அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே  முத்துக்குமாரென்ற வீரமிகு தமிழ்மைந்தன் தன்னைத் தீக்கு இரையாக்கிவிட்டான்!தமிழகத்தில் அவனது குடும்பம் என்ன வலியில் இருக்குமென்பதை ஈழத்தமிழர்களாகிய நமக்குப் புரிந்துகொள்ள முடியும்.நாம் தமிழகத்துக்காக எதுவுஞ் செய்யவில்லை!எனினும்,நமது சகோதரர்கள் நமக்காகத் தம்மைத் தீக்கு இரையாக்குவதுவரை இந்தப் பாசம் செல்கிறது!
நாம் பலரை இழந்துவிட்டோம்!
வீரமிகு பல இளம் போராளிகளை ஈழத்தமிழர்கள் இழந்துவிட்டார்கள்.
இந்திய அரசின் மிகக்கெடுதியான அரசியற்போக்ககுளால் நாம் பலவீனப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டோம்.எமது இளைஞர்களின் வீரமிகு கரங்கள் தரையில் மல்லாந்துகிடக்கின்றது.எங்கள் மக்கள் இந்திய அரசினதும் அதன் குண்டுகளினதும் அகோரத்தாண்டவத்தால் தமது உயிர்களைத் தினம் இழக்கின்றார்கள்.இதை எதிர்த்து எமக்காக, தியாகத் தமிழ்மகன் முத்துகுமாரன் தனது உயிரைத் தீக்குள் திணித்துவிட்டார்.
அவரது ஓர்மம் மிக்க இந்தத் தியாகத்தை மதிக்கின்றோம்.
மனதுடைந்து அவரது குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்கிறோம்.நிர்க்கதியான அவரது குடும்பத்தவருக்கு என்ன உதவியையுஞ் செய்யவும் நாம் தயாராக இருக்கின்றோம்.எங்கள் தாயகத் தமிழ் மகனுக்கு எம் சிரந்தாழ்த்திய வீரவணக்கத்தைத் தெரிவித்தபடி மேலுஞ் சிலவற்றைச் சொல்கிறோம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகிறார்கள்.வன்னி பெரு நிலப்பரப்பெங்கும் மனித அவலம் தொடர்கதையாகவே இருக்கிறது!எமது தலைவிதியை நாமே தீர்மானித்திருக்கவேண்டிய காலத்தையெல்லாம் கடாசிய புலிகள் இப்போது செய்வதறியாது ஏனோதானோவெனப் போரிடுகிறார்கள்.

 

வீரமிகு போராளிகள் ஆயுதத் தளபாடம் மற்றும் வழிகாட்டலின்றி, இருக்கின்ற ஆயுதங்களோடு களமாடி மரிக்கின்றார்கள்.அவர்கள் அனைத்து வடிவிலும் போராடிப் பார்க்கின்றார்கள்.எனினும்,எதிரி மிகப்பெரும் படைவலுவோடு அவர்களைத் தோர்க்கடித்து வருகிறான்.

 

