Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54

மக்கள் நலன்களை நிராகரித்த புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: "ஒப்பரேசன் பவான்"

பாலாலி முகாமில் சயனைட் உட்கொண்டு இறந்த புலிகள்பலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரினதும் மரணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கும், இந்திய அமைதி காக்கும் படைக்கும் எதிரான போர்ப் பிரச்சாரமாக மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர்.

குமரப்பா, புலேந்திரன் உட்பட இறந்த 12 பேரினது புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளுடனும், கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கிகளில் சோக இசையுடனும் அவர்களது மரணச் சடங்குகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் எதிரான "மக்கள் எழுச்சி" நாளாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பத்திரிகைகள், "நிதர்சனம்" ஒளிபரப்பு நிலையம் போன்றவை இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்கும், இந்திய அமைதி காக்கும் படைக்கும் எதிராக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தன.

பலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட 12 பேரினதும் உடல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழு அளவிலான மரியாதையுடன் தீருவிலில் (வல்வெட்டித்துறை) தீயுடன் சங்கமமாகிக் கொண்டிருந்தது. சாகும்வரை உண்ணாவிரதப் பேராட்டத்தில் உயிரிழந்த திலீபனின் இறப்பாலும், குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் இறப்பாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தாலும் உணர்ச்சியூட்டப்பட்ட மக்கள் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கெதிராகவும் இலங்கை அரசபடைகளுக்கெதிராகவும் செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏவிவிடப்பட்டனர்.

இந்திய அமைதி காக்கும் படையினரின் வாகனங்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல்களும், இலங்கைப் பொலிஸ் நிலையங்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல் சம்பவங்களும் தீவைப்புச் சம்பவங்களும் கூட இடம்பெறத் தொடங்கின. இதே வேளை வடமராட்சியில் இலங்கை அரச படைகளைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன் கைது செய்யப்பட்டிருந்த எட்டு இலங்கை இராணுவத்தினரை சுட்டுக் கொலை செய்து யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் பார்வைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர். அப்பாவிச் சிங்கள மக்களும் நிராயுதபாணிகளாக நடமாடிய இலங்கை அரச படைகளைச் சேர்ந்தவர்களும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலைக்கு இலக்கானார்கள்.

இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவில் என்றுமில்லாதளவுக்கு விரிசலைக் காணமுடிந்தது. தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் கையளிப்பதாகக் கூறி தமது ஆயுதங்களை இந்திய அமைதி காக்கும் படையிடம் கையளிப்பதை ஆரம்பித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தமது உறுப்பினர்களையே இந்திய அமைதி காக்கும் படையால் பாதுகாக்க முடியாமல் இருப்பதாக இந்தியா மீது குற்றம் சுமத்தினர்.

இந்திய அமைதிகாக்கும் படை மீதும், இலங்கைப் பொலிசார் மீதும், அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தூண்டிவிடப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவை தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை நோக்கி இட்டுச் சென்றது. இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் கால்பதித்த ஆரம்பகாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்குமிடையில் நிலவிய "தேனிலவு" முடிவுக்கு வந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்திய அமைதிகாக்கும் படை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், இந்திய அமைதி காக்கும் படையினருடனான முரண்பாடுகளும், வன்முறைத் தாக்குதல் சம்பவங்களும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் எந்நேரமும் போர் மூழலாம் என்றளவுக்கு ஒரு பதட்ட நிலையை உருவாக்கிவிட்டிருந்தது.

குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்கள் மட்டும் தான் தீருவிலில் (வல்வெட்டித்துறை) தீயுடன் சங்கமமாகியதை மக்கள் அனைவரும் கண்ணுற்றிருந்தனர். ஆனால் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேருடன் இந்திய-இலங்கை ஒப்பந்தமும் கூடவே தமிழீழ விடுதலைப் புலிகளால் தீயுடன் சங்கமிக்க வைக்கப்பட்டுவிட்டதை மக்கள் அறிந்திருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும், அவர்களது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கெதிரான பிரச்சாரங்களையும், இந்திய அமைதிகாக்கும் படையினர் மீதானதும், இலங்கைப் பொலிசார் மீதானதும், அப்பாவிச் சிங்கள மக்கள் மீதானதுமான வன்முறைகளையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவும், அச்சுறுத்தலாகவும் கருதிய இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த "ஈழமுரசு", "முரசொலி" ஆகிய பத்திரிகைகள் இந்திய அமைதிகாக்கும் படையால் சீல் வைக்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்பு நிலையமான "நிதர்சனம்" செயலிழக்க வைக்கப்பட்டது. இந்திய அமைதி காப்புப் படையினரால் யாழ்ப்பாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ழுழுஅளவிலான யுத்தத்தை இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பித்து வைத்தது.

இலங்கையின் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசால் மேற்கொள்ளப்பட்டுவந்த "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கையை தனது "ஒப்பரேசன் பூமாலை" என்ற "மனிதாபிமான" நடவடிக்கையால் வானிலிருந்து உணவுப் பொதிகளை வீசியதன் மூலம் தமிழ் மக்களால் ஆபத்பாண்டவனாக காணப்பட்ட இந்தியாவும், இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டவென வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையும் தமிழ் மக்களை அச்சமூட்டும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கின. இந்திய விமானப்படை விமானங்களினதும் ஆயுதம் தாங்கிய உலங்குவானூர்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான "ஒப்பரேசன் பவான் (காற்று)" என்ற இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.

இந்தியப் படையினரின் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த தவறான கணிப்பீடும், நன்கு திட்டமிடப்படாத இராணுவ முனைப்புகளும் போரின் ஆரம்பத்தில் பெருமளவிலான இந்தியப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் இறப்பதில் முடிவடைந்திருந்தது. போரின் முதல்நாள் அன்றே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்வதற்கு அல்லது கொலைசெய்வதற்கு இந்தியப் படையினரால் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி பிரம்படியில் (கொக்குவில்) தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு பிரபாகரன் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இருந்ததுடன் அப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் பல அப்பாவிப் பொதுமக்களும் இந்தியப் படையினரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பகுதியில் உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய சீக்கிய அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களைச் சுற்றிவளைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் வந்திறங்கிய அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் சுட்டுக்கொலை செய்திருந்தனர்.

 பரசூட்டில் தரையிறக்கப்படும் இந்திய இராணுவப் படை - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

இதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களுக்காகவே தாம் போரில் ஈடுபடுவதாகக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியப் படையினரும் தமிழ்மக்கள் மீது அவர்கள் விரும்பியிராத ஒரு போரைத் திணித்துவிட்டிருந்தனர். ஆனால் இந்தப் போரானது தமிழ் மக்களின் நலன்களிலிருந்தல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் நலன்களுக்கும் இந்தியாவின் நலன்களுக்குமானதொன்றாகவே காணப்பட்டிருந்தது.

முகாம்களுக்குள் இலங்கை இராணுவம் முடங்கிக் கிடந்த அதே வேளை, இந்தியப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்துச் சென்றது. போர் ஏற்படுத்திக் கொண்டிருந்த அழிவுகளையும் இழப்புகளையும் அப்பாவிப் பொதுமக்களே சுமந்து கொண்டிருந்தனர். இந்தியப் படையினரின் யாழ்ப்பாண வைத்தியசாலை மீதான தாக்குதலும், மக்கள் அகதிகளாத் தஞ்சமடைந்திருந்த பாடசாலைகள், வணக்கத்தலங்கள் மீதான தாக்குதலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலிகொள்ளக் காரணமாய் அமைந்தது.

உரும்பராயில் நடந்த உக்கிரமான போரில் இந்திய படைகளின் இழப்பு

 

யாழ்ப்பாணத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் மாற்றமடைந்து கொண்டிருந்த சூழ்நிலைகள் குறித்து தொடர்ச்சியான விவாதங்களை நடத்திக் கொண்டிருந்த நாம், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஆரம்பித்துவிட்டிருந்த போரிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலிருந்து தென்மராட்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்களுடன் இணைந்து தென்மராட்சிக்குச் சென்றோம். "தீப்பொறி"க் குழுவின் ஆரம்பகாலங்களில் எம்முடன் இணைந்து செயற்பட்டு பின்பு எம்மில் இருந்து விலகியிருந்த மைக்கல் நாம் தங்குவதற்காக வீடொன்றினை தந்துதவியிருந்தார்.

இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில் உக்கிரமடையத் தொடங்கியிருந்ததுடன் இந்தியப் படையினர் யாழ்ப்பாண நகரின் பெரும்பகுதி இடங்களை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தனர். இதன் வெளிப்பாடு இந்தியப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தென்மராட்சிப் பகுதிக்கும் விரிவடையத் தொடங்கியது. இந்திய விமானப்படையின் விமானங்கள், ஆயுதம் தாங்கிய உலங்கு வானூர்திகள் சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் சரமாரியான தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தன. இத்தாக்குதலால் பல பொதுமக்கள் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணப் பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த இந்தியப் படையினர் இடம்பெயர்ந்து சென்ற அனைத்து மக்களையும் யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தென்மராட்சியில் அகதிகளாகத் தங்கியிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கி சென்று கொண்டிருந்த மக்களுடன் இணைந்து நாமும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றோம்.

போரின் கொடூரத்தையும், கோரத்தையும் வழிநெடுகிலும் போரினால் ஏற்பட்ட அழிவுகள் எடுத்துக் காட்டிய வண்ணம் இருந்தன. திரும்பும் இடமெல்லாம் இந்தியப் படையினரும் அவர்களது முகாம்களுமே காணப்பட்டன. இந்தியப் படையினர் கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னிக் காடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பெரும் பகுதிகள் இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. இலங்கை இராணுவம் போலல்லாது இந்தியப் படையினர் தமது இராணுவ முகாம்களை யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிராமங்களில் அமைத்திருந்தனர்.

இந்திய அரசு "ஒப்பரேசன் பூமாலை" என்ற நடவடிக்கை மூலம் "மனிதாபிமான" உதவிகளை வானிலிருந்து வீசிய போது ஆர்ப்பரித்த மக்கள், இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்த போது அவர்களைக் கையசைத்து வரவேற்ற மக்கள், இந்திய அமைதி காக்கும் படையின் வருகை இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்த்திருந்த மக்கள் இந்தியப் படையினரால் தாம் சிறைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணரத் தலைப்பட்டதுடன் இலங்கையில் அமைதியும் சமாதானமும் இன்னமும் எட்டாக் கனியாகவே இருப்பதைக் கண்டனர்.

போரினால் ஏற்பட்ட அழிவுகளையும் இழப்புக்களையும் சுமந்து கொண்டிருந்த மக்கள் ஒரு "புதிய" அத்தியாயத்துக்குள் - இலங்கை இராணுவத்தினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ ஆதிக்கம் செலுத்தாத ஒரு வாழ்வுக்குள் - சென்று கொண்டிருந்தனர். ஊரடங்குச் சட்டங்கள், வீதிச் சோதனைகள், கிராமங்களைச் சுற்றிவளைத்துத் தேடுதல் என இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

தென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த நாம், எமது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

இந்தியப் படையினரின் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளுக்கும், வீதிரோந்து நடவடிக்கைகளுக்கும் மத்தியில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டியிருந்ததுடன் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்த டொமினிக், ரகுமான் ஜான் உட்பட நானும் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களைத் தேட வேண்டியிருந்தது. டொமினிக், ரகுமான் ஜான் ஆகியோர் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த சுரேன், தேவன், ரகு, விஜயன், கரோலின், சண்முகநாதன், தர்மலிங்கம் ஆகியோரின் வீடுகளிலும் எமது ஆதரவாளர்களான யுவி, லிங்கம், தயாளன் ஆகியோரின் வீடுகளிலும் தலைமறைவாகத் தங்கியிருந்து "தீப்பொறி"ச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான "ஒப்பரேசன் பவான்" என்ற இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியான இந்தியப் படையினரின் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளுக்கும், வீதிரோந்து நடவடிக்கைகளுக்கும் மத்தியில் எனது வீட்டில் இருந்துகொண்டே "தீப்பொறி"ச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டிராத நிலையில், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பமாகியிருந்தது. இப்பொழுதோ இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் குறித்தும் இப்போரில் இந்தியப் படையினரையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நாம் எப்படி நோக்குவது என்பது குறித்தும் பேசுவதற்கென "தீப்பொறி"ச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

(தொடரும்)

27/04/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51

52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 53