இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன.

 

இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவகங்கையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது நான்கு தோழர்கள் கருப்பக்கொடி காட்டி முழக்கமிட்டனர். தோழர்கள் அருகே இருந்த காங்கிரசு அடிப்பொடிகள் தோழர்களை தாக்க வந்தனர். மேடைக்கருகே வந்த எதிர்ப்பைப் பார்த்து திகைத்து நின்ற ராகுல் அதன்பிறகு மொத்தம் பதினைந்து நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். பதட்டத்தில் அவர் சிதம்பரம் பெயரையும், கை சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதற்கும் மறந்து மேடையை விட்டு இறங்க, உடனே சிதம்பரம் கையைப்பிடித்து இழுக்காத குறையாக ராகுல் மறந்து போனதைப் பேசுமாறு கூற ஒரு வழியாக கூட்டம் முடிந்தது.

 

சிவகங்கையை முடித்துவிட்டு திருச்சி உழவர் சந்தையில் ராகுல் காந்தி பேசுவதற்கு வந்தார். அவர் வந்த வாகன வரிசையை சாலையில் மறித்த பெண் தோழர்களையும் உள்ளிட்டு எழுபது தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டவாறு கருப்புக் கொடி ஏந்தினார்கள். எவ்வளவோ பாதுகாப்பு செய்து விட்டோமென இறுமாந்திருந்த போலீசு செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நிற்க அப்புறம் சகஜநிலைக்கு வந்து அனைத்துத் தோழர்களையும் கடுமையாக தடியடி செய்து கைது செய்தது. போலீசு வேன்களில் தோழர்கள் முழக்கமிட்டுச் செல்லும் காட்சியைப் பார்த்த ராகுல் காந்தியை போலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சாலையிலேயே வந்த மறியலைக் கண்டு உள்ளூர் காங்கிரசுக்காரர்கள் தலை தெரிக்க ஓடினார்கள். இந்த எதிர்ப்புக் குறித்து தமிழக காங்கிரசு வேட்டிகள் அவர்களது இளவரசரிடம் மறைப்பதற்கு முயலலாம். ஆனால் மத்திய உளவுத்துறை காங்கிரசுக் கோமானிடம் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிடும்.

ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு நிம்மதியாக வந்து செல்லமுடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தக் கருப்புக் கொடி எதிர்ப்பு ஒரு துவக்கம்.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்