மனிதவிரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விட்டு புலம்பும் நினைவுகள் வாழ்வாகி, அதுவே மனித அவலமாகி நிற்க – அதை வியாபாரமாக்குகின்றது இனவாதக் கூட்டம்.

புலிகள் தங்கள் குறுகிய மக்கள்விரோத இனவாத தமிழ் பாசிச அரசியலுக்காக, தம் இயக்கத்தில் மரணித்தவர்களை மட்டும் நினைவுகொள்ள உருவாக்கியதே மாவீரர் தினம். புலிகள் இயக்கத்தில் இருந்து பலியாகியவர்களை புதைத்த இடம், மாவீரர் தின நிகழ்வுக்குரிய இடமாக மாறியது. ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் புதைக்கப்பட்ட மண்ணில், கண்ணீரோடு கூடிய மனித உறவுகளின் சமூகத் துயரமானது, புலிகளின் மனிதத் தன்மையற்ற நடத்தைக்கே முரணானது. மனிதவிரோதத்துடன் நடத்திய இனவாத யுத்தத்தில் மரணித்தவர்களையும், அது ஏற்படுத்திய மனித அவலக் கண்ணீரையும் கொண்டு, புலிகளின் இருப்பு பலப்படுத்தப்பட்டது. புலிகள் தம் இருப்புக்கான இத்தகைய மரணங்களையும் - அது உருவாக்கும் மனிதக் அவலக் கண்ணீரையும் தம் அரசியல் இருப்புக்காக நேசித்தனர். அதேநேரம் புலிகள் தாமல்லாதவர்களை கொன்று குவித்து, அந்த மரணத்தைக் கொண்டாடினர். இவை எல்லாம் அக்கம் பக்கமாகவே நடந்தேறியது.

2009 இறுதியுத்தத்தின் பின் புலிகள் இல்லை. ஆனால் அரசு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை இனவாதம் மூலம் ஏமாற்றி ஒடுக்க, இல்லாத புலிகள் இருப்பதான போலி விம்பத்தைக் காட்டவும் - கட்டமைக்கவும் தொடர்ந்து முனைகின்றது. இதற்காகவே மரணித்தவர்களை, அவர்களின் உறவுகளை நினைவுகொள்வதை மறுக்கின்றது. இனரீதியான கெடுபிடிகள் மூலம், இனவொடுக்குமுறையை அரசியல்ரீதியாக உயிரோடு தக்க வைத்துள்ளதுடன், அதை தொடர்ந்து பாதுகாக்க முனைகின்றது.

இதற்கு எதிராக அரசின் அதே இனவாத அடிப்படையில் தமிழ் இனவாதத்தை முன்வைப்பவர்கள், தாங்கள் புலிகளை நினைவுகொள்வதான பொது விம்பத்தை உருவாக்கவும் - காட்டவும் - கட்டமைக்கவும் முனைகின்றனர். புலத்திலும், தமிழகத்திலும் புலியாகவே, தம்மை முன்னிறுத்துகின்றனர். இதன் மூலம் தங்களை புலிகளின் பிரதிநிதியாக முன்னிறுத்தவும்; - கட்டமைக்கவும் முனைகின்றனர். அரசு இனவாத ஒடுக்குமுறையை தொடருவதற்கும் - அதை நியாயப்படுத்துவற்கும் ஏற்ற வகையில், போலிப் புலிகளுக்;கு உயிர் கொடுக்கின்றனர். இதன் மூலம் மரணித்தவர்களின் உறவுகள் நினைவுகொள்வதை மறுத்து விடுகின்றனர்.

புலியெதிர்ப்பு "ஜனநாயகம்" பேசும் கூட்டமோ, புலியைச் சொல்லி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகொள்வதை மறுக்கின்றனர். மறைமுகமாகவும் - நேரடியாகவும் இனவொடுக்குமுறை செய்யும் அரசை ஆதரிக்கின்றனர். இப்படி போலி இடதுசாரியம் முதல் போலி ஜனநாயகவாதிகள் வரை, இனவொடுக்குமுறை இருப்பதை ஏற்றுக்கொண்டு அதற்காக போராட மறுப்பவர்கள். இவர்களும் ஒடுக்கப்பட்ட மக்கள் தம் உறவுகளை நினைவு கொள்வதை மறுக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகொள்ள உரிமையுடையவர்கள். புலிகளின் போராட்டம் தான் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதை என்று நம்பி, தம் உயிரை அர்ப்பணித்துக் கொண்டவர்களை, புலிகளின் பெயரில் மறுப்பது என்பது – அதே புலி அரசியல் தான். புலிகள் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றி அவர்களின் குழந்தைகளையே கொண்டு ஒடுக்கும் போராட்டத்தை நடத்தினரோ, அதே அடிப்படையில் மறுப்பது என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதே.

