குங்குமத்தில் ஆச்சி மனோரமா தான் முப்பது ஆண்டு காலமாக மனதில் அடக்கிவைத்து இருந்த மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, ஆண்மைக் குறைவுடைய ஆண்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாகவும், எனவே திருமணத்திற்கு முன் பரஸ்பரம் மருத்துவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் எனவும்,

ஆண்மைக் குறைவோடு பெண்களை ( ஏமாற்றி ) திருமணம் செய்யும் ஆண்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்காக ஒரு தனி அமைப்பை தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

இனியும் இந்த கருத்தை வெளியிடாமல் இருந்தால் தான் பெண்ணாக பிறந்தததே அர்த்தமற்றதாகிவிடும், எனவே இனி தன் வாழ்வில் மீதம் இருக்கும் நாட்களை இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்த பெண்களின் விடிவுக்காக செலவிடப்போவதாக கூறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி அவர் முதல்வரிடமும் ஒரு மனு கொடுத்திருக்கிறார்.

ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை ஏதும் இருப்பதற்கான அறிகுறி ஏதும் அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிகத்தான் வேண்டும்.

ஒரு தனி இயக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆண்மைக்குறைவு என்ன சர்வதேச பிரச்சினையா ? ஆச்சி குறிப்பிடுவதைப்போல பெருகிவரும் விவாகரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு தான் காரணமா ?

சரி, மனோரமா மீதான தனிப்பட்ட அன்பினால் முதல்வரே இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவே வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வாலி தலைமையில் ” ஆண்மையை ஆராயச்சொல்லி சட்டம் போட்ட ஆதவனே ” என்கிற தலைப்பில் கவியரங்கம் நடக்கும், டாக்டர் நாராயண ரெட்டி, காமராஜ் ஆகியோர்களின் மருத்துவமனை டோக்கன்களை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அராஜகமான வழிகளில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுவார், மருத்துவப்பரிசோதனையின் முடிவுகள் திமுக வினருக்கு மட்டும் பாசிடிவ் என்று வரும்படி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டுவார்.

இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கும் ?

முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையறை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.

ஆண்மைக்குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !! பெரும்பாலான விவாகரத்துக்களுக்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு ஒரு காரணமாக இருப்பது இல்லை. தம்பதிகளிடையேயான புரிதலில் உள்ள முரண்பாடும் தன் இல்லத்துணைக்கான குறைந்தபட்ச அன்பையும் மரியாதையையும் தரத் தவறுவதும்தான் மிகப்பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது.

கள்ளக்காதலின் கதை வேறு, முறையற்ற காதல் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான். பத்திரிக்கைகள் அதற்கு அளிக்கும் அதீத முக்கியத்துவம்தான் இதை ஒரு பெரிய சமூக சிக்கலாக காட்டுகிறது. ( சரியாக கவனியுங்கள்.. சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா பத்திரிக்கையும் எழுதுகிறது).

திருமணமாகும் பெண்கள் மட்டும் ஏமாற்றப்படுவதில்லை. காதலிலும் ஏமாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் நல்ல?! ஆண்மையுள்ள ஆண்களால்தான் கைவிடப்படுகிறார்கள்.

ஆண்மை இல்லாமல் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள், எனவே ஆண்மை  உள்ளவன்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் (கட்டாய பரிசோதனை என்பதன் பொருள் இதுதான்)., ஆண்மை உள்ளவன் காதலித்து ஏமாற்றுகிறான் (பலர் தன் ஆண்மையை காதலியிடம் பரிசோதித்துவிட்டுத்தான் கைவிடுகிறார்கள்- ஒருவகையில் இவர்கள் ஆச்சியின் யோசனையை 50% கடைபிடிக்கிறார்கள்).

எனவே இதைத்தடுக்க காதலிப்பவனுக்கு ஆண்மையே இருக்கக்கூடாது என ஒரு சட்டம் போடலாமா ? இதற்கு நிகரான மடத்தனம்தான் ஆச்சி வைக்கும் கோரிக்கையும்.

பெண்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்கிற மனோரமாவின் நோக்கம் நியாயமானது. அதில் தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் அவர் பிரச்சினைக்கு சொல்லும் காரணமும் அதற்கான தீர்வும் நகைப்புக்குரியவை. தனி இயக்கம் காணவேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏராளம் உண்டு. அதற்கு ஆச்சி போராட முன்வந்தால்  பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு… ஆச்சியை பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு.

-நன்றி வில்லவன்

http://www.vinavu.com/2009/10/07/manorama-infertility/