எதிரிக்கு மிகப் பக்கப்பலமாக இந்திய ஆளும் வர்க்கம் இருக்கிறது-இலங்கைப் பாசிச ஆக்கிரமிப்பு இராணுவம் இந்திய ஆயுதத் தளபாடத்தோடும்,இந்தியாவின் அதிமேதமையுடைய இராணுவ வல்லுனர்கள் வழிகாட்ட இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோல்வியுற்று, எமது போராளிகள் மரித்துவருகிறார்கள்.இன்றோ,சோமாலியாவில் கடத்தப்பட்ட ஜேர்மன் எண்ணைக்கப்பலை விடுவிக்க இந்தியக் கடற்படை ஒத்துழைப்பு நல்கிறது.ஆனால், இலங்கை அரசின் இனவழிப்பில் சிக்கிய பல இலட்சம் தமிழரைக்காக்க இந்திய அரசால் முடியவில்லையே!இது,ஏன்? இதுதாம் வர்க்க நலன்-வர்க்கக்கூட்டு!(தமிழகச் சட்டசபையில் திரு.அன்பழகன் கூறும் கருத்து:"இலங்கைத் தமழர்களின் அவலத்தைக் குறைக்க இந்தியாவின் முயற்ச்சி ஏற்கத்தக்கது"என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாகும்.)
"உலகத்தின் நான்காவது பெரிய இராணுவம், ஒரு சிறிய விடுதலைப்போராட்ட இயக்கத்துக்கு இவ்வளவு பேரிழப்பை அழித்து அந்த அமைப்பைத் தாங்கிய தமிழினத்தைப் பூண்டோடு அழிக்க நினைப்பது மிகவும் கோழைத்தனமானது-அராஜகமானது-அநீதியானது!காந்தி பிறந்த மண்ணின் குணமா இது?"என்று சராசரி ஈழத்தமிழர்கள் நொந்து போகின்றார்கள்-தாய்த் தமிழகத்தில் தம்மைத்தாமே தீயிட்டு உயிர் நீத்துவருகிறார்கள்.
நாம் இதைக்கடக்க முனைகிறோம்.
இந்தியாவின் இலக்கை ஓரளவு புரிய முற்படுகிறோம்.இந்திய அரசு,தனது அகண்ட பாரதக்கொள்கையூடாகத் தனது பெரு முதலாளிகளின் பொருளாதார நலனுக்காக ஈழத்தமிழர்களைப் பூண்டோடு அழிக்க முனைவதின் உட்காரணங்களை அறிய முற்படுகிறோம்.இந்தியாவினது இராணுவப்பலத்தோடு ஈழஞ் சுடுகாடாகிற இப்போதுங்கூடப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் தீரமுடன் போராடிப் பார்க்கிறார்கள்-போராடிச் சாகிறார்கள்!இது, அவர்களது இறுதி இருப்புக்கானமுயற்சி.இலங்கை அரசை மிக மூர்க்கமாகப் போராட வைத்திருக்கும் இந்தியா, இலங்கைக்குத் தொடர்ந்து யுத்தத் தளபாடங்களைக் கொடுத்துத் தனது பிராந்திய மற்றும் செல்வாக்கு மண்டலத்தைத் தக்கவைப்பதிலும் அதன்வழிப் பொருளாதார வெற்றியையும் குறித்துத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புடையதாக இருக்கிறது.இது, யதார்த்தம்!
இலங்கைமீதான இந்திய அரசியல் தெரிவு:
இக் கிழமையின் ஆரம்பத்தில்,கொழும்புக்கான இந்திய வெளிவிவகார மந்திரியின் பிரயாணம், இந்திய ஆதிக்கத்தின் நிலைப்பாட்டை-தளத்தை-ஸ்த்தானத்தை உலகுக்குக் காட்டுவதாகும்.இலங்கையின் அனைத்து விடையங்களையும் நிர்ணயிக்கும் செல்வாக்கும், அந்தச் செல்வாக்கு மண்டலத்துக்கு எவருமே நெருங்க முடியாதென்பதை மேனனின் வரவில் இந்தியா எடுத்தியம்பியது.மேனின் வரவுக்குப் பின்பான பிராணாப் முகர்ச்சியின் விஜயத்துள் பன்முகப்படுத்தபட்ட அரசியல் குறியீடுகள் இருக்கின்றன.அவை, புலிகளை முற்று முழுதாக அழிக்கும் இந்திய இராணுவத்தின் பழிக்குப்பழி அரசியலின் சாணாக்கியமும், அந்த இராணுவத்துக்கு அரசியல் தலைமை கொடுக்கும் காங்கிரசின்(ராஜீவ் குடும்பத்தின் வலி) வரலாற்றுவலிக்குமான பதிலிகளும், பிரணாப் முகர்ச்சியினது வரவில் குறித்துரைக்கப்பட்ட கருத்துக்களில் தொக்கியுள்ளது!"புலிகளின்மீது அநுதாபமெனும் பேச்சுக்கு இடமில்லை" என்பது சோனியா காந்தியின் குரலாகவும்,"தமிழ் மக்களைப் பற்றிய கரிசனையும், அவர்களது அழிவைக் குறைப்பதற்கான முயற்சியில் இந்தியா தொடர்ந்து உதவும்"என்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நீண்ட நாட்கனவான இலங்கைக்கான அரைகுறை அரசியல் தீர்வினது இறுதி முடிவுகளுமாகும்!இது, மிக இலகுவாக இன்று நம்முன் சொல்லப்படும் அரசியலாகும்.

