விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது என்பதை 2006இல் போர் மீண்டும் தொடங்கி ஓராண்டிற்குள் பலர் விளங்கிக் கொண்டனர். எனினும் எல்லாராலும் எண்ணங்களை வெளிவெளியாகக் கூற இயலவில்லை. அக் கருத்தை முன்வைப்பது விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் என்பது சிலருடைய காரணமாயிருந்தது. அது அரசாங்கத்தின் போர் முனைப்பை ஊக்குவிக்கும் என்பது வேறு சிலருடைய கவலையாயிருந்தது.
எனினும், விடுதலைப் புலிகள் தோல்விக்குப் பின் தோல்வியைச் சந்திக்கத் தொடங்கிய 2006ன் பிற்பகுதியை அடுத்தும், புலிகள் வென்றுகொண்டே இருப்பதாகச் சொன்னவர்கள் விடுதலைப் புலிகளின் இறுதிக்கட்டம் வரை அதே கதையையே சொல்லி வந்தார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்கள் என்ன எதிர்பார்ப்பில் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து முல்லைத்தீவுக்குப் பின் வாங்கினார்கள் என்பதற்கு ஒற்றை விளக்கம் இருக்குமென நான் நம்பவில்லை. ஆனால் அவர்களைத் தமது கொலைக் களத்திற்கும் முட்கம்பிச் சிறைவாழ்வுக்கும் இட்டுச் சென்ற குற்றத்தில் விடுதலைப் புலிகளினளவுக்கு புலிகளுடைய ஆதரவாளர்களுக்கும் புலிகளை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களுக்கும் பெரும் பங்குண்டு.
விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் பற்றிக் காட்டிய அக்கறையீனத்தைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, புலிகளைக் கண்மூடித்தனமாக எதிர்த்தோர், புலிகளின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து ஒரே காரணத்திற்காக, அரசாங்கத்தால் அம் மக்களுக்கு நேர்ந்த துன்பங்களையும் அழிவுகளையும் பற்றி மிக அசட்டையாகவே இருந்தனர் என்பதையும் மறுக்க இயலாது.
எனவே, போரின் இறுதியாண்டின் போது, புலிகளும் அரசாங்கமும் புலிகளின் ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பாளர்களும் மக்களுடைய நலன் களைப் பற்றி எதுவிதமான அக்கறையையும் காட்டியதாகக் கூற இடம் இல்லை. போர் முடிந்த பின்பிருந்து வெளிப்படுத்தப்பட்டு வருகிற அக்கறை களும் அரசியற் செயற்பாடுகளும் அதை உறுதிப்படுத்துகின்றன. இன்றும், இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க் குற்றங்களை விசாரிப்பதைப் பற்றிய தீவிர நிலைப்பாடுகள் அனைத்துமே அரசாங்கத்தைப் பழி வாங்குவதையோ விடுதலைப் புலிகளைப் பழி தீர்ப்பதையோ பற்றிக் கவனங் காட்டுமளவுக்குப் போராற் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய எவ்வித அக்கறையையுங் காட்டுவதாகக் கூற இயலாது.
இவற்றிடையே, இன்னமும் கவனத்திற்குரிய உள்ள விடயம் ஒன்றுள்ளது. 1987 முதல் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி வரை, விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே தமிழ்த் தேசியத்தின் அரசியற் பரப்பில் விவாதங்கள் பொதுவாக நிகழ்ந்து வந்துள்ளன என்பதுடன் இன்றும் அதே போக்கையே காண முடிகிறது. இப்போக்கு புலம் பெயர்ந்தோரிடையே வலுவாகவும் வெளிவெளியாகவும் காணப்படும் அதே வேளை, இலங்கையில் அது மறைமுகமாகத் தொடருகிறது.
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழக் கோரிக்கையுடன் சமன்படுத்துகிற தன்மை தமிழீழப் பிரகடனத்துடன் தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியுடன் வலுப்பட்டது. என்றைக்கு விடுதலைப் புலிகள் தம்மையே ஆயதப் போராட்டத்தின் தலையாய சக்தியாக நிலை நிறுத்தினரோ அன்று முதல் அச் சமன்பாடு விடுதலைப் புலிகளை விடுதலைப் போராட்டத்துடன் சமப்படுத்துகிற திசையில் நகரத் தொடங்கிவிட்டது. அதை இயலுமாக்குவதில் விடுதலைப் புலிகளின் வன் முறை அரசியலும் சனநாயக விரோதச் செயற்பாடுகளும் முக்கியமான பங்கு வகித்தன என்பதில் ஐயமில்லை. அதே அளவுக்கு இந்திய, இலங்கை அரசாங்கங்களைச் சார்ந்து பிற போராளிக் குழுக்களின் பலவும் செயற் பட்டமையும் விடுதலைப் புலிகளை முக்கியப்படுத்த உதவின.
