Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 69

"தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி "போல்" என்பவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த டொமினிக் கொக்குவில் பொற்பதி வீதியிலமைந்திருந்த தீப்பொறி"க்குழு உறுப்பினரான காசி (ரகு) யின் வீட்டில் தங்கியிருந்து தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை சந்திக்கத் தொடங்கியிருந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்கனவே "தீப்பொறி"க்குழு உறுப்பினரின் வீடு என அடையாளப்படுத்தப்பட்டிருந்த காசியின் வீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும் கூட காசியின் வீட்டுக்கருகில் அமைந்திருந்தது.

இத்தகையதோர் வீட்டில் டொமினிக் "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை சந்தித்ததானது தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேகத்துக்கு இடமளித்திருந்தது. சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கசிந்ததையடுத்து மே 17, 1991 டொமினிக் தங்கியிருந்த வீடு தமிழீழ விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு டொமினிக் கைது செய்யப்பட்டார்.

டொமினிக்கின் கைதைத் தொடர்ந்து "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களான சிறீ, மீரா ஆகியோரும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற வரணியைச் சேர்ந்த எமது ஆதரவாளரான நாகலிங்கம் கோவிந்தராஜன் என்பவரும், டொமினிக் தங்கியிருந்த வீட்டில் வசித்து வந்தவரும், காசியும் மைத்துனரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருமான செல்லத்துரை ஸ்ரீநிவாசன் என்பவரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.

(டொமினிக்)

யாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாண நிலவரங்களையும் நன்கு அறிந்திராத டொமினிக்கை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பது என "தீப்பொறி"ச் செயற்குழு எடுத்த தவறான முடிவு, தமிழீழ விடுதலைப் புலிகளால் வேண்டப்பட்டவரான காசியின் வீட்டில் தங்கியிருந்து "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை சந்தித்தமை, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும் அவர்களது உளவுப் பிரிவு குறித்தும் சரியான எச்சரிக்கையின்மை என்பன நாம் புளொட்டிலிருந்து வெளியேறியபோது தனது இலக்கிய ஆற்றலால் புளொட்டுக்குள் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் போராட்டம் குறித்தும் "புதியதோர் உலகம்" என்ற நாவலை எழுதியவரும், தீப்பொறிப் பத்திரிகையை வெளிக்கொணர்வதற்கு தன்னாலான முழு உழைப்பையும் நல்கியவரும், "தீப்பொறி"க்குழுவின் அரசியல் திட்டத்தை எழுத்துருவில் முன்வைத்தவரும், "தீப்பொறி"க்குழுவை தலைமை தாங்கி வழிநடத்திச் சென்று கொண்டிருந்தவருமான டொமினிக்கின் கைதுக்கு வழிகோலியிருந்ததுடன் யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருந்த "தீப்பொறி"க்குழு உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்படவும் காரணமாக அமைந்திருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட டொமினிக்கும், ஏனையோரும் புலிகளின் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டிருந்த போதும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான கோவிந்தராஜனும், ஸ்ரீநிவாசனும் நீண்ட நாட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வதை முகாமில் அடைக்கப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொடர்ந்த நெருக்குதல்களால் விடுவிக்கப்பட்டிருந்தனர். "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களான சிறீ மற்றும் மீரா ஆகியோர் அவர்களது குடும்பத்தினரின் தீவிர முயற்சியாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களின் தலையீட்டாலும் எச்சரிக்கை செய்யப்பட்டு வதை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை - தவறான இலக்குகளை அல்லது தமது அழிவுக்கு வழிகோலும் இலக்குகளை - நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். வடக்குக்-கிழக்கு, தென்னிலங்கை என தமது "இரண்டாவது ஈழப் போரை" விஸ்தரித்துக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது ஈழப்போரை இந்தியாவுக்கும் விஸ்தரித்திருந்தனர். இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தியப்  பிரதமராக விளங்கியிருந்தவரும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் மூலம் இலங்கைக்கு இந்தியப்படையை அனுப்பி வைத்தவருமான ராஜீவ்காந்தியாகவிருந்தார்.

