சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பகிரங்க மனுவில் கையெழுத்திடும் இயக்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் அமைப்பினால் இன்று நண்பகல் காலி நகரில் நடைபெற்றது.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட்டுள்ள இந்த இயக்கத்திற்கு மக்கள் கண்காணிப்பு குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது.
இந்நிகழ்வில் அனைத்து தமிழ் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் - நண்பர்களும், மக்கள் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு மனுவில் கையெழுத்திட்டனர். இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் கைதிகளின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில், நிமலரூபன் மற்றும் டில்ருக்ஷன் என்ற அரசியல் கைதிகள் சமீபத்தில் மரணித்துள்ளனர்.அதே போல் சுந்தரம் சதீஷ்குமார் என்ற 34வயது தமிழ் அரசியல் கைதியும் தற்போது காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் சுயநினைவு அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் பலர் படுகாயங்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அவசியமான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தென்னிலங்கை உட்பட நாடு முழுவதுக்கும் கொண்டு செல்ல வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில், மனித உரிமை செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! என்ற கோரிக்கையை முன்னெடுக்கும் இந்த பகிரங்க மனுவில் கையெழுத்திடும் நிகழ்வும் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.