Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 55

இந்தியப் படைகளுக்கெதிரான புலிகளின் போராட்டம் குறித்து "தீப்பொறி" செயற்குழுவுக்குள் விவாதம்

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்திய மேலாதிக்க நலன்களைக் கொண்ட, எம்மீது திணிக்கப்பட்டதொன்று என்ற கருத்தைக் கொண்டிருந்த நாம், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் குறித்த விவாதத்தை ஆரம்பித்திருந்தோம்.

இந்தியப்படை தமிழ்மக்களைக் கொன்றுகுவித்த ஒரு படையாக மாறிவிட்டதால் இந்தியப்படையை ஒரு ஆக்கிரமிப்புப் படையாகவே நோக்கவேண்டும் என்று கருத்து "தீப்பொறி" செயற்குழுவுக்குள் காணப்பட்டது.

இந்தியப் படைகளுக்கெதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிரான தேசியத் தன்மை கொண்டதொன்றாகப் நோக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் செயற்குழுவுக்குள் முன்வைக்கப்பட்டன. இந்தியப்படைகளுக்கெதிராக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அல்லது ஜக்கிய முன்னணி அமைத்துப் போராட வேண்டும் என்ற கருத்தும் கூட "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் பலமாக நிலவியது.

ஆனால் இலங்கையின் இனப்பிரச்சனையையும், அதிலிருந்து தோற்றம் பெற்ற ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்களையும், இலங்கையில் (குறிப்பாக, வடக்கு கிழக்கில்) உள்நாட்டுப் போர் தோன்றியதால் ஏற்பட்ட சூழலில் இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையையும், இந்திய அமைதிப்படையின் வருகையையும் உற்றுநோக்குவோமேயானால் இந்தியப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான போர் குறித்த மதிப்பீட்டை செய்வதற்கும், அது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கும் உதவியாக அமையும்.

இலங்கையின் இனப்பிரச்சனை 1983ல் கூர்மையடைந்து புதிய பரிமாணத்தை எட்டியிருந்தபோது அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களும் இந்தியாவின் அரவணைப்பிலும், இந்தியாவால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சி, ஆயுதங்கள், நிதியுதவியிலும் வளர்ச்சி பெற்றிருந்ததை நாம் கண்டுகொண்டிருந்தோம். இந்த வளர்ச்சியானது இலங்கை அரசபடைகளுக்கும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குமிடையிலான ஒரு உள்நாட்டுப் போரை ஆரம்பித்து விட்டிருந்தது.

இத்தகையதொரு நிலையில் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் தோன்றிய முரண்பாடுகளும், பிளவுகளும், அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிப்பதிலும் முடிவுற்றிருந்தது. அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் தடைசெய்து வடக்கு கிழக்கில் அழித்தொழித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் மேற்கொள்ளப்பட்ட "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாக பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.

"ஒபரேசன் லிபரேசன்" நடவடிக்கையால் விளைந்த பெரும் இழப்புக்களையும், பாரிய அழிவுகளையும் அப்பாவி மக்களே முகம் கொடுத்திருந்தனர். இத்தகையதொரு நிலையிலேயே "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" கைச்சாத்தானது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் இந்திய அமைதி காப்புப் படையினரின் இலங்கை வருகைக்குமான சூழ்நிலைகளை உருவாக்கியவர்களாக ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும், இந்தியாவின் முழுமையான அரவணைப்பிலும் ஆதரவிலும் தங்கிவளர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுமே அமைந்திருந்தன.

இந்நிலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கும், இந்திய படைக்குமெதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் போரானது வெளித்தோற்றத்துக்கு தேசியத் தன்மை கொண்டதாகக் தோன்றிய போதிலும் சாராம்சத்தில் வலதுசாரிப் போக்கும் ஏகாதிபத்தியசார்பும் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையின் நலன்களை மட்டுமே உள்ளடக்கியதொன்றாகக் காணப்பட்டது.

இந்தியப் படைகளுக்கெதிரான போரில் ஈடுபடுதல் என்ற ஒரு காரணம் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளை "தேசிய சக்திகள்" என்ற வகைக்குள் உட்படுத்தப் போதுமானது ஒன்றல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியப் படையுடன் என்ன நோக்கத்திற்காகப் போராடுகின்றனர்? எந்த மக்களின் நலன்களுக்காகப் போராடுகின்றனர்? அவர்களது போராட்டம் உண்மையிலேயே ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்தும் ஒன்றாக காணப்படுகின்றதா? என்பதைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் அதன் உள்ளடக்கத்தில் தேசியத் தன்மை கொண்டதாக அமைந்துள்ளதா என்பதும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகளை "தேசிய சக்திகள்" என இனங்காண்பதும் சரி அமைய வேண்டும்.

சக ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும், அரசியல் கட்சிகளைகளையும் அரசியல் அரங்கில் அங்கீகரிக்க மறுத்து பாசிசப் போக்குடன் தம்மை நிறுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், ஜனநாயக அரசியலையும், ஜனநாயக விழுமியங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாகத் தம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தியப் படையினருடன் போரில் ஈடுபட்டதானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வங்குரோத்துதனத்தையும் அதிலிருந்து தோற்றம் பெற்ற யதார்த்த நிலைமைகளைப் புரிந்துகொள்ள மறுத்தல் என்ற நிலையையுமே எடுத்துக் காட்டியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் அதன் உள்ளடக்கத்தில் என்றைக்குமே ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டதாகவோ அல்லது பரந்துபட்ட மக்கள் நலன் சார்ந்ததாகவோ இருக்கவில்லை. "தேசிய விடுதலைப் போராட்டம்", "தமிழ்த் தேசியம்", "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற கோசங்களை முன்வைத்த குறுந்தேசிய இனவெறிப் போராட்டமாகக் காணப்பட்டிருந்ததுடன் பாசிசத் தன்மை பொருந்திய போராட்டமாகவுமே இருந்தது.

 

ஈழவிடுதலைப் பேராட்டத்தில் தோன்றியிருந்த அனைத்து இயக்கங்களையும் தடைசெய்து வடக்கு கிழக்கில் அழித்தொழித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னான நாட்களில் கூட ஏனைய ஈழவிடுதலைப் போராட்டக் குழுக்களை கொன்றொழிப்பதை தொடர்ந்து கொண்டிருந்ததுடன் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதையும் மறுத்து தமது பாசிசப் போக்கை தொடர்ந்தனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னான காலகட்டத்தில் இந்தியப் படையினரிடமிருந்து தமக்கான பாதுகாப்பை எதிர்பார்த்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஏனைய ஈழவிடுதலைப் பேராட்டக்குழுக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததுடன் அவர்களைப் நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் குறிவைத்து படுகொலை செய்து கொண்டிருந்தனர். ஆயுதங்களிலும், சயனைட் வில்லைகளிலும் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ அல்லது மக்களில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ காணப்பட்டிருக்கவில்லை.

ஈழவிடுதலைப் போராட்டம் என்பது அரசியலற்ற, நெகிழ்ச்சித்தன்மையற்ற, யதார்த்த நிலைமைகளைக் கணக்கிலெடுக்காத தனிநபர் தலைமையால் வழிநடத்தப்படும் இராணுவத் தாக்குதல்களினால் மட்டுமே வெல்லப்பட முடியும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதி கொண்டிருந்தனர். இதன் அடிப்படையிலிருந்தே இந்தியப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இலஙகையின் இனப்பிரச்சனையை முழுமையாகத் தீர்த்து வைக்கும் ஒன்றெனக் கருதுவது தவறானதுதான். இவ்வொப்பந்தத்தில் பல குறைபாடுகள் - இந்திய மேலாதிக்க நலன்களை உள்ளடக்கியதான பல குறைபாடுகள் - இருக்கவே செய்தன.

"ஒரு உன்னதமான போரில் ஈடுபடுவதைவிடவும் ஒரு மோசமான சமாதானம் மேலானது" என்ற கூற்றானது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை புரிந்து கொள்ளப்பட முடியாததொன்றாகவே இருந்தது. யதார்த்த நிலையை கவனத்தில் கொண்டு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட அரசியல் வங்குரோத்துதனம் என்றைக்குமே அவர்களை அனுமதிக்கவில்லை.

தமது சொந்த மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை ஒரு போர்ச்சூழலுக்குள் வைத்திருக்கவே விரும்பினர். துப்பாக்கிகளிலும் சயனைட் வில்லைகளிலும் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் போர் மட்டுமே அனைத்துக்குமான தீர்வு எனக் கண்டனர். இதன் விளைவு தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தியப் படையினருக்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட "உன்னதமான போர்" ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும், இந்தியப் படையினரதும், அழிவுடன் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தியப் படையினருக்கெதிரான போரை இந்தியப்படைகளின் ஆக்கிரமிப்புக்கெதிரான போராகச் சித்தரிப்பதும், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேசிய சக்திகளாகக் காண முற்பட்டு அவர்களுடன் இணைந்து இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற கருத்து நிலைக்கு வருவதும் தவறானதொன்றாகும்.