மேற்கூறிய நிகழ்வுகளில் எதுவுமே தமிழ் மக்களின் விடுதலைக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கவில்லை என்பது இப்போது பலருக்கும் தெளிவாகி இருக்க வேண்டும். அந்த ஆபத்தை உணர்ந்தவர்கள் வாய் திறக்க இயலாத விதமாகப் பலவலாறான நெருக்குவாரங்கள் இருந்து வந்துள்ளன. அதைப் பற்றி எவரும் வாய்திறக்கும் போதெல்லாம் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்கிற விதமாக முத்திரை குத்திக் கருத்துக்களை முடக்கும் முயற்சிகளை நாம் பல சூழல்களிலும் கண்டுள்ளோம்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்பும், புலிகளையே மையப்படுத்திக், கருத்துக்களையும் அவற்றுக்குரியயோரையும் புலிகளை ஆதரித்தோர் அல்லது எதிர்த்தோர் என்றவாறு அடையாளப்படுத்தி அதையே அளவு கோலாக்கிக் கருத்துக்களை ஏற்பதும் எதிர்ப்பதும் தொடருகிறது. இதற்கான காரணங்கள் எவையாயினும், கடந்த கால் நூற்றாண்டுக் காலத் தமிழ் தேசிய அரசியலில் புலிகளின் ஆதிக்கத்தின் தாக்கத்திலிருந்த தமிழ்த் தேசிய இனம் விடுபடுவது எளிதல்ல என்பது மட்டும் தெளிவு.
எனவே, தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்த காலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை என்பதையும் விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்க இயலாதன என்ப தையும் ஏற்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். நமக்கு முன்னாலுள்ள பல சவால்களில் அனைத்தையுமே விடுதலைப் புலிகளின் சாதனைகளாக வோ மாறாக அவர்களது குற்றங்களாகவோ நோக்குகிற தன்மையினின்று விடுபடுவது முக்கியமானது. விடுதலைப் புலிகள் போராட்டத்தின் மையச் சக்தியாக இயலுமாக்கிய அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது. தேசியம், சுயநிர்ணயம், தேசிய இன விடுதலை என்பன பற்றிய நமது புரிதல்களைச் செம்மைப்படுத்துவது முக்கிய மானது. தமிழ் மக்களின் விடுதலை எவ்வாறு இலங்கையின் பிற தேசிய இனங்களின் விடுதலையின்று பிரிக்க இயலாததாக உள்ளது என்பதை ஆராய்வது முக்கியமானது. தமிழ் மக்களின் விடுதலைக்குப் பிராந்திய அரசியலுடனும் சர்வதேச அரசியலுடனும் இருக்கக் கூடிய உறவுகளை விளங்கிக் கொள்ளுவது முக்கியமானது. இவற்றைக் கொஞ்சம் மேலோட்ட மாகவேனும் நோக்கும்போது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பிற விடுதலைப் போராட்டங்களினின்றும் தன்னை மிகவும் தனிமைப்படுத்திக் கொண்டமையை நாம் உணர இயலுமாக இருக்குமென நம்புகிறேன்.
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களென —மூர்க்கத்தனமான, நேர்மையற்ற நியாயப்படுத்தல்களைத் தவிர்ப்போமாயின்— இன்று ஓரளவேனும் பலராலும் ஏற்கப்படுவன, புலிகளின் சனநாயகமின்மை, முற்றிலும் இராணுவத் தன்மையுடைய போராட்ட அணுகுமுறை என்பனவாகும். அதேவேளை, அவற்றைத் தோற்றுவித்து உருவாக்குவதில் தமிழரசுக் கட்சிக்கும் அதன் மறு அவதாரமான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் ஒரு பங்கு இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய அடையாளங்களாக இருந்து வந்துள்ள ‘தனிப்பெரும் தலைவர்’ ‘ஏகப் பிரதிநிதித்துவம்’ ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கங்கள் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியன. மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவி யைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன் விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதை விடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப் பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவு படுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமற் போய்விடவில்லை. இன்று அவை முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம். அதைவிட முக்கியமாகச் சுரண்டும் வர்க்கத்தின் தேசியத் தன்மை எத்தகையது என்பதைப் போருக்கு பிந்திய சூழல் நமக்குத் தெளிவாக்கியுள்ளது. வசதிபடைத்த யாரெவரெல்லாம் புலிகள் வென்று கொண்டிருப்பதாக நம்பிப் புலிகளுக்குச் சார்பாக நடந்து கொண்டார்களோ அவர்கலெல்லாரும் இப்போது ஆட்சியாளர்களுடன் தம்மை நெருங்கிக் கொண்டிருப்பதை நான் காணுகிறோம்.