இப்படி இரண்டு இனவாதங்களும், போலி இடது மற்றும் «ஜனநாயக» புலியெதிர்ப்பு அரசியலும், மரணித்தவர்களின் உறவுகளில் இருக்கும் சமூகத் தன்மையை மறுக்கின்ற அதேநேரம், அதை தத்தம் இனவாத அரசியலுக்கும் - ஒடுக்குமுறைக்கும் - பிழைப்புக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த பித்தலாட்ட அரசியல் வண்டவாளங்களைப் விரிவாக இனம் கண்டு கொள்வோம்.

"மாவீரர்" குடும்பங்களின் இன்றைய நிலை என்ன?

"மாவீரராகாது" தப்பிப் பிழைத்தவர்களின் இன்றைய நிலையென்ன? ஒடுக்கப்பட்டு – வாழ்வின் அடிநிலையில் நசிந்து கிடக்கின்றவர்களின் வாழ்க்கை பற்றி கவலை கொள்ளாது, "மாவீரர்" குறித்துப் பேசுகின்ற அரசியல் என்பது - இந்த நிலைமைக்கு காரணமானவர்களை அரசியல் ரீதியாக கொண்டாடுவது தான்.

ஒடுக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இன்றைய வாழ்க்கையில் இருந்து நினைவுகொள்வதை மறுத்து, அவர்களின் இந்த நிலைக்கு காரணமானவர்களை நினைவு கொள்பவர்கள் யார்? கடந்தகால இனவாத அரசியல் மற்றும் கொலைகளில் சம்மந்தப்பட்டவர்களாகவோ, அந்த அரசியலை ஆதரித்தவராகவே இருக்கின்றனர்.

மரணித்தவர்களை நினைவுகொள்வதை மறுத்து மரணத்துக்கு காரணமானவர்களை நினைவு கொண்டு, அவர்களின் அரசியலை முன்னிறுத்துவதா "மாவீரர் தினம்".

ஒடுக்கிய எவனுக்கும், ஒடுக்கிய அரசியலுக்கும், அதையே இன்று போற்றுவோருக்கும், மரணித்தவர்களை நினைவுகொள்ளும் உரிமை கிடையாது. மாறாக நினைவுகொள்வது என்பது ஒடுக்கபட்டவனுக்கான உரிமை. ஒடுக்கியவனை நினைவுகொள்வது என்பது, ஒடுக்கப்பட்டவனுக்கு எதிரானது. தமிழனைத் தமிழன் ஒடுக்கும் அரசியலை முன்னிறுத்திய, முன்னிறுத்துகின்றவனே, "மாவீரர் தினம்" குறித்து பேசுகின்றான். ஒடுக்கப்பட்ட மக்களோ தங்கள் உறவுகளின் நினைவு குறித்து பேசுகின்றனரே ஒழிய, தன் உறவு "மாவீரர்" ஆனது பற்றி பெருமைப்படுவதில்லை. பெருமைப்பட சமூகம் எதையும், அவனுக்காக, அவன் குடும்பத்துக்காக, அவன் வாழ்ந்த சமூகத்துக்காக உருவாக்கவில்லை. "மாவீரர்" என்பது அவர்களின் வாழ்வோடு சம்மந்தமற்ற மரணம் என்பதால், ஒடுக்கப்பட்ட மக்கள் "மாவீரர்" குறித்து பேசுவதில்லை, மாறாக தங்கள் இன்றைய வாழ்க்கை நி;லை பற்றி பேசுகின்றனர். "மாவீரர்" குறித்து பேசுகின்;றவர்கள், ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் இன்றைய நிலை குறித்து பேசுவதில்லை.

இதற்கு முரணாக ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்படுகின்றவர்கள் மரணித்த உறவுகளை தங்கள் வாழ்க்கையில் முன்னிறுத்துகின்றனர். இப்படி இருக்க தமிழனைத் தமிழன் ஒடுக்குபவர்கள் தொடர்ந்தும் மக்களை ஒடுக்கும் அரசியலுக்காக "மாவீரர்" தினத்தை முன்வைக்கின்றனர்.