மே 21, 1991 ஸ்ரீபெரும்புதூர் என்னுமிடத்தில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ராஜீவ்காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பலியானார். தற்கொலைத் தாக்குதலுக்கு மனித வெடிகுண்டாக வந்த தனு என்றழைக்கப்பட தேன்மொழி ராஜரத்தினம் உட்பட 14 பேரும் ராஜீவ்காந்தியுடன் பலியாகியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தி மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கவில்லை என்ற போதிலும் மே 25, 1991 வேதாரண்யத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சங்கர் என்ற நபரை பொலிசார்  கைது செய்து விசாரித்தனர். சங்கர் கொடுத்த தகவலையடுத்து ராஜீவ்காந்தி மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உதவியளித்த தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த மீசாலையைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது மனைவி நளினியும் ஆகியோர் விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் வழியில் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக முருகன் வழங்கிய தகவல்களையடுத்து ராஜீவ்காந்தி மீதான தற்கொலைத் தாக்குதலை திட்டமிட்டு தலைமைதாங்கிய உடுப்பிட்டியைச் சேர்ந்த பாக்கியசந்திரன் (ஒற்றைக்கண் சிவராசன்) என்பவரையும் அவருடன் இணைந்து செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களையும் தேடி கர்காடக மாநிலத்திலுள்ள  பெங்களூர் சென்ற பொலிசார் அங்கு இந்திரா நகர் காலனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்த போது உள்ளேயிருந்த இருவர் தற்கொலை செய்து கொள்ள மிரேஷ் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கர்காடக மாநிலத்திலுள்ள முத்தத் என்ற ஊரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கி இருந்த வீட்டை பொலிசார் சுற்றி வளைத்தபோது 5 தமிழீழ விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்டனர். அருகிலுள்ள உள்ள பிரோட்டா என்ற ஊரிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த வீடு முற்றுகையிடப்பட்ட போது 6 தமிழீழ விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

கர்காடக மாநிலத்திலுள்ள கோனே குண்டே என்ற இடத்தில் உள்ள காலனியில் ஒரு  வீட்டை பொலிசார் கண்காணிக்கத் தொடங்கினார்கள். சுற்றிவளைத்த பொலிசார் மீது வீட்டினுள்ளிருந்து தாக்குதல் நடாத்திய ஒற்றைக்கண் சிவராசன் உட்பட 7  தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ராஜீவ்காந்தி மீதான தாக்குதலை திட்டமிட்டு தலைமைதாங்கி  91 நாட்கள் பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சிவராசன் ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20  அன்று பொலிசார் சுற்றிவளைத்த போது தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளே ராஜீவ்காந்தி மீதான கொலையை செய்து முடித்திருந்தவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்-துன்னாலை) நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் மீது வெடிமருந்து  நிரப்பப்பட்ட வாகனத்தைச் செலுத்தி 40 இராணுவத்தினரை கொன்றொழித்தன் மூலம் தமது முதலாவது தற்கொலைத் தாக்குதலை ஆரம்பித்து வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்  அத்தாக்குதலுக்கு கரும்புலித் தாக்குதல் எனவும் பெயர் சூட்டியிருந்தனர்.

நெல்லியடியில் முதாலவாதாக ஆரம்பித்த கரும்புலித் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மையான போராட்ட வழிமுறையாக மாற்றம் பெறத் தொடங்கியிருந்ததுடன், ராஜீவ்காந்தியையும் அவரருகில் நின்ற 14 பேரையும் தற்கொலைத் தாக்குதல் மூலம் கோரத்தனமாகக் கொன்றொழித்து தமது  தனிநபர்  பயங்கரவாதச் செயலை தமிழீழ விடுதலைப் புலிகள் உலகுக்கு எடுத்துக் காட்டியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநபர் பயங்கரவாதம் தற்கொலைத் தாக்குதல் போராட்டமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் தற்கொலைத் தாக்குதல் மூலமாகவும், தனிநபர் பயங்கரவாதம் மூலமாகவும் வெல்லப்பட முடியும் என்ற மாயையூடாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களையும் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தையும் தற்கொலைப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

இந்திய மண்ணில் ராஜீவ்காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட சம்பவமானது இந்திய அரசியல் அரங்கில் பெரும் உணர்வலைகளையும், கண்டனங்களையும் எழுப்பியிருந்ததுடன் தமிழ்மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்திலும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியது. இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்களும் கூட இந்திய அரசின் கடும் போக்கால் பாதிக்கப்பட்டனர்.

