PJ_2008_03 .jpg அந்நியச் செலாவணி எனும் எச்சில் காசுக்காக இந்தியப் பெண்களின் மானத்தை விற்கலாம்; வாடகைத் தாயாக மாறித் தாய்மையை விலை பேசலாம்; நாட்டின் இறையாண்மையை அமெரிக்க அணுசக்திக்காக விற்கலாம்; நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உயர்கல்வி கற்று, உலக மேலாதிக்க அமெரிக்காவின் ""நாசா''வுக்கு ஏவுகணைகள் தயாரிக்கக் கட்டளை நிரல்கள் (கம்ப்யூட்டர் புரோகிராம்) எழுதலாம் இப்படியெல்லாம் புதிய நீதிநெறிகள் உருவாக்கப்பட்டுள்ள மறுகாலனியக் கட்டமைவுக்குள்,

துரத்திக் கொல்லும் வறுமையிலிருந்து விடுபட உடல் உறுப்புகளை ஏழை மக்கள் விற்கலாம் என்பதுதானே நெறிமுறையாக இருக்க முடியும்?

 

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கு தடையற்ற சிறுநீரக வர்த்தகம். ஒவ்வொருமுறை பிடிபடும் போதும், விரைவிலேயே விடுதலை. பெயரை மாற்றிக் கொண்டு பல ஊர்களில் 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிறுநீரகத் திருட்டு. இதன் மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்து, சுகபோகம் எனத் "தொழில்' நடத்தி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் டாக்டர் அமீத்திடம் கேளுங்கள். இவற்றையெல்லாம் குற்றமாகவே ஒப்புக் கொள்ள அவர் மறுக்கிறார்.

 

மும்பையிலிருந்து அரியானாவின் குர்கான் வரை, 1993இலிருந்து நேற்றுவரை, வறுமையில் வாடும் கூலித் தொழிலாளர்கள் நடைபாதைவாசிகளிடம் நைச்சியமாகப் பேசியோ, பண ஆசை காட்டியோ, இழுத்து வந்து மிரட்டியோ அவர்களின் சிறுநீரகங்களை எடுத்து, அமெரிக்கஅராபிய பெரும் பணக்கார நோயாளிகளுக்குப் பொருத்தும் தொழிலை டாக்டர் அமீத் செய்து வந்துள்ளார். இந்த ஏழைகளிடம் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை வீசியெறிந்து விட்டு, அவர்களின் சிறுநீரகத்தை எடுத்துக் கொண்டு அதனை மேலைநாட்டு கோடீசுவர நோயாளிகளுக்கு ரூ. 20 லட்சம் வரை விற்றிருக்கிறார்.

 

இவ்வாறு செய்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம். ஆனாலும் டாக்டர் அமீத் விவகாரத்தில் இச்சட்டம், 500க்கும் மேற்பட்ட தடவைகளில் மீறப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் போலீசு நீதித்துறை அதிகார வர்க்கம் அடங்கிய அரசு எந்திரமே டாக்டர் அமீதுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.

 

பல நாடுகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 1980களில் இந்தியாவில் கணக்கு வழக்கின்றி பல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. பின்னர், இதில் நடக்கும் மோசடிகளைத் தடுத்து முறைப்படுத்த 1994இல் புதியதொரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, வணிகத்துக்காக உடல் உறுப்பு மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம். இருப்பினும், சட்டத்தை உருவாக்கும்போதே அதனை மீறுவதற்காக ஒரு உட்பிரிவை அதில் புகுத்தியுள்ளனர்.

 

இதன்படி, ஒரு நோயாளிக்கு அவரது இரத்தவழி உறவுடைய உடன்பிறந்தவர்களோ, மகனோ, மகளோ அல்லது பெற்றோரோ உடல் உறுப்பைத் தானமாகக் கொடுக்கலாம். இதுதவிர, மனிதாபிமானத்துடன் உணர்வுபூர்வமான கொடையாளியும் தானமாக தனது உடல் உறுப்புகளை வழங்கலாம். இரத்த வழி உறவற்ற இந்த "உணர்வுபூர்வமான கொடையாளி' எனும் பிரிவைப் பயன்படுத்தித்தான் மருத்துவ வியாபாரிகள் தமது "தொழிலில்' கொடிகட்டிப் பறக்கின்றனர். ஏழைகளின் சிறுநீரகங்களை விலைபேசி, அந்த ஏழைகள் கண்ணால் கூடப் பார்த்திராத அமெரிக்க அராபிய கோடீசுவர நோயாளிகளுக்கு "உணர்வுபூர்வமாக'த் தமது உடல் உறுப்புகளைத் தானமாகத் தந்ததாகக் காட்டிச் சட்டப்படியே சட்டத்தை ஏய்த்து வருகின்றனர்.