"மாவீரர்கள்" என்ற கூறப்படுவர்களின் உறவுகளின் வாழ்க்கையை யார் பேசுகின்றனர்? இது தான் இன்றைய கேள்வி. ஒடுக்கப்;படும் அவர்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். "மாவீரர்" என்று சொல்லி அரசியல் செய்பவர்களோ, செல்வங்களில் கொழிக்கின்றனர். இவர்களே அரச அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக, பெரும் பணக்காரர்களாக இருக்கின்றனர்.

"மாவீரர்" குடும்பங்களின் பெரும்பான்மையினர் ஒற்றைக் குடிலில் கூரையின்றி வாசல் இன்றி, அடுத்த நேரக் கஞ்சிக்கு வழிதெரியாது தவிக்கின்றனர். வாழ்க்கைத் துணையிழந்த பெண்கள் தங்கள் உடல் மீதான உரிமையை பாதுகாக்க, தமிழனை தமிழன் ஒடுக்கும் ஆணாதிக்க வர்க்க சமூகத்திற்கு முன், தவியாய் தவிக்கின்றனர். அரச அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக, பெரும் பணக்காரர்கள் முன் கூனிக்குறுகி நிற்பதுடன், இவர்களில் சிலர் தங்கள் உடலை லஞ்சமாக கோருவது கண்டு - செய்வதறியது பதறித் தவிக்கின்றனர். பெண் உடலை லஞ்சமாக கோரும் சிலர் "மாவீரர் தினம்" தமிழன் உரிமை என்று பேசுகின்றனர். உடலை லஞ்சமாக கோரப்பட்டவர்களில் கணிசமானவர்கள் மாவீரர் குடும்பங்கள். இவையெல்லாம் நடக்கின்றது என்று தெரிந்து, மௌனமாக ஒத்தோடுபவர்களே "மாவீரர்" தினம் பற்றி வாய்கிழிய பேசுகின்றனர். தமிழ் சமூக பொருளாதார அரசியல் மேலடுக்குகளில் இருப்பவர்கள் இவர்களே.

நடந்த ஆணாதிக்க இனவாத யுத்தம் பெண்களுக்கு விட்டுச் சென்ற பாலியல் நெருக்கடிகளுக்கும், உளவியல் சிக்கல்களுக்கும் தீர்வைத் தரவில்லை. பெண்களின் நடத்தையில் ஆணாதிக்க "ஒழுக்கத்தைக்" கோருகின்றவர்கள், இதை தங்கள் பாலியல் தேவைக்காக பயன்படுத்துகின்றனர்.

யுத்தத்தில் அங்கவீனமானவர்களும், தனித்துப் போன குழந்தைகளும், ஆதரவற்ற அனாதைகளாக - உளவியல் ரீதியாக சிதைந்து பசி பட்டினியுடன் கையேந்தும் வாழ்க்கை முறைக்குள் - அங்கும் இங்கும் செய்வதறியாது பரிதவிக்கின்றனர். இப்படி கைவிடப்பட்ட இவர்களே தங்கள் உறவுகள் குறித்தும் - அவர்களை நி;னைவுகொள்ளுகின்ற உரிமையைக் கொண்டவர்களாக இன்னமும் இருக்கின்றனர். மற்றவை எல்லாம் சடங்குகளாகவும் - பிழைப்புக்காகவும் அரங்கேற்றப்படுகின்றது.

ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றவர்களே, நினைவுகொள்ள உரிமையுள்ளவர்கள். தங்கள் அனைத்து உறவுகளையும் நினைவுகொள்ளும் பொதுநாளை, இந்த சமூகம் உருவாக்கவில்லை. ஒடுக்குபவனை கொண்டாடவும், அதையும் ஒடுக்கப்பட்டவன் கொண்டாட வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

இந்த வகையில் "மாவீரர் தினம்" "முள்ளிவாய்க்கால் நினைவு" என்று முன்னிறுத்துகின்றவர்கள், அதில் ஒடுக்கப்பட்ட மக்களையும் - அம்மக்களுக்கான அரசியலையும் முன்னிறுத்துவதில்லை. தங்கள் ஒடுக்கும் அரசியலையும், வர்த்தக நலன்களையும் சார்ந்து முன்னிறுத்திய கொண்டாட்டங்களையே - நி;னைவுகளாக அரங்கேற்றுகின்றனர்.

