"புத்திஜீவிகள்" "முற்போக்காளர்கள்" என்று தங்களைக் கூறிக் கொள்ளும் - காட்டிக் கொள்ளும் தமிழர்களின் சிந்தனை முறை, வெள்ளாளியமாக இருக்கின்றது. வெள்ளாளியச் சமூக வாழ்க்கை முறையில் வாழும் மக்களிலிருந்து இந்த "புத்திஜீவிகள்" வெள்ளாளியத்துக்கு எதிரான நடைமுறைகள் மூலம் வாழ்வதற்கும் – அதற்காகப் போராடுவற்கும் தயாரில்லை. முன்னுதாரணமான நடைமுறையைக் காணவும், காட்டவும் முடியாது உள்ளனர். இதை மூடிமறைக்க
1.எங்கள் பிறப்பு எங்கள் குற்றமா என்று கேட்டு, பிறப்பைக் கொண்டு வெள்ளாளியத்தை, ஆணாதிக்கத்தை.. எல்லாம் குறுக்கி விளக்க முற்படுகின்றனர்.
2.தங்கள் மனிதாபிமான செயலைக் கொண்டு, தம்மை முன்னிறுத்துவது. உதாரணமாக பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுடனான உதவி மற்றும் நடத்தையைக் கொண்டு தன்னை வெள்ளாளியத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும்.. எதிரானவனாக நிறுவ முனைவது.
3.தங்கள் முரண்பட்ட கருத்துக்கள் - எழுத்துக்களைக் கொண்டு தங்களை வெள்ளாளியத்துக்கு, ஆணாதிக்கத்துக்கு எதிரானவராக முன்னிறுத்துவது
தண்ணி அடிக்க ஊறுகாய் தேவைப்படுவது போல், அரசியல் - இலக்கியம் பேசும் அக வெள்ளாளியத் தனத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழ் அரசியல் இலக்கிய உலகில் இந்த வெள்ளாளிய நரித்தனமே, பகல் வேசம் போட்டு நிற்கின்றது.
இந்தப் பின்னணியில் தமிழ் அரசியல், இலக்கிய சிந்தனை முறைகள் அனைத்துமே வெள்ளாளியமாக இருப்பதுடன், அதையே "முற்போக்கு" என்றும் "புத்திஜீவித்தனம்" என்றும் பீற்றுகின்ற – நம்புகின்ற மனநிலையும் காணப்படுகின்றது. கடந்தகால போராட்டம் மட்டுமல்ல போராட்டம் குறித்த விமர்சன அரசியலும் வெள்ளாளியக் கண்ணோட்டத்தைக் கொண்டு காணப்படுகின்றது.
2009 வரையான யுத்தகாலத்தில் புலிகளின் வெள்ளாளியச் சிந்தனையிலான சமூக வாழ்வியல் முறை மட்டும் எம்மை அழிக்கவில்லை, புலிக்கு வெளியில் செயற்பட்ட புலம்பெயர் அரசியல் இலக்கியமும் முரண்பட்ட அக வெள்ளாளியத்தையே மாற்றாக முன்வைத்தது. இதுதான் அன்றைய அழிவுக்கும், இன்றைய சமூக பின்னடைவுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
இந்த வகையில் கடந்தகாலம் குறித்த விமர்சன அரசியல் முதல் இலக்கியம் வரை, வெள்ளாளிய சமூக உள்ளடக்கத்தை காய்வெட்டித்தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. நிகழ்கால அறிவியல் இதற்குள் புளுக்கின்றது.
தோற்றுப்போன போராட்டங்கள் தொடங்கி இன்றைய சமூக ஓடுக்குமுறைகள் வரை, இந்த வெள்ளாளியச் சிந்தனையிலான வாழ்க்கை முறைக்குள் குறுகிக் கிடக்கின்றது. இதனால் தமிழ் சமூகம் முன்னுதாரணமிக்க சமூகமாக முன்னிறுத்த முடியாத சிந்தனை முறையில் சிக்கி, பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.