எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26.06.2012 அன்று திருமுருகண்டியில் மக்களது மீளக்குடியமர்வை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் நிலப் பறிப்பு நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியும் சிறைகளில் இருந்து வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வற்புறுத்தியும், காணாமல் போனோர் பற்றிய விபரங்களை வெளியிடுமாறும் கோரி நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி தனது பூரண ஆதரவைத் தெரிவிப்பதுடன் மேற்படி போராட்டத்தில் கலந்தும் கொள்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை. மீளக் குடியேறிய மக்களும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவிடாது தடுக்கப்படும் மக்களும் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியவாறு வாழ்ந்து வருகிறார்கள். அதில் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நிலப்பறிப்பு, நில ஆக்கிரமிப்புக்கள் முக்கிய பிரச்சினையாகியுள்ளன. அத்துடன் நீண்டகாலமாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையும் உரத்துக் குரல் கொடுக்க வேண்டியதாகவே இருந்து வருகிறது. எனவே இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு ஐக்கியப்பட்ட வெகுஜனப் போராட்டங்களும் மக்களது பங்களிப்புகளும் அவசியமானதாகும். அந்த வகையில் எமது கட்சி திருமுருகண்டி கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்கி அதில் கலந்து கொள்கிறது.
–
சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி