தான் முரண்பாட்டில் ஒரு பக்கஞ் சார்வதாகி விடாது. எனினும், இந்திய மேலாதிக்க நோக்கில் அந்த நியாயம் விளங்கியிராது. எவ்வாறாயினும், இலங்கையின் உள் அலுவல்களிற் தலையிடுவதில் இந்தியா எச்சரிக்கையுடனேயே இருந்து வந்தது. ஆனாலுந் தமிழ்த் தேசியவாதிகள் இந்திய அதிருப்தியைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் இருந்தனர். இந்தியா இலங்கையிற் குறுக்கிடுவதற்கான சூழ்நிலை தமிழர் மீதான அக்கறையாலல்லாது ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி அமெரிக்காவின் சார்பான திசையில் அயற் கொள்கையை நகர்த்திய போது ஏற்பட்டது.

1987இல் இந்தியா இலங்கைத் தமிழருக்குச் செய்த துரோகத்திற்கு எந்தச் சீனத் தலையீடு காரணமாயிருந்தது என்று இதுவரை யாருஞ் சொல்லவில்லை. ஏனெனிற், சீனா 1952 முதல் இலங்கையுடன் பேணி வந்த நட்புறவு, 1957இல் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்ட பின்பு மேலும் வலுப்பட்டது. 1970களில் சீனா ஏகாதிபத்திய விரோத கொலனிய விரோத விடுதலைப் போராட்டங்களை வலுப்படுத்துமுகமாகச் சில ஆபிரிக்க நாடுகட்குப் பெரிய பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது. அவை சீன மேலாதிக்க நோக்கிலானவை எனக் குற்றஞ்சாட்ட யாருக்கும் இயலவில்லை.

சீனாவின் அயற் கொள்கையிற் சர்வதேச நிகழ்வுகளும் போக்குக்களும் முக்கிய பங்களித்துள்ளன. சீனாவுக்கு எப்போதுமே அமெரிக்கா பற்றிய ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்துள்ளது. 1961க்குப் பிறகு தொடங்கிய சோவியத் ஒன்றியத்துடனான முரண்பாடு, 1967இல் சோவியத் ஒன்றியம் செக்கோஸ்லவாக்கியாவுக்குப் படைகளை அனுப்பியதிலிருந்து வலுப்பெற்றது. சோவியத் ஒன்றியத்தில் பிரெஷ்னெவ் ஆட்சிக் காலம் முழுவதும் சீன-சோவியத் உறவில் முறுகல் இருந்து வந்தது. 1980களில் தொடங்கிய நெகிழ்வு சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்பு, சீனாவின் அரசியல் மாற்றங்களின் விளைவாகவும் ரஷ்யாவில் அமெரிக்காவின் ஆதிக்க முனைப்பு கடும் எதிர்ப்பைக் கண்டதன் பயனாகவும், ஒரு புதிய வலிய உறவு ஏற்பட்டுள்ளது.

இவ்விடத்தில் இந்திய அமெரிக்க உறவின் பரிணாமங்களைப் பார்ப்பது அவசியம். இந்தியா சுதந்திரமடைந்தது முதல் 1990 வரை,இந்திய-அமெரிக்க உறவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்திய-சோவியத் உறவுகள் அமைந்திருந்தன. குறிப்பாகக், கெடுபிடிப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இந்திய-அமெரிக்க உறவு மிக மட்டுப்படுத்தப்பட்டு —ஆனாற் பகைமையற்று— இருந்தது. நேரு அணிசேராக் கொள்கையை இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையாக கொண்டிருந்ததனால் கெடுபிடிப்போர்க் காலத்தில் ஒருவகையான இரட்டறு நிலையை இந்தியா கொண்டிருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின் போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கே ஆதரவு தெரிவித்தது. அதேவேளை, இந்தியாவின் கைத்தொழிற்றுறை வளர்ச்சியிலும் ஆயுத விற்பனையிலும் சோவியத் ஒன்றியம் முக்கிய பங்காளியாக இருந்தது. இக் காலத்தில், இந்தியாவைத் தனது சந்தையாக மட்டுமே பார்த்த அமெரிக்கா இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர் இந்திய-அமெரிக்க உறவு முன்னேறிது. அமெரிக்கா உலகப் பொலிஸ்காரானாகியதன் விளைவாக இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை நாடியது. 1997இல் பொக்ரானில் இந்தியாவின் அணுகுண்டுச் சோதனை இந்திய-அமெரிக்க உறவில் விரிசலை உண்டாக்கியது. அமெரிக்கா இந்தியாவிற்கெதிரான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால் இந்தியாவின் தொழில்நுட்ப, கைத்தொழில் வளர்சிகளின் பின்னணியில் பொருளாதாரத் தடை பாரிய பாதிப்பை விளைக்கவில்லை. எனவே, 2001இல் அமெரிக்கா இந்தியா மீதானான பொருளாதாரத் தடையை நீக்கியது.

