பெடியளின் மந்தைகளாக வாழப் பழகியவர்கள் நாங்கள். இதற்குள் தான் எமது அறிவும், அறியாமையும் கூட. நாம் முன்னணி இதழை விற்பனைக்காக கொண்டு சென்றபோது, 'பெடியள் விடமாட்டாங்கள்' என்ற அரசியல் சூனியத்தை சந்திக்கின்றோம்.
பெடியள், ஐ.நா, மேற்குநாடுகள், இந்தியா, தமிழகம் தொடங்கி பிரபாகரன் ஜெயலலிதா ... என்ற எதிர்பார்ப்புடன் கூடிய அரசியல் நம்பிக்கை, விடுதலையை இலவசமாக எதிர்பார்த்தது, எதிர்பார்க்கின்றது. இதேபோல் எமது முன்னணி இதழையும் அப்படித்தான் கோருகின்றது. முன்னணியை விற்பனைக்கு கொண்டு சென்ற எமது தோழர்களும் இந்த அரசியலுக்குள் தான் பயணித்தனர்.
முன்னணி இதழை இலவசமாக எதிர்பார்த்ததும், இலவசமாக கொடுத்தலும் ஒரே கண்ணோட்டமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தாம் இலவசமாகக் கொடுத்த இதழுக்கான பணத்தை, தாம் தந்துவிடுவதாக கூறுகின்றனர் தோழர்கள். இது நாங்கள் உங்களுக்காக போராடுகின்றோம் என்ற கண்ணோட்டத்தையும், நீங்கள் நாங்கள் தருவதை வாங்கி அல்லது இலவசமாக படியுங்கள், ஆதரியுங்கள் என்ற எதிர்க்கண்ணோட்டத்தையும் உருவாக்குகின்றது.
பெடியள் முன்பு கொள்ளையடித்து மக்களுக்காக போராடியது போல், எங்கள் உழைப்பில் மக்களுக்காக நாம் போராடுகின்றோம் என்ற கண்ணோட்டத்தை இது மறுபடியும் பிரதிபலிக்கின்றது. மக்களின் பங்களிப்பு தான் போராட்டமாக மாறவேண்டும் என்பதை, நாங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதுடன், அதை மக்களுடன் வேதனையுடன் பகிர்ந்து கொள்ளவேண்டியுமுள்ளது.
சிறிய உங்கள் இந்தப் பங்களிப்பு தான் அடுத்த முன்னணி இதழைக் கொண்டு வருகின்றது என்ற அந்த அரசியல் உணர்வுதான், பங்களிப்பிற்கான முதலாவது காலடியாகும்;. இதை நாம் முதலில் புரிந்து கொள்வது, அதை மக்களுக்கு விளக்குவது, அந்த உணர்வுடன் முன்னணியைப் படிப்பது, அதைப் பரப்புவது முதன்மையாக அரசியல் பங்களிப்பதற்கான நிபந்தனையாகும்;.
முன்னணியை இலவசமாகக் கொடுத்தல், அதற்கான பணத்தை தருதல் என்பது, மக்களை உணர்வுடன் வாங்கிப் படிக்க வைத்தல் என்ற கடினமான அரசியல் பணியை மறுத்தலாகும்;. இலவசமாக வாங்கிப் படித்தலை ஊக்குவித்தலும்;, இலவசமாகக் கோருவதும், மக்களை மந்தையாக இருக்கக் கோருகின்ற அரசியலாகும்.
முன்னணி இதழ் உங்கள் சிறுபங்களிப்பில் இருந்து வெளிவருகின்றது என்ற உண்மையை உணர்த்தத் தவறுவதில் இருந்து, உணர மறுப்பதிலிருந்து விடுபட்டு உணர்வுபூர்வமான பங்காளியாக மாற வேண்டும், மாற்ற வேண்டும்;. இந்த உண்மையை உணர்த்த முடியாத எங்கள் தோழர்களின் கண்ணோட்டத்தில் இருந்து உங்கள் கண்ணோட்டம் வரை அனைத்தும் சுயவிமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டும்;.
கடந்தகாலத்தில் இந்தப் போராட்டத்தில் எனது பங்கு என்ன என்ற கேள்வி, கேட்கக் கூடாத விடையமாக இருந்தது. எனது பங்கு என்பது பெடியளின் கோரிக்கைக்கு உட்பட்ட ஒன்றாக சுருங்கிக் கொண்டது. இதைச் சுற்றிய தர்க்கங்கள், நியாயங்கள், நியாயப்படுத்தல்கள். என்பவற்றால் மந்தைக்குரிய ஒரு சிறிய வட்டத்தை, எம்மைச் சுற்றி நாமே கீறிக்கொண்டோம்.
இந்தவகையில் அல்லாது 'பெடியள்' பார்ப்பினம் என்று சொல்ல வைத்து போராட்டத்தை அழித்தனர் பெடியள். பெரிசுகள் இப்படிச் சொல்லியே, எம் இனத்தை அழித்தனர். போராட்டத்தில் இருந்து மக்கள் அன்னியமாக்கினர். விளைவு, பொழுதுபோக்கு அரசியல் கதைக்கும் கூட்டமாகவும், உணர்ச்சி அரசியலை பொழிபவர்களாகவும், கற்பனைவாதிகளாகவும் மக்கள் மாறினர்.
மக்கள் தங்களுக்காக தாம் போராடவில்லை. மக்களுக்காக பெடியள் போராடினார்கள். பெடியள் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதைப் போற்றிப் புகழுமாறு வேண்டப்பட்டனர். இது ஏன் எதற்கு என்று கேள்வியோ, விமர்சனமோ இன்றி எமது போராட்டம் அழிக்கப்பட்டது. பெடியள் அழித்தார்கள், மக்கள் அதன் வழியில் அழிக்க உதவினார்கள்;.
மக்கள் போராட்டம், மக்கள் பங்களிப்பு என்பது தாங்கள் பங்காற்றாத இருத்தலுக்குள்ளான நியாயப்படுத்துவதாக மாறியது. பொழுதுபோக்கு அரசியல், உணர்ச்சி அரசியல் என்ற எல்லைக்குள், பெடியள் அதிகாரத்துடன் கோருவதை கொடுக்கும் எல்லைக்குள் மக்கள் மந்தையாக்கப்பட்டனர். தமது சொந்த போராட்டமற்ற போராட்டம் போல், இலவசமாக பொழுதுபோக்காக அரசியல் கதைத்தல் பொதுப்பண்பாக மாறி இருக்கின்றது.
அரசியல் உணர்வுபூர்வமான எங்கள் நடைமுறையுடன் இணைந்த ஒன்றாக இருக்கவேண்டும்;. முன்னணி சஞ்சிகையை அந்தவகையிலான வழியில் எடுத்துச் செல்வது மட்டுமல்ல அந்த வகையில் படிப்பதும் அவசியம்;.