கட்சி முடிவுப்படி சில படைகள் மட்டுமே சமவெளிகளில் தங்கியது. மற்ற பெரும்பான்மையான படைகள் காட்டிற்குள் சென்று தங்கின.


கிரிஜன்களுடைய நிலைமைகள்

 

காடுகளில் முக்கியமாக கோயாக்கள், செஞ்சுக்கள், காடுகளுடன் தொடர்பான கைத்தொழிலைச் சார்ந்திருந்தவர்கள் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் கோயாக்கள், மக்கள் படைகளை நம்பவில்லை. கோயா மக்களின் நிலைமைகள், அவர்களுடைய ஏழ்மைகளைத் தீர்க்க கட்சி நடத்தும் போராட்டங்களின் நோக்கங்கள் ஆகியவற்றைப் பொறுமையாக விளக்கிய பின்னரே, கோயா மக்கள் படைகளை நம்பத் தொடங்கினர். "பொடு' விவசாயம், கால்நடை உற்பத்தி, காட்டுப் பொருட்களைச் சேகரித்தல் ஆகியவை மக்களின் முக்கியமான வேலைகள். அவர்களால் இவற்றை நம்பி வாழ்க்கை நடத்த முடியவில்லை. அதனால் அவர்கள் உயிர்வாழ காட்டு வேர்களையும் மற்றவற்றையும் நம்பியிருந்தனர். காட்டுக் குத்தகைக்காரர்கள், காட்டு அதிகாரிகள், வியாபாரிகள், முட்டார்லு ஆகியோர் காடுவாழ் மக்களை பல்வேறு முறைகளில் சுரண்டி வந்தனர். காட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு வகையான கொத்தடிமைகளாக இருந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை காட்டிலேயே கழித்து வந்தாலும், அவர்களுக்கு (கிரிஜன்களுக்கு) விவசாயக் கருவிகளையோ, அல்லது காடுகளிலிருந்து கிடைக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்களையோ பெறுவதற்குக் கூட உரிமை இல்லை. அவர்கள் "பொடு' நிலங்களை தாங்கள் வாங்கிய கடன்களின்மூலம் வியாபாரிகளிடம் இழந்தனர். இதனால் வியாபாரிகள் நிலப்பிரபுக்களாக உயர்ந்தனர்.