“9/11”ஐத் தொடர்ந்து அமெரிக்கா முன்னெடுத்த “பயங்கரவாதத்திற்கெதிரான போரில்” இந்தியா அமெரிக்காவின் பங்காளியாகிய பின்பு இந்திய-அமெரிக்க உறவு சுமுகமாகியது.

2004ம் ஆண்டு கைச்சாத்திட்ட அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புதிய பரிமாணமாகும். அணு ஆயுத வலிமையுடைய நாடுகளை ஓப்பந்தங்களினூடு தனது கட்டுப்பாட்டின் கீழக் கொண்டுவரும் அமெரிகத் திட்டத்தில் இந்தியா பங்காளியானதுடன் தனது அணுசக்தித் திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகவராண்மையம் (ஐயுநுயு) மேற்பார்வையிட இந்தியா அனுமதித்தது. அடிப்படையில் இது இந்தியாவின் இறைமைக்கு சவால்விடுவதாக இருந்தும் ஆட்சியாளர்களின் 'அமெரிக்க விசுவாசம்' அதை இயலுமாக்கியது.

இன்று, இந்திய-அமெரிக்க உறவின் முக்கியமான அம்சமாகப் அமெரிக்க-இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு விளங்குகிறது. அதை இயலுமாக்கிய ஒரே காரணி, "சீன மிரட்டல்" எனப்படும் - சீனாவை அண்டிய பிராந்தியத்திலும் உலகளாவிய முறையிலும்— சீனாவின் தவிர்க்கவியலாத வகிபாகமாகும். சீனாவின் வளர்ச்சியும் அதன் இராணுவ பலமும் தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியச் செல்வாக்குக்குச் சவாலாகத் தெரியும் அதே வேளை, உலகளாவிய முறையில் அமெரிக்காவின் பேரரசுக் கனவுக்கு அச்சுறுத்தலாய் விளங்குகிறது. இந்த அடிப்படையில், சீனாவைப் பொது எதிரியாகக் கொள்ளுமாறு இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைகிறது. குறிப்பிடத்தக்கவாறு, அண்மை வரை, அமெரிக்கா தனது அதிநவீன ஆயதங்களை இந்தியாவுக்கு விற்கவில்லை. இன்றும் இந்தியாவுக்கு ஆயதம் வழங்கும் முன்னணி நாடுகளாக ரஷ்யாவும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுமே விளங்குகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அவை நம்பகமான ஆயத விற்பனையாளர்களாக இன்னமும் உள்ளன. அமெரிக்க ஆயதங்களின் கூடிய விலையும் தொடர்ச்சியான விநியோகம் பற்றிய ஐயங்களும் அமெரிக்க ஆயதக் கொள்வனவில் இந்தியத் தயக்கத்துக்கான காரணங்களாகும். இந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருகிறது.

இந்திய-அமெரிக்க உறவின் நெருக்கத்தையும் தன்மையையும் தொடர்ந்தும் நிர்ணயிக்கும் காரணியாகப் பாகிஸ்தான்-அமெரிக்க உறவு உள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் பாகிஸ்தானைக் கெண்டு அமெரிக்கா தான் விரும்பியவற்றையெல்லாம் சாதிக்க இயலுமான வரை, இந்திய-அமெரிக்க உறவு வலுவற்றறே இருக்கும். பாகிஸ்தான் அமெரிக்காவின் தாளத்திற்கு ஆட மறுப்பின், அமெரிக்கா இந்தியாவுடன் நெருங்கும். இவ்வாறு, இந்திய உதவியோடு அமெரிக்கா தனது தேவையை நிறைவுசெய்வதோடு பாகிஸ்தானின் மீது மறைமுக அழுத்தத்தையும் கொடுக்கிறது.

தனது ஆப்கானிய யுத்தத்தைத் தொடர அமெரிக்காவிற்கு இந்தியாவின் பங்களிப்புத் தேவை. 2010 முதல் தொடர்ந்து நடைபெறும் இந்திய-அமெரிக்க மூலோபாய உரையாடல்களின் (ளுவசயவநபiஉ னுயைடழபரந) அடிப்படையாக ஆப்கானிஸ்தானில் இந்தியாவை ஈடுபடுத்துவது அமைகிறது. 2014இல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக விலகுகையில் அமெரிக்கா வகித்துவந்த பங்கை இந்தியா வகிப்பதை அமெரிக்கா வேண்டுகிறது. அமெரிக்க பாதுகாப்புச் செயலரின் சொற்களில், 'ஆப்கானிஸ்தான் இனி எங்களது பிரச்சனையல்ல உங்களது பிரச்சனை". அதாவது, அமெரிக்காவின் அடியாளாக இந்தியா செயற்படவேண்டும்.

