Language Selection

செம்பதாகை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புரட்சியின் காலகட்டங்கட்கான நியாயம்

இறுதியிற் கம்யூனிச உலகாக அமையவுள்ள சோஷலிச உலகு தவிர்ந்த இறுதி இலக்கெதுவும் மாக்ஸியர்கட்கு இருக்கவியலாது. மாக்ஸியர்கள் சோஷலிசமெனக் கருதுவதற்கும் சமூக ஜனநாயகவாதி களும் பிற சீர்திருத்தவாதிகளும் சோஷலிசமெனச் சொல்கிறவைக்கும் உள்ளடக்கத்திலும் அணுகுமுறையிலும் தெளிவான வேறுபாடு உண்டு. மாக்ஸியர்கள் வேண்டும் சோஷலிச சமுதாயம் முதலாளிய சமூக உருவாக்கங்களிலிருந்து தோன்றலாம். அரைப்-பிரபுத்துவ, அரைக்-கொலனிய சமூக உருவாக்கங்களிலிருந்தோ கொலனிய முதலாளியத் திணிப்பின் விளைவான பிற பலவீனமான முதலாளிய சமூக உருவாக்கங்களிலிருந்தோ கூட அது தோன்றலாம்.

சோஷலிசத்துக்கும் அதன் இறுதி வடிவான கம்ய+னிசத்துக்கும் இடையிலான வேறுபாடு, கம்ய+னிசத்தின் வருகை வரையான நீண்ட காலத்தில் அரசு என்பது உதிர்விற்கு உட்படும் என்ற புரிதலுடன் தொடர்புடையது. கம்யூனிச மாற்றத்தை வழிநடத்தப் போவதான பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் கீழ் அரசு ஒன்று தேவைப் படும். முதலாளியத்தைத் தூக்கியெறிந்த பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே சோஷலிச அரசு எனப்படுகிறது. முதலாளிய விருத்தியின் தவிர்க்கவியலாத ஒரு இயல்பு, சமூகங்களின் முதலாளிய மாற்றத்திலும் தொழில் விருத்தியிலும் உள்ள ஒருசீரின்மையாகும். அதனாற் கம்ய+னிச மாற்றத்திற்கு ஒரு நீண்ட காலம் தேவையாகிறது. இத் தொடர்பிலேயே, சோஷலிசத்துக்கான பாதையின் காலகட்டங்கள் அல்லது புரட்சியின் காலகட்டங்கள் பற்றிய கேள்விகளும், அவற்றையொட்டி, ஒரு நாட்டில் சோஷலிசம் பற்றிய கேள்வியும் எழுகின்றன.

பல ‘இலட்சியவாதிகளும்’ ‘இடது தீவிரவாதிகளும்’ ட்ரெட்ஸ்கி வாதிகளும் புரட்சியின் காலகட்டங்களையும் ஒரு நாட்டில் சோஷலிசத்தின் சாத்தியத்தையும் மறுத்துள்ளனர். ஒரு நாட்டில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்புவதை மறுப்பதன் மூலம், உலகப் புரட்சியின்றி சோஷலிசத்தைக் கட்டியெழுப்ப இயலாது என்று ட்ரெட்ஸ்கிவாதிகள் சுட்டுகின்றனர். முதலாளிய உலக ஒழுங்கைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையும் லெனினுக்கும் ஸ்ற்றாலினுக்கும் மாறாக ட்ரெட்ஸ்கி சொன்னவை எப்போதுமே சரியானவை என நிறுவும் தணியாத் தாபமும், அவற்றுடன் சேர்ந்து, ஸ்ற்றாலின் மீதான வெறித்தனமான எதிர்ப்புமே இந்த நிலைப்பாட்டின் ஆதாரங்கள்.

உலகளாவிய முறையில் முதலாளிய மாற்றம் ஒருசீரற்றது என்பதால், சோஷலிசத்துக்கான பாதையும், கட்டாயமாக, முதலாளிய விருத்தி மட்டத்துக்கும் நிலவுகிற உலக நிலைமைக்கும் அமைய வேறுபடும் என்பது ஓக்ற்றோபர் புரட்சிக்குப் பிந்திய வரலாற்று அனுபவமாகும். அதைவிடப், புரட்சி செய்யவும் சோஷலிசத்தைக் கட்டியெழுப்பவும் எந்த ஒரு நாட்டு மக்களும் பின்பற்றுவதற்கான திட்டவட்டமான மாதிரியுரு எதுவும் இல்லை என்றும் நடைமுறை காட்டியுள்ளது.

