பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நாடுகளின் நலன் சார்ந்தே, இலங்கையின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் மோதல்களும் வெளிப்படுகின்றது. அதாவது பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கம் சார்ந்த சர்வதேச முரண்பாடுகள், இலங்கைக்குள் பிரதிபலிக்கின்றது. இதில் இருந்துதான் நாம் இன்று எம்மைச் சுற்றிய அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு இவற்றைத் தாண்டி எவரும் 'தீர்வுத் திட்டம்' 'போர்க் குற்றம்' பற்றி பேசவில்லை. புலத்துப் புலிகளாகட்டும், மண்ணில் கூட்டமைப்பாகட்டும் அனைவரும் பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நலன்களுடன் தம்மை இணைத்துக்கொண்டே தான் இன்று தம் அரசியலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் இன்றும் சொந்த தமிழ்மக்களைச் சார்ந்து அரசியல் செய்யவில்லை, மாறாக பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நலன் சார்ந்து அரசியல் செய்கின்றனர்.
1983-களிலும் இதுதான் நடந்தது. அன்று தேசிய விடுதலை இயக்கங்கள் இந்தியாவின் பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக எப்படி மாற்றப்பட்டனவோ, அதுவே இன்றும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இந்தியா, விடுதலையின் பெயரில் புலி உள்ளிட்ட பல குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி, ஆயுதமும் பணமும் கொடுத்து, தனது பிராந்திய நலனுக்கு ஏற்ப, இலங்கையில் அவர்களைக் களமிறக்கியது. இறுதியில் புலிகள் இந்தியாவையும், இந்திய நலனையும் மீறியபோது, இலங்கை அரசு மூலம் அதை அழித்தொழித்தது. இதனால் இலங்கை மீதான இந்திய நலன் சார்ந்த முரண்பாடுகள், முடிவுக்கு வந்ததாக அர்த்தமல்ல.
இன்று இலங்கை மீதான பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நலன் சார்ந்த முரண்பாடுகள், உலகளவில் கூர்மையாகி வருகின்றது. இதற்குள் வலிந்து இலங்கை தன்னைப் புகுத்திக் கொண்டதன் மூலம், 'தீர்வுத் திட்டம்' 'போர்க் குற்றம்...' போன்ற விடையங்கள் அனைத்தும், சர்வதேச நாடுகளின் முரண்பாட்டுக்கு உள்ளான ஒரு விடையமாக மாறிவிட்டது. இந்த அரசியல் பின்னணியில் அரசு முதல் புலிகள் வரை, உலக மேலாதிக்க நாடுகளின் பின்னால் இயங்கும் கூலிக் குழுக்களாக மாறி அதைப் பிரதிபலிக்கின்றனர்.
இதன் பின்னணியில் இன்று நாட்டை ஆளுகின்றது மகிந்தவின் குடும்பம். இது சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்தி, இனங்களைப் பிரித்தாளுகின்றது. சர்வதேச நாடுகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளைச் சார்ந்து, தன்னை ஒரு பக்கச் சார்பாகக் காட்டி தன் இராணுவ கட்டமைப்பைப் பலப்படுத்துகின்றது. இராணுவக் கட்டமைப்பு இன்றி மக்களை அடக்கியாள முடியாத நிலையில், மகிந்தாவின் தலைமையிலான ஆளும் வர்க்கம் தனிமைப்பட்டு வருகின்றது. இதற்காக தன் குடும்ப சர்வாதிகார பாசிச இராணுவ கட்டமைப்பைப் பலப்படுத்திக் கொண்டு, பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்தின் ஒரு பக்கம் சார்ந்து நாட்டை ஆள முனைகின்றது.
இதன் விளைவால் படிப்படியாக சர்வதேச முரண்பாட்டுக்குள் சிக்கி; தனிமைப்படுகின்றது. பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கப் போட்டியில், தன்னைப் பலியிடும் வண்ணம், தன்னைத்தான் பகடைக் காயாக்கிவிட்டது. இதன் அடிப்படையில் தான் பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க சக்திகள், 'தீர்வுத் திட்டம்' 'போர்க் குற்றம்' தொடர்பான அரசியல் விடையத்தை தன் கையில் எடுத்து வருகின்றது. இதில் இருந்து தப்ப முடியாத வண்ணம், நாடுகளின் மேலாதிக்கப் போட்டிக்குள் மகிந்த குடும்பம் நாட்டை தள்ளிவிட்டுள்ளது.
