கடலோடி வாழும் கைகள் இணைந்தால் இடிமுழங்கும்!

வாழவிடுவென
மானுடம் போரிடுகிறது
உழைக்கும் வர்க்கமே ஓரணிசேரென
கூடங்குளத்தில்
அறைகூவல் கேட்கிறது!
நாளை உனக்கும் எனக்கும்
ஓடாகிப்போன நமக்காகவேதான் 
இடிந்தகரையில் எதிர்த்து நிற்கிறார்கள்

அந்தோனிசாமி
கதிர்வீச்சுக்கெதிராய் களமாடிய எம் தோழன்
கூலிப்படை வீசும் குண்டுபட்டும் 
அஞ்சுமா மக்கள் படை 
ஆர்ப்பரித்தெழுந்து
பாரதக்கரைகளில் பட்டுச்சிதறி
அகிலமெல்லாம்
புதுவீச்சைக் கொடுக்கிறது

இந்தோ பார்
தோள்த்துண்டு கசங்காமல்
கையசைத்தபடியே கைது செய்யப்படுவதும்
ஈழப்படுகொலையை
வாய்கிழியப்பேசும் வாக்குப்பொறுக்கிகளே
காக்கிச்சட்டை அணியாத 
அரச ஏவல்படைகள் நீங்களும் தான்

அணுமின் பிறப்பாக்கி
கொள்ளையிடும் கூட்டுச் சுறண்டலுக்கு
நாட்டையே 
சுடுகாடாக்க நாம் விடோம்
பெரும் கடல் அலையே 
தாலாட்டி 
வளர்தெடுத்த மக்கள் உயிரை
பன்நாட்டுப் பேய்கள் பேராசைக்கு
இரையாக்க யார் விடுவர்

ராட்டையொடு கொடிபறக்கும்
டில்லிக்கோட்டைக்கும்
இரட்டையிலை அம்மாவின்
கூட்டுக்கும்
கடலோடி வாழும் கைகள் இணைந்தால்
இடிவிழும் என்பது தெரியும்
தேர்தலுக்கு மட்டுமே எட்டிப்பார்க்கும்
சேதியல்லயிது
மூடிவிடு
நாளைய சந்ததி நடமாட வழியைவிடு....

-12/09/2012

Last Updated on Friday, 21 September 2012 06:31