Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56

இந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள்

1986ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்ட்டிருந்த ஈழவிடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஆரம்பமாகிவிட்டிருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடியழிக்கும் இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் போது பெருமளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மரணத்தை தழுவியிருந்ததுடன் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரியாமல் இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையை விட்டும் வெளியேறியிருந்தனர்.

இதனால் பலவீனமுற்று விட்டிருந்த நிலையில் வன்னிக்காட்டுப் பகுதியிலிருந்து தமது திட்டங்களை வகுத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளோ இந்தியப்படையினருக்கு எதிராகவும், இந்தியப் படையினரின் ஆதரவுடன் செயற்பட்டுக் கொண்டிருந்த ஈழவிடுதலைப் போராட்டக் குழுக்களுக்கெதிராகவும் தாக்கிவிட்டு தலைமறைவாகும் போர்முறையை ஆரம்பித்து விட்டிருந்தனர்.

இந்தியப் படையினருக்கு எதிராகவும், ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு எதிரானதுமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைந்திருந்து தாக்கும் நடவடிக்கையானது மீண்டும் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் பதட்டநிலை தோன்ற வழிகோலியது. இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தையும் இயல்புவாழ்க்கையையும் மீளக் கொண்டு வருவதன் மூலம் வடக்கு-கிழக்கு மக்களை திருப்திப்படுத்தும் செயல்பாடுகளில் இறங்கியிருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளோ வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகமும் இயல்புவாழ்வும் மீளவரப் பெறுமானால் அது தமக்குப் பாரிய பின்னடைவைக் கொண்டுவரக் கூடும் எனக் கருதி சிவில் நிர்வாகத்தைச் சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு தமது இராணுவத்தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர்.

இந்தியப்படையினரை மறைந்திருந்து தாக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்முறையானது இந்தியப் படையினர் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு-கிழக்கில் ஒவ்வொரு குடிமகனும் அரச அடையாள அட்டைகளை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவரக் காரணமாயிற்று. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இந்தியப்படையினரையும் , இந்தியப் படையினரின் ஆதரவுடன் செயற்பட்டுக் கொண்டிருந்த ஈழவிடுதலைப் போராட்டக் குழுக்களையும் தாக்கியழிப்பது மட்டுமல்லாது, சிவில் நிர்வாக ரீதியில் இந்தியப் படையினர் தொடர்பு கொண்டவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட பின்னர் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் அங்கம் வகித்து செயலற்றிருந்த அனைவர் மீதும் தமது பார்வையைத் திருப்பியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆக்கிரமிப்புப்படையென்று பிரகடனப்படுத்தப்பட்ட இந்தியப்படைகளுக்கு எதிராகவும், "துரோகக் குழுக்கள்" அல்லது "ஒட்டுக்குழுக்கள்" என தமிழீழ விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்ட ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்களுக்கு எதிராகவும், இந்தியப்படையினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தாக்குதலை ஆரம்பித்திருந்தனர்.

இந்தியப் படையினரின் கெடுபிடிகள் ஒருபுறமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கெடுபிடிகள் மறுபுறமுமாக மக்கள் துப்பாக்கி முனையில் மண்டியிட வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனால் "தீப்பொறி"க் குழுவில் முழுநேரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாம் பிரச்சனைகளை முகம் கொடுக்கத் தொடங்கினோம். யாழ்ப்பாணத்துக்கு வெளியே, தென்னிலங்கைக்கோ அல்லது இந்தியாவுக்கோ எமது சிலவேலைகளை நகர்த்தி எமது செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று என்னால் முன்பு செயற்குழுவுக்குள் முன்வைக்கப்பட்டிருந்த கருத்தை செயற்குழு நிராகரித்திருந்தது.

இந்தியப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்களும், இந்தியப்படையினரின் சுற்றிவளைப்புத் தேடல்களும், கெடுபிடிகளும் மோசமடைந்திருந்த போதும் "தீப்பொறி" செயற்குழு முன்பு கொண்டிருந்த அதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்துக்குள்ளிருந்தபடியே எமது செயற்பாடுகளில் முழுநேரமாக ஈடுபடுவதென்பது ஆபத்துமிக்கதொன்றாக இருந்ததால் எம்மில் முழுநேரமாக செயற்பட்ட அனைவரும் - டொமினிக், ரகுமான் ஜான் தவிர - ஏதாவது ஒரு வேலையைப் பெற்று நாம் ஒரு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு அல்லது கல்வி நிலையங்களில் கல்வியைத் தொடந்து கொண்டு இரகசியமாக செயற்படுவது என செயற்குழு முடிவெடுத்தது.