'தீர்வுத் திட்டம்' 'போர்க் குற்றம்' தொடர்பான விடையத்தை தன்னளவில் சுயமாக தீர்ப்பதன் மூலம், இதில் இருந்து விடுபடமுடியும்;. இதற்கு மாறாக பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க சக்திகளின் தலையீட்டுக்குள் இதைக் கொண்டுசென்று, தன்மீதான நெருக்கடியை தவிர்க்கவும், காலத்தை நீடிக்கவும் விசாரணை, பேச்சுவார்த்தை என்று, உலகறிய நாடகமாட முனைகின்றது. மறுபக்கத்தில் பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நலனுக்குள் தன்னை இட்டுச் சென்றதன் மூலம், உள்நாட்டில் தன் மக்களை எய்க்கும் நாடகங்களை தொடர முடியாது தனிமைப்பட்டு போகின்றது. பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க சக்திகள் தம் சொந்த மேலாதிக்க நலனுக்காக இதை அம்பலமாக்கி, அதைத் தனிமைப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் தான் அமெரிக்கா இலங்கை அரசின் விசாரணை அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்கக் கோருகின்றது. இந்தியாவோ பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்து, கண்காணிக்க சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கின்றது. இதன் பின்னணியில் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருந்து அவசரமாக வெளியேறுகின்றது.
அமெரிக்கப் போர் விமானங்கள் மகிந்தவை மிரட்டும் வண்ணம் இலங்கை நாட்டின் மேலாக பறக்;கின்றது. தீர்வு தேவையில்லை என்றும், தீர்வு இதோ வருகிறது என்றும், மகிந்த சகோதரர்களே ஆளுக்காள் முரண்பட்டு அங்குமிங்குமாக புலம்புகின்றனர். ஐ.நா. சார்ந்த விசாரனை அறிக்கை, தொடர்ந்து பலமட்ட விவாதத்துக்கு மீள எடுக்கப்படுகின்றது.
சர்வதேச மன்னிப்பு சபை முதல் பல மனித உரிமை அமைப்புகள் தொடர் அறிக்கைகளை வெளியிடுகின்றது. அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கை வேண்ட விருந்தாளியாக அரசு திட்டமிட்டு புறக்கணிக்க, அவர் இலங்கைக்குள் சுற்றிப் பார்க்கின்றார். வலிந்து சென்று அரசஅதிகாரிகளிடம் விசாரனை செய்கின்றார். தனக்கு எதிராக ஆர்பாட்டத்தை நடத்திய ஈ.பி.டி.பியின் நடத்தையை, இராணுவத் துணைக் குழுவின் அட்டகசமாக வருணித்ததுடன்;, அப்பாவி மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலைமை அங்கு தொடர்ந்து உள்ளதாக குறிப்பிடுகின்றார். அத்துடன் இராணுவத்தைக் கட்டுப்படுத்தி தமிழ்ப் பொலிசை நியமிக்க வேண்டிதன் அவசியத்தை பற்றி குறிப்பிடுகின்றார். இப்படி தமிழ் மக்களை பிரதித்துவப்படுத்துவதாக காட்டிய வண்ணம், அமெரிக்க நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசை தனிமைப்படுத்தும் செயல்பாடுகள் பலமுனையில் உலகம் முழுக்க முடுக்கிவிடப்பட்டு இருகின்றது. மகிந்த அரசு தனக்கான புதை குழியை வெட்டி வருகின்றது.
தப்பிப் பிழைக்க முடியாத உலக நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர விளையாட்டில் இறங்கி, நாட்டைப் பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நலனுக்குள் மோதவிட்டுள்ளனர். இதனால் 'தீர்வுத் திட்டம்' 'போர்க் குற்றம்' அனைத்தும் சர்வதேச நலன் சார்ந்த விடையமாக இன்று குறுகிவிட்டது. இதன் பின்னான எடுபிடி அரசியலே, தமிழர் தரப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது.
மொத்தத்தில் மக்களைச் சார்ந்திராத, இந்தப் பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நலன் சார்ந்த எடுபிடி அரசியல் என ;பது மீண்டும் மீண்டும ; மக்களைப் பலியிட்டு, தங்கள் நலனை அடையும் மக்கள் விரோத அரசியலாகும். இதை நாம் 1983-இல் இந்தியா, விடுதலையின் பெயரில் பயிற்சி, ஆயுதம், பணம் முதல் அனைத்தும் வழங்கி.., போராட்டத்தை அழித்த சூழலுடன், இன்று இதை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும். கடந்த அனுபவத்தை நாம் நிராகரித்தால், ஒரு புதைகுழி அரசியல் தான் மீண்டும் எமக்கு பரிசாகக் கிடைக்கும்.