Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகளால் கைது செய்யப்பட செல்வி, மனோகரன், தில்லை , மணியண்ணை

இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைத் (சீன சார்பு) தலைமை தாங்கி வழிநடத்தியதுமல்லாமல் தொழிற்சங்கப் போராட்டங்களையும் இலங்கையில் இனங்களுக்கிடையில் சம உரிமைக்காகவும், தமிழ் மக்களிடையே - குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடையே - புரையோடிப்போய்விட்டிருந்த சாதீய ஒடுக்குமுறைக்கெதிராகவும் நாகலிங்கம் சண்முகதாசன் உட்பட பல இடதுசாரிகள் போராடியிருந்தனர்.

 

ஆனால் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்து இவர்கள் கடைப்பிடித்த தவறான போக்கு தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் குறுந்தேசிய இனவாதிகளின் பலம் ஓங்குவதற்கும், பிற்காலகட்டத்தில்  குறுந்தேசிய இனவாதம் பாசிச வடிவம் பெறுவதற்கும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. நவலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார போன்ற சிங்கள இடதுசாரிகளும், தொழிற்சங்கவாதியான எச். என். பெர்னாண்டோ உட்பட பல சிங்கள முற்போக்கு ஜனநாயகவாதிகளும் கூட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பகிரங்கமாகப் போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் இத்தகைய போராட்டங்கள் அனைத்தையும் பின்தள்ளுமளவுக்கு  சிங்களப் பெரும்தேசிய இனவாதமும், தமிழ்க் குறும்தேசிய இனவாதமும் கோர முகத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

இலங்கையில் இனப்பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த வேளை அதற்கு எண்ணை ஊற்றும் கைங்கரியத்தைச் சிங்களப் பெரும் தேசிய இனவாதிகளும் தமிழ்க் குறும்தேசிய இனவாதிகளும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இலங்கையின்  இடதுசாரி இயக்கத்தின் தோல்விகள் அல்லது பின்னடைவுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் இடதுசாரி அரசியலை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறிய ஈழவிடுதலை இயக்கங்களின் தோல்விகள் அல்லது பின்னடைவுகள் என்பன மூலம் சிங்களப் பெரும் தேசிய இனவாதிகளும் தமிழ்க் குறும்தேசிய இனவாதிகளும் இலங்கை மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கு வழிசமைத்திருந்தது.

இலங்கையின்  இடதுசாரி இயக்கம் தோல்விகளையும்  பின்னடைவுகளையும் சந்தித்துக் கொண்டிருந்த வேளை, 1917 உலகைக் குலுக்கியப் புரட்சியாக மட்டுமல்லாமல் உலகில் ஒடுக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தினதும், உழைக்கும் மக்களினதும் விடிவெள்ளியாகத் தோற்றம் பெற்றிருந்த சோவியத் யூனியனின் இறுதிநாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன.

1871 பிரெஞ்சு நாட்டின் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் புரட்சியின் - பாரிஸ் கம்யூன் - தோல்வியின் அனுபவங்களில் இருந்தும், படிப்பினைகளில் இருந்தும் கற்றுக் கொண்டு விளாடிமிர் இலியிச் உல்யனோவ் (லெனின்) தலைமையில் வெற்றிபெற்ற ரஷ்யப் புரட்சி உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் புரட்சிகர சக்திகளுக்கும் உந்துசக்தியாக விளங்கியதுடன் காலனியத்துவத்தால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடுகளைச்  சேர்ந்த மக்களின் போராட்டங்களுக்கும், உலகில் நடைபெற்றுக் கொண்டிருந்த தொளிலாளிவர்க்கப் போராட்டங்களுக்கும் தனது முழு ஆதரவுகளையும் வளங்கியிருந்ததுடன் பொதுவுடமைச் சித்தாந்தம் உலகெங்கும் பரவுவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.

ஆனால் ரஷ்ய கம்யூனிசக் கட்சியோ அல்லது லெனினோ எதிர்பார்த்ததுபோல விடயங்கள் எதுவும் நடைபெற்றுவிடவில்லை. முதாளித்துவம் வளர்ச்சியடைந்த ஜெர்மனியிலோ, பிரான்ஸிலோ அல்லது இங்கிலாந்திலோ தொழிலாளவர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கம்யூனிசத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸ் எதிர்பார்த்ததுக்கு மாறாக முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய, சனத்தொகையில் 80% விவசாயிகளாகக் காணப்பட்ட ரஷ்யாவில் தொழிலாளிவர்க்கம் தொழிலாளர் - விவசாயிகள் ஒன்றிணைந்த ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். முதலாளித்துவ  வளர்ச்சி குன்றிய விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த ரஷ்யாவின் யதார்த்த நிலையும், இதன் காரணத்தால் சோவியத் அரசில் காணப்பட்ட பலவீனங்களையும் உலக நிலவரங்களையும் சரியாகவே கணிப்பிட்டிருந்த லெனின் ரஷ்யப் புரட்சியின் நிரந்தர வெற்றி, தொழிலாளர் விவசாயிகள் அரசான சோவியத்துக்களின் வெற்றி, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் - குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் - தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் சோவியத்துக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதிலும்தான் தங்கியுள்ளது என்று தெளிவாக இனங்கண்டிருந்தார்.

இதற்காக வேண்டி ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளிவர்க்கத்திற்கு  உதவுவதற்கு முன்வந்திருந்த லெனின், ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறுமிடத்து முதலாளித்துவ அரசுகளால் சூழப்பட்டிருக்கும் ரஷ்யாவின் தொழிலாளர் விவசாயிகளாலான சோவியத் ஆட்சி நீடிக்க முடியாது எனக் கூறியிருந்தார். லெனின் எதிர்பார்த்திருந்தபடி ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்கள் முதாளித்துவத்தை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் தவறியிருந்ததுடன் ஐக்கிய இராச்சியம் (U.K) தலைமையிலான மேற்கு நாடுகள் சோவியத் ஆட்சியை வீழ்த்துவதற்கான செயற்பாடுகளில் இறங்கின. ரஷ்யாவில் தொழிலாளர் வர்க்க ஆட்சிக்கு எதிரானாவர்களை ஒன்று திரட்டி "வெண்படையினர்" என்ற பெயரில் ரஷ்யாவுக்குள் இராணுவத்தினரை உருவாக்கிய பிரித்தானிய அரசாங்கம் சோவியத் அரசை வீழ்த்துவதற்கென இராணுவப்பயிற்சி அளிப்பதிலும் ஆயுத விநியோகத்திலும் இறங்கியது. ஆயினும் அனைத்து அந்நியத் தலையீடுகளையும் வெற்றிகரமாக முகம் கொடுத்து நிறுவப்பட்ட சோவியத் ஆட்சி பொருளாதார நெருக்கடிகள், லெனினின் இறப்பு, உட்கட்சி முரண்பாடுகள், திரிபுவாதம் என்பவற்றுக்கூடாக எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சோவியத் யூனியனாக விளங்கிய 15 குடியரசுகளின் கூட்டாட்சி தனியரசுகளாக பிரிந்து சென்றதன் மூலம் முடிவுக்கு வந்திருந்தது.

வடக்குக் கிழக்கில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போரில் அப்பாவிச் சிங்கள, முஸ்லீம், தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தற்கொலைத் தாக்குதல்களை கொழும்பு நகரில் தொடர்ந்து கொண்டிருந்தனர்.  ஜூன் 1991 கொழும்பில் அமைந்திருந்த இலங்கை அரச கூட்டுப்படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலைக் கொண்டுத் தாக்குதலை நிகழ்த்தியதில் கூட்டுப்படைத் தலைமையகம் பெரும் சேதத்திற்கு உள்ளாகியதுடன் 21 பேர்  கொல்லப்பட்டதுடன் 85 பேர் படுகாயமுமடைந்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தகைய தாக்குதல்களை தமது சாதனைகளாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வலதுசாரி அரசியலும், அதிலிருந்து தோற்றம் பெற்ற ஜனநாயக மறுப்பும் பாசிசப் போக்கும் சிங்கள, முஸ்லீம் மக்களை தமது எதிரிகளாக இனங்கண்டுகொண்டமையும், தற்கொலைத் தாக்குதல் மூலமாக அப்பாவி மக்களைப் பலி கொள்வதும் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை படுகுழியில் வீழ்த்திவிடும் நடவடிக்கையாக தமிழ் மக்களில் பெரும்பான்மையினரால் இனங் காணப்பட்டிருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் டொமினிக் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எஞ்சியிருக்கும் முற்போக்குச் சிந்தனை கொண்டோரை பூண்டோடு அழித்தொழிக்கும் பாசிச செயற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியும், பெண்ணிலைவாதியும், கவிஞருமான சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராஜா (செல்வி) தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் மனோகரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவரும் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுவந்தவருமான தில்லைநாதன் (தில்லை) தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார். தனது இளமைப் பருவத்தில் J.V.P அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்த தில்லை, இடதுசாரியக் கருத்துக்களுடன் தன்னை இனங்காட்டியிருந்த ஒருவராகக் காணப்பட்டிருந்தார். 1983 ஜே ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கியத் தேசியக் கட்சி அரசினால் தமிழ் மக்கள் மீது இனவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த தில்லை புளொட் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்திருந்தார். புளொட்டுக்குள் முரண்பாடுகள் தோன்றி பிளவுற்றபோது "தீப்பொறி"க் குழுவினருடன் இணைந்து செயற்படுவதற்கு எம்முடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்திவந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கின் வெளிப்பாடுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களை சுத்திகரிப்புச் செய்து வதைமுகாம்களுக்குக் கொண்டுசெல்வதுடன் மட்டும் நின்று விடவில்லை. சமூகத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் அனைவரையும் கைது செய்து வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொலை செய்வதை நோக்கி சென்றுகொண்டிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான செல்வி, மனோகரன், தில்லை ஆகியோரின் கைதுகளைத்  தொடர்ந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் (சீன  சார்பு) அங்கம் வகித்திருந்தவரும், சாதீயத்துக்கெதிரான போராட்டங்களில் முன்னணி பங்கு வகித்தவரும், "புதியபாதை" பத்திரிகை உட்பட புளொட், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பல ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகால வெளியீடுகளை இரகசியமாக அச்சிட்டுக் கொடுத்தவருமான சண்முகம் சுப்பிரமணியம் (மணியண்ணை) தமிழீழ விடுதலைப் புலிகளின் கைதுக்கு இலக்கானார். யாழ்ப்பாண பல்கலைக்கழக  மாணவர்களான செல்வி, மனோகரன், தில்லை ஆகியோரினதும் மணியண்ணையினதும் கைதுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கு எதிராகச் செயற்படுபவர்களை மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் வலதுசாரி அரசியலுடனும் அதிலிருந்து தோற்றம் பெற்ற பாசிசப் போக்குக்குடனும் உடன்பாடு காணாதவர்களைச் சுதந்திரமாக விட்டுவைக்கப் போவதில்லை என்பதையுமே எடுத்துக் காட்டியிருந்தது.

--தொடரும்