டொமினிக் யாழ்ப்பாணம் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டது குறித்து கொழும்பில் தங்கியிருந்த "தீப்பொறி"க்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. டொமினிக்கை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்த "தீப்பொறி"ச் செயற்குழுவின் முடிவு தவறானது என கீழணி உறுப்பினர்களான சுரேன், பாபு, சிறீ  உட்பட பலரும் விமர்சித்திருந்தனர்.

புளொட் மற்றும் "தீப்பொறி"க்குழுவில் அங்கம் வகித்தபோது அரசியல் வகுப்புக்களை நடத்தியதுடன் புளொட்டில்   அங்கம் வகித்தபோது "புதியபாதை" பத்திரிகையிலும் பின்னர் "தீப்பொறி" பத்திரிகையிலும் அரசியல் கட்டுரைகளை எழுதிவந்த டொமினிக் அரசியலில் மட்டுமல்லாது இலக்கியத்துறையிலும் மிகவும் வளர்ச்சியடைந்த ஒருவராகக் காணப்பட்டதுடன் எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்க ஒருவராகவும் விளங்கியிருந்தார்.

தனது இளமைப் பருவத்திலிருந்தே முற்போக்கு இலக்கியத்துறையிலும் இடதுசாரி அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கிய டொமினிக் புளொட்டினதும் "தீப்பொறி"க்குழுவினதும் வளர்ச்சியில் காத்திரமான பாத்திரத்தை வகித்திருந்தார். டொமினிக்கினுடைய கைது "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை பெரிதும் பாதித்திருந்தது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் "தீப்பொறி"க்குழுவினரைக் குறிவைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கொழும்புக்குத் தப்பிவந்திருந்த நாமோ எந்தவித  காத்திரமான செயற்பாடுகளுமின்றியிருந்தோம்.

செயற்குழு உறுப்பினர்களான சண்முகநாதன், தர்மலிங்கம் ஆகியோர் மட்டுமன்றி டொமினிக்கும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் வதை முகாமில் கைதிகளாக இருந்தனர். தேவன், ரகுமான்ஜான், நான் உட்பட மூன்று "தீப்பொறி"ச் செயற்குழு உறுப்பினர்களே எஞ்சியிருந்தோம். இந்நிலை "தீப்பொறி"க்குழுவுக்குள் நிலைமைகள் மோசமடைந்து கொண்டிருப்பதையும் "தீப்பொறி"க்குழுவினது அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதையுமே எடுத்துக் காட்டியது.

"தீப்பொறி"ச் செயற்குழுவினராகிய நாம் எடுக்கும் ஒவ்வொரு தவறான முடிவும் எமது உறுப்பினர்களினது கைதுகளிலும் எமது செயற்பாடுகளிலிருந்து பின்வாங்குவதிலுமே முடிவடைந்து கொண்டிருந்தது. "தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவான "தமிழீழமே இலங்கை இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு" என்பதும் "தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல்" என்பன போன்ற கருத்துக்கள் என்னைப் பொறுத்தவரை உடன்பாடில்லாதவையாகவும் அரசியல் ரீதியில் தவறான முடிவாகவுமே இனங் காணப்பட்டிருந்தன.

