put_oct-2007.jpg

கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.100க்கு மேல் அதிகரித்து, தற்போது ஒரு மூட்டை ரூ. 300 வரை விற்கப்படுகிறது. இதனால் கடன் வாங்கி வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒப்பந்தக்காரர்களும் கட்டுமான வேலைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வேலை கிடைப்பதே பெரும்பாடாகிவிட்ட நிலையில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ ஒன்னேமுக்கால் கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வேலையை, தற்போதைய சிமெண்ட் விலையேற்றம் வேகமாகப் பறித்து வருகிறது.

 

சிமெண்ட், கம்பி தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை உயரவில்லை. ஆனாலும், அநியாய விலையேற்றம் செய்து கொள்ளையடிக்கின்றனர் முதலாளிகள். அரசாங்கம் ஒரு மூட்டைக்கு ரூ. 30 வரை சலுகையாக மானியம் தருகிறது. ஆனாலும் இம்முதலாளிகள் தமக்குள் கூட்டணி கட்டிக் கொண்டு விலையேற்றம் செய்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் சிமெண்ட் முதலாளிகளுக்கு 400 மடங்கு இலாபம் கிடைத்துள்ளது; ஒவ்வொரு ஆண்டும் 15% உற்பத்தி அதிகரிக்கிறது. ஆனாலும் சிமெண்ட் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது.

 

அரசுத்துறை சிமெண்ட் ஆலைகள் அனைத்தும் ஏறத்தாழ தனியார்மயமாக்கப்பட்டு விட்டதால், தற்போது சிமெண்ட் உற்பத்தி மற்றும் சந்தை முழுவதையும் உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளே கட்டுப்படுத்துகின்றனர். இதன் காரணமாக அவர்கள் வைத்தது தான் விலை என்றாகிவிட்டது. விலைக் கட்டுப்பாடு விதிக்கவோ, கொள்ளையடிக்கும் இம்முதலாளிகளைக் கைது செய்து தண்டிக்கவோ வக்கற்ற மத்தியமாநில அரசுகள், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானிலிருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யக் கிளம்பியுள்ளன. தனியார்மயத்தை ஆதரித்துக் கொண்டே, சிமெண்ட் விலையேற்றத்துக்கு எதிராகச் சவடால் அடித்து கண்டனப் போராட்டங்களை பா.ம.க.வும் போலி கம்யூனிஸ்டுகளும் நடத்தி மக்களை ஏய்த்து வருகின்றன.

 

இந்த உண்மைகளை விளக்கியும், கொள்ளையடிக்கும் தனியார்அந்நிய சிமெண்ட் முதலாளிகளைக் கைது செய்து சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரியும், நியாய விலையில் சிமெண்ட் கம்பிகளை அரசே விநியோகிக்க வலியுறுத்தியும், ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டத்தைத் திரைகிழித்தும், தருமபுரிகிருஷ்ணகிரி மாவட்டப் புதிய ஜனநாயகக் கட்டடத் தொழிலாளர் சங்கமும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து 9.9.07 அன்று ஓசூர்ராம் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னணியாளர்கள், தனியார்மயம்தாராளமயத்துக்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் அணிதிரண்டு போராட அறைகூவினர். பெருந்திரளாக கட்டடத் தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடம் புதிய பார்வையையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

 

பு.ஜ. செய்தியாளர்கள்.