oct_2007_pk.jpg

உலகெங்கும் உள்ள மார்க்சிய லெனினியவாதிகள் கற்றுத் தேறவேண்டிய முக்கியமான பாடத்தை ஆசான் லெனினது வாழ்வும் நடைமுறையும் கொண்டிருக்கிறது. சோசலிசப் புரட்சி குறித்த நம்பிக்கையும் நடைமுறையும் கொண்டிருக்கும் பொதுவுடைமையாளர்களுக்கு லெனின் எப்போதும் உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார். அவருடைய கையைப் பற்றிக் கொண்டுதான் எதிர்காலத்திற்கான பணியை நிகழ்காலத்தில் துடிப்புடன் செய்கிறோம். அவருடைய வாழ்க்கை என்பது இறந்த காலமல்ல, அது நிகழ்காலம். முதலாளித்துவ உலகம் மார்க்சியத்தின் மீதான அவநம்பிக்கைகளைக் கட்டவிழ்த்து விடும் போதெல்லாம் அதை எதிர்த்துப் போரிடுவதற்கான ஆயுதங்களை லெனினது பாசறையிலிருந்தே பெறுகிறோம். லெனின் என்ற பெயரே உற்சாகத்தையும், துடிப்பையும், போர்க்குணத்தையும் நமக்கு தோழமையுடன் வழங்குகிறது.

"பறையோசையின் திரைத்தாளம்' குழுவினர் இத்தகைய உணர்ச்சியிலிருந்து லெனினது வாழ்க்கை வரலாற்றை முப்பது நிமிட ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறார்கள். 1870 ஏப்ரல் 22ஆம் நாளில் லெனின் பிறந்ததிலிருந்து 1924 ஜனவரி 21ஆம் நாள் மறையும் வரையிலான வரலாற்றின் சுருக்கமான அறிமுகத்தை படம் தருகிறது. மழலைப் பருவத்திலிருந்து மறையும் நாள் வரையிலான லெனினது அரிதான புகைப்படங்கள், ஓவியங்கள், சில விநாடிகள் அவர் பேசும் வீடியோக் காட்சிகள், அவரது வரலாற்றில் இடம்பெறும் சமகாலத்தவர்கள் சிலரது புகைப்படங்கள், முக்கியமான வரலாற்றுக் காட்சிகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றை மட்டும் வைத்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பது மிகவும் சவாலானது. அதில் படக்குழுவினர் வெற்றியடைந்துள்ளனர் என்றே சொல்லவேண்டும்.

 

மு.கலைவாணனின் கம்பீரமான வருணனையும், மு.க.பகலவனின் அழகான படப்பதிவும், படத்தொகுப்பும், குருசாமி மயில்வாகனனின் நேர்த்தியான தொகுப்பாக்கமும் படத்திற்கு மெருகூட்டுகின்றன.

 

லெனினது வாழ்க்கைச் சம்பவங்கள் காலவரிசைப்படி எளிமையான முறையில் தொகுத்துச் சொல்லும் இப்படம், லெனின் என்ற புரட்சிகர ஆளுமை, எதையெல்லாம் எதிர்த்து, எவற்றோடெல்லாம் வினையாற்றி, எவற்றையெல்லாம் வென்று, எப்படித் தோன்றி வளர்ந்தது என்ற கோணத்தில் இல்லையென்றாலும் லெனினது வாழ்வைக் காட்சிப் பதிவுகளோடு மனதில் நிறுத்துகிறது. படத்தின் முதல் காட்சியில் சொல்வது போல லெனினது வாழ்வைப் பற்றி ஆயிரம் ஆவணப்படங்கள் எடுக்கலாம். அதில் சேருவதற்கான தகுதியை படம் பெற்றிருக்கிறது. படக்குழுவினருக்குப் புரட்சிகர வாழ்த்துக்கள். தோழர்களும் வாசகர்களும் இப்படத்தினை வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


லெனின்:
எதிர்காலத்திற்கான வரலாறு
விலை: ரூ.50/
தொடர்பு முகவரி:
பறையோசை பதிப்பகம்,
1</ 171, பி.அழகாபுரி,
கீழச்செவல்பட்டி630205,
சிவகங்கை மாவட்டம்.


கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்