தோழர் ரயாகரன், சில நாட்களுக்கு முன் மேற்குநாடுகளில், விளிம்புநிலை மனிதர்களுக்கானதும், தற்காலிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டோருக்குமான சமூகநல உதவிகளை, எவ்வாறு தமது அறிவை பாவித்து புலம்பெயர் பிரமுகர். கூட்டங்கள் தமது சீவியத்தை போக்குகின்றன என எழுதியிருந்தார்.
அதேநேரம் என்னுடைய முகப்புத்தக நண்பர் ஒருவர் தனது பக்கத்தில், இலங்கை அரசியலில், உலக தொழிலாளர் தினத்தின் இன்றைய நிலை பற்றி மூன்று, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
அப்பதிவுகளின் ஒரே வித்தியாசம், மூன்றும் இலங்கை அரசியலின் செல்வாக்கு செலுத்தும் மூன்று வெவ்வேறு அணியினரை சுட்டியிருந்தது. அவர் வெளியிட்டிருந்த பதிவுகள் இதோ :
1. இலங்கை அரசியலில் ஈடுபடும் UNP, TNA, EPDPD, SLFP, PLOT, பிள்ளையான் கட்சி, கொலைகாரர், கொள்ளைகாரர், ஆள்கடத்தல்காரர், இனவாதிகள், சாதிவெறியர்கள், இனப்படுகொலை செய்தோர், பாசிசவாதிகள், பெண்களையும் சிறுவர்களையும் வன்கொடுமை செய்வோர்.... என அனைத்து வகை சமூகவிரோதிகளும், ஒடுக்கப்படும் மக்களின் செங்குருதியின் நினைவேந்தும் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாட அழைப்பு விடுகின்றார்கள் ....... !?
2.இலங்கை தமிழ் மக்கள் அவலவாழ்க்கை வாழ்கின்றனர் .... பேரினவாதம் முஸ்லீம் சகோதரங்களின் மத ஸ்தலங்களை அழிக்கின்றது....சிங்கள மக்களின் குரல்களும் பாசிசத்தால் நசுக்கப்படுகிறது. இதற்கெதிராக குரல்கொடுக்க வக்கில்லாத மூன்றாம்தர தமிழ் குறுந்தேசிய அரசியல்வாதிகளும், அரச அடிவருடிகளும், கொலைகார மக்கள் துரோகிகளும், உலக தொழிலாளர்களின் விடுதலைக்கு குரல்கொடுக்க போகிறார்களாம் மே முதல் திகதியன்று ... !?
3. புலம்பெயர் தேசங்களில், ஊரான் உழைப்பிலையும், அரச பிச்சை சம்பளத்திலும் வயிறு வளர்க்கும் சோம்போறி போலி இடதுசாரிகளும், பெண் நொடுக்கும் பிரபலங்களும், பிரமுக பித்தலாட்டகாரன்களும் இப்போதே தேடுகிறார்கள் இணையத்தில் ... மே முதல் திகதி பற்றிய கட்டுரைகளையும், வசனங்களையும் .... தமது பெயரில் பிரசுரித்து, புத்திசீ என தம்மை பிரபலப்படுத்த....
உண்மையான ... உணர்வுமிக்க நாளாக உலக தொழிலாளர்- ஒடுக்கப்பட்ட மக்களில் நாளான மே1 மறுபடியும் திகழ சமூக கருசனை உள்ளார் இணைந்து செயற்பட வேண்டும்...!
நண்பர் முறையே இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் , புலிப்பினாமிகளும் அவர்களின் அடிவருடிகள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் அரசியல் செய்யும் பிரமுகர்கள், என மூன்று வகையினர் உலக தொழிலாளர் தினத்தை தமது நலனுக்காக தவறாக பாவிப்பதாக தனது உள்ளக்கிடக்கையை கொட்டியுள்ளார்.
இதில் ஒரு கொசுறு தகவல் என்னவென்றால், இவரின் மூன்று குறிப்புக்களுக்கும் ஒருவரும் LIKE போடவில்லை. காரணம் ஒன்றில், நண்பரின் முகபுத்தக நண்பர்கள் அனைவரையும் இவரின் குறிப்புகள் தாக்கி இருக்கலாம், அல்லது இவருக்கு பிரமுகர்கள் ஒருவரும் நண்பர்களாக இல்லாதிருக்கலாம்.
