மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று அரிஸ்டோட்டல் கூறினார். ஏனைய விலங்குகளைப்போல் அன்றி, விரயத்தை தவிர்த்து மேலதிகமாக உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், நாளைய தேவை கருதிப் பாதுகாத்து வைக்கவும், பயிர் விளைக்கவும், மறு நடவு செய்யவும் மனிதன் பழகிக் கொண்டுள்ளான்.
தான் பட்டனவற்றிலிருந்து படித்துக்கொள்ளும் ஆற்றலும் அவனிடம் உண்டு. சமூக அக்கறையும் உலகம் பயன்பட வாழவேண்டும் என்ற உணர்வும் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்பும் வளர்ந்தவிடத்து மனித நாகரீகம் வளம்பெற்றது. சமூகத்தைச் சார்ந்தன்றி வாழ்முடியாத மனிதன் சுயநலம் மிகுந்தவனாகச் சமூகத்தைச் சுரண்ட முற்படுமிடத்து அனர்த்தங்கள் தோன்றுகின்றன. மனிதன் தான் வாழும் சமூகத்தைப் பற்றிய விளக்கமும் அக்கறையும் அருகியவனாகவும், தான் வாழுகின்ற சூழலை மாசுபடாது பாதுகாக்கத் தவறுபவனாகவும், தன் மானிட விழுமியங்களைத் தான் வளர்த்த தொழில் நுட்பம் விஞ்சிவிடாது கட்டுப்படுத்த முடியாதவனாகவும் ஆவது எவ்வாறு என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டிய விடயம்.
பொருளாதார வாழ்வில் தனியார் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்து கின்ற சூழ்நிலையில் இலாப வேட்கையே பிரதான உந்து சக்தியாகக் கருதப்படுகிறது. போடுகின்ற முதலுக்கும் உற்பத்திக்கான பங்களிப்புக்கும் ஈடுசெய்யுமளவுக்கு நியாயமான இலாபத்தை எதிர்பார்ப்பதற்குச் சமூக அடிப் படையிலோ பொருளியல் அடிப்படையிலோ தார்மீக அடிப்படையிலோ மறுப்புத் தெரிவித்தல் சாலாது. ஆனால், அவ்வடிப்படைகளில் நியாயம் கற்பிக்க இயலாத அளவுக்கு 'இலாபம் இலாபத்துக்காகவே” என்ற ஆவேசத்தில் முனைந்து நிற்பது மூர்க்கத்தனத்தை வளர்த்து மானிடப் பண்புகளை மழுங்கடிக்கக் கூடும்.
'ஊருஞ் சதமல்ல் உற்றார் சதமல்ல.... தேசத்திலே யாருஞ் சதமல்ல நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே” என்று பட்டினத்தார் பாடினார். வேறு எதுவும் சதமல்ல இலாபம் ஒன்றே சதம் என்று கருதப்படுகிறபோது உற்பத்திக்கு கூடுதலான பங்களிப்பினை வழங்கும் தொழிலாளர்கள் உற்பத்திச் செலவினங்கள் என்ற தலைப்பின் கீழ் உற்பத்திக்கு உபயோகிக்கப்படும் வெறும் கருவிகளைப்போல் நோக்கப்படுகின்றனர். உற்பத்திச் செலவினை இயன்றவரை குறைப்பதும் இலாபத்தை அதிகரிப்பதற்கான உபாயமாகும். அவ்வாறு இலாபத்தை அதிகரிக்கும் வேட்கையால் உழைக்கும் மக்கள் கூலிகளாக அடிமைகொள்ளப் படுகின்றனர். ஆபிரிக்கக் கறுப்பின மக்கள் மனிதர்களாகவன்றி மலிவான உற்பத்திக் கருவிகளாகச் செல்வந்தர்களால் விலைகொடுத்து வாங்கப் பட்டனர். பிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களுக்குக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்களின் 'செக்கு மாடுகள் போலுழைத்து ஏங்கிய” அவலங்களை மகாகவி பாரதி பாடியிருக்கிறார். எங்கள் தேசத்துத் தேயிலைத் தோட்டங்களுக்கும் கூலிவேலைக்கு மருட்டியும் விரட்டியும் கொண்டுவரப்பட்டவர்கள் சுரண்டப்படும் கொடுமை தலைமுறை தலைமுறை யாகத் தொடர்கிறது. இன்று பல தொழில் நிலையங்களில் ஏழைகள் முடக்கப்பட்டு இலாபம் பெருக்கும் சாதனங்களாக உறிஞ்சப்படுகின்றனர்.
'நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடலுழைப்பிலாத செல்வர் உலகையாண்டுலாவலும” ஒவ்வாதென்ற பாரதிதாசன் அவ் வழக்கத்தை மிதித்திட வழிதேடினார். ஆனால், இலாப வேட்கை தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் அதனை நியாயப்படுத்தும் ஒழுக்கக் கோட்பாடுகள்கூட முன்வைக்கப்பட்டுள்ளன. கூலியைக் குறைத்துக்கொடுப்பது நல்லதென்றும் கூடக்கொடுத்தால் உபரி வருமானத்தை தேவையில்லாத வழிகளில் செலவழித்துத் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. அன்றாடங் காய்ச்சிகளாகக் கூலிகளை வைத்திருப்பதே உசிதமானதாம். தேவையின் நிர்ப்பந்தப் பதைப்பு அற்றவிடத்துக் குளிரையும் வெயிலையும் நோய்நொடிகளையும் பாராது கடுமையாக உழைக்க மாட்டார்களாம். அவர்கள் அடங்கி ஆறுதல்பெற வைப்பதற்குக் கடவுளின் விதி, கர்மவினை என்பன குறித்தும் பேசப்படுகிறது. தீவினை அறுத்து ஈடேற அவைகள் உதவுமாம்.
ஏழை மக்கள் துன்பத்தை மறந்து குதூகலத்திலே திளைக்க உதவும் கலை இலக்கியங்களும் சந்தையைப் பிடித்து இலாபத்தைப் பெருக்கி வருகின்றன. திரைப்படத் துறை நல்லதோர் உதாரணமாகும். தமிழர் சமூக வாழ்விலும் அரசியலிலும் அதீத செல்வாக்குச் செலுத்திவரும் சினிமா பயனற்ற கற்பனைகளிலும் பகற் கனவுகளிலும் பெருவாரியான மக்களை மயக்கிவைத்திருக்கிறது. அதிலே, காற்றிலேறி விண்ணையும் சாடும் வீரம், மதி மயக்கும் காதல், பயங்கரக் கவர்ச்சி என்பவை மட்டுமன்றி, 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார் ” என்பது போன்ற பாமரரை ஈர்க்கும் பிரகடனங்களும் மலிந்திருக்கும். எழுந்தமானத்துக்குச் சொல்லப்படுகிற நியாயம் என்னவென்றால், பகல் முழுக்கக் கஷ்டப்படுகின்றவர்கள் மாலையில் சிறுபொழுதாவது மகிழ்ந்திருக்க வசதிசெய்யும் கைங்கரியத்தை நிறைவேற்றும்கிறோம் என்பதாகும். ஆனால், கஷ்டப்படுகிறவர்கள் தங்களுடைய அவலங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் நினைத்துப் பார்க்கவோ விளங்கிக்கொள்ளவோ விடாதிருப்பது கொள்ளை இலாபம் அடிப்பவர்களுக்கு அனுகூலமானதா யிருக்கும் என்பது சொல்லப்படுவதில்லை. இச்சந்தர்ப்பத்தில்,
'பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
படங்களின் நோக்கமெனின்,
நாமம் குழைத்திட வோஅறி வாளர்கள்
நற்கலை கண்டார்கள்?'
என்று மடமையை வளர்க்கும் அவ் வஞ்சகத்தைப் பாரதிதாசன் சாடியமை எண்ணிப் பார்க்கத்தக்கது.
இவ்வாறு அறிவாளர்களின் கண்டுபிடிப்புக்கள் பல அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, பல்தேசக் கம்பெனிகளதும் கூட்டுத்தாபனங் களினதும் கைகளில் அவற்றின் இலாபத்தைப் பெருக்கப் பயன்படுத்தப்படும் அளவுக்குப் பரந்த மானிடத்தின் நன்மைக்குப் பயன்படக் காணோம். அக் கண்டுபிடிப்புக்களின் வழிப்படும் உற்பத்திப் பொருட்களைப் பெருமளவில் தயாரிக்கவும் இலாபகரமாக விற்பனை செய்யவும் மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளும் மானிட நலனுக்கு ஊறு விளைப்பனவாக உள்ளன. தொழில்நுட்ப, மருத்துவ, ஆயுத உற்பத்தித் துறைகளில் அதைத் துலாம்பரமாகக் காணலாம். பொருளாதார, எரிபொருள், உணவு, சுற்றுலா, கல்வி முதலான துறைகளிலும் எல்லைமீறி இலாபம் சம்பாதிக்கும் எத்தனங்கள் மானிட நலனுக்குப் பங்கம் விளைவிப்பனவாக உள்ளன. சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் முதலானவை குறித்து நிறையப் பேசப்படுகிறது.
உற்பத்தியினையும் இலாபத்தையும் எல்லையின்றிப் பெருக்குவதற்காக நுகர்வுக் கலாசாரமும் தேவை தீர்ந்ததும் தூக்கி எறிந்துவிடும் கலாசாரமும் மிதக்கும் (நிலைத்திராத) விழுமியங்களும் வெகு வித்தாரமாக வளர்க்கப்படுகின்றன. பண்டங்களின் நுகர்வு உண்மையான தேவைகளின் அடிப்படையிலன்றிப் பகற்கனவுகளால் நிர்ணயிக்கப்படும் நிலை வள்ர்ந்து வருகிறது. வெகுசன ஊடகங்கள் பகற்கனவுகளை வளர்க்கின்றன. அவ்வூடகங்களில் முக்கிய இடம்பெறும் விளம்பரங்கள் மனங்கவரும் வகையில் கெட்டித்தனமாகத் திட்டமிடப்படுகின்றன. ஒருவருடைய சமூக அந்தஸ்து உடல் வலுவினாலோ ஒழுக்கத்தினாலோ கல்வியினாலோ அன்றி, நுகரும் தோரணையிலே அடையாளம் காணப்படும் தன்மை வளர்கிறது. மற்றவர் களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் நவீன நடையுடை பாவனை களை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது. இஷ்டம்போலத் தேவை முடிந்ததும் கைவிடும் உறவுமுறையினை ஒரு ஆடம்பரமாக மதிக்கும் மனப்பான்மை முன்னெடுக்கப்படுகிறது. இப்படியான நுகர்வோர் சமூகம் நுகர்வோருக்கு வலுவூட்டுவதாகும் என்று சிலர் வாதிட்டாலும், நடை முறையில் அது முதலாளித்துவ விழுமியங்களுக்கு அழுந்தம் தந்து, வறிய மக்களிடமிருந்து செல்வந்தர்களைப் பிரிக்கும் இடைவெளியை அதிகரிக்கச் செய்வதாகவே உள்ளது. அப்படியான நிலையில் மேலாதிக்கம் பெறுவது நுகர்வுச்சார்புவாதமேயன்றி நுகர்வோர் அல்லர்.
இன்று மேலெடுக்கப்படும் உலகமயமாக்கலும் பெருமுதலாளித்துவத்தின் சந்தையை எல்லைகடந்து பெருக்கும் வேட்கையை அடிப்படையாகக் கொன்டதுவே. பன்முகத்தன்மை கொண்டதாக உலகம் உள்ளது. அவ்வகையுறு தன்மையே தன் பேரழகென்றும் பலமென்றும் போற்றப்படுகிறது. ஆனால் பல்தேச முதலாளித்துவத்தை பொறுத்தவரை வேறுபாடுகளை மிதித்து மேவுதல் சர்வலோக மேலாதிக்கம் கைகூடுவதை இலகுவானதாக்கும். அந்தக் கைங்கரியத்தை நவீன தொடர்பாடற் சாதனங்கள் வெகு துல்லியமாக செய்துவருகின்றன. ஓரங்கட்டப்பட்டுள்ள பெரும்பாலான மக்களின் கவனம் அவர்களுடைய பொருளாதாரப் பிரச்சனைகளிலும் வறுமையிலிருந்தும் திசைதிருப்பப்பட்டு இனத்துவ முரண்பாடுகளிலும் ஆள்புல ஒருமைப்பாடு, மக்களின் இறைமை போன்றவற்றிலும் குவிமையப்படுத்தப்படுகிறது. வர்க்க அரசியலை மறைக்கும் வகையில் இனத்துவ அரசியல் மேலெடுக்கப்படுவது வெள்ளிடைமலை.
மானிட இருப்பிலோ இருப்பிடத்திலோ எதிர்காலத்திலோ கரிசனை இகந்த, இலாபம் பெருக்குவதையே குறியாகக் கொண்ட எத்தனங்களின் தாத்பரியங் களைக் கவனத்துக்கெடுக்கையில், இங்கிலாந்திலே தொழிற்சாலை கள் தொடங்கப்பட்டபோது மனிதத்தை மறந்த இலாப நோக்கு மேலோங்கிய மையின் விளைவுகள் பற்றி ஒரு நூலில் (J.L. Hammondத and Barbara Hannond, Rise of Modern Industry, London, 1937) கூறப்பட்ட சில விடயங்கள் சிந்தனைக்கு உரியவையாகும். “இங்கிலாந்து இலாபங்களை வேண்டியது, இலாபங்களைப் பெற்றுக்கொண்டது. எல்லாமே இலாபத்தை நோக்கித் திரும்பின. நகரங்கள் தங்கள் இலாபகரமான அழுக்கையும் தங்கள் இலாபகரமான புகையையும் தங்கள் இலாபகரமான அசுத்த சேரிகளையும் தங்கள் இலாபகரமான சீர்குலைவையும் தங்கள் இலாபகர மான அறியாமையினையும் தங்கள் இலாபகரமான கையறுநிலையையும் பெற்றுக்கொண்டன.... அழகும் மகிழ்வும் ஓய்வும் கற்கையும் நாகரீகமான பார்வையும் பழக்கமும் புதிய சூழலில் மனிதனுக்குக் கிட்டாமல் போயின”.
--பேராசிரியர் சி. தில்லைநாதன்