 

இங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக நேபாளத்தில் பதுங்கியிருந்த டாக்டர் அமீதை இந்தியப் போலீசார் கைது செய்துள்ளதை ஏதோ வீரசாகசச் செயல்போல ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆனால், அமீதின் மருத்துவமனையைச் சோதனையிடப் போகிறார்கள் என்ற தகவலை, உயர்போலீசு அதிகாரிகளே அவருக்குத் தெரிவித்து தப்பியோட உதவியுள்ளனர். இதிலிருந்தே "சட்டத்தின் ஆட்சி' எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

இன்று டாக்டர் அமீது கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், நாடெங்கும் இரகசிய உலகத் தொழிலாக உடலுறுப்பு வணிகம் தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வப்போது பெயரளவிலான சோதனை நாடகங்கள் நடத்தப்பட்டு, மருத்துவ வியாபாரிகள் தப்புவிக்கப்படுகின்றனர்.

 

தமிழகத்தில் மதுரை, பள்ளிப்பாளையம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் சிறுநீரக வியாபாரத்தில் பல மாஃபியா கும்பல்கள் ஈடுபட்டு வந்தபோதிலும், நெசவாளர்கள் தமது சிறுநீரகங்களை விற்ற அவலங்கள் கதைகதையாக வெளிவந்த போதிலும் இக்கும்பலை சேர்ந்தவர்களோ, அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்களோ இன்று வரை கைது செய்யப்படவில்லை. தேவர் சாதிப் பிரமுகரான டாக்டர் சேதுராமனின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வாரத்துக்கு மூன்று வீதம் சென்னை சுனாமி முகாம்வாசிகளின் சிறுநீரகங்கள் அறுத்தெடுக்கப்பட்டு, அவை மேட்டுக்குடி நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு, இந்த வியாபாரம் கொடிகட்டிப் பறந்தபோதிலும், இந்த உண்மைகள் பத்திரிகைகளில் வெளிவந்து நாறிய போதிலும், சட்டம் பல்லிளித்துக் கொண்டுதான் நின்றது.

 

ஒருவேளை இந்தச் சட்டத்தைக் கறாராகச் செயல்படுத்தினாலும்கூட, மருத்துவத்தை வியாபாரமாக்கும் அறநெறியற்ற மருத்துவர்கள் தூக்குமேடைக்குப் போகப் போவதில்லை. உடலுறுப்புகள் உறவினர்களிடையே மாற்றப்படவில்லை என்பதையும் வணிகரீதியாகத்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்பதையும் சட்டப்படி நிரூபித்தாலும் கூட, 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களது சொத்துக்களும் மருத்துவர் தகுதியும் பறிக்கப்பட மாட்டாது. இந்தப் "பயங்கர' சட்டத்தைத்தான் கறாராகச் செயல்படுத்த வேண்டுமென்கின்றன, செய்தி ஊடகங்கள். அமைச்சர் அன்புமணியோ அவசியமான திருத்தங்களைச் செய்து இச்சட்டத்தை இன்னும் கடுமையாக்கப் போவதாகப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்.

 

விவசாயத்தையும் நெசவையும் சிறுதொழில்களையும் தாக்கி அழித்து மரணப் படுக்கையில் வீழ்த்தியுள்ள மறுகாலனியாதிக்கம், இந்நாட்டு மக்கள் உயிர் வாழ்வதற்குத் தமது உடல் உறுப்புகளை விற்கும் அவலத்திற்குத் தள்ளியுள்ளது. மரணக் குழியில் மக்களைத் தள்ளும் மறுகாலனியாக்கமே, ஏழைகளின் உடல் உறுப்புகளைக் கூறுபோட்டு விற்கும் தரகர்களையும் உருவாக்குகிறது. இத்தரகர்களும், மருத்துவ வியாபாரிகளும் அதிகார வர்க்கமும் போலீசும் கூட்டுச் சேர்ந்து "தொழில்' நடத்துவதற்கேற்ப காகிதச் சட்டங்களையும் இயற்றி வைத்துள்ளது.

 

இதனால்தான், இந்தியாவில் கிடைக்கும் மலிவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மலிவு விலை மருத்துவ சிகிச்சைகளைக் காட்டி, ""மருத்துவச் சுற்றுலா''க்களை வளர்க்க ஏராளமான சலுகைகளை வாரியிறைக்கிறது, புதிய பொருளாதாரக் கொள்கை. செட்டிநாடு மருத்துவமனை, பெரியார்புரா போன்று பல மருத்துவச் சுற்றுலா மையங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், சட்டத்தை மேலும் கடுமையாக்குவதல்ல; உடல் உறுப்புகளை விற்று உயிர்வாழும் நிலைக்குத் தள்ளியுள்ள மறுகாலனியாக்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் மேலும் கடுமையாகப் போராடுவதொன்றே, இந்த அவலத்தையும் அமீதுகளின் கொட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும்.


· அன்பு