PJ_2008_03 .jpg

கடந்த இருபது ஆண்டுகளாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் கட்டளைக்கு இணங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப நம் நாட்டு விவசாய கொள்கையை ஆளும் வர்க்கங்கள் திருத்தி அமைத்துள்ளன. இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர்; பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். மறுபுறம், என்றுமில்லாத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு ஏழை மக்கள் பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ""விவசாய பொருட்களின் சந்தையில் எந்த ஒரு மதிப்பூட்டலும் இல்லாமல் 38 முதல் 69 சதம் வரை இடைத்தரகர்கள் இலாபமாக ஈட்டுகிறார்கள். இதனால் உற்பத்தியாளர்களோ அல்லது நுகர்வோர்களோ எந்த ஒரு பயனும் அடைவதில்லை. மறுபுறம் விவசாயிகள், விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். மேலும், விவசாயிகள் பயிரிடப் போகும் பயிர்களுக்கு வருங்காலத்தில் என்ன விலை கிடைக்கும் என்றும் தெரியாமல் இருக்கிறார்கள். கூடுதலாக, இடைத்தரகர்களால் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எனவே, இப்பிரச்சினைகளைக் களைய விவசாயிகளை குழுக்களாக்கி நேரடியாக முன்பேர வர்த்தகத்தில்

 

((Future trading) ) இணைக்கப் போவதாக'' அரசு அறிவித்துள்ளது. அதற்கான ஒத்திகையும், அண்மைக் காலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

 

தற்போது விவசாய உற்பத்தியை உள்ளூர் வட்டாரங்களிலுள்ள சந்தைகளுக்கோ அல்லது மண்டிகளுக்கு கொண்டு வந்து விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்கிறார்கள். இதுவே இன்றுவரை பிரதான முறையாகும். இது, நேரடி விற்பனை (Spot trading) என்றழைக்கப்படுகிறது. இந்த நேரடி விற்பனை அண்மைக் காலமாக இணைய தளத்துடன் இணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இது, இணைய தளம் ஊடாக நேரடி விற்பனை (on line spot trading) என்றழைக்கப்படுகிறது. உதாரணமாக, பெங்களூரில் உள்ள சப்பல் சந்தையைக் கூறலாம்.

 

இதைத் தவிர, சமீப ஆண்டுகளாக விவசாயப் பொருட்களை விற்க இணையதள முன்பேர வர்த்தகம் முன்னுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. இம்முறையே வளர்ச்சியடைந்த நாடுகளின் பிரதான முறையாகும். இந்த முன்பேரச் சந்தையில் பெரும் வியாபாரிகள், உணவு பதனீட்டு நிறுவனங்கள் மற்றும் சங்கிலித் தொடர் கடைகள் பங்கேற்கின்றனர். இது, விற்பனையாளர் வாங்குவோர் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பின், ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலையில் தானியங்களை வாங்கவிற்க, இணையதளத்தின் மூலம் ஒப்புக் கொள்வதாகும். இப்படி வியாபாரிக்கும் நிறுவனங்களுக்கும் நடைபெறும் ஒப்பந்தம் ஃப்யூட்சர்ஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த ஃப்யூட்சர்ஸ்களைக் கொண்டுள்ள நிறுவனம், தனக்குத் தேவையில்லை அல்லது மற்றவர்களிடம் விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கருதினால் விற்கலாம். இறுதி தேதியன்று ஒப்பந்தம் யார் கைகளில் இருக்கிறதோ, அவர்கள் வியாபாரியிடம் பணத்தைக் கட்டி விட்டு பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளலாம். இவை அனைத்தும் NCDEX, NBOT, MCX, மற்றும் NMCE என்றழைக்கப்படும் பரிமாற்ற மையங்கள் மூலம் நடந்தேறுகிறது. (இவை மும்பை பங்கு சந்தை, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் போன்றவை). மேற்குறிப்பிட்ட எக்ஸ்சேஞ்சுகளை பார்வாடு மார்க்கெட் கமிசன் (""செபி''க்கு இணையானது) கட்டுப்படுத்துகிறது.

