oct_2007_pk.jpg

டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல, ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் அழகுபடுத்தப்படும் உலகப் பெருநகரம். உலகமய விளம்பரதாரர்கள் ""உலகமயம் என்பது உலக யதார்த்தம், அது வந்தே தீரும். நமது சொந்த விருப்பத்தினால் வருவதும் போவதும் அல்ல'', என்று சொல்கிறார்கள். அதாவது அந்த எடுபிடிகளின் டெல்லி மாநகரத்தில், ஒரு பொது விடுதியில் லெபனான் சமையல் மணக்கிறது; ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நவீன இசை கதறுகிறது; உள்ளே ஐரீஷ் நாட்டுப் பீப்பாய்களிலிருந்து சாராய மழை பொழிகிறது;

 மேட்டுக்குடி பள்ளிக்கூடத் திடலில் ஏதோ ஒரு ஆங்கில இசை நாட்டிய நாடகத்துக்கான அறிவிப்பு விளம்பரத் தட்டியாகக் கண்ணைப் பறிக்கிறது. சுருக்கமாக, அரசியல் வியாபாரம் உடல்நலம் கேளிக்கை பொழுது போக்கு என்று அனைத்துத் துறைகளும் உலகமய முத்திரையோடு உருமாறி டெல்லியில் உலாவுகின்றன. நமது டெல்லி நகரத்தை அவர்களின் ஆட்சி மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கிறது.

 

மேட்டுக்குடிகளின் சொர்க்கபுரியாக மாற்றப்படும் டெல்லி நகரத்தில் அந்த மாற்றத்துக்காக உழைத்து உருக்குலையும் சாதாரண மக்களுக்கு இடமில்லை. அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.

 

· சுற்றுச்சூழலுக்கு நல்லது என்ற பெயரில் ஆட்டோ, டாக்சி, பேருந்து எல்லாமே எரிவாயு மூலம் ஓட்டவேண்டும். மற்ற வாகனங்கள் தடை செய்யப்படும்.

 

· மூன்று சக்கர வண்டிகள், மீன்பாடி வண்டிகள், பார வண்டிகள், மாடுகுதிரை வண்டிகள் நகர்ச்சாலைகளில் ஓடக்கூடாது.

 

· குடியிருப்புப் பகுதிகளில் கடைகளே இருக்கக்கூடாது. நடுத்தர வியாபாரிகளின் கடைகளுக்குப் பூட்டு போட்டுச் சீல் வைத்தார்கள்.

 

· குடிசைப் பகுதிகள் ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டருக்கு வெளியே அள்ளி வீசப்பட்டன.

 

— இவை அத்தனையும் உச்சநீதிமன்ற ஆணைகளாக வெளிவந்து மக்கள் மீது திணிக்கப்பட்டவை.

 

இந்த அடக்குமுறை ஆணைகளில் கடைசியாக வந்திருப்பது, தெருவோர சாப்பாட்டுக் கடைகளை மூடவேண்டும் என்ற ஆணை. வேலை தேடி டெல்லிக்கு வரும் இலட்சக்கணக்கான மக்கள் அற்பக்கூலியை வைத்தே வாழ்கின்றனர். இவர்களது வயிற்றுப்பசி ஆற்றும் ஆதாரம் இந்தத் தெருவோரக் கடைகள்தாம். இனி அம்மக்கள் என்ன செய்வார்கள்?

 

டெல்லியில் மட்டும் சுமார் 3 இலட்சம் தெருவோர உணவுக் கடைகள் இருக்கின்றன. ஒரு கடை சுமார் ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வாழ்வளிக்கும் என்றால் சுமார் 15 இலட்சம் உயிர்கள் இன்று நிர்க்கதியாகப் போகின்றன. இப்படி உழைக்கும் மக்களை அப்புறப்படுத்தி டெல்லியைச் சுத்தப்படுத்தி முதல்தரமான நகரமாக உருவாக்குவதே அரசின் நோக்கம். சொல்லப்போனால் நாட்டின் ஏனைய நகரங்களை இப்படி மாற்றுவதற்கு டெல்லி ஒரு முன்னோட்டம். இது தவிர, ஏற்öகனவே வெவ்வேறு மாநிலங்களில் அங்கு திணிக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஹைடெக் நகரங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றுக்காகப் பல புதிய ஆணைகளும் திட்டங்களும் அந்தந்த மாநில அரசுகளால் "சுதந்திரமாக'ப் போடப்பட்டு வருகின்றன.

 

டெல்லியில் 2010ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, இந்த அழகு படுத்தும் முயற்சிக்கு ஒரு முகாந்திரமாகியிருக்கிறது. இனியும் இப்படிப்பட்ட பல முகாந்திரங்கள் தொடரும்.

 

அந்த முகாந்திரங்களுக்காக பிழைப்பையும், வாழ்வையும் ஒரு சேரப் பறிகொடுத்திருக்கும் ஏழை எளிய மக்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்?

 

""தெருவோரக் கடைகளில் சுத்தம், சுகாதாரம், தரம் மூன்றுமில்லை'' என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு, தெருக்கடையில் பிரியாணி விற்கும் ஷப்பீர் பதில் தருகிறார்: ""கறி ஒரு கிலோ ரூ. 40, அரிசி ஒரு கிலோ ரூ. 30, பருப்பு ஒரு கிலோ ரூ.35 இதிலிருந்து தயாரிக்கப்படும் எங்கள் பிரியாணி பாருங்கள்'' ஒரு ஸ்பூன் பிரியாணியை அள்ளி தூவிக் காட்டுகிறார் ஷப்பீர். பிரியாணி குங்குமப்பூ நிறத்தில் மின்னுகிறது. ""நாங்க சனங்களைக் கொள்ளை அடிக்க மாட்டோம், நம்ம ஆளுங்க இங்க ஏன் வராங்க? சுத்தமான பிரியாணி, மலிவு, ருசி மூணும் வேற எங்க கிடைக்கும்? ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல கிடைக்குமா?''

