ஜூன் 29ம் திகதி, வவுனியாச் சிறைச்சாலையில் படையினர் மேற்கொண்ட கோரத் தாக்குதலின் விளைவாகப் படுகாமடைந்த தமிழ் அரசியல் கைதிகளை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு, அங்கும் அவர்கள் தாக்கப்பட்டனர். அதனால் மோசமாகக் காயமடைந்த இளைஞர் கணேசன் நிமலரூபன் ஜூலை 4 அன்று உயிரிழந்தார். இக் கொடூரத் தாக்குதலையும் படுகொலையையும் மிலேச்சத்தனமான பேரினவாத பாசிச வன்முறையெனப் புதிய ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டித்திருந்தது.
ஒரு குற்றச்சாட்டுமின்றித் தடுப்பிலிருந்த நிமலரூபனின் சடலத்தைப் பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்ததன்மூலம் சிறை அதிகாரிகள் அந்த அப்பாவி இளைஞரைக் கேவலப்படுத்தியிருந்தனர். இவ்வாறான இராணுவ வன்முறையும் அதிகாரிகளின் பேரினவாதத் திமிரும், அரசியற் கைதிகளை விசாரணை இன்றி நெடுங்காலமாகத் தடுத்துவைத்து வருவதன் விளைவே என்பதில் ஐயமில்லை.
ஆண்டுக்கணக்காக விசாரணையின்றி மறியலிலுள்ளோரை விடுவிக்கக் கோரும் அழுத்தப் போராட்டங்கள் பல, சிறைகட்கு உள்ளேயும் வெளியேயும் நடந்தும் ஆட்சியாளர்கள் அவற்றில் எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை. மாறாகத் தமிழ் அரசியல் கைதிகள் மீதான சிறைக்கூட வன்முறையும் பேரினவாத ஒடுக்குதலும் வலுத்துள்ளன. எனவே, வவுனியாச் சிறைச்சாலைத் தாக்குதல், தவிர்க்கவியலாது, 1983ன் வெலிக்கடைப் படுகொலைகளையும் 2000ன் பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாம் படுகொலைகளையும் களுத்துறைச் சிறைச்சாலைத் தாக்குதல்களையும் பூசாச் சித்திரவதைகளையும் நினைவூட்டுகிறது.
இம் மிலேச்சத்தனமான தாக்குதலும் மிருகத்தனமான படுகொலையும் ஆட்சித் தலைவர்களைத் தலைகுனிய வைத்துள்ளது. ஆனால் அவர்கள் அதிலிருந்து எதையும் கற்பது ஐயத்துக்குரியது. கற்கக்கூடியோராயின் இக் கொடிய சம்பவத்திற்குப் பின்பாவது அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க முன்வந்திருப்பர்.
சிறைக்கூட வன்முறைகளும் கொலைகளும் என்றென்றைக்கும் ஒரு சமூகத்தை மட்டும் இலக்குவைக்கத் தேவை இல்லை என்பதை 1988-89 காலத்தில் ஜே.வி.பி. தலைமை உறுப்பினர்கள் அறிந்திருப்பார்கள். அரச அடக்குமுறைச் சட்டங்களின் துணையுடனும் அவற்றின் துணையின்றியும் நடக்கும் அரச வன்முறைக் கொடுமைகள் பேரினவாதத்தைச் சுட்டி நின்றாலும், அவற்றின் அதிகார வர்க்க இயல்பு, அவற்றை அந்த எல்லையுள் நிறுத்துவதில்லை. எப்போதேன் ஆளும் வர்க்க அதிகாரத்துக்குச் சவால் விடுக்கும் முறையில் மக்களில் எப் பகுதியினரேனும் கிளர்ந்தால் அரச வன்முறை இன வேறுபாடின்றிக் கட்டவிழ்த்துவிடப்படும்.