புரட்சிகள் தோற்றுள்ளன. சோஷலிச அரசாங்கங்கள் வீழ்ந்துள்ளன. அது ஒரு நாட்டில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்பும் கொள்கையின் உள்ளாரர்ந்த குறைபாட்டாலல்ல. மாறாக, சோஷலிச சமுதாயத்தின் அக முரண்பாடுகளைச் சரியாகக் கையாளாமையாலும் முதலாளியம் தூக்கியெறியப்பட்ட பின்பும் வர்க்கமும் வர்க்கப் போராட்டமும் தொடரக்கூடிய வழிகளை உணரத் தவறியமையாலுமே அவ்வாறு நிகழ்ந்தது. நமது பணி ஏதெனின், கடந்தகாலத் தவறுகளினின்று கற்று சோஷலிசத்தை நோக்கி முன்னேறுவதாகும்.

நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சர்வதேச இடதுசாரி அமைப்போ பரந்துபட்ட ஆனாற் தெளிவான வேலைத்திட்டத்தைக் கொண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமோ இருப்பது ஏந்தவொரு நாட்டிலும் புரட்சிக்கு உதவும். பற்றுறுதி;யுடைய ஏகாதிபத்திய விரோத அல்லது, அதினும் விரும்பத்தக்கதாக, இடதுசாரி அரசாங்கங்களைக் கொண்ட ஒரு முற்போக்கு முகாம் இருப்பின் அது மேலும் உதவியாயிருக்கும். அப்படியானவை தாமாக வந்தமையா. அவை சர்வதேச அளவிற் தளராத போராட்டத்தின் மூலமே வருவன.

ஏகாதிபத்திய வடிவில் முதலாளியம் உலகின் மீது ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது என்ற யதார்த்தத்தையும் உலகப் புரட்சி கண்ணுக்கெட்டுந் தொலைவில் இல்லை என்ற யதார்த்தத்தையும் மீறி, முதலில் ரஷ்யாவிலும் பின்னர் சீனா உட்பட்ட பிற நாடுகளிலும் புரட்சிகள் நிகழ்ந்தன. அப் புரட்சிகள் பாட்டாளி வர்க்கத் தலைமைக் கீழ் சோஷலிச உற்பத்திமுறையைச் செயற்படுத்தும் பணியைப் பொறுப்பேற்றன. அப் பணியின் முழுமைப்படுத்தல், உலகின் பிற பகுதிகளில் நடந்தவற்றிற் தங்கியிருந்தமை உண்மையே. எனினும், அப் பொருளாதாரங்கள் நகர்ந்த திசை பற்றி ஐயத்துக்கு இடமில்லை. போராற் சீரழிந்த ஜேர்மனியின் பகுதியான கிழக்கு ஜேர்மனியை விட்டால், சோஷலிசத்தை நிறுவவிருந்த நாடெதுவும் முன்னேறிய தொழிற்துறையைக் கொண்ட முன்னாள் முதலாளிய வல்லரசல்ல. புரட்சியின் பின்பு சோவியத் ஒன்றியமாகிய ரஷ்யாவிலும் பின்பு சீனாவிலும் நடந்த புரட்சிகள், முறையே, வலிய பிரபுத்துவ எச்சங்களைக் கொண்ட பின்தங்கிய முதலாளியப் பொருளாதாரம் ஒன்றிற்கும் முதலாளிய வல்லரசுகளின் நெடுங்கால ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு அரைப் பிரபுத்துவப் பொருளாதாரம் ஒன்றிற்கும் வாரிசுகளாகின. சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தவும் விவசாயத் துறையில் சோஷலிச உற்பத்தி உறவுகளைப் புகுத்தவுமான முயற்சிகள் பின்னிடைவுகளைக் கண்ட போது, லெனினின் தலைமைக் கீழ், சோஷலிச மூலோபாயம் “புதிய பொருளாதாரக் கொள்கையாக” மாற்றியமைக்கப்பட்டது. அவ்வாறான ஒரு அனுசரிப்பு இல்லாமற் புரட்சி தப்பிருக்காது.

புரட்சியின் காலகட்டங்கள்

புரட்சியின் காலகட்டங்கள் எனும்போது, மாக்ஸியர்கள், உற்பத்திச் சக்திகளதும் உற்பத்தி உறவுகளதும் இயல்புகட்கமைய முழு நாட்டிலும் அல்லது அதன் பகுதிகளில் புரட்சியின் பணிகளைக் காலப் பிரிப்புக்கு உட்படுத்துவதையே கருதுகின்றனர். முழுமையாகத் தொழில்மயப்பட்ட முதலாளியப் பொருளாதாரமாக விருத்திபெறாத ஒரு பொருளாதாரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்குமுன், கள நிலவரங்கள் பற்றிய மதிப்பீடு அவசியம்.

