Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 68

"தீப்பொறி"க் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும், சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர்.

இவர்களுடனான தொடர்புகளை கொழும்பிலிருந்து தொலைபேசியூடாக நாம் பேணிவந்த அதேவேளை, இங்கிலாந்தில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் இடதுசாரி அரசியலில் பரீட்சயம் உள்ளவருமான மகாலிங்கம் மகாஉத்தமன் தனது அரசியல்  கருத்துக்களையும், மார்க்சிசம் குறித்த தனது பார்வைகளையும் கடிதத் தொடர்புகள் மூலம் பரிமாறிக் கொண்டிருந்தார். மகாஉத்தமனால் அனுப்பி வைக்கப்படும் கடிதங்களில் காணப்படும் அரசியல், தத்துவார்த்த விடயங்கள் குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வந்தன. இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மகாஉத்தமனினுடைய நவ-மார்க்சிசக் கருத்துக்கள் குறித்ததாகவே அமைந்திருந்தன.

(மகாஉத்தமன்)

மகாஉத்தமனின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கருத்துக்களில் உடன்பாடு கொண்டிருந்த போதும் கூட அவருடைய நவ-மார்க்சிசக் கருத்துக்களில் நான் முழுமையாக உடன்பாடு கொண்டவனாக இருந்திருக்கவில்லை. இதனால் மகாஉத்தமனின் நவ-மார்க்சிசக் கருத்துக்கள் குறித்த எனது விமர்சனத்தை செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்தேன். மகாஉத்தமனின் நவ-மார்க்சிசக் கருத்துக்கள் குறித்தான எனது விமர்சனத்தை மகாஉத்தமனின் கருத்துக்களுடன் பெருமளவுக்கு உடன்பாடு கொண்ட செயற்குழு உறுப்பினராகிய ரகுமான் ஜான் ஆரோக்கியமாக முகம் கொடுக்கத் தவறியிருந்தார். மகாஉத்தமனின் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது என்பதைத் தவிர்த்து "மகாஉத்தமனின் கருத்துக்களை விமர்சிக்கும் அளவுக்கு நீர் அரசியலில் வளர்ந்து விட்டீரா?" எனக் கேள்வியெழுப்பியிருந்தார். செயற்குழு உறுப்பினர் ரகுமான் ஜானின் இக்கேள்வியானது விமர்சனங்கள் குறித்து ரகுமான் ஜான் எத்தகைய குறுகிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கின்றார் என்பதையும் விமர்சனங்களை எப்படி முகம் கொடுக்கின்றார் என்பதையும் மட்டுமல்ல விமர்சிப்பதற்கான ஒருவரின் "தகுதி" குறித்தான ரகுமான் ஜானின் கண்ணோட்டத்தையும் கூடவே வெளிப்படுத்தியிருந்தது

ஒருவரின் அரசியலை விமர்சிப்பதற்கு அந்த நபருக்கு இணையாக அரசியலில் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவரை விமர்சிக்க முடியும் என்ற கருத்தானது விமர்சனங்கள் குறித்த செயற்குழு உறுப்பினர் ரகுமான் ஜானின் தவறானதும் கேலிக்கிடமானதுமான புரிதலையே காட்டி நின்றது.  இது ஒருவரின் அரசியலை விமர்சிப்பதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் அடிப்படை உரிமையைக் கூட - அந்த நபர் அரசியலில் வளர்ச்சி அடைந்தவரா இல்லையா என்பதற்கு அப்பால் - கருத்தளவில் மறுப்பதாகும். செயற்குழு உறப்பினர்களான டொமினிக், தேவன் ஆகியோர் மகாஉத்தமனின் நவ-மார்க்சிசக் கருத்துக் குறித்த எனது விமர்சனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிராத போதும் மகாஉத்தமனின் கருத்துக்களை விமர்சிப்பதற்கான "எனது உரிமை"யையும் அதற்கான "தகுதி"யையும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

வடக்குக்-கிழக்கில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தென்னிலங்கையில் எதிரொலிக்கத் தொடங்கியிருந்தது. கொழும்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேடுதல்களும், சோதனைகளும் அதிகரித்துக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளை வடக்குக் கிழக்குக்கு வெளியே, குறிப்பாக கொழும்பு நகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளுவதற்கான திட்டங்களை தீட்டியிருந்தனர்.

இத் தாக்குதல் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் மட்டுமல்லாமல் அதற்கான நபர்களும் கூட பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் "தேனிலவு" நிலவிய காலகட்டத்தில் கொழும்பை வந்தடைந்திருந்ததை பலரும் அறிந்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டதையெல்லாம் கொடுத்திருந்த பிரேமதாசாவும், பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளமுடியாத பொறிக்குள் வீழ்ந்து விட்டிருந்ததை நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டின. மார்ச் 02, 1991 அன்று இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான லெப்டினன் கேணல் ரஞ்சன் விஜேரத்ன கொழும்பிலுள்ள திம்பிரிகஸ்யாய என்னுமிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பிரதிப்பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜேரத்ன அவரது மெய்ப் பாதுகாவலர்கள் உட்பட 19 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தாக்குதலானது பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசால் வடக்குக்-கிழக்கில் மேற்கொள்ளும் யுத்தம் இலங்கை அரசினதும், சிங்கள மக்களினதும் வாசற்கதவில் வந்து நிற்பதையும் அந்த யுத்தம் இலங்கை அரசஅதிகாரிகளை மட்டுமன்றி அப்பாவிச் சிங்கள மக்களையும் பலிகொள்ள ஆரம்பித்து விட்டிருந்தையும் எடுத்துக் காட்டியது.

இலங்கை அரசின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் வடக்குக்-கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டபோதும் அந்த யுத்தத்தின் பாதிப்பை அல்லது அந்த யுத்தத்தின் எதிர்வினையை வடக்குக் கிழக்குக்கு வெளியே தென்னிலங்கையில் கண்டுகொண்டிருந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ரஞ்சன் விஜேரத்ன மீதான கார்க் குண்டுத் தாக்குதல் கொழும்பில் பதட்ட நிலையை தோற்றுவித்திருந்த போதும்,  நடைபெற்றுக் கொண்டிருந்த போரை சாதாரண சிங்கள மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போராகவே இனம் கண்டுகொண்டனரே தவிர இரண்டு இனங்களுக்கிடையிலான போராக இனங்கண்டு கொண்டிருக்கவில்லை. "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்தவர்களாகிய நாம் கொழும்பையும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளிலும் சிங்கள மக்களின் வீடுகளிலேயே வாடகைக்குத் தங்கியிருந்தோம். NLFTயிலிருந்து எம்முடன் இணைந்து கொண்டிருந்த ஐயர் (கணேசன்) கண்டி நகர்ப் பகுதியில் தங்கியிருந்த போதும் எம்முடனான சந்திப்புகளுக்கு கொழும்பு வந்து  சென்ற வண்ணம் இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் தேடப்பட்டு கொழும்பு வந்திருந்த எம்மில் பலரிடம் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும், அதில் "தீப்பொறி"க் குழுவினராகிய எமது பாத்திரம் குறித்தும் கேள்விகளும் விமர்சனங்களும் மட்டுமல்லாது தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியும் கூட வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

தேசிய இன ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்தில் எமது கருத்துக்கள், நடைமுறைகள் என்பன சரியானவைதானா என பலர் கேள்வியெழுப்பத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக சந்தியா, சிறீ, பாபு, சுரேன், காசி போன்றவர்கள் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துக் கொண்டிருந்தனர்.

வடக்குக்-கிழக்கில் இனச் சுத்திகரிப்பை "வெற்றிகரமாக" முடித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கருத்துக்களுடனும், செயல்களுடனும் உடன்பாடு காணாதவர்களைத் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பார்வை  வவுனியாவில் "தீப்பொறி"க் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்திருந்தது. வவுனியாவில் "தீப்பொறி"க் குழுவின் செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டவரும், "தீப்பொறி"க் குழுவின் வவுனியா மாவட்டக் குழுவில் செயற்பட்டவருமான வண்ணன் யாழ்பாணத்திலிருந்து வவுனியாவிலுள்ள தனது வீட்டுக்குச் செல்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார்.

பல வாரங்களாக கைகளில் விலங்கிடப்பட்டு தாக்கப்பட்ட வண்ணனிடமிருந்து தீப்பொறிக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் நபர்கள் பற்றிய தீவிர விசாரணைகள் நடை பெற்றன. வண்ணனின் கைதையடுத்து வவுனியாவில் எம்முடன் செயற்பட்டு வந்த அந்து என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தப்புவதற்காக யாழ்பாணத்தில் ஏற்கனவே தங்கியிருந்த வவுனியாவைச் சேர்ந்த கபிலனுடன் இணைந்து இந்தியா சென்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் கடும் சித்திரவதைக்குள்ளான வண்ணன் அம்முகாமுக்குச் சென்ற வண்ணனின் நெருங்கிய உறவினரான தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் ஒருவரின் விஜயத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுதலை செய்யப்பட வண்ணன் அவருடைய சகோதரனுடன் யாழ்ப்பாணம் சென்று இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். ஆனால் வண்ணனை இந்தியா அனுப்பி வைத்துவிட்டு வவுனியா வந்து சேர்ந்த அவரது சகோதரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் "வரவேற்பு" காத்திருந்தது. வண்ணனுடைய சகோதரன் தமிழீழ விடுதலைப் புலிகளிளால் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் புலிகளின் முகாமில் சித்திரவதைக்குள்ளானார்.

வண்ணன், அந்து, கபிலன் ஆகியோர் எங்கே உள்ளனர் எனக் கேட்டும், அவர்களிடமிருந்த ஆயுதங்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன எனக் கேட்டுமே வண்ணனின் சகோதரன் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இதேவேளை அந்து வீட்டில் சோதனையிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் அங்கு எம்மால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருந்தனர். பல மாதங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்த வண்ணனின் சகோதரன் பலத்த உடற்காயங்களுடன் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் "தீப்பொறி"க் குழு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் வேட்டையாடிக் கொண்டிருந்த அதேவேளை "தீப்பொறி" செயற்குழு கொழும்பிலுள்ள தெகிவளை என்னுமிடத்தில் கூடியது. டொமினிக், ரகுமான் ஜான், தேவன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டிருந்த செயற்குழுக் கூட்டத்தில் எமது அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்துப் பேசினோம். வவுனியாவில் எமது உறுப்பினர்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதையும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் எம்முடன் செயற்பட்டு நீண்ட நாட்களாக தொடர்பற்றிருப்பவர்களின் நிலை குறித்தும் பேசிய நாம் யாழ்ப்பாணத்துக்கு எம்மில் ஒருவர் செல்வதன் மூலம் எம்முடன் செயற்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு எமது செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் என கருதினோம். யாழ்ப்பாணத்துக்கு யார் செல்வது என்ற கேள்வி செயற்குழுவுக்குள்  எழுந்தபோது யாழ்ப்பாணத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் நன்கு தெரிந்த, பரீட்சயமான சுரேனை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரித்திருந்தேன். ஆனால் ரகுமான் ஜான் யாழ்பாணத்துக்கு டொமினிக்கை அனுப்பி வைப்பதே பொருத்தமானது என்ற கருத்தை முன் வைத்திருந்தார். இதனையடுத்து செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி டொமினிக் யாழ்ப்பாணம் செல்வதென முடிவெடுக்கப்பட்டது. செயற்குழு முடிவின்படி சில நாட்களிலேயே டொமினிக் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டார்.

-தொடரும்