இதனால் எம்மில் சிலர் வேலைகளைப் பெற்று ஒரு தொழிலுடன் எம்மை இனங்காட்டிக் கொண்டதுடன் சிலர் கல்வி கற்பதற்குச் சென்று கற்றலுடன் தம்மை இனம்காட்டிக் கொண்டனர். இலங்கை அரசால் வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளுடன் தொழில் நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், கல்லூரிகளிலோ பல்கலைக்கழகங்களிலோ வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுடன் இந்தியப்படையினரிடமிருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டி இருந்ததுடன் நாம் எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளையும் நம்ப வைக்கவேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுதும் கூட செயற்குழுவின் முடிவு தவறானதொன்றாகவே இருந்தது. ஏனெனில் எம்மில் பெரும்பாலானவர்கள் முழுநேரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட விரும்பினோம்.

யாழ்ப்பாணத்திற்குள் நிற்றல் என்ற செயற்குழுவின் முடிவின்படி எமது செயற்பாடுகளை குறுக்கிவிட்டிருந்த நிலையில் எம்மை இந்தியப்படையினரிடமிருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்தும் பாதுகாக்கவேண்டி ஏதாவது ஒரு தொழிலைச் செய்யவோ கல்விகற்கவோ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம். ஒட்டுமொத்தத்தில் நெருக்கடிகள் நிறைந்த, பாதுகாப்பற்ற ஒரு பிரதேசத்தில் -யாழ்ப்பாணத்தில்- மக்களுடன் நிற்கவேண்டும், அதன் மூலமே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற முடிவானது தவறானதே. மக்களுடன் நிற்பதால் மட்டுமே, வெறும் சந்திப்புக்களும் விவாதங்களும் நடத்துவதால் மட்டுமே ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கி விட முடியாது என்பதை செயற்குழு உறுப்பினர்கள் புரிந்த கொள்ளத் தவறியிருந்தனர்.

யாழ்ப்பாணத்துக்குள் எமது சந்திப்புக்களை நிகழ்த்துவது கூட எந்த நேரத்திலும் இந்தியப் படையினரால் நாம் கைது செய்யப்படவோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளால் அழித்தொழிக்கப்படவோ முடியும் என்ற நிலையே காணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே தென்னிலங்கைகைக்கோ அல்லது இந்தியாவிற்கோ எமது முழுநேர உறுப்பினர்கள் சிலரை தற்காலிகமாக நகர்த்தி எமது செயற்பாடுகளை அங்கிருந்து முன்னெடுத்துச் சென்றிருக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியப்படையினருக்கெதிராக மறைந்திருந்து தாக்கும் நடவடிக்கைளை தீவிரப்படுத்தத் தொடங்கியது மட்டுமல்லாது இந்தியப்படையினருடன் ஒத்துழைப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள், "துரோகக் குழுக்கள்" என தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டவர்கள் அனைவரையும் தமது துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் அங்கம் வகித்திருந்து பின் தமது சொந்தவாழ்வுக்குத் திரும்பிவிட்டிருந்த, அகதி என்ற பெயரில் அந்நிய நாடுகளுக்கு செல்ல வசதியற்ற அல்லது இலங்கையை விட்டு வெளியேற விரும்பாத பலர் "தகவல் கொடுப்பவர்கள்", "துரோகிகள்" என்று முத்திரை குத்தப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்தியப் படையினருக்கெதிராக மறைந்திருந்து தாக்கும் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முழுவீச்சில் இடம்பெற்றதோ இல்லையோ "துரோகி ஒழிப்பு" நடவடிக்கை முன்னெப்போதையும் விட முழுவீச்சிலும் தீவிரமாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.

வடக்கு-கிழக்கில் இந்தியப்படையினருக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டதுமல்லாமல் "துரோகிகள் ஒழிப்பு" இந்தியப்படையினருடன் "ஒத்துழைப்போர் ஒழிப்பு" என்ற போர்வையில் தமது கருத்துக்கு முரணானவர்கள் அனைவரையும் கொன்றொழித்துக் கொண்டிருந்த அதேவேளை தென்னிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்த செயற்பாடுகளில் ஜனதா விமுக்திப் பெரமுன (JVP) இறங்கியிருந்தது. இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு ஆதரவானவர்கள், ஜனதா விமுக்திப் பெரமுனவின் கருத்துடன் உடன்பாடு காணாதவர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து தமிழ்மக்களின் உரிமைகள் குறித்துப் பேசுபவர்கள், இடதுசாரிகள், இலங்கை அரசபடைகளைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் என தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்கள் அனைவரையும் படுகொலை செய்துகொண்டிருந்ததுடன் "சமூகவிரோதிகள் ஒழிப்பு", "மின்கம்பத் தண்டனைகள்" என ஜனதா விமுக்திப் பெரமுனவினால் தேசபக்தியின் பெயரால் நடந்தேறிக் கொண்டிருந்தன.