எவ்விடத்தும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த, மக்கள் ஜனநாயகம் ஒன்றை நிறுவுவது அவசியம். ஒரு நாட்டிற் குறிப்பிடத்தக்க முதலாளிய ஜனநாயகம் இருக்குமாயின் மக்கள் ஜனநாயகத்துக்கு மாறுவது சிக்கலற்றது. முதலாளிய ஜனநாயகம் இல்லாதபோது அல்லது, பல முன்னாட் கொலனிகளின் விடயத்திற் போன்று, மிகக் குறைபாடாயிருக்கும் போது, மக்கள் ஜனநாயகத்தை நிறுவுமுன், நிறைவுறாதுள்ள ஜனநாயக அரச நிருவாக அம்சங்களைக் கவனிக்கவேண்டி நேருகிறது. நிறைவேற்றற்குரிய பணிகளிற் பல முதலாளிய ஜனநாயகத்துக்குரியன என்பதாற் புரட்சியும் முதலாளிய ஜனநாயகப் புரட்சியாக அமைய வேண்டியதில்லை. பாட்டாளி வர்க்கக் கட்சி ஒன்றன் நோக்கம் முதலாளிய ஜனநாயகத்தின் பெயரில் முதலாளிய ஆட்சியை நிறுவுவதல்ல.

புதிய ஜனநாயகம்

பின்தங்கிய தொழிற் துறையையும் பிரபுத்துவச் சமூக உறவுகளையும் கொண்ட ஒரு நாட்டில் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி நகர்வதன் சங்கடத்தை மனத்திற்கொண்டே புதிய ஜனநாயகம் என்ற கருத்தாக்கம் சீனாவில் அறிமுகமானது. முற்றாகத் தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் இயங்கும் மக்கள் ஜனநாயகத்தைப் போலன்றிப் புதிய ஜனநாயகம், முற்போக்கான —அல்லது முற்போக்காக அமையக்கூடிய— வர்க்கங்களின் நேச அணியின் மீது தங்கியுள்ளது. இங்கு, தலைமை தொழிலாளி வர்க்கத்தினதாகவும் வழிநடத்தல் தொழிலாளி வர்க்கச் சித்தாந்தத்தினதாகவும் இருப்பது முக்கியமானது. அதன்மூலம், அது, அத்தியாவசிய முதலாளிய ஜனநாயகப் பணிகளை நிறைவேற்றி அங்கிருந்து மக்கள் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறும் மூலோபாயமாகிறது.

சீனாவிலே வர்க்கங்களின் நேச அணி தொழிலாளர்களையும் ஏழை, நிலமற்ற, நடுத்தர வியசாயிகளையும் சிறு முதலாளிகளையும் தேசிய முதலாளிகளையும் கொண்டிருந்தது. தெளிவாகவே, அதன் நோக்கம் ஏகாதிபத்தியத்தையும் அதன் நெருங்கிய கூட்டாளிகளான போர்ப் பிரபுக்களையும் தரகு முதலாளிகளையும் பெரும் நிலப்பிரபுக்களையும் தனிமைப்படுத்துவதாகும். ஜனநாயக மாற்றம் என்பது இவ்விரு தரப்பினர்க்குமிடையிலான பிரிகோடகவும் இருந்தது. எவ்வாறாயினும், ஜனநாயக மாற்றம் முதலாளிய ஜனநாயக இலக்குக்கட்கு மட்டும் வரையறைப்பட்டிருந்தாற் புரட்சியாற் தனது மக்கள் ஜனநாயக இலக்குக்களையும் சோஸலிசப் பொருளாதாரத்தையும் நோக்கி முன்னேற இயலாது. எனவே, புதிய ஜனநாயகம் என்பது, ஒரு இடைக்கால நிலையே ஒழிய இறுதி இலக்கல்ல. எனினும் அதில்லாது புரட்சியால் ஒடுக்குமுறையாளர்களான சிறுபாலோருக்கு எதிராகப் பெரும்பாலோரை ஐக்கியப்படுத்த இயலாது. அதே வேளை, அதைக் கடந்து செல்லத் தயங்குவது, வரையறைக்குட்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புடைய முதலாளி வர்க்கத்திடம் மண்டியிடுவதாகும்.