எனவே, ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண் பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என நாம் உணரலாம். தேசியத்தினுட் செயற்பாடும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாத போது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையா ளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது. ‘தலித் தேசியம்’ ‘இரட்டைத் தேசியம்’ என்பன போன்ற குழறுபடியான சிந்தனைகளைச் சிலர் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் பிரதேச அடிப்படையிலான பிளவும் ஏன் ஏற்பட்டன என்பது நம் கவனத்திற்குரியது. இன்று தமிழரிடையே உள்ள பெண்ணியம், வசதி படைத்த பெண்களின் அக்கறைகளை முதன்மைப்படுத்துவது மட்டுமன்றித் தேசிய விடுதலை நோக்கை நிராகரிப்பதாக அமைவது ஏன் என்பது நம் கவனத்துக்குரியது. அதற்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் போரின் போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறு பலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகட்டும் நிலங்கட்கும் தொழில் கட்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக் கிடப்போரிற் பெரும்பாலோராக உள்ளனர். தமிழ்த் தேசியத்தின் தலைமைகள் அனைத்தும் அவர்களின் நலன் பற்றிய அக்கறையே இல்லாமல் இருப்பதை நாம் காணுகிறோம். எனவே மக்கள் பற்றிய உண்மையான அக்கறையற்ற தேசிய இன விடுதலை அமைப்பு எதுவும் கோருகிற தனிநாடோ இன விடுதலையோ யாருடைய நன்மைக்கானது என்பதை நாம் கவனமாக ஆராய வேண்டும்.
தமிழ்த் தேசியம் இன்று ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கிறது என்பதை நாம் உணராவிட்டால், 2009 மே 17 வரை, விடுதலைப் புலிகள் தோற்க மாட்டார்கள் என்று நம்பியவர்களையும் விட மோசமான மனநிலையில் இருப்போராவோம். அந்த அவலத்துக்கான காரணங்களை விடுதலைப் புலிகளுக்குள் மட்டும் தேடுவோமாயின், நாம் ஒரு அரசியல் அந்தகாரத் துக்குள் நமது தேடலை நடத்துவோராவோம்.
தமிழ்த் தேசியத்தின் இன்றைய அவலத்துக்கான காரணங்கள், அது எந்த வர்க்க நலன்களைச் சார்ந்து எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்ற கேள்விக்கான விடைகளை ஆராயும் போதே தெளிவாகும் என்பது என்னுடைய மதிப்பீடு.
தமிழ்த் தேசியம் தனக்குள் முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் உள்ளடக்க முற்பட்ட நோக்கமும் அத் தேசிய இனங்களது இருப்பும் நலன்களும் பற்றிக் கொண்டிருந்த பார்வைகளும் தேசியம் பற்றிய புரிதலின் போதாமையின் விளைவானவையாக அல்லாது, ஒரு மேலாதிக்கச் சிந்தனை யின் வெளிப்பாடுகள் என்பது என்னுடைய கருத்து. அச் சிந்தனையின் பயனாகவே இன்றுவரை தமிழ்த் தேசியம் தன்னை ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனமாக அடையாயங் காணுவதைத் தவிர்த்து வந்துள்ளது என நினைக்கி றேன். அத்துடன் இன்னமும் இஸ்ரேலை முன் மாதிரியாக நோக்குகிற ஒரு போக்குத் தொடர்வதற்கும் அதையே விளக்கமாகக் காணுகிறேன்.
மேற்கூறிய முடிச்சுக்களை அவிழ்க்கும் போது, தமிழ்த் தேசியம் தனது அக முரண்பாடுகளைப் பற்றி அக்கறை காட்டத் தவறியது ஏன் என்பது முதலாக அந்நிய வல்லரசுகளையே சார்ந்திருக்க முயலுவது வரையிலான காரணங்களும் புலனாக இடமுண்டு. அவற்றையொட்டித் தமிழ்த் தேசியத் தலைமைகள் பிற தேசிய இன ஒடுக்கல்களும் போராட்டங்களும் பற்றி இதுவரை மேற்கொண்டு வந்த நிலைப்பாடுகளின் காரணங்களை விளங்கி யறிய வாய்ப்புண்டு.
எனவே, தமிழ் தேசியமும் தமிழீழக் கோரிக்கையும் விடுதலைப் போராட்டப் பாதையும் பற்றிய நமது விசாரணைகளை அடிப்படைகளிலிருந்து தொடக்க வேண்டும் என நினைக்கிறேன். சில கேள்விகளுடன் அந்த விசாரணையை நாம் தொடங்கித் தொடரலாம்.
தமிழ்த் தேசிய இனம், தமிழ்த் தேசம் என்பவற்றைப் பற்றிய நமது வரலாற்று விளக்கங்கள் நம்பகமானவையா?
தமிழ்த் தேசிய இனத்தை அடையாளப்படுத்தும் பண்புகள் எவை?
தமிழ்த் தேசிய இனத்திற்குரிய தேவை பிரிவினையா, சுய நிர்ணயமா?
பிரிவினையாயின் அதற்குரிய சாத்தியப்பாடுகள் எவ்வாறானவையாக இருந்தன?
அவை இனி எவ்வாறு அமையக்கூடும்? அதை இயலுமாக்கும் நேச சக்திகள் எவை?
சுயநிர்ணயமாயின் அதற்கான சாத்தியப்பாடுகள் எவை?
தமிழ்த் தேசிய இனம் மட்டுமே தனித்து நின்று போராடிச் சுய நிர்ணயத்தை வெல்ல இயலுமா? அதற்கான நேச சக்திகள் உள்ளனவா? அவை யாவை?
இப்போது சுயநிர்ணயத்தை ஏற்க மறுப்பவர்களைப் பகைமையுடன் நோக்கலாகுமா?
அவர்களை வென்றெடுக்க வாய்ப்புக்கள் உள்ளனவா? வெல்வதற்கு உதவக்கூடிய நேச சக்திகள் எவை?
எந்தச் சூழ்நிலையிலும் அந்நியக் குறுக்கீடுகளின் நோக்கங்கள் எவ்வாறு இருந்தன? அந்நியக் குறுக்கீடுகளால் நன்மை கிட்டியுள்ளதா? உலக நாடுகள் கூறும் பாடங்கள் என்ன?
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கட்கு உதவக் கூடிய அந்நிய சக்திகள் உள்ளனவா? அவை ஆளும் வர்க்கங்களா, வல்லரசுகளா அல்லது தமது உரிமைகட்க்காகப் போராடும் மக்கள் இயக்கங்களா?
நமக்கான சர்வதேச ஆதரவை வெல்வதற்காக நாம் நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுவது போதுமானதா?
பிறருடைய நியாயமான கோரிக்கைகளைப் பற்றி நாம் அக்கறை காட்டும் தேவை உள்ளதா? இருப்பின் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்?
முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் தனித்துவமான தேசிய இனங்களாக நாம் ஏற்கிறோமா?
ஏற்கிறோமெனின், அவர்களது உரிமைப் போராட்டங்களை நம்முடையதுடன் இணைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? அவ்வாறான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது எவ்வாறு?
சிங்களப் பேரினவாதம் என்பது அனைத்து சிங்கள மக்களுக்கும் உரியதா?
அப்படியாயின் அதை வெல்லுவது எப்படி?
சிங்களப் பேரினவாதத்தால் அனைத்துச் சிங்கள மக்களது நலன்களையும் பேண இயலாது என நாம் ஏற்போமானால், அந்த முரண்பாட்டைக் கையாளுவது எவ்வாறு?
சிங்கள மக்களிடையே பேரினவாதம் வலுவாக உள்ளதன் காரணங்கள் எவை?
அதற்குத் தமிழ்த் தேசிய வாதம் பங்களித்துள்ளதா?
எவ்வாறாயினும் சிங்கள மக்களிடையே பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தத் தமிழ்த் தேசியம் செய்ய இயலுமானது என்ன?
தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது பற்றிப் எப்போதுமே பேசப்பட்டு வருகிறது. அந்த ஐக்கியத்தை எந்த அடிப்படையில் இயலுமாக்க முடியும்?
இதுவரையிலான தோல்விக்கான காரணங்கள் எவை? அவற்றைத் தவிர்ப்பது எவ்வாறு?
அரசின் ஆயுத அடக்குமுறைக்கு எதிராக ஆயதப் போராட்டம் தேவையா?தேவையாயின் அப் போராட்டம் எப்படிப்பட்டதாக அமைய முடியும்? அப் பொறுப்பை யார் ஏற்பது? இதுவரையிலான அணுகுமுறை செல்லுமா? இல்லையெனின் மாற்று வழி என்ன?
மேற்கூறியவாறான வினாக்களுக்குத் தெளிவான விடைகளை நாம் நேர்மையான முறையில் வந்தடைவோமானால், விவாதங்கள் விடுதலைப் புலிகளின்றும் விலகி போராட்டத்தின் எதிர்காலத்தைப் பற்றிய திசையில் ஆக்கமான முறையில் நகரத் தொடங்கும். குறிப்பாகச் சொன்னால், நடந்து முடிந்த அவலத்தின் காரணங்களை வெறுமனே தந்திரோபாயங்களும் நடைமுறைத் தவறுகளும் பற்றியதாக ஆராயாமல் அடிப்படைகளிலிருந்து தேடி அறிய வாய்ப்பிருக்கும்.
எந்த தவற்றையும் திருத்துவதும் தவறான நிலைப்பாடுகளை நிராகரிப் பதும் எந்தவொரு விடுதலை இயக்கத்தினதும் அடிப்படையான தேவை யாகும். எனவே, ஒரு குறிப்பிட்ட போராட்டம் ஒரு அவலமான முடிவை வந்தடையும் போது, நிகழ்ந்திருக்கக் கூடிய அனைத்துத் தவறுகளும் அடிப்படையிலிருந்து விசாரித்தறியப்பட வேண்டும்.
பல புதிய அமைப்புக்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் உருவாகியுள்ளன. எனினும் சில அமைப்புக்கள் தமிழ்த் தேசியம் பற்றிய அடிப்படையான சில வினாக்களை எழுப்பத் தயங்குகின்றன. சுயநிர்ணயத் தைப் பற்றிப் பேசும் போது பிரிவினைக் கோரிக்கையை முதன்மைப்படுத்து கின்றன. இடதுசாரிகளைப் பற்றிய பழமைவாத வாய்ப்பாடுகளை ஒப்பிக் கின்றன. இத்தகைய அணுகுமுறைகள் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை மீண்டும் படுகுழியில் தள்ள முனைவோருக்கே உதவும்.
விடுதலைப் புலிகளைப் பற்றிய அகச்சார்பான விமர்சனங்கள் பலரைக் கண்மூடித்தனமான புலி எதிர்ப்பிற்கும் அதன் பயனாக இலங்கை அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டுக்குள்ளும் தள்ளி விட்டுள்ளது. அவ்வாறே புலிகளின் நடத்தையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும் சில சமயங்களில் பிரச்சனைகளைப் பல கோணங்களிலும் இருந்து பார்க்கத் தவறுகின்றனர்.
இயக்கங்களிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும் காரணமாக ஏற்பட்ட கசப்புணர்வுகளும் பலரைக் குறிப்பான சில நிகழ்வுகட்கு முக்கியத் துவம் வழங்கி முழுமையான சித்திரத்தைத் தவறவிடுமாறு தூண்டுகின்றன.
எனவே விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்பான மீள்பார்வைகள், புலிகளின் தவறுகள் என்றும் குறிப்பிட்ட இயக்கங்களின் தவறுகள் என்றும் சம்பவங்கள் பற்றிய விமர்சனத்துடன் நின்றுவிடாது, அனைத்துத் தவறுகட்கும் காரணமாக இருந்திருக்கக் கூடிய கோட்பாட்டுப் பிரச்சினைகள் பற்றியும் பொதுவான நடைமுறை பற்றியும் கூடிய கவனங்காட்ட வேண்டியுள்ளது.
நம்மைத் தவறுகட்கு அப்பாற்பட்டோராக மனதிற்கொண்டு நேர்மையான விசாரணைகளை நடத்துவது கடினம் என்பதைப் பற்றியும் நாம் கவனத்துடன் இருப்பது நல்லது. அல்லாவிடின் எல்லாவற்றிற்கும் பிறர் மீது பழியைப் போடுகிற ஒரு போக்கிற்கு நாம் இரையாக வாய்ப்பு அதிகம்.
“மே 19 என்பது முடிவல்ல, புதிய தொடக்கம்” என்பவர்கள் உள்ளனர். எந்தத் தொடக்கமும் முந்திய பயணங்களின் அனுபவங்களியிருந்து முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் கடமை நம் எல்லாருக்கும் உள்ளது. ஏனெனில் இதுவரை நாம் சுட்டிக் காட்டத் தயங்கியவற்றுக்காக் கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம்.
-சி.சிவசேகரம்-
நன்றி: செம்பதாகை -இதழ்13