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை முடிவுகளில் தாக்கமுடைய Foreign Policy இதழ் வாஷிங்டன் டில்லியிடம் எதிர்பார்க்கும் 10 அம்சங்களைப் பட்டியலிட்டிருந்தது.

1. சீனாவுடன் சண்டைக்குத் தயாராயிருத்தல்

2. இந்து சமுத்திரத்தில் சில்லறைச் சண்டையிடல்

3. ஆப்கானிஸ்தானின் மாற்றத்தில் உதவுதல்

4. ஈரானுக்கு அழுத்தங் கொடுத்தல்

5. "நல்ல" (அதாவது அமெரிக்க சார்பான) நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கல்

6. தென்கிழக்காசிய அலுவல்களிற் பங்குவகித்தல்

7. பாகிஸ்தானுடன் தொடர்ந்து முரண்படல்

8. பொருளாதார ஒப்பந்தங்களிற் கைச்சாத்திடல்

9. தொடர்ச்சியான இராணுவக் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளல்

10. அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்குதல்

தென்னாசியப் பூகோள அரசியலில் இந்திய-அமெரிக்க உறவென்பது இரு நாடுகளுக்குமிடையிலான போட்டியை மையப்படுத்துகிறது. இன்று இலங்கை, நேபாளம், மாலே ஆகிய நாடுகளில்இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேலாதிக்கப் போட்டி உள்ளது. நேபாளத்தில் தொடரும் அமெரிக்கா-இந்திய சதுரங்கமும் மாலே ஆட்சிக் கவிழ்ப்பில் இந்தியப் பங்கும் கவிழ்க்கப்பட்டவருக்கு அமெரிக்க ஆதரவும் இந்திய-அமெரிக்க போட்டிக்கான அண்மைய உதாரணங்கள்.

சீனாவும் ரஷ்யாவும் வேகமாக வலுவடையும் நிலையில் ஆசியப் பிராந்தியத்தில் ஒரு "ஆசிய நேட்டோ"வை உருவாக்க அமெரிக்க விழைகிறது. இதில் முக்கிய பங்காற்ற இந்தியா அழைக்கப்படினும், உருவாகவுள்ள கூட்டமைப்பு இந்தியாவையும் அச்சுறுத்தும். ஒரு வரியிற் சொல்வதானால், இந்திய-அமெரிக்க உறவைக் "கசந்தும் கசக்காத உறவின் அடிப்படையிலான போட்டி" எனலாம்.

அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ராணுவ வல்லரசாக உள்ளது. அதன் ராணுவத் தளங்கள் அமெரிக்க எல்லைகட்கப்பால் வெகு தொலைவிற் பலவேறு நாடுகளில் உள்ளன. இப்போது அதன் கூட்டாளியாகி விட்ட இந்திய மேலாதிக்கம் தன் அயல்நாடுகளின் உள் அலுவல்களிற் தீவிரமாகக் குறுக்கிடுகிறது. இக் குறுக்கீடுகள் மூலம், இந்திய மேலாதிக்கத்தின் ஒரு கரமாக சார்க் அமைப்பு மாற்றப்படுகிறது. இவற்றை மூடி மறைக்கவே, சீன மிரட்டல் என்பதைச் சிலர் முன்னெடுக்கின்றனர். இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால் இந்திய அரசாங்கமோ அமெரிக்காவோ குற்றஞ் சாட்டும் விதமாகச் சீனா இதுவரை எந்த நாட்டின் உள் அலுவலிலுங் குறுக்கிட்டதில்லை. சீனாவின் 'முத்து மாலை" எனப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத் துறைமுகங்களின் விருத்திக்கான சீன உதவி பற்றி முற்குறிப்பிட்ட விஷமிகளை விட வேறு எவரும் 'குறிப்பாக எந்த நாட்டின் அரசாங்கமும்' விமர்சிக்கவுமில்லை, ராணுவ நோக்கங் கற்பிக்கவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் ஆதாரங்களும் இருந்திருந்தால் இந்தியாவும் அமெரிக்காவும் அதைப்பற்றி வெளிவெளியாகப் பேசத் தயங்கியிரா.