 

அரைகுறைத் தீர்வோடு(ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்கு அண்மித்த), புலியில்லாதவொரு ஈழத்தமிழ் மக்களின் அரசியலை முடித்துவைப்பதிலுள்ள வேகம் இனிவருங்காலத்தில் எடுக்கப்படும் என்பதை இவர்கள் குறியீடாக்கிவிடுகிறார்கள்.இதற்காக, ஏலவே ஆனந்தசங்கரி-டக்ளஸ் முதல் கருணாவரை இந்தியா தயார்ப்படுத்திய குழுக்களைக் காய்வெட்ட அன்றைய வரதராஜபெருமாள் இன்னுமொரு துருப்புச் சீட்டாக வரப்போகிறார்.இந்தியா தொடர்ந்து அவரையே தனது நம்பிக்கைக்குரிய கைத்தடியாகக் கருதுகிறது.இதன் சரியானவொரு சூழலை மதிப்பிடுவதற்கான பல கோரிக்கைகளை இனிவரும் காலத்தில் மேற்சொன்ன சிறிய இந்திய விசுவாசிகளிடமிருந்து நாம் கேட்கலாம்.இத்தகைய கோரிக்கைகளுடாகத் தம்மைக்காய்வெட்டமுனையும் இந்தியாவுக்கு அரசியல் அழுத்தங்கொடுக்க இவர்கள் முனையும்போது, நமது மக்களின் அபிலாசைகளே கோரிக்கையாக எழும்.இதை, இப்போது ரீ.பீ.சீ.வானொலியும் அதன் அதிபர் திரு.இராமாராஜனும் முன்வைக்கத் தொடங்கி வருவதை உதாரணமாகச் சொல்ல முடியும்.
திரு.இராமாராஜன் மிகக் கைதேர்ந்த அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் என்பதை அவரது ஈ.என்.டி.எல்.எப் இயக்கக் கடந்தகால அரசியல் பாத்திரம் நமக்கு நன்றாகவே உணர்த்துவது.இத்தகைய அரசியல் நடாத்தையில் அழித்தொழிக்கப்பட்ட புலிகளின் வெற்றிடம் இவர்களால் நிரப்பப்படும் போக்கில், நாளைய பொருளாதாரப் போக்குகள் இலங்கையில் மிகவும் கொடுமையான அரசியல் எழுச்சிகளை முன் தள்ளப் போவது உறுதியாகிறது.இதைச் சமாளிப்பதற்கான அடுத்த அரசியல் என்னவாக இருக்கும் என்பதை நாம் மிகக் கவனமாகவே அணுகுகிறோம்.இது,இலங்கையில் இன்னொருவகை பயங்கரவாதமாக இலங்கையின் இடதுசாரிகள்மீது இராணுவவாதத்தைக் குவிக்கும்.இதுவரை இந்த வேலையைப் புலிகளிடம் ஒப்படைத்த அந்நியச் சக்திகள்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கம்,இப்போது தனது வளர்ப்புப் பிராணியைத் தானே அழித்த பின்பு, அதன் வேலையை இலங்கை இராணுவவாத முன்னெடுப்புக்குள் இனம் காணுகிறது.இது,பெரும் பாலும் சிங்கள இடதுசாரிகளைக் குதறுவதற்குச் சரியானவொரு தெரிவாக இனங்காணப்படுவதிலுள்ள அரசியலாக விரியும்.இதற்கு மகிந்தா குடும்பம் சரியானதொரு பங்குதாரராக இலங்கை ஆளும் வாக்கத்தின் ஒரு பிரிவுக்குத் தலைமைதாங்குவது உண்மையான யதார்த்தம்.
இந்தியாவுக்கு இனிமேல்தாம் பாரிய அரசியல் சாணாக்கியம் அவசியமாக இருக்கப் போகிறது.அதன் உச்சபச்சத் தெரிவாக இலங்கையை இந்தியா மிகவும் தாஜா செய்து, ஈழத் தமிழர்களைக் கொல்வதற்கு உடந்தையாக இருக்கிறது.இது, இலங்கையின் பாதுகாப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதற்காக இலங்கைக்கு இந்தியா தனது போர்த்தளபாடங்களையே தந்துதவுவதாக இருக்கிறது.இதன் பொருட்டு மிக உயர்ந்த போர்த் தளபாடத்தை அது வழங்கும்.அதன்வழி, இனிமேற்காலத்தில் இலங்கை இராணுவத்தைத் தனது அடியாட்படையாகப் பயன்படுத்த இந்தியா இப்போது பலவழிகளில் இலங்கை இராணுவ ஜெனரல்களுடன் தொடர்புகளை வைத்திருக்கிறது.இங்கே,மகிந்தாவுக்குக்கூட இந்தியா ஆப்புவைத்து இலங்கை இராணுவ ஜெனரல்களைப் பதவிக்குக்கொணரும் ஒரு சூழலும் நெருங்குகிறது.இந்த இலக்கை இந்தியா எட்டுவதற்கு அடுத்த தேர்தலிலும் ஆளும் மகிந்தவே ஆட்சிக்கு வருவது அவசியமாகும்.எனவே,யு.என்.பி.யைப் பிளப்பதற்கானவொரு தெரிவையும் இந்தியா செய்வது அவசியமாகிறது.இதைக் கவனப்படுத்துவதோடு இப்போது நிறுத்துவோம்.
புலிகளின் அழிவு, முடிந்த முடிவு:
"மக்களை அழிப்பது இனிவருங்காலத்தில் ஆயுதங்களின்வழியல்ல.
அது பெரும்பாலும்
இந்திய மேலாதிக்கத்தின் பொருளாதார உறவுகளின்வழி நடந்தேறும்."