இந்திய ஆக்கிரமிப்புப்படைகளுக்கெதிராக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட வேண்டும் என்பதற்கு ஆதரவாக இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடிய சியாங்கை சேக்குடன் மாசேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிசக் கட்சியின் "ஜக்கியம் போராட்டம், போராட்டம் ஜக்கியம்" என்ற கோசத்துடன் ஜக்கிய முன்னணி அமைத்துப் போராடியது ஒப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது உலகப் போரின் போது சீனாவில் நிலவிய நிலைமைகளிலிருந்து எமது போராட்ட நிலைமைகள் பெரிதும் மாறுபட்டதொன்றாக இருந்ததை நாம் காணத் தவறக் கூடாது. சீனக் கம்யூனிசக்கட்சியானது ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிரான போரின் போது மக்கள் மத்தியில் பலம் கொண்டதொரு கட்சியாகவும், செல்வாக்குமிக்கதொரு கட்சியாகவும் திகழ்ந்தது. அத்துடன் சீனக் கம்யூனிசக் கட்சி பலம்மிக்கதொரு இராணுவத்தைக் (செஞ்சேனை) கொண்டிருந்தது மட்டுமல்லாமல் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிரான சீனமக்களின் போராட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கக்கூடிய நிலையில் இருந்தது.

ஆனால் சீனப் பரட்சிகர அனுபவங்களுடன் ஒப்பிடக்கூடிய நிலையில் எமது நிலைமைகள் எதுவும் காணப்பட்டிருக்கவில்லை. அனைத்து முற்போக்கு சக்திகளையும், சிறிய அரசியற் குழுக்களையும் (NLFT, தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவை) தடைசெய்து, அதன் உறுப்பினர்களைப் படுகொலை செய்துகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் பாசிசமே வடிவாக உருவெடுத்திருந்தனர். ஜனநாயகத்திற்ககப் போராடுவதற்கென ஒரு அமைப்புத் தோன்றுவதைக் கண்ட மாத்திரத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை முளையிலேயே கிள்ளி எறிந்து கொண்டிருந்தனர்.

"தீப்பொறி"க் குழுவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நாம் கூட எண்ணிக்கையில் மிகவும் குறைந்த சிறிய குழுவாக இருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த நேரமும் ஆபத்தை எதிர்நோக்கிய வண்ணமிருந்தோம். எமது ஜனநாயகரீதியான செயற்பாடுகளுக்கு இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளே பெரும் தடைக்கல்லாக இருந்தார்களே தவிர இலங்கை அரசபடைகளோ அல்லது இந்தியப் படைகளோ அல்ல. நாம் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடுவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியவரும் பட்சத்தில் நாம் முழுமையாக அழிக்கப்படுவோம் என்பதையும் நன்கு அறிந்திருந்தோம். எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஜக்கியம் குறித்துச் சிந்திப்பது அல்லது பேசுவது நாம் தற்கொலை குறித்துச் சிந்திப்தற்கு அல்லது பேசுவதற்கு ஒப்பானதொன்றாகும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடனும், இந்தியப் படையின் இலங்கை வருகையுடனும் இலங்கையின் அரசியல் களம் வேகமாக மாற்றங்களைக் கண்டு கொண்டிருந்தது. "தீப்பொறி"க் குழுவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நாம் எந்தவித கொள்கைத்திட்டமோ வேலைத்திட்டமோ இன்றி செயற்பட்டுக் கொண்டிருந்ததால் எமக்கான கொள்கைத்திட்டம் மற்றும் வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்தோம். எம்மை அரசியல் ரீதியாக வளர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளை கொள்கை மற்றும் வேலைத் திட்டத்தை முன் வைப்பதற்கான செயற்பாட்டில் தீவிர கவனம் செலுத்துவது என செயற்குழு முடிவெடுத்தது. தீப்பொறிக் குழுவின் கொள்கை மற்றும் வேலைத் திட்டத்தை எழுத்துருவில் முன்வைக்கும் பணியை செய்வதற்கான பொறுப்பை டொமினிக்கிடம் செயற்குழு கையளித்தது.

"தீப்பொறி"க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை முன்வைப்பதை நோக்கிய பணியில் டொமினிக் இறங்கியிருந்தார். இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையிலான போரின் பின் இந்தியப் படையினரால் விடுவிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களான புளொட்(PLOTE), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆகியவை தமது செயலகங்களையும் முகாம்களையும் இந்தியப் படையினரின் பாதுகாப்புடன் அமைக்கத் தொடங்கியிருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இவ்வியக்கங்களின் செயற்பாடுகள் ஆரம்பமாகின. இந்தியப் படையினருடனான போரில் கடும் இழப்புக்களுடன் பின்வாங்கி வன்னிக் காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையோ தமது எதிர்கால நடவடிக்கை குறித்து திட்டங்களை வகுக்கத் தொடங்கியிருந்தது.

(தொடரும்)

4/5/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51

52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53

54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 54