1985ல் "தீப்பொறி"க்குழுவின் உருவாக்கத்தின் பின்னான காலத்திலிருந்து "தீப்பொறி"ச் செயற்குழுவின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த அரசியல் கருத்துக்களிலும் மற்றும் "தீப்பொறி"க்குழுவின் நடைமுறை குறித்த பல முடிவுகளிலும் முரண்பாடு கொண்டவனாக தொடர்ச்சியாக எனது கருத்துக்களை முன்வைத்து செயற்குழுவுக்குள் போராடி வந்திருந்த போதும் "தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டு வந்திருந்தேன்.

ஆனால் டொமினிக்கின் கைதின் பின் "தீப்பொறி"ச் செயற்குழுவின் அரசியல் மற்றும் நடைமுறைகள் மீதான தொடர்ச்சியான முரண்பாடுகளுடன் என்னால் செயற்பட முடியும் என்ற நம்பிக்கை கேள்விக்குரியதொன்றாக மாறியது.

"தீப்பொறி"க் குழுவில் செயற்பட்டுக் கொண்டே அரசியலில் எனது சொந்தத் தேடலை ஆரம்பித்தேன். கொழும்பில் தங்கியிருந்த PLFTஐச் சேர்ந்த ரஞ்சித் என்பவருடனும் கொழும்பில் வெளிவந்து கொண்டிருந்த "சரிநிகர்" பத்திரிகைக் குழுவினருடனும் தொடர்ந்து சந்திப்புக்களை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவரும், தொழிற்சங்கவாதியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன  சார்பு) தலைவருமான நாகலிங்கம் சண்முகதாசன் (சண்) அவர்களைச் சந்தித்துப் பேசி அவரது போராட்ட அனுபவங்களை அறிந்து கொள்ள முடிவெடுத்தேன்.

(இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன  சார்பு) தலைவரான நாகலிங்கம் சண்முகதாசன் (சண்) -- சீன தலைவர் மாவோவுடன்)

சண்முகதாசனை சந்திப்பதற்கான ஒழுங்குகளை எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த சுரேன் மேற்கொண்டிருந்தார். சண்முகதாசனைச் சந்திப்பதற்கு பெரும் எதிர்பார்ப்புக்களுடன் சுரேனும், நானும் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். மிகவும் எளிமையானவராகக் காணப்பட்ட சண்முகதாசன், எம்மை வரவேற்று தனது நீண்ட கால தொழிற்சங்கப் போராட்ட அனுபவங்களையும், சாதீயத்துக்கெதிரான போராட்ட அனுபவங்களையும், இலங்கையில் இடதுசாரி இயக்கத்துக்குள் தோன்றிய பிளவு மற்றும் போராட்டங்களினது தோல்விகளையும் குறித்துப் பேசினார்.

அத்துடன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை கூர்மையடைந்திருந்த போது தேசிய இனப்பிரச்சனையில் தமது  கட்சி சரியான முடிவை எடுத்து செயற்படத் தவறிவிட்டது என மனம் வருந்தினார். சண்முகதாசனுடனான எமது சந்திப்பு கடந்த கால இடதுசாரிகளின் போராட்டங்கள் குறித்த ஒரு நேரடி சாட்சியமாக அமைந்திருந்தது.

சண்முகதாசனின் சந்திப்பின் பின் நவலங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தென்னிலங்கையில் பகிரங்கமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தவருமான வாசுதேவ நாணயக்கார கலந்துகொண்டு பேசிய பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்று இனவாத அரசுக்கெதிரான அவருடைய ஆவேசமிக்க பேச்சுக்களையும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டதுக்காதரவான பேச்சுக்களையும் கேட்க முடிந்தது. எனக்குச் சரளமாக சிங்கள மொழி தெரிந்திருக்காததால், சிங்கள மொழியை நன்கு அறிந்திருந்த எனது நண்பனான ரமணனை வாசுதேவ நாணயக்காரவின்  பேச்சுக்களை சரிவர மொழிபெயர்த்து எனக்குக் கூறுவதற்காக கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றேன்.

(வாசுதேவ நாணயக்கார)

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பகிரங்கமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த சிங்கள இடதுசாரிகளில் வாசுதேவ நாணயக்காரவும் ஒருவராக விளங்கியிருந்தார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

-தொடரும்