 

இலங்கையில் புலிகளைப் பூண்டோடு கைலாசம் அனுப்பிவைப்பது இனிவரும் சூழலுக்கு அவசியமானவொரு இந்திய-ஆசியத் தெரிவு.இது,இந்தியாவினது சரியானவொரு தெரிவாக இருந்தாலும் இந்தியாவை எதிர்த்துப் புலிகளைக் காப்பதற்கு மேற்குலகம் விரும்பவில்லை.நலிந்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளால் இந்தியாபோன்ற நாட்டின் நட்புறவு மிக அவசியமானவொரு பொருளாதார நலன்சார்ந்த தெரிவாக அமெரிக்காவும், மேற்குலகமும் கருதுவதால் புலிகளை எவரும் காப்பாற்ற முடியாது தத்தளிக்கிறார்கள்.புலிகள் எவ்வளவு முயன்றாலும் அவர்களது பழைய எஜமானர்கள் புலிகளுக்குக் கை கொடுப்பதற்கில்லை.இதனால், இன்னுஞ் சில வாரத்தில் பிரபாகரனின் உடலங்கூடக் கிடைக்கவில்லை எனப் பதில் வரும்.இது, கசப்பான உண்மை.கிட்லருக்கு நேர்ந்த அதே கதையை ஈழத்திலும் நமது சிறார்கள் எதிர்காலத்தில் சரித்திரத்தில் வாசிக்கப் போகிறார்கள்!
கடந்தகாலத்தில் புலிகளின் அரசியல் தற்கொலையாக, ராஜீவ் கொலையில் இனம் காணத்தக்க அரசியல் இருக்கிறது.இது,திட்டமிட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிவலையோடு ரோவினால் புலிகளை வலையிற் சிக்கவைக்கப்பட்ட அரசியலாகும்.எனவே, இந்தியாவென்பது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் பொதுவான எதிர்ப்பாத்திரத்தை எப்போதோ எடுத்துவிட்டது. இந்த நிலையில்,எமது மக்களுக்கும்,தேசத்துக்கும் முதற்றரமான அயல் நாட்டு எதிரி இந்தியாவென்பதை மறைத்து,அவர்களை எமது நட்புத் தேசமாகவும்,நமது மக்களின் நலனில் அக்கறையுடைய அண்டை நாடாகவும் புலிகள் தொடர்ந்து நம்மை ஏமாற்றியதன் வினை, இன்று இவர்களின் உண்மை முகம் வெளிசத்துக்கு வரும்போது புலி விசுவாசகளால் சகிக்க முடிகிறதில்லை.அவர்கள் குய்யோ,முறையோவெனப் பதிவிடுவதுவரை நமது வெளியுலக அறிவு கொடிகட்டிப்பறக்கிறது. இந்நிலையில்,தமிழ்நாட்டுத் துக்ளக் சோவினது பாத்திரத்தை வெறும் தனிநபர்-ஒரு சாதியின் நடாத்தைக்குள் இனம் காணும் "படித்தவர்களை"(பல்கலைக்கழகத்துள் குப்பை கொட்டுபவர்கள்) நாம் வலையுலகத்தில் இனம் காணமுடியும்.

 

நண்பன் யார்,எதிரி யார் என மதிப்பிடுவதில் புலிகளின்வழி சிந்திப்பவர்களுக்கு இன்று
உண்மை வெறுப்பாக இருக்கிறது.எனினும்,எமது மக்களின் இவ்வளவு பெரும் அவலத்துக்கும்
எங்கே ஊற்றுள்ளதென அறிவு பூர்வமாக நாம் சிந்தக இன்னும் முயலவேயில்லை!

 

இந்தியாவென்றவுடன் தமிழ்நாட்டுக்குள் படம் ஓடும் எமது மனங்களக்கு இந்தியப் பெரு நிலப்பரப்பின் ஆளும் வர்க்கத்தையும் அதன் மனிதவிரோதப் பொருளாதார நலன்களையும் இன்னும் நிசமாகவே புரிந்துகொள்ள முடிவதில்லை.எனவே, கருணாநிதி துரோகஞ் செய்துவிட்டார்,ஜெயலலிதா துரோகஞ் செய்துவிட்டார்கள் எனும் ஒப்பாரி அவர்களுக்கு இழவு ஓலை அனுப்புகிறது.

 