வர்க்க ரீதியாக ஒடுக்கும் வெள்ளாளியமே மனித நினைவை "மாவீரராக" முன்னிறுத்துகின்றனர். இவர்கள் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பேசுவதில்லை. பேரினவாத அரச ஒடுக்குமுறையில் சிக்கிச் சிதைகின்ற, இந்த மனிதர்கள் குறித்து அக்கறையற்றுக் கிடக்கும் கூட்டம், "மாவீரர் தினம்" குறித்து பேசுவது எதற்காக? போட்டி அரசியல் அறிக்கை விடுவது எதற்கு? இவர்களின் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் தம்மையொத்த கடந்தகால தலைவர்களையே "மாவீரராக" முன்னிறுத்துகின்றனரே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களையல்ல.

கடந்தகாலத்தில் காணாமலாக்கப்பட்டது முதல் கொல்லப்பட்டவர்களில் பின்னணியில், இலங்கை அரசு (இராணுவம்) மட்டும் ஈடுபடவில்லை. அரசுக்கு எதிராக, எதிர்தரப்பாக இருந்த புலிகளும், அரசுக்கு நிகராக பாரிய அளவில் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தவர்கள், முஸ்லீம் - சிங்கள கிராமங்களில் புகுந்து, அப்பாவி மக்களை வகைதொகையின்றி கொன்றவர்கள். இந்த கொலைகளை முன்னின்று வழிநடத்தியவர்களையும், அந்த அரசியலையும் நினைவுகொள்வதை "மாவீரர் தினம்" என்று முன்னிறுத்தி – அதை அரசியலாக முன்வைக்கின்றவர்களே - இன்று இனவாதத்தை தொடாந்து பேசுகின்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள், முன்பு புலிகளைப் போல் மக்களை கொலை செய்தவர்கள். பின் இலங்கை - இந்திய அரசுடன் சேர்ந்து கொலை வெறியாட்டம் போட்டவர்கள். இதற்கு துணை நின்றவர்கள். நீதிமன்றங்களில் தீர்ப்புகளை வழங்கியவர்கள்.

இவர்கள் இன்று "மாவீரர் தினம்" என்றும், "முள்ளிவாய்க்கால் நினைவுகள்" என்றும் கூச்சல் போடுகின்ற அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தவல்ல. இவர்கள் மாவீரர் குடும்பங்களின் இன்றைய அவலநிலைக்கு அரசியல்ரீதியாக காரணமானவர்கள். தங்களின் தனிப்பட்ட சொத்து சுகத்தை குவிக்க இனவாதத்ததையும் – கடந்த மனித இழப்புகளையும் பயன்படுத்துகின்றவர்கள்.

தொடர்ந்து ஒடுக்குபவனின் சுகபோகத்திற்காக "மாவீரர் தினமா" அல்லது ஒடுக்கப்பட்டவர்களின் அவலத்தில் இருந்து விடுபடுவதற்காகவா "மாவீரர் தினம்" என்பதில் இருந்தே, நினைவுகளையும் அரசியல்ரீதியாக முன்னிறுத்த வேண்டியிருக்கின்றது. இரண்டையும் வேறுபடுத்தாத அனைத்தும், ஒடுக்கியவனுக்கும் - தொடர்ந்து ஒடுக்குபனுக்கும் துதிபாடுவதே.

யுத்தத்தின் பின்னான வாழ்க்கையின் எதார்த்தம் என்ன?

மனிதமோ செத்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் சமூகம் உதிரியாகி, சமூகத் தன்மையை இழந்து கிடக்கின்றது. மனித அவலங்கள், ஏமாற்றிப் பிழைப்பதற்கானதாக மாறி இருக்கின்றது. புலம் பெயர் உதவிகள் ஒடுக்கப்பட்ட மக்களை சென்றடைவதில்லை. இடையில் உள்ளவர்கள், கணிசமான தொகையை ஏப்பமிடுகின்றனர். புலம்பெயர் உதவிகள் இனவாதம், சாதியம், கட்சி, பிரதேசம், வர்க்கம் … கடந்து செல்வதில்லை. கோயில்கள் பெயரில் குவியும் பணம், வரண்டுவிட்ட கொங்கிரிட் குவியல்களாக மாறிக் கிடக்கின்றது. மாணவர்களின் கல்வியின் பெயரில் பணவேட்டையானது – பாடசாலைகளை ஊழலின் உறைவிடமாக்கி விட்டது. பணமின்றி அரசு அலுவலை பெண் பெறுவதற்கு – உடலை லஞ்சமாக (குறிப்பாக வீட்டுத்திட்டம், நுண்கடன், வேலை, குழந்தையை பாடசாலையில் சேர்க்க.. ) கோருமளவுக்கு சமூகம் புளுத்துவிட்டது. இதை பற்றி "மாவீரர்" தினம் குறித்து பேசுகின்ற எவனும் - எவளும் பேசுவதில்லை. இதை செய்பவர்கள் இவர்களாகவோ அல்லது இவர்களின் அரசியல் கூட்டாளியாகவோ – பணக் கூட்டாளியாகவோ இருக்கின்றனர்.