இது ஒரு பக்கமிருக்க, 27/04 வெளிவந்த செய்தியில், ஐக்கிய தேசிய கட்சின் பிரமுகரும், புலிகளின் நண்பரும் அவர்களாலேயே கொலை செய்யப்படவருமான பிரேமதாசாவின் மகனுமான சஜித் பிரேமதாச சொல்கிறார்: "தந்தையை படுகொலை செய்த பிரிவினைவாத தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை" என்று.
சஜித் பிரேமதாசாவின் கருத்து ஒன்று போதும், இலங்கையில் உலக தொழிலாளர் தினம் எவ்வாறு இனவாதிகளாலும், ஒடுக்குமுறைவாதிகளாலும் தவறாக பாவிக்கப்படுகிறதென தெரிந்து கொள்ள.
இன்று இலங்கையில் முக்கிய முரண்பாடாக இருப்பது இன முரண்பாடு. இன முரண்பாட்டுக்கு பெரும் பலியாவோர் தமிழ் மக்கள். ஆனால் உலக தொழிலாளர்- ஒடுக்கப்பட்ட மக்களின் நாளான மே முதல் நாளை அந்த ஒடுக்கப்பட்ட மக்களுடன் கொண்டாட மாட்டாராம் இன வெறியன் சஜித். இவனை போன்றவர்கள் அந்த நாளை கொண்டாடுவதே அந்த நாளுக்கு இழுக்கு என்பது ஒரு புறமிருக்க, இவனை போன்ற முதலாளித்துவ - இனவாதிகள் இப்போது இந்த நாளை கொண்டாடுவது, இலங்கைவாழ் சிங்கள தொழிலாளிகளை தமது வாக்கு வங்கியாக தொடர்ந்தும் வைத்திருப்பதற்கும், தமது இனவாத அரசியலுக்கு மக்களை அடிமையாக வைத்திருப்பதற்குமே!
புலிகள் உயிருடன் இருந்தபோது, ஒரு பக்கம் மக்களுக்காக போராடிய சக்திகள் அனைவரையும் தம் கொடுஞ்சிறையில் தள்ளி கொலை செய்தபடி தமது பாசிசத்தை முன் தள்ளியபடி, மே முதல் திகதியை கொண்டாடினார்கள்.
புலம் பெயர் தேசங்களில் இருந்து வரும் செய்திகளின்படி, புலிப்பினாமிகள் இந்த வருடமும் தமது பாசிச குறுந்தேசிய அரசியலை முன்னெடுக்க, மே முதல் நாளில் புலிக்கொடிகள், பதாதைகளுடன் ஊர்வலம் போகப்போவதாக. அதுவும் மூன்று பிரிவுகளாக கொண்டாட போகிறார்களாம். சிங்கள இனவாத பாசிஸ்ட்களை போல இந்த குறுந்தேசிய தமிழ் பாசிஸ்ட்களுக்கும், தமது அரசியலை நிலை நிறுத்த மக்களை ஏமாற்ற வேண்டியுள்ளது. அதற்காகவே உலக தொளிலாளர் தினம் இந்த பினாமிகளால் ஈனப்படுத்தப்படுகிறது.
அத்துடன் இப்படியான நாட்களை பாவித்து கொடி, பூ, மட்டின் ரோல்ஸ், தேநீர் விற்றுத்தான் தமது கஜானாவை நிரப்ப முடியும் இந்த பினாமிகளுக்கு.
இவ்வாறு உழைக்கும் மக்களினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் எதிரிகள் அந்த மக்களின் போராட்ட முஸ்தீபு நாளை அவமானம் செய்து, திசை திருப்புவதை மக்கள் நலம் சார்ந்த சக்திகள் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த வருடம் யாழ்ப்பாணத்திலும், இலங்கையில் சில பகுதிகளிலும் புதிய ஜனநாயக (மா- லெ) கட்சியால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட வேண்டும். மக்கள் நலம் சார்ந்த அரசியல் சக்திகளை வளர்ப்பதன் மூலமே, நாம் அனைத்து ஒடுக்குமுறையையும் ஒழிக்க முடியும் . முற்போக்கு அரசியலின் வளர்ச்சியால் மட்டுமே பிரமுக அரசியலையும், மற்றும் அனைத்து ஒட்டுண்ணி அரசியலையும் இல்லாதொழிக்க முடியும்.