சீனா, இதுவரை, தனது பொருளாதாரச் செல்வாக்கை வலுப் படுத்துவதிலேயே முக்கிய கவனங் காட்டி வந்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்திற் தன் கடல்வழிப் பாதை எதையும் மறிக்க அமெரிக்கா முற்பட்டாற் தனது கப்பல்கட்குத் துறைமுகங்களும் கடல் வழிகளும் பண்டங்களைக் கொண்டு செல்லத் தரை வழிகளும் தேவை என்கிற அடிப்படையிலேயே சீனா இப் பிராந்தியத்தின் சில நாடுகளிற் துறைமுகங்களை விருத்தி செய்ய உதவுகிறது. அதன் மூலம் தனது கப்பல்களின் துறைமுக வசதிகட்கு ஒரு உத்தரவாதத்தைப் பெற முயலுகிறது. இவற்றில் எந்தத் துறைமுகந் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நாட்டை வற்புறுத்துமாறான உடன் படிக்கை எதுவும் இல்லாததோடு எந்தத் துறைமுகத்தையும் சீனக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்துவதற்கான எந்தச் சாடையும் இல்லை. அம்பாந்தோட்டைத் துறைமுக விருத்திக்காகச் சீனா இலங்கைக்கு வழங்குகிற கடனும் அதை நிர்மாணிக்கும் பணியும் முற்றிலும் வணிக அடிப்படையிலானவை.

சீனா இலங்கையின் பொருளாதார விருத்திக்கு உதவுவது பற்றிப் பேசுவோர், இலங்கையிற் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளைப் பற்றிப் பேசுவதில்லை. சம்ப+ரில் இந்தியா நிறுவவுள்ள அனல் மின் நிலையம், மோதல்கள் வலுப்பெற்று இலங்கை ராணும் சம்ப+ரைப் பிடித்தவுடனேயே அங்கீகரிக்கப் பட்டது. அத்துடன் அப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் அறிவிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் எண்ணெய் அகழ்வுக்கு இந்தியாவுடனான உடன்படிக்கையை எதிர்க்காமல் சீனாவுடனான உடன்படிக்கைகளை மட்டும் எதிர்ப்போரது நோக்கங்கள் கவனத்துக்குரியன.

தன்னுடைய கடற் பகுதி எல்லைத் தகராறுகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடாகத் தொடருகிறது. இதுவரை தனது எல்லைப்புற நாடு எதன் மீதும் மேலாதிக்கஞ் செலுத்தாத நாடாக நவ சீனா இருந்துள்ளது. ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோராம் முதல் மியான்மார் வரையிலான கடற் பிராந்திய நாடுகளிற் துறைமுகங்களின் அபிவிருத்திக்குச் சீனா உதவி வந்துள்ளமைக்கு நோக்கங்கள் உள்ளன. அவற்றைச் சீன மேலாதிக்கமென்று மொட்டையாக முடிவு காணாமற், சாத்தியமான ஒவ்வொரு காரணத்தையும் ஆராய்வது பயனுள்ளது. சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதார வளர்ச்சியால் எண்ணெய் முதலாகப் பல்வேறு மூல வளங்களதும் இறக்குமதிக்குத் தேவை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் சீனாவைச் சூழ வலுப்பட்டு வருகின்றன. சிலகாலம் முன்பு சீனக் கடற் பகுதியில் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து சீனக் கடற் படையாற் தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டது. அமெரிக்கா பிற நாடுகளின் கடற் பிரதேசங்களை என்றும் மதிப்பதில்லை. இவையே சீனாவின் செயற்பாடுகளின் பின்னணியிலுள்ளன.

அமெரிக்கா உலகளாவிய முறையில் ஒவ்வொரு மூன்றாமுலக நாடுகட்கும் மிரட்டலாக உள்ளதா என்பதையும் அது உலகின் பலவேறு பகுதிகளிலும் தனது படைகளை நீண்ட காலத்திற்கோ குறுகிய காலத்திற்கோ தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருகிறதா என்பதையும் தென்னாசியாவின் சிறிய நாடுகட்கு இந்தியா ஒரு பெரிய மிரட்டலாக வளர்ந்து வந்துள்ளதா என்பதையும் முதலில் விசாரித்து, அவற்றின் அடிப்படையிற் சீனாவின் நடத்தையை விளங்கி; விமர்சிப்பது பொருத்தமாயிருக்கும்.

சீனாவை நம்புவதாலோ நம்பாததாலோ தமிழரின் உரிமைகட்கும் விடுதலைக்குமான போராட்டங்கட்குப் பெரும் பாதிப்பு இராது. ஆனால் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் குறுக்கீடுகளின் இயல்பு வேறு. அவற்றை நம்புவதா விடுவதா என்பதற்கு நடைமுறை முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்கள் தம்மையே நம்புவது பாதுகாப்பானது.

-அஸ்வத்தாமா -