பல்வேறு காரணங்களால், புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நியாயம் மூன்றாம் உலகு முழுவதிலும் உள்ளது. அதை அவசியமாக்குவன எவையெனின், முதலாளிய ஜனநாயகப் பணிகள் நிறைவுபெறாமையும் இருக்கக்கூடிய முதலாளிய ஜனநாயக வடிவங்கள் தொடர்ந்து ஏகாதிபத்திய மிரட்டலுக்கு உட்பட்டிருப்பதுமாகும். முன்னாள் ஆசிய, ஆபிரிக்கக் கொலனிகளின் முதலாளிய ஜனநாயகம், முதலாளிய ஜனநாயகப் புரட்சி மூலம் நிறுவப்படாமல் கொலனிய வல்லரசுகளால் அவற்றின் தேவைகட்கமையத் திணிக்கப்பட்டமை அங்கு முதலாளிய ஜனநாயகப் பணிகள் நிறைவுபெறாமைக்கு ஓரு வலிய காரணாகும். மேட்டுக்குடியினரே ஆட்சியில் தொடர்வதற்கமையக் கையாளக்கூடிய வாக்கு வங்கிகள் என்பதே மக்களுக்கு விதிக்கப்பட்ட வகிபாகமானது. அதற்கப்பால் பாராளுமன்ற ஜனநாயகம் மக்களை அடையவில்லை.

ஓரு நூற்றாண்டு முன்னர், பல லத்தின் அமெரிக்க நாடுகளில், ஒரு புரட்சிகர இயக்கமோ சுதந்திரப் போராட்டமோ ஏதோ வகையான தேர்தல் ஜனநாயகத்தை ஏற்படுத்தியபோதும், ஏகாதிபத்தியவாதிகளும் பெரும் நிலச் சொந்தக்கார்களும் ஒத்துழைத்து ஜனநாயகத்துக்கு ஒழுங்குமுறையாகக் குழிபறித்தனர். அதற்குப் பின்தங்கிய அரசியலும் மந்தமான தொழில் விருத்தியும் உதவின. நாடுகளின் பொருளாதாரங்கள் பெருமளவும் பண்ணைத் தொழிலிலும் கனிமச் சுரங்கங்களிலும் தங்கியிருந்ததால் முதலாளிய உற்பத்தி உறவிற்குப் பதிலாகப் பிரபுத்துவத் தன்மையான உற்பத்தி உறவுகளே நிலவின.

பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் இல்லாத இடங்களிலும், பிரபுத்துவச் சிந்தனையின் ஆதிக்கம் இருப்பதும் பல சமயங்களில் ஏகாதிபத்திய ஆதரவுடன் ஒரு ஆதிக்கத் தேசிய இனத்தின் தேசிய ஒடுக்குமுறை தொடர்வதும் கணிசமான தொழில் விருத்தி இருந்தும் ஏகாதிபத்திய நெறிப்படுத்தலால் விகாரப்பட்ட பொருளாதாரமும் ஜனநாயக மாற்றத்தைத் தடுத்துள்ளன. எனவே மக்கள் ஜனநாயகத்தை அடையு முன்பு, புரட்சி ஒரு இடைக்கால நிலைய+டு செல்லவேண்டியுள்ளது.

புதிய ஜனநாயகத்துக்கு ஒருசீரான நெறிமுறைகளையோ தரப்படுத்தப்பட்ட வகைமாதிரியையோ நாடுவது வரட்டுத்தனமாகும். புதிய ஜனநாயகப் புரட்சியின் பணிகளும் மக்கள் ஜனநாயக மாற்றத்துக்கான கால அளவும் சூழலுக்கமைய வேறுபடும். நாடுகட்கிடையில் மட்டுமன்றி, ஒரு நாட்டின் வௌ;வேறு சமூகங்கட்கு இடையிலும் —உதாரணமாகச் சீனாவின் பிற பகுதிகளை விட மந்தமான வேகத்திலேயே திபெத்தில் கூட்டு உடைமையை நோக்கிய நகர்வு நிகழ்ந்தமை போன்று— வேறுபாடான அணுகுமுறைகள் தேவைப்படும். இவ்வாறு புதிய ஜனநாயகப் புரட்சியின் பணிகளை ஒரு நாட்டின் ஒரு சமூகத்தினுள்ளோ பிரதேசத்தினுள்ளோ, அது எந்த அளவுக்கு மாற்றத்துக்கு ஆயத்தமாயுள்ளது என்பதைப் பொறுத்து, காலப் பிரிப்புக்கு உட்படுத்தும் தேவை வரலாம்.

தொகுத்துக் கூறுவதாயின், புதிய ஜனநாயகம் என்பது, பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஒரு ஏகாதிபத்திய விரோத ஐக்கிய முன்னணி தனது புரட்சியின் வெற்றியைக் கெட்டிப்படுத்திச், சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதன் மூலமும் பிரபுத்துவத்தின் எச்சங்கள் அனைத்திற்கும் முடிவுகட்டுவதன் மூலமும் மக்கள் ஜனநாயகத்தின் கீழ் சோஷலிச மாற்றத்துக்கு ஆயத்தப்படுத்துவதைக் குறிக்கும்.

-மோகன்-