மாநில அமைப்புக் கமிட்டியில் நடப்பது, கீழ் இருந்து மேலாக, மேல் இருந்து கீழான விவாதமல்ல. மாறாக மேல் இருந்து கீழாக முடிவுகளை முன்நகர்த்தும் நபர்களுக்கு இடையிலான - அதிகாரத்துக்கான முரண்பாடுகளே.

மறுபக்கம் தலைமை மட்டத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகி இருக்கின்றது. முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சி அணிகள், அரசியலற்ற வன்மங்களை எதிர்தரப்பின் மீது கொட்டுவதுடன் - தனிநபர்களின் பிறப்பிலான சாதியை முன்னிறுத்தி வசைபாடுவதே அரசியலாக அரங்கேறுகின்றது.

இந்தப்போக்கை தலைமை பல வருடங்களாக அங்கீகரித்து வருகின்றது. அரசியலை முன்னிறுத்துவதற்குப் பதில், தனிநபர்களை முன்னிறுத்தும் அனைத்து குணங்குறிகளுடன் கட்சி பிளவுண்டுள்ளது. இது கடந்த பல வருடங்களாக அவதானிக்கப்பட்ட ஒன்று.

இன்று பிளவுடன் கூடிய தனிநபர் அதிகாரத்துக்காக நடக்கும் இழுபறிகளில், அரசியல் முரண்பாடுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை, அதேநேரம் சுயவிமர்சனம் என எதையும் காணமுடியவில்லை.

 

இந்த நிலைமை மாநில அமைப்புக் கமிட்டியில் எப்படி உருவானது என்பதை அரசியல்ரீதியாக புரிந்துகொள்வது, புரட்சிகர சக்திகளுக்கு அவசியமானதாகும். இதுமட்டும் தான் விமர்சனம், சுயவிமர்சனத்துக்கான அரசியல் அடித்தளத்தை வித்திடும்.

மானிட விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடியதன் மூலம் உருவான ஒரு கம்யூனிச இயக்கம், இன்று தனிப்பட்ட மனிதர்களின் அதிகாரத்துக்கான இயக்கமாக குறுகி – அதன் காரணமாக பிளவுண்டுள்ளது. இந்தப் பிளவுக்கு முன்பே இந்த அமைப்புடன் இணைந்து பல பத்து வருடங்கள் போராடிய பலரை, கட்சிக்கு வெளியில் தள்ளி வந்துள்ளது. அப்படி வெளியேற்றப்பட்டவர்களை பொருளாதார ரீதியாகவும் - உளவியல் ரீதியாகவும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துமளவுக்கும், கட்சிக்குரிய சமூக ஜனநாயகப் பண்புகளை கூட - கட்சி இழந்திருந்தது. எல்லாம் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கின்ற இயங்கியல் விதிக்கு, தங்கள் தோழர்களுக்கும் தம்முடன் இல்லாத தோழர்களும் பொருந்தும் என்பதை மறுத்துவிடும் கட்சி, இயங்கியலற்ற அதிகார வர்க்க கட்சியாக சீரழிந்து விடுகின்றது.

தமக்கும், தம் கருத்துக்கும் உடன்படாத பலரை கட்சியை விட்டு தூக்கியெறிவது என்பது, கடந்தகால நடைமுறையாக இருந்து வந்துள்ளது. மாறுபட்ட கருத்து, சிறுபான்மை கருத்துகளை எல்லாம் எதிரியின் கருத்தாக அணுகும் கண்ணோட்டம், விவாதங்களை அனுமதிக்காது தோழமையை இல்லாதாக்கி விடுகின்றது. விவாதமின்றி முடிவுகளை மேல் இருந்து எடுக்கும் அணுகுமுறையே, இன்று இரு அணியாக பிரிந்து ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்கின்றது. தனிநபர்கள் மார்க்சிய தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் ஜனநாயக அரசியல் கோட்பாடுகளை கைவிட்டு, அரசியலற்ற அதிகார முரண்பாடாக - ஆளுக்கொரு அறிக்கைகளுடன் மோதுகின்றனர். இதை மூடிமறைக்க போராட்டங்களையும் அறிவிக்கின்றனர்.

கடந்தகாலம், நிகழ்காலம் குறித்து எந்த சுயவிமர்சனமும் கிடையாது. பரஸ்பரம் அதிகார நலன்களை முன்வைத்து - அதை நியாயப்படுத்த முன்வைக்கும் கடந்தகால கம்யூனிச வரலாற்று அனுபவங்களை பொருத்துவது பொருத்தமற்றதுடன்; - வெற்றுத்தனமானதுமாகும். அரசியல் ரீதியாக தங்களை முன்னிறுத்தவும் - அரசியல் ரீதியாக மறுதரப்பை அணுகவும் முடியாது, பதவி நீக்கங்களும் - பதவி ஏற்றங்களுமே நடந்தேறுகின்றது. இனிதான் இதற்கு ஏற்ற அரசியல் கண்டுபிடிப்பையும் - அரசியல் பொழிப்புரையையும் வழங்குவார்கள்.

ம.க.இ.க - மாநில அமைப்பு கமிட்டியின் இந்த அக முரண்பாடுகளுக்கு - என்ன தான் அரசியல் சாயம் பூச முற்பட்டாலும் - அரசியலற்ற வங்குரோத்துத்தனமே, தனிநபர்கள் குறித்த விவாதமாக மாறி இருக்;கின்றது. கட்சி அணிகள் அரசியலற்ற பின்னோட்டங்கள் மூலம் - தங்கள் அரசியலற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றனர். ஊழலால் கட்சி அம்பலமாகிறது. இவை கடந்தகாலத்தில் அவதானிக்கப்பட்ட ஒன்று. பிற தரப்புக்கு எதிராக தங்கள் கட்சியைப் பாதுகாக்கும் அரசியலற்ற அவதூறுகள், இன்று தனிநபர்களை பாதுகாக்கும் அவதூறுகளாக மாறி இருக்கின்றது.

தலைமை முதல் கட்சியின் பிற அணிகள் வரை அரசியல் ரீதியான முரண்பாடு என்ன? இதில் தங்கள் நிலைப்பாடு என்ன என்ற அரசியல் விவாதத்தை நடத்தவில்லை. உண்மையில் அரசியல் விவாதமாக இருந்திருந்தால், இன்று இவர்கள் கையாளும் வடிவத்தில் இந்த முரண்பாடு கையாளப்பட்டு இருக்காது. அரசியலற்ற சூழலிலே, இன்றைய அதிகாரத்துக்கான காய் நகர்த்தலாக மாறி இருக்கின்றது. ஒரு அமைப்பு வடிவம் மூலம், உறுப்பினர்கள் மேலான அதிகாரங்கள் மூலம் கட்டுப்படுத்தும் ஒரு கட்சி, ஜனநாயகத்தை இழந்து விடுகின்றது. மாறாக தனிநபர் அதிகாரமாக, தனிநபர் வழிபாடாக மாறி கட்சியை இல்லாதாக்கி விடுகின்றது. தொடர்ந்து வர்க்க கட்சியாக நீடிக்க முடியாது போகின்றது.

கம்யூனிசக் கட்சியும், அது கொண்டிருக்கக் கூடிய ஜனநாயக மத்தியத்துவம், எந்த கருத்தையும் சுதந்திரமாக முன்வைக்கவும் விவாதிக்கவும் கூடிய ஜனநாயகம் என்பது அரசியல் ரீதியானது. இதை இந்தக் கட்சி கொண்டிருக்கவில்லை என்பதை இன்றைய நடைமுறை காட்டுகின்றது. இந்த அரசியல் பின்னணியில் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் அதிகாரப் பறிப்புகளும் - மாற்றங்களும், அரசியலுக்கு அப்பாற்பட்டது. நடப்பது அதிகாரத்துக்கானதே ஒழிய – ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்னிறுத்தியல்ல.

