மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

இனவாத யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கைச் சமூகங்களுக்கு இடையில் நடக்கும் ஒன்றுகலப்பு என்பது இன முரண்பாடுகளைக் கடந்து பயணிக்கின்றது. இனம் மொழி கடந்த கலப்பு திருமணங்கள் முதல் நாடு முழுக்க குறுக்கு நெடுக்காக பயணிக்கும் போக்குவரத்துகள் வரை, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன, மொழி கடந்த  ஒன்றிணைந்த வாழ்க்கை முறையானது, குறுகிய எல்லா சிந்தனை மற்றும் வாழ்க்கை முறைக்கும் சவால் விடுகின்ற ஒன்றாக மாறிவருகின்றது. இதற்கு எதிராக அடிப்படைவாதங்கள் கட்டியமைக்கப்படுகின்றது.

2. யாழ்ப்பாணத் தமிழர்களுக்குள்ளான சாதியத்துக்கு எதிராக 1960 களில் பொது இடங்களை பயன்படுத்தும் உரிமைக்கான ஒரு சாதியப் போராட்டம் நடந்தது. குறித்த கோரிக்கையில் நடந்த போராட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றியும் பெற்றனர். அதேநேரம் சாதிச் சடங்குகள், சம்பிரதாயங்கள் முதல் கோயில்களில் நடந்த சாதிய ஆகமங்களையும் விட்டு வைத்ததுடன், தனிப்பட்ட மனிதன் சாதியைப் பின்பற்றுவதை அப்படியே அனுமதித்தது.

1970 களில் எழுந்த தமிழ் தேசியப் போராட்டமானது இனப் போராட்டமாக குறுகியதன் மூலம் கோட்பாடு மற்றும் நடைமுறையில் சாதியக் கூறுகளை பாதுகாத்து உறுதி செய்தது. இருந்த போதும் யுத்தமானது எல்லா சாதிகளையும் உள்வாங்கியது. யுத்தமும், இடம்பெயர்வும், சாதிய அடிப்படையிலான கிராமிய வாழ்க்கை முறையைத் தகர்த்தது. சாதிய அடிப்படையிலான பொருளாதார பண்பாட்டுக் கூறுகள் யுத்தத்தினால் சிதைந்ததன் மூலம், உடல், உடையிலான சாதிய தோற்ற வேறுபாட்டை இல்லாதாக்கியது. யார் யார் எந்தச் சாதி என்பதைத் தோற்றம், உடை, வாழ்விடம் மூலம் இனம் காண முடியாமல் போனது. அதாவது சாதிச் சமூக வாழ்க்கை முறை, ஒழுங்கு குலைந்து கலந்து போனது. போராடியவர்களுக்கு இடையில் சாதி கடந்த திருமணங்கள் முதல் அகதியான மக்களுக்கு இடையில் சாதி கடந்த கலப்புகளும் நிகழ்ந்தது.

யுத்தத்தின் பின்னான மீள் குடியேற்றமானது மீண்டும் சாதியக் கிராமங்களைக் கொண்டதாக உருவாகி வருகின்றது. சாதி ஆகம கோயில்களை மையப்படுத்திய சாதியக் கிராமங்களாக யுத்தத்தின் பின் சாதி எழுச்சி பெற்று வருகின்றது. அதாவது சாதி ஒழுங்கு ஆகமக் கிராமங்கள் மூலம் வெள்ளாளியம் எழுச்சி பெற்று வருகின்றது. முந்தைய சாதியக் (திருமணம் மூலம்) கலப்புக்கும், சாதி கடந்த (வெளிநாட்டு வெள்ளாளர்கள் தங்கள் தனிப்பட்ட "சுயநலன்" சார்ந்து நிலத்தை மற்றைய சாதிக்கு விற்றதன் மூலமான) ஊர் கலப்புக்கும் எதிரான, அடிப்படைவாத வெள்ளாளச் சிந்தனையாக சாதிய சமூகம் மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக 1960 களில் பொது இடங்களை பயன்படுத்தும் உரிமையை வென்றெடுத்த ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைகள் கூட, இன்று மறுப்புக்கு உள்ளாகின்ற அளவுக்கு வெள்ளாளச் சாதி மீள் உருவாக்கம் பெற்று வருகின்றது. சாதி மத அடிப்படைவாதமாக இவை மாறிவருகின்றது.

3. மேற்கூறிய இரண்டு அடிப்படையான சமூகக் கூறுகளுமே, யாழ் சமூகத்தில் சாதி மத அடிப்படைவாதம் மீளத் தோன்றுவதற்கான காரணமாக இருக்கின்றது. அதேநேரம் உலகமயமாக்கம் கொண்டு வரும் நவதாராளமயத்தை, சார்ந்ததாக இருக்கின்றது. இலங்கையில் உலகமயமாக்கத்தை தென்னாசிய பிராந்திய வல்லாதிக்க நாடான இந்தியாவூடாகவே  முன்நகர்த்தப்படுகின்றதால் மேற்கூறிய இரண்டு அடிப்படைகளுக்கும் செயற்களமாக இருக்கின்றது. இதை இந்தியாவே முன்னின்று முன்நகர்த்துமளவுக்கு, உலகமயமாதலின் கொள்கையாக மாறிவிடுகின்றது.

இலங்கை அரசு இந்திய நலன்களை முதன்மையாகக் கொண்டு செயற்படும் அதேநேரம் இந்தியா நேரடியாகவே இலங்கையில் தலையீடுகளைச் செய்கின்றது. இந்த வகையில் இந்தியாவானது தனது நாட்டு மத சாதிய அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்டு வருவதுடன், இலங்கை பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் அதை முன்னெடுக்கின்றது. இலங்கையில் கலை கலாச்சாரம் முதல் சிவசேனா வரை, விதிவிலக்கின்றி அனைத்தும்  சாதி மத அடிப்படைவாதத்தை வித்திட்டு வளர்த்தெடுக்கின்றது.

முடிவாக

மொழி, இனம், சாதி, மதம் