கூடங்குளம் அணு உலை அபாயத்திற்கு எதிரான மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம். 17.11.2012 சனிக்கிழமை பகல் 11 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இடம் பெறவுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் குறிப்பாக வடபிரதேசத்தின் மக்களுக்கும் இக் கூடங்குளம் அணு உலை மின் நிலையத்தால் அபாயங்களே உருவாகும். எனவே இவ் அபாயம் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை மக்கள் நலன்களில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொது அமைப்புக்களுக்கும், சமூக அக்கறையாளர்களுக்கும் புதிய- ஜனநாயக மாக்சிச - லெனினிசக் கட்சி விடுக்கின்றது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் அவசியம் பற்றிக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டின் தென்கரையோரத்தில் இலங்கையின் வடக்கு மேற்குப் பிரதேசங்களை அண்மித்ததாக நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை மின் நிலையம் இயக்கப்படவுள்ளது. அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அபாயகரமானதாகும். அதிலும் அணு உலையில் அனர்த்தம் ஏற்படும் சூழலில் பாரிய உயிரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியே ஏற்படும். அக்கதிரியக்கமானது உயிர் அழிவுகளை மட்டுமன்றி மண்ணிலும் கடலிலும் காற்றிலும் கலந்து கொடிய நோய்களைக் கொண்டுவரக் கூடியதுமாகும். எதிர்காலத் தலைமுறைகளுக்கும் அபாயகரமானதாகும். அதனாலேயே தமிழ்நாட்டின் கூடங்குளம் இடிந்த கரையில் மீனவர்களும் கிராமப்புற மக்களும் மற்றுமுள்ளோரும் இணைந்து கடந்த பதினைந்து மாதங்களாக கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டம் நீதியானதாகும். அம்மக்களுக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கிறோம்.
எனவே எமது மக்கள் சார்பான எதிர்ப்பை இக் கவனயீர்ப்புப் போராட்டம் மூலம் வெளிப்படுத்த அனைத்து ஜனநாயக இடதுசாரி முற்போக்கு மக்கள் நலன் காக்கும் கட்சிகளையும் அணிதிரளுமாறு வேண்டுகின்றோம்.
--புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
11/11/2012