இடதுவிலகல் – வலதுவிலகல் குறித்தும், ஆய்வற்ற அரசியல் குறித்தும்

தனிநபர் அதிகாரத்துக்கான முரண்பாட்டை கட்சிக்கு வெளியில் இருப்பவர்களும், கட்சியில் இருந்து வெளியேறிவர்களும் - வெளியேற்றப்பட்டவர்கள், இடது விலகல் - வலது விலகல் மற்றும் சமூக ஆய்வற்ற அரசியல் முடிவுகளாக முன்வைக்கின்றனர். இங்கு அரசியல் கண்ணோட்டத்தை ஆராய்வது அவசியம். அதிகாரத்துக்காக மோதலில் ஈடுபடுபவர்கள், தங்களை நியாயப்படுத்த முன்வைக்கப் போகும் எதிர்கால அரசியல் வாதம் இதுவாகவே இருக்கும் என்பதால் - அதை முன்கூட்டியே அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாக்குவது அவசிமாகும்.

இந்திய சமூகம் குறித்த சமகால ஆய்வு இன்மைதான் இதற்கு காரணமா எனின், இல்லை. இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கும் சமூக அமைப்பில், நிரந்தரமான ஆய்வு எதுவும் சாத்தியமில்லை. ஆய்வுகளும் முடிவுகளும் கூட மாறிக்கொண்டு தான் இருக்கும். இதனால் தன்னியல்பாக கட்சி செயற்படவும் முடியாது. எப்போதும் எல்லாவற்றையும் விவாதிக்கின்ற ஜனநாயக சூழலை கட்சிக்குள்ளும் - வெளியிலும் உயிரோட்டமாக வைத்திருக்கவேண்டும். மாறும் சூழலுக்கு ஏற்ப கட்சி தன்னை எப்போதும் மாற்றிக்கொள்ள வேண்டும்;. இது தான் ஆய்வாக – நடைமுறையாக இருக்கவேண்டும்.

இதை மாநில அமைப்புக் கமிட்டி கொண்டிருக்கவில்லை. தனிநபர் முடிவுகளை தங்கி வாழ்ந்த கட்சி, தனிநபர்களை ஆய்வை நடத்துமாறு கோருகின்றது. கட்சி முழுமையிலும் விவாதத்தை தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம், அதில் தனிநபர்கள் பாத்திரத்தை முன்வைக்கவில்லை. மாறாக தனிநபர் பாத்திரத்தை முன்னிறுத்தி - அதை கட்சி விவாதமாக கோரியதும், அதை நடத்தாமையை இன்றைய நிலைக்கான காரணம் என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு இருப்பது தனிநபர் வழிபாட்டு அரசியல் நடைமுறை தான். இது தான் தனிநபர் அதிகாரத்திற்கான அரசியல் அடித்தளம்;.

கட்சி அமைப்பு உருவாக்கும் அதிகாரம் என்பது வர்க்கத்திற்கான அதிகாரமே. இதற்கு பதில் அதை தனிநபர் அதிகாரமாக குறுக்கிவிடுகின்ற சிந்தனைமுறை – அமைப்பின் அரசியலற்ற வழிபாட்டு முறையில் இருந்து உருவாகின்றது.

இதை லெனினுக்குப் பிந்தைய சோவியத்தில் குறிப்பாக 30 க்குப் பிந்தைய காலத்தில் காண முடியும். தனிநபர்களின் அரசியல் ரீதியான வரலாற்றுப் பாத்திரம் - தொடர்ச்சியாக சரியானதாக நீடித்த ஒரு கட்சியில், தனிநபரின் முடிவுகள் மீது விவாதமற்ற வழிபாட்டுக்கு இட்டுச் செல்லுகின்றது. தனிநபர் முடிவுகள் சரியாக இருந்தாலும், கட்சியில் மாற்றுக் கருத்தற்ற - விவாதங்களின்றி கட்சி தேங்கி விடுகின்றது. மாறாக தனிநபர் முடிவுகளை முன்னிறுத்தி வழிபாடு தோன்றுகின்றது. இது மாற்றுக்கருத்தை எதிராக பார்க்கின்ற அளவுக்கு, கட்சியும் அதன் நடைமுறையும் குறுகி சீரழிந்து விடுகின்றது. தனிநபர்களையும் அவரின் முடிவுகளையும் சார்ந்திருக்கும் கட்சி, தொடர்ந்து வர்க்கக் கட்சியாக இருக்க முடியாது போகின்றது. இது சோவியத்துக்கு மட்டுமின்றி, சீனாவின் இறுதிக்கால மாவோவுக்கும் பொருந்தும்.