2009 யுத்தம் முடிந்த பின்னான தரவுகளின் படி, வடகிழக்கில் 90000 பெண்கள் தங்கள் துணையை இழந்திருக்கின்றனர். இதில் இலங்கை அரச ஒடுக்குமுறையால் மட்டும் தங்கள் துணைகளை இழந்தவர்களல்ல. புலிகளால் துணையை இழந்தவர்கள், அரச கூலிப்படையாக இயங்கிய புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ், ரெலோ, ஈரோஸ், ஈ.பி.டி.பி .. இயக்கங்களால் தங்கள் வாழ்க்கை துணையை இழந்தவர்கள், முஸ்லிம் கூலிப்படையால் துணையை இழந்தவர்கள், இந்திய அமைதி காக்கும் ஆக்கிரமிப்பு படையால் துணையை இழந்தவர்கள் என்று, பல முகம் கொண்டவை. இதில் தமிழ் பெண்கள் மட்டுமல்ல வடகிழக்கில்; வாழும் முஸ்லிம், சிங்கள பெண்களும் அடங்கும். யுத்தத்தில் சிக்கி தற்செயலாக இறந்தவர்களுக்கு அப்பால், திட்டமிட்டு கொல்லப்பட்ட சம்பவங்களும், கூட்டுக் கொலைகளும் இவற்றில் அடங்கும்.

இங்கு யுத்தத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் பற்றியல்ல, தங்கள் இனவாத மற்றும் ஜனநாயக மறுப்பு கொள்கைக்காக ஏனையோரைக் கொன்று குவித்தவர்களே, இன்று தங்களைத் தாங்களே கொண்டாட முனைகின்றனரே ஒழிய – தங்களால் மரணித்துப் போன மனிதர்களை நினைவுகொள்வதை அரசியல்ரீதியாக மறுதளிக்கின்றனர். அரசு இன்று இனவொடுக்குமுறையின் வடிவில் மறுதளிக்க – தமிழ் இனவாதிகள் தங்கள் ஒடுக்கும் அரசியல் இருந்து மறுதளிக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய வாழ்க்கையை விட்டுவிட்டு கட்டமைக்கப்படும் போலி உணர்வுகள் என்பது புரட்டுத்தனமானவை. ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து அடிமைப்படுத்துபவை. ஒடுக்கப்பட்ட மக்களின் உறவுகள் அவர்களின் வாழ்க்கை சார்ந்த அரசியற் போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் ஒடுக்குமுறையாளர்களின் அரசியல் தேவைக்காகப் பலியிட்டவர்கள், இன்று அதே அரசியல் கண்ணோட்டத்தில் அவர்களின் கண்ணீரை பயன்படுத்துகின்றனரே ஒழிய – ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் விடுதலைக்காக அல்ல.

மனிதவிரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விட்டு புலம்பும் நினைவுகள் வாழ்வாகி, அதுவே மனித அவலமாகி நிற்க – அதை வியாபாரமாக்குகின்றது இனவாதக் கூட்டம்.

அன்று ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தவர்கள் இன்று அதையும் இழந்து, தங்கள் உறவுகளின் நினைவுகளுடன் போராடுகின்ற அனைவரையும் முன்னிறுத்தி, இருக்கும் போலிகளை இனம் கண்டு கொள்வதே, உண்மையான மனித அஞ்சலியாகும். ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தியே, தொடரும் இனவொடுக்குமுறை அரசை எதிர்த்துப் போராடுவது மட்டும் தான் - மரணித்த உறவுகளின் இன்றைய எதார்த்த வாழ்க்கையுடன் ஒன்றுகலந்த சமூக உணர்வாகும்;.

27.11.2020