எங்கள் இதுவரையான போராட்டச் செல் நெறியும்,வெளியுலக அரசியல் தொடர்புகளுமே நம்மை இவ்வளவுதூரம் அவலத்துக்குட்படுத்துகிறது.புலிகளின் இருப்பை அன்று விரும்பிய அந்நிய சக்திகளின் இன்றைய தேவை-நலன் வேறோரு வகைமாதிரியான பொருளாதாரத் தெரிவோடும் அதையொட்டிய உறவுகளோடும் தமது வர்க்கத் தளத்தில் நின்று புலிகளை வேட்டையாடும்போதும், புலிகள் தமது மிகக் கெடுதியான அரசியல் முட்டாள்தனமான பாத்திரத்தை இதுவரை சுய விமர்சனஞ் செய்யவுமில்லை,மக்களைத் தமது தலைமையைத்தாமே தெரிந்து போராட விடவுமில்லை!தமது அழிவோடு அவர்களின் உரிமைக்கான சாவுமணியையுங்கூடவே அடித்துவிடுவதில் தமிழ் ஆளும் வர்க்கங்களின் மனவிருப்பை அச்சொட்டாகச் செய்து, அப்பாவி மக்களையும்,தமது அடிமட்டப் போராளிகளையும் சிங்கள வன் கொடுமை யுத்தத்துக்குப் பலியாக்குவதில் புலிமுனைப்புடன் இருக்கிறது.இந்த முனைப்பு இன்றுவரையும் யுத்தத்தில்தாம் வென்று தமிழீழத்தைப் பெற்றுத் தமிழ்மக்களுக்குக்கொடுப்பதாகவே தம்பட்டம் அடிக்கப்படுகிறது.
இலங்கை அரசின் மிகக்கொடிய யுத்தக்கூட்டோ புலிகளால்கூறப்பட்ட தமிழர்களின் "நட்பு நாடான" இந்தியாவை மிகவும் அணைத்துக்கொண்டு அதை வைத்தே புலிகளையும் அவர்களது பக்கஞ் சாய்ந்த மக்களையும் வேட்டையாடி வரும்போது,இன்னும் புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளாகவே கருத்துரைக்கிறார்கள்.இவர்கள் மக்களையும்,புலிகளையும் போட்டுக் குழப்புவதுமட்டமல்ல கொடிய போருக்குள் சிக்குப்பட்டுப் பலியாகும் மக்களின் உண்மை நிலையையும் மறைத்து மக்கள் புலிகளுக்குப் பின்னால் மனமுவந்து போராடுவதாகவும் காட்ட முனைகிறார்கள்.
இத்தகைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட புலிகளோ மறுபுறத்தில் மக்களின் அவலத்தை முன் தள்ளி யுத்த நிறுத்தத்துக்கானவொரு சூழலை எதிர்நோக்கி அதற்காவே அரசியல் செய்கிறார்கள்.இது இலங்கையினதும்,இந்தியாவினதும் மற்றும் மேற்குலகத்தினதும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் வர்க்கங்களின் நலனை மெல்லப் பின் தள்ளிவிட்டு வெறும்"துரோகம்"எனும் தட்டையான வார்த்தையால் இன்றைய போர்ச் சூழலை மையப்படுத்தி மக்களை இன்னும் இத்தகைய தேசங்களை நம்பும்படியும்,இந்தியாபோன்ற தேசம் இனியும் தமிழருக்கு உதவும் எனும் போர்வையில் கருத்துக்கட்டுகிறார்கள்.இது,புலிகளின் அழிவைத் துரிதப்படுத்திவருகிறது.இனிப் புலிக்கு வாழ்வில்லை!
எமது பரமவிரோதி,முதலிலும் முதற்றரமான எதிரி: இந்திய ஆளும் வர்க்கமாகும்!
இந்தியா எமது மக்களின் பரம விரோதியென்பதும் அது தென்னாசியப் பிராந்தியத்தின் கொடிய ஒடுக்குமுறையாளன் என்பதையும் மறைத்தபடி இன்னும் எமது மக்களை நம்ப வைத்து அவர்களது பின்னால் இழுபட்டுப்போக வைப்பதில் இன்னும் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாமென்பதை அவர்கள் தமது எஜமானர்களுக்குச் சொல்கிறார்கள்.இறுதி முடிவு நெருங்கும்வரை தம்மை இந்தியா காத்துவிடுமெனும் நப்பாசையில் புலிகளின் தலைமை இருக்கிறது.என்றபோதும் ,நாம் இந்தியாவை முதற்றரமான எதிரியாகவே நமது மக்களுக்கு,குறிப்பாக இலங்கையின் உழைக்கும் மக்களுக்குச் சொல்வதோடல்லாமல் அனைத்துச் சிறுபான்மை இனங்களக்கும் அறிமுகஞ் செய்கிறோம்.தென்னாசியப் பிராந்தியத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசியவினங்கள் விடுதலையடையவேண்டுமானால் முதலில் இந்தியாவின் பாத்திரத்தை மிகக் கவனமாக வரையறைசெய்து அதைப் போராட்டச் செல்நெறியில் பிரதான எதிரியாக (இந்திய ஆளும் வர்க்கத்தை) நிறுவியாகவேண்டும்.உலகத்துக்கு ஒரு அமெரிக்காபோல், தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு இந்தியாவென்பதை இனம் கண்டாகவேண்டும்.இந்தியா ஒருபோதும் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்கும் தேசிய இனங்களக்கு நண்பன் அல்ல.தனது சொந்த நிலப்பரப்புக்குள் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக அகண்ட பாரதத்தை வைத்திருக்கும் இந்தியா, படு பிற்போக்கு ஒடுக்கு முறையான பாரிய வன்கொடுமை இராணுவத்தை வைத்திருக்கும் கொடிய ஆளும் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படுகிற தேசமாகும்.

 

இப்போது ,தமிழீழப் போராட்ட வரலாறில் புலிகளின் அழிவு தற்செயல் நிகழ்வல்ல.புலிகளது
வர்க்க உறவும் அவர்களது தளமும் அதைத் தீர்மானிக்கிறது.இதற்கு வெளியே அவர்கள் இறங்க
முடியாது.அப்படி இறங்க அவர்களது இன்றைய நிலை விடுவதற்கில்லை.

 

எனவே,மக்களின் அழிவில் தமது இருப்புக்கானவொரு யுத்த நிறுத்தம்வரை அவர்கள் தொடர்ந்து இந்திய விசுவாசத்துக்காகத் தமிழ்நாட்டைத் தமது பினாமிகள் ஊடாக உசுப்பிவிடவே முனைவதில் குறியாய் இருக்கிறார்கள்.இதைகடந்து இந்தியத் துரோகத்தைத் தோலுரித்து, நமது மக்களைச் சுயமாகப் போராட அனுமதிப்பதில் தமது எதிர்கால இருப்பை அவர்கள் இழக்கத் தயாரில்லை.இதுவே,நமது மக்களின் மிகப் பெரும் அவலமாகும்.எனினும்,இன்றைய தமிழகத்தின் போராட்டவுணர்வு, தீயில் உயிர் நித்துவிடுவதுவரை மேலெழுகிறது!இது,இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அரசியல்-இராணுவப்போக்கால் நிகழ்ந்துவரும் இனவெழிச்சி!இதைத் தாண்டித் தமிழகக் கட்சிகள் தமது அரசியல் இருப்புக்கான திசைவழியில் இவ் வீரமரணத்தைப் பயன்படுத்த முனைகிறார்கள்.இதை வேறுபடுத்தித் தமிழகத்து மக்கள் தமது போராட்டத்தை தமிழகத்து ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவுஞ் செய்து, அவர்களையும், அவர்களது கள்ளக் கூட்டுக்களையும் அம்பலப்படுத்தி ஈழமக்களுக்கான ஆதரவுப் போரை முன்னெடுப்பார்களாவென்பது பெரும்பாலும் தமிழகத்துப் புரட்சிகரக்கட்சிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் பாத்திரத்தை இதுவரை புலிகள் மறைத்து வருகிறார்கள்.இந்தியா நமது நட்புத் தேசம் என்கிறார்கள்.இது,தம்மை முற்று முழுதாக அழிக்க முனையும் நமது மக்களின் எதிரிகளைப் புலிகள் தமது வர்க்க நலனின் அடிப்படையில் மக்களுக்கு எமது நண்பர்களாக இதுவரை உரைப்பதும், அதன் தொடரில் துரோகம் எனக் குறுக்கியும் வருகிறார்கள்.இந்தியாவின் பிராந்திய நலனை அம்பலப்பத்தி, அதற்கெதிராக மக்களைத் திரட்டாத கடந்தகாலத் தவறு இப்போது இந்தியாவின் பாத்திரத்தைத் துரோகம் என்பதோடு நிறைவடைகிறது! இவர்களை எதிரியாக வரையறுத்துப் போரை முன்னெடுக்க மறுப்பதும் புலிகளால் தமது உடமை இருப்பை இழக்கமுடியவில்லையென்பதையே காட்டுகிறது.இலங்கை அரசு இவையாவையும் மிக நுணுக்கமாக ஆய்ந்து புலிகளைப் பூண்டோடு அழிப்பதில் அவர்களது எஜமானர்களிடமிருந்தே அனைத்து வளங்களையும் பெறுகிறது.இதன் தொடர் விருத்தியே இன்று நமது மக்களின் தலைகளில் செல்களாக விழுந்து வெடிக்கின்றன.இதை உலகம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகச் சகஜமே.ஈழத்தைவிட ஆயிரம்மடங்கு பாலஸ்த்தீனத்தில் படுகொலையைக் கட்டவிழ்த்த இஸ்ரேலை வேடிக்கை பார்த்த இந்த உலகம், நம்மையும் அதே பார்வையில் வேடிக்கையாக அணுகுவதில் நாம் நொந்தென்ன நோகாதிருந்தென்ன?அனைத்தும் ஒன்றே!
என்றபோதும்,நமது கண்ணீரை வழமைபோலவே இடதுசாரிய ஊடகங்களே உண்மையோடு அணுகின்றன.இங்கே,நமது மக்களின் குருதிசிந்தும் வாழ்வை நாணயத்தோடு யுங்க வெல்ற் எனும் இடதுசாரியத் தினசரி எழுதுகிறது.நாம் மிகவும் ஒடுக்கப்பட்டுவரும் இந்த வேளையிற்கூட நமது மக்கைப் பெரிதும் மதிக்காது போர்மூலம் போக்குக்காட்டும் அரசியலை இந்தியா செய்து, தமது பிராந்திய நலனை- பொருளாதார வளத்தின் உறுதிப்பாடுகளைக் காக்க முனைவதில் கவனமாகக் காய் நகர்த்துகிறார்கள்.இதன் தொடரில் பிரணாப் முகர்ச்சி இலங்கை வந்து அரசியல் மற்றும் இராணுவத் தளபதிகளைச் சந்தித்துக் குசலம் விசாரித்துச் செல்கிறார்.இதையே தமது வெற்றியாகக் கருணாநிதியும் அவரது கட்சியும் கொண்டாடுகிறது.வர்க்கம் வர்க்கத்தோடு சேர்ந்தே அரசியல் செய்யும்!இதுதாம் வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் என்பது!
எனவே,இலங்கையில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இந்திய-ஆசியக் கூட்டுக்கள் வற்புறுத்தும் இந்தப் போர்ச் சூழலில் புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டபின் நமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைக்கடந்த அரசியல் கோரிக்கைகள் இரண்டாம்பட்சமென்பது அனைவருக்கும் புரியும்.எனவே,மக்கள் வயிற்றுப்பாட்டிற்குத்தாம் முதலிடம் கொடுப்பார்களேயொழிய சுயநிர்ணயப் போருக்கு அல்ல.வன்னியில் இவ்வளவு மோசமாக யுத்தத்தால் பாதிக்கப்படும் இந்த மக்கள் ஒருபோதும் போரை விரும்பார்.இதுவே,இந்திய-இலங்கையின் இன்றைய வெற்றி.இதைப் புலிகளே சாதித்துக் கொடுக்கின்றார்கள்.
ப.வி.ஸ்ரீரங்கன்.
29.01.2009