சிறிலங்கா மக்கள் கட்சியின் தலைவரும், சிங்கள திரைப்பட நடிகரும், இடதுசாரி அரசியல்வாதியும், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ச்சியான குரல்கொடுத்து வந்தவருமான கோவிலகே அன்ரன் விஜய குமாரணதுங்க ஜனதா விமுக்திப் பெரமுனவினரால் படுகொலை செய்யப்பட்டார். இலங்கையில் இன ஜக்கியத்தை வலியுறுத்தி வந்த விஜய குமாரணதுங்க, இன ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் காண்பதற்கு வடபகுதிக்கு விஜயம் செய்திருந்ததோடு, சிங்கள–தமிழ் முற்போக்குச் சக்திகள், சிங்கள-தமிழ்மக்கள் இனவாதத்திற்கெதிராக ஜக்கியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்திருந்தார்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கு எதிராக 1982 ஜனாதிபதி தேர்தலில் ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு பகிரங்கமாக விஜய குமாரணதுங்க ஆதரவு தெரிவித்த காரணத்தால் ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் "நக்சலைட்" என்ற "சந்தேகத்தில்" எதுவித குற்றமும் சுமத்தப்படாமல் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

சிங்கள-தமிழ் மக்களினது ஜக்கியம் தமது இருப்புக்கும் இனவாத அரசியலுக்கும் சாவுமணி அடித்துவிடும் என சரியாகவே கணக்குப் போட்டுவிட்டிருந்த இனவாத இயக்கமான ஜனதா விமுக்திப் பெரமுனவினதும் ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான இனவாத ஜக்கிய தேசியக கட்சியினதும் (UNP) கூட்டுச் சதிக்கு சிங்கள–தமிழ் மக்களின் ஒற்றுமையையும், சமாதானத்தையும் தனது இலட்சியமாக வரித்துக்கொண்ட சிறீலங்கா மக்கள் கட்சியின் (SLMP) தலைவர் விஜய குமாரணதுங்க பலியானார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து சிறையில் இருந்த அரசியற்கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்படிருந்த சலீம், சத்தியமூர்த்தி ஆகியோருடன் ஏற்கனவே வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுதலையாகி வந்திருந்த வவுனியா சண்முகலிங்கம் ஆகியோரைத் தொடர்பு கொண்டு எம்முடன் இணைந்து செயற்படுமாறு கேட்டிருந்தோம்.

சலீம் எம்முடன் இணைத்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்ததோடு மூதூரைச் சேர்ந்த அவரது நண்பரான சசி என்பவரும் கூட எம்முடன் இணைந்து செயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சத்தியமூர்த்தி எம்முடன் நட்புறவைப் பேணி வந்தாரே தவிர "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வரவில்லை.

வவுனியா சண்முகலிங்கமும் கூட எம்முடன் இணைந்து செயற்பட முன்வராத போதும் எமக்குப் பல வழிகளிலும் உதவ முன் வந்திருந்தார். "தீப்பொறி"க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைக்கும் பணியில் பெரும் பகுதியை டொமினிக் முடித்திருந்தார்.

இக்காலப் பகுதியில் சலீமின் நண்பரான சசி மூதூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து எம்முடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வந்திருந்தார். தீப்பொறிக் குழுவுடன் முழுநேரமாகச் செயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்ட சசி எமது தோழர் சுரேன் வீட்டில் தங்கியிருந்து செயற்குழு உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து பேசினார்.

செயற்குழு உறுப்பினர்களின் போராட்டம் குறித்த கருத்துக்கள் மற்றும் "தீப்பொறி"க் குழுவின் நிலைப்பாடு, வேலைத்திட்டம் போன்றன குறித்தும் சசி அறிந்து கொண்டார். செயற்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் முடிவில் தேசிய இனப் பிரச்சனை குறித்து செயற்குழு அங்கத்தவர்களில் பெரும்பானையானவர்களின் கருத்துக்களில் தனக்கு இருக்கும் உடன்பாடின்மையை வெளியிட்டிருந்ததுடன் தேசிய இனப் பிரச்சனைக்கு தமிழீழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்பதையும் சசி தெளிவாகக் கூறியிருந்தார்.

இதனால் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து தீப்பொறிக் குழு முன்வைக்கும் திட்டத்தைப் பொறுத்தே எம்முடன் இணைந்து செயற்படுவது குறித்து தீர்மானிக்க முடியும் என சசி தெரிவித்திருந்தார். சசியினுடைய கருத்துக்கள் செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டதுடன் தேசிய இனப் பிரச்சனை குறித்த நிலைப்பாட்டை எழுத்து மூலமாகத் தீப்பொறிக் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு சசி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

(தொடரும்)

11/5/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51

52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53

54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 54

55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 55