யூ.என்.பியின் தலைமையில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் காப்பாற்ற ஒரு இயக்கம் தோன்றியுள்ளது. அது வினோதமான ஒரு கூட்டணி என்பதுடன், நாட்டின் ஒரு வகையான எதேச்சாதிகாரத்தை எதிர்ப்பதற்கும் மேல் உயரிய நோக்கம் வேறு அதற்கு இருப்பது ஐயத்துக்குரியது. ஏனெனின் தேசிய இனப் பிரச்சனையயைப் பற்றியும் அடிப்படையான மனித உரிமை மீறல்களைப் பற்றியும் அதன் பார்வை ஐயமானது. யூ.என்.பி. மெய்யாகவே ஜனநாயகத்தைக் காக்க விரும்பின் நல்லது. ஆனால் அது முதலில் தனது ஜனநாயக விரோதக் கடந்தகாலத்தை நேர்மையாக விளக்கி விமர்சிக்குமா? மகிந்த சிந்தனை அரசாங்கம் வேறுவழியின்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பணிகிறது என்றால், அதனிடத்தில், யூ.என்.பி. ஆட்சி வந்தால் அது மனம் விரும்பிப் பணியும் என்பதை விட அதிகம் வேறுபாடு இராது. தனியார் மயமாக்கலோ திறந்த பொருளாதாரமோ சர்வதேச நணய நிதியமும் உலக வங்கியும் விதித்தபடி “அமைப்புச் சீர்திருத்தங்களை” முன்னெடுப்பதோ மாறாது. போவதில்லை. அதன் பேரினவாத அரசியல் மாறாது. அனைத்தினும் முக்கியமாகப், போரைக்காட்டிக் கட்டியெழுப்பப்பட்ட ஆயுதப் படை வலிமையும் அதிகாரங்களும் குறையா.
அப்படியானால் எவ்விதமான வேலைத்திட்டத்தின் முலம் ஜனநாயகத்தை மீட்டெடுக்கலாம்? ஏறத்தாழ முழு ட்ரொட்ஸ்கியப் பாரம்பரியமும் திரிபுவாதிகள் உட்படச் சீரழிந்த கம்யூனிஸ்ற் உதிரிகள் அனைவரும் இன்று ஏதோ ஒரு முதலாளியக் கட்சியின் காலடியிற் கிடக்கின்றன. பேரினவாதத்தில் முளைத்த ஜே.வி.பி. இன்னமும் அச் சேற்றில் உழல்கிறது. முன்னாள் படைத் தளபதிக்கும் பின்னால் போகுமளவுக்கு அதை உந்திய சந்தர்ப்பவாத அரசியல் இன்று அதன் நம்பகத் தன்மையைச் சிதைத்துள்ளது.
இது தான் நாட்டின் இன்றைய அரசியலின் அவலம். இதிலிருந்து விடுபபடச், சரி-பிழைகள் பற்றியும் மக்களுக்கு நல்லவை-கெட்டவை பற்றியும் விசாரிக்கத் துணியும் அரசியல் ஒன்று எழவேண்டும். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலப் பாராளுமன்ற இடதுசாரி அரசியலின் விளைவுகளையும் பேரினவாத-குறுந்தேசிய அரசியலின் ஆதிக்கத்தையும் வெல்வது எளிதல்ல.
வவுனியாச் சிறைச்சாலைத் தாக்குதல் மட்டுமன்றி அதைப் பற்றியும் அதன் அடிப்படைக் காரணமான அரசியல் கைதிகளின் நியாயமற்ற நீண்ட காலச் சிறைவாசத்தைப் பற்றியும் “ஜனநாயகத்திற்காகக்” குரல் கொடுப்போர் காட்டும் அசட்டை மேற்கூறிய அவலத்தின் புலப்பாடே.
சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளியின் படுகொலையையும் சிலாபம் மீனவரின் படுகொலையும் என்றோ நடந்து நாம் மறந்துபோன நிகழ்வுகளல்ல. நியாயங்கோரும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே தான் முற்போக்குச் சக்திகள் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை, ஒவ்வொரு சமூகக் கொடுமைக்கும் எதிரான, ஒன்றோடொன்று உறவுடைய போராட்டமாக முன்னெடுக்கவல்ல மாற்று அரசியலை உருவாக்கத் துணிய வேண்டும்.
-செம்பதாகை-ஆசிரியர் தலையங்கம்-ஜூலை - செப்ற்றெம்பர் 2012