 

இன்று வரை முன்பேரச் சந்தையில் விற்பனை / விற்பனை ஒப்பந்தமானது, வியாபாரி வியாபாரி அல்லது வியாபாரி உணவு பதனீட்டு நிறுவனம் அல்லது சங்கிலி தொடர் கடைகளுக்கிடையில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அமல்படுத்தப்படப் போகும் புதிய திட்டத்தின் கீழ், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் உதவியுடன் விவசாயிகளை அவர்களின் உற்பத்தி பொருள் வாரியாக குழுக்களாக்கி, நேரடியாக உணவு பதனீட்டு நிறுவனம் மற்றும் சங்கிலித் தொடர் கடைகளுடன் முன்பேர வர்த்தகத்தின் மூலமாக இணைக்கப் போகிறது. விவசாயிகளைத் தொய்வின்றி முன்பேர வர்த்தகத்தில் இணைக்க பாரதிய கிஸான் யூனியன், கர்நாடக தட்டைப்பயிர் உற்பத்தியாளர்கள் சங்கம், கிஸாண் கோஆர்டினேசன் கமிட்டி, செத்காரி சங்கேதான், விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு போன்ற விவசாய சங்கங்களை களத்தில் இறக்கியுள்ளது.

 

மேலும், ""முன்பேர வர்த்தகத்தில் விவசாயிகள் இணைவதன் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட விலை கிடைக்கும்; எந்தப்பொருளை எப்பொழுது, எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும்; சேமிக்க வேண்டும் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்; இதன்மூலம் வெளிப்படையான சந்தையை உருவாக்க முடியும். உணவு விநியோகத்தைச் சீர்படுத்தி உணவுப் பாதுகாப்பை பலப்படுத்த முடியும்'' என ஆளும் வர்க்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

 

ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக முன்பேர வர்த்தகமானது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் கணிசமான பங்காற்றியுள்ளது; பதுக்கலுக்கும் வழிவகுத்துள்ளது என்றும்; இது தடை செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் சில்லறை வியாபாரிகளும் போராட்டத்தை நடத்தினர்; நடத்தி கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியில், முன்பேர வர்த்தகத்தில் நேரடியாக விவசாயிகளை இணைத்து பிரச்சினைகளை தீர்த்து, உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த போவதாக அரசு கூறுகிறது. இது உண்மையா என்று கேள்வி நம்முன் எழுகிறது.

 

உள்ளூரளவில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை அந்த மாவட்டத்தின் அல்லது மாநிலத்தின் உற்பத்திச் செலவு மற்றும் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். இதையும் மீறினால் நாட்டின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். சில நேரங்களில் சந்தையில் பங்கேற்கும் பெரும் வியாபாரிகள், பதுக்கி வைத்து விலையை ஏற்றுவதும் நடந்தேறும். இவைகளெல்லாம் நம் நாட்டின் எல்லைக்குள்ளே நடந்தேறும். இப்பொழுது முன்னுக்கு வந்துக் கொண்டிருக்கும் முன்பேர வர்த்தகத்தில், உலகம் முழுவதும் உள்ள முன்பேர சந்தைகளுடன் இந்தியச் சந்தை இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவில் உள்ள முன்பேர வர்த்தக சந்தையில் மாற்றம் ஏற்பட்டால் அது இந்திய சந்தையையும் பாதிக்கும். மறுபுறம் முன்னரே ஒப்பந்தங்களை வாங்குவோர்களாக இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று வருகின்றன. இதை தவிர பன்னாட்டு ஊக வணிக நிதி முதலீட்டாளர்கள் பங்கேற்க ஒத்திசைவாக சட்டங்களை மாற்றுவதற்கான வேலையையும் இந்திய அரசு செய்து வருகின்றது.

 

முன்பேர வர்த்தகத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் பல்வேறு சந்தை ஆய்வு நிறுவனங்களைக் களத்தில் இறக்கி உலகளாவிய மற்றும் நாடு வாரியான விவசாய உற்பத்தி, பற்றாக்குறை, சேமிப்பு, பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், அதன் பரப்பளவு, சந்தைக்குள் வரவு போன்ற பல்வேறு தகவல்களைத் திரட்டி கொள்கின்றன. மேலும் இந்நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சரவையுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டு அரசுகளின் கொள்கை முடிவுகள், உணவு சேமிப்புக் கிடங்குகளில் உள்ள பற்றாக்குறை, உபரி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தேவைகளை சார்ந்த விசயங்களை அரசு வெளியிடுவதற்கு முன்பே அறிந்து கொள்கின்றன. (உதாரணத்திற்கு இந்திய அரசு கோதுமையை இறக்குமதி செய்யப் போகிறது என்பதை அறிவிப்பதற்கு முன்பே, அரசிடமிருந்து கறந்து உலக சந்தையில் கோதுமை விலையை ஏற்றிவிட்டார்கள்.)

 

இப்படி சந்தையின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் கைகளிலில் வைத்துக் கொண்டு, முன்பேர வர்த்தகத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டமைத்து கொண்டு கொள்முதல் செய்யப்போகும் பொருட்களின் விலையையும் தீர்மானிக்கின்றன. மேலும், பதுக்கல் மற்றும் கடத்தலுக்கான அனைத்து கட்டுமானம் மற்றும் இதர வசதிகளையும் கொண்டுள்ளன. இப்படி மிருக பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனங்கள்ஒருபுறம்; தங்கள் மாவட்டத்தில் என்னென்ன எவ்வளவு உற்பத்தி நடந்தேறியிருக்கிறது என்று கூட அறிய முடியாமல், உற்பத்தியை மட்டுமே கையில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள்.

 

ஆகவே, முன்பேர வர்த்தகத்தில் சந்தையின் தேவையோ அல்லது விவசாயிகளோ விலையைத் தீர்மானிக்க முடியாது. மாறாக, பன்னாட்டு நிறுவனங்கள் விலையைத் தீர்மானிப்பார்கள். ஆகையால், முன்பேர வர்த்தகத்தில் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும். இதே கருத்தை நவம்பர் 16, 2007 தேதியிட்ட ""பிசினஸ் லைன்'' என்கிற ஆங்கில நாளேடு தன் தலையங்கத்தில் கூறியுள்ளது. மேலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட விவசாயிகள் நேரடியாக முன்பேர வர்த்தகத்தில் பங்கேற்பது கிடையாது என்கிறது. இதைத்தவிர, காலப்போக்கில் முன்பேர வர்த்தகத்தினால் நேரடி விற்பனை வாய்ப்புகள் குறைந்து, வட்டாரளவில் செயல்படும் சில வியாபாரிகள், மண்டிகள், மண்டித் தொழிலாளிகள் வாழ்விழக்க நேரிடும்.

 

இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, முன்பேர வர்த்தகத்தினால், நம் நாட்டின் அரைகுறையான உணவுப் பாதுகாப்பு மேலும் கேள்விக்குள்ளாக்கப்படும். ""சமீப காலமாக பன்னாட்டு ஊக வணிக நிதி நிறுவனங்கள் வெளிநாடுகளின் முன்பேர வர்த்தகத்தில் கணிசமான முதலீடு செய்து வருகின்றனர். இவர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்து கொண்டு வருகிறது'' என்கிறது உணவு மற்றும் விவசாய கழகத்தின் ஆய்வு (டிச.11, 2007; பிசினஸ் லைன்) இவர்கள் விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்யமாட்டார்கள். விவசாயி மற்றும் நிறுவனத்திற்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை (ஃப்யூட்சர்ஸ்) வைத்திருக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கி, கைமாற்றி கொண்டே இருப்பார்கள். அதாவது, வேறு ஏதாவது நிறுவனத்திடம் விற்பார்கள். இந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். இதன் மூலம் கணிசமான இலாபத்தை சம்பாதிப்பார்கள். இதுதான் ஊக வணிக சூதாட்டமாகும்.

 

இவர்கள், உற்பத்திக்கும் வியாபாரத்திற்கும் எந்தவித நேரடி தொடர்பில்லாமல் இருக்கும் சூதாட்ட கொள்ளைகாரர்கள். இவர்களின் சூதாட்டமானது, உணவுப் பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் விலை குறைப்புக்கும், நுகர்வு இடத்தில் விலையேற்றத்திற்கும் இட்டு செல்லும். இதனால், உற்பத்தியாளனுக்கும் நட்டம், நுகர்வோனுக்கும் நட்டம். குறிப்பாகக் கூறினால், விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் விரட்டியடிக்கப்படுவார்கள்; அரைகுறையாய் இருக்கும் உணவுப் பாதுகாப்பும் சிதைக்கப்பட்டு விடும்.

 

முன்பேர வர்த்தகம் என்பது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானது. அப்படிப்பட்ட முன்பேர வர்த்தகத்தில் விவசாயிகளை இணைப்பது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்த இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் காவு கொடுப்பதாகும். குப்புறத் தள்ளிய குதிரை, குழியையும் பறித்த கதையாக, ஏற்கெனவே விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கிய தாராளமயமும் உலகமயமும், இப்போது முன்பேர வர்த்தகத்தின் மூலம் விவசாயிகளை மரணப்படுகுழியில் தள்ளக் கிளம்பி விட்டது. நெருங்கிவிட்ட இப்பேரபாயத்துக்கு எதிராக விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர, இனி வேறென்ன வழி இருக்கிறது?


· சுடர்