 

மீன்கறிச் சோறு விற்கும் அனில், சுத்தம் என்பதற்கு வேறு விளக்கம் தருகிறார். ""நாங்க கண் முன்னால சமைச்சு விக்கிறோம். பெரிய ஓட்டல்ல போடற மீன், கறி, நண்டு, எறா, சொறா, சோறு என்னைக்குச் செஞ்சதுன்னு நீங்க கேக்கத்தான் முடியுமா? ஏழைங்க வேற எங்க சாப்பிடப் போவாங்க? அத முதல்ல சொல்லுங்க. சரி, எங்க கடைங்கள நம்பர் ஒன் கடையாக்க என்ன செய்யணுமாம்? பிளாட்பாரத்துல ஷோரூம் போடணுமா?'' சுற்றி வளைத்துப் பேசத் தெரியாத அனிலின் பதில் இது.

 

தெற்கு டெல்லி ஓக்லா தொழிற்பேட்டையின் ஒரு மூலை. ஓக்லா தொழிற்பேட்டையில் பாரதி, பகார்டி, நிக்கான் போன்ற பிரபலமான பன்னாட்டுக் கம்பெனிகளின் பளப்பளவென நிற்கும் கட்டிடங்கள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் — பழைய டெல்லியின் கதை சொல்லும் பூச்சுக்கள் வெளிறிப்போன, இடிந்து அழிந்து வரும் பழைய கம்பெனிகள்.

 

அதில் ஒரு பழைய கம்பெனிதான் மோடி ஆலை. அருகே பஸ் ஸ்டாண்டு. வரிசையாக நடுத்தர ஓட்டல்கள், கடைகள். இங்கே வண்டிக் கடை போட்டதற்காக ஓட்டல் முதலாளிகளாலும் போலீசாலும் விரட்டப்பட்டவர் ஹர்பால் சிங். நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசின் லஞ்ச ஊழல்களுக்குள்ளே சிக்கி நாசமாகி, வாழ்க்கையில் ஏராளமாகக் கற்றுக் கொண்டுவிட்டார் ஹர்பால்சிங். இப்போது கொஞ்சம் தொலைவில் குப்பைமேடுகளின் அருகே, தொழிலாளிகள் பகுதி ஒன்றில் பிளாட்பார வண்டிக் கடை போட்டிருக்கிறார்.

 

ஹர்பால், அவரது மனைவி, இரு பெண் குழந்தைகள், ஊரிலிருந்து இவரை அண்டி வாழ வந்துவிட்ட இரண்டு உறவுப் பையன்கள். மொத்தம் 6 பேர் அந்தக் குடும்பம். பசங்களின் படிப்புக்கும், எதிர்காலத்தில் மூத்த பெண்ணுக்கு மணம் முடிப்பதற்காகக் கொஞ்சம் சேமிக்கவும், அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்காகவும் அவர் சம்பாதிக்க வேண்டும். ஹர்பால் சிங்கின் கேள்வி எளிமையமானது. ""தடைக்கு யார் காரணம்? என்ன காரணம்? காமன் வெல்த் விளையாட்டு மேளா 2010இல் வரப்போகுது. அதுக்காக டெல்லிய அழகு படுத்தறாங்க. ஆஸ்திரேலியாவப்போல டெல்லி அழகா இருக்கணுமாம். அப்ப ஆஸ்திரேலியாக்காரங்க வாழற மாதிரி எங்கள எப்ப வாழ வைக்கப் போறீங்க?''

 

இவரைப் போலவே 1981இல் டெல்லிக்கு தன் தம்பியோடு வந்தவர் ஷியாம் சிங். இவரது ஊர் பரேய்லி. தெருக்கடை போட்டு பரோட்டா விற்கிறார். அந்த ஏரியாவிலேயே பிரபலமான கடை. அவர் யதார்த்தமாகக் கேட்கிறார். அரசின் வரப்போகிற சதித் திட்டங்களையும் ஊகித்துச் சொல்கிறார்.

 

""எங்கள மாதிரி ஏழைகளை எல்லாம் டெல்லியை விட்டு விரட்டணும்னு நெனைக்கிறாங்க. எத்தனை நாள் விரட்டுவாங்க? அப்படி விரட்டுனா, நகரத்துலே கால்வாய், பள்ளம் தோண்டுறவங்களுக்கு யார் சோறு போடுவாங்க? என்ன இப்படிப் பேசறானேன்னு நினைக்காதீங்க, அவுங்க ஒருவேளை இப்படிகூடச் செய்யலாம் டெல்லியில ஆகவேண்டிய உடல் உழைப்புக்கும் அழுக்கு வேலைகளுக்கும் எங்களை தினமும் வெளியிலிருந்து கொண்டுவந்து, உழைப்பை ஒட்ட உறிஞ்சிக்கிட்டு கண்காணாத் தொலைவுல மறுபடி அங்கேயே கொண்டு போய்ப் போட்டுருவாங்களோ?'' செய்வார்கள். நாட்டின் பல இடங்களில் இனி இப்படித்தான் நடக்கும்.

 

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் பந்த் என்பவர் தெரு உணவுக் கடைகளைத் தடை செய்யும் நீதிபதி உள்ளிட்ட மேட்டுக் குடிகள் ஏகாதிபத்தியச் சந்தைக்குச் சோரம் போனவர்கள் என்றும் ""சர்வதேசத் தரம் கொண்ட