தனிநபர் அதிகாரம், முடிவுகள் வழிபாட்டுக்குரியதாக மாறுகின்ற போது, கட்சி உயிரோட்டமுள்ள அரசியல் விவாதத்தையும் ஒழித்துவிடுகின்றது. விவாதத்துக்குரிய அமைப்பின், ஜனநாயக வடிவங்களையும் இல்லாதாக்கிவிடுகின்றது. இது இயல்பில் வர்க்க கட்சியாக இருக்க முடியாது போகின்றது. தனிநபர்கள் தங்கள் முடிவுகள் சரியானது (முடிவுகள் சரியானதாக இருக்கலாம்;) என்ற அடிப்படையில், தனிநபர் அதிகாரத்துக்கான மோதல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுதான் ம.க.இ.க - மாநில அமைப்பு கமிட்டிக்குள்; நடந்தது. 40 வருடங்களுக்கு மேலாக இயங்கும் கட்சியும் - கடந்தகால அதன் சரியாக பல பக்கங்களும் - வரலாற்று ரீதியான தலைமையை உருவாக்குகின்றது. படிப்படியாக சரியான முடிவுகளுக்காக தலைமையை - தனிநபரை சார்ந்திருக்கும் கட்சியாக மாறி, இது உயிரோட்டமுள்ள அரசியல் விவாதத்தை கட்சியில் இல்லாதாக்கிவிட்டது. தனிநபர்களின் சரியான முடிவுகளின் பின்னணியில் வழிபாட்டு முறை கொண்ட கட்சியாக மாறிவிட்ட பின்னணியில், அதிகார வர்க்கம் இயல்பாக தோற்றம் பெறுகின்றது.

இந்தச் சூழலில் இந்திய பார்ப்பனிய சமூக அமைப்பானது காப்பரேட் காவி பாசிசமயமாகி வருகின்றது. இத்தகைய அரசியல் சூழலில் தனிநபர் அல்லது தலைமை முடிவுகளை விவாதமின்றி முன்னெடுக்கும் போது, வலது - இடது விலகல்களுக்கு வித்திடுகின்றது. குறிப்பாக பார்ப்பனியம் பாசிசமாகும் போது, அதற்கு எதிராக அம்பேத்கரிய இயக்கங்களும்; - பெரியாரிய இயக்கங்களும் போராடத் தொடங்குகின்றது. இதை அரசியல் ரீதியாக அணுகாத விவாதமற்ற கட்சி, இயல்பாக வலது விலகலுக்கு செல்லுகின்றது.

கட்சியின் ஜனநாயகம் என்பது கீழ் இருந்து மேலாகவும், மேல் இருந்து கீழாகவும் தொடர்ந்து விவாதிக்கின்ற போது சாத்தியம். இந்த அடிப்படையில் கட்சி தனக்கான அமைப்பு பொறிமுறையை கொண்டிருக்காது, முடிவுகள் மேல் இருந்து அதிகார வடிவத்தில் சார்ந்திருத்தலானது தனிநபர் வழிபாட்டுக்கு வித்திடுகின்றது.

பார்ப்பனிய பாசிசத்தை எதிர்த்து அம்பேத்கரிய - பெரியாரிய இயக்கங்களின் அரசியலை - அரசியல் ரீதியாக கட்சிக்குள் கீழ் இருந்து மேலாக விவாதிக்காது எடுக்கும் முடிவுகள், இயல்பாக கட்சி அணிகளை மட்டுமல்ல, அம்பேத்கரிய - பெரியாரிய இயக்கங்களிலும் கூட, புரிதலற்ற வழிபாட்டு எல்லைக்குள் வளர்ச்சி பெறுகின்றது. இது இன்றைய தமிழகத்தின் பொது நிலை.

தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வு, அரசியல்மயமாதல் என்றுமில்லாத அளவில் நடக்கின்றது, ஆனால் அவை வழிபாட்டு முறையில் நடந்தேறுகின்றது. அரசியல் ரீதியாக அல்ல. இது தான் மார்க்சியத்துக்கும் நடக்கின்றது. வெறும் கோசங்கள், தனிநபர் போற்றுதல், அம்பேத்கர் - பெரியார் பெயர்களை சொல்லி.. தங்களை முன்னிறுத்தலே நடக்கின்றதே ஒழிய, அரசியல் விவாதங்கள் மூலம் அரசியல்மயமாதல் நடப்பதில்லை. நடைமுறைப் போராட்டங்களில் கூட வெறும் கோசங்களைத் தாண்டி - அரசியல் மயமாதல் நடப்பதில்லை. இதற்குக் காரணம் மார்க்சிய இயக்கங்கள் மேல் இருந்து முடிவுகளை முன்வைக்கும் கோசங்கள் பின் - ஏற்பட்டுள்ள வழிபாட்டு முறை தான் காரணம்.

கட்சிக்குள், கட்சிக்கு வெளியில் விவாதமற்ற முடிவுகளின் அடிப்படையிலான கோச அரசியல் வலது சந்தர்ப்பவாதத்துக்கும், இறுதியில் அதை மறுக்கும் இடது சந்தர்ப்பவாதத்துக்கும் இட்டுச்செல்லுகின்றது.

மேலிருந்து வரும் வலது - இடது முடிவுகளை முன்னெடுக்க மறுக்கும் போது, இறுதியில் தனிநபர் அதிகார பிரச்சனையாக மாறுகின்றது. இதுதான் பிளவின் அரசியல் அடிப்படை.

வலது - இடது விலகலுக்கான சமகால பிரச்சனைகள்

1.அம்பேத்கரிய - பெரியாரிய இயக்கங்கள் குறித்த தத்துவார்த்த அரசியல் விவாதங்கள் இன்றி வழிபாடாக மாறி இருக்கின்றது

2.ஈழ விடுதலை இயக்கங்கள் - ஈழ தமிழ் தேசியவாதம் வரை, தத்துவார்த்த அரசியல் கண்ணோட்டம் இன்றி வழிபாடாக முன்னெடுக்கப்படுகின்றது

3.தேர்தல் அரசியலில் பங்குபற்றுவதன் மூலம் - அதை வர்க்க அரசியலுக்கு பயன்படுத்துவது குறித்து அணுகாது – கண்மூடித்தனமான வரட்டுத்தனமான முடிவுகளுடன் அணுகுவது

4.மாவோ கால யுத்த தந்திரங்கள் - நடைமுறை தந்திரங்கள் மாறிவிட்ட இன்றைய சூழலுக்கு பொருத்தமற்றதாகி விட்ட சூழலை மறுதளிப்பது

5.ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம் மாறிவிட்ட ஜனநாயக மற்றும் கருத்து பரிமாறும் சூழலுக்கு ஏற்ப, புதியவடிவில் கையாளுவதை மறுத்தல். அதாவது லெனினிய – மாவோ கால ஜனநாயக வடிவமோ - கருத்துப் பரிமாறும் ஊடகங்களுக்கு பதில் - இன்று முன்னேறிய வடிவில் இல்லாததாகியுள்ள சூழலுக்கு ஏற்ப - கட்சி வடிவங்களை ஜனநாயகப்படுத்துதல். எல்லாம் இயங்கிக் கொண்டும் எல்லாம் மாறிக் கொண்டு இருக்கும் போது, ஜனநாயக வடிவத்துக்கும் - அதன் மத்தியத்துவத்துக்கும் இவை பொருந்தும்;

6.பாசிசத்துக்கு எதிரான ஜக்கிய முன்னணித் தந்திரம். பிற வர்க்கங்கள், போராடும் சமூக ஜனநாயக குழுக்கள், தேர்தல் கட்சிகள் வரை… கோட்பாடு மற்றும் தத்துவார்த்த ரீதியாக விவாத கண்ணோட்டமின்றி அணுகுதல்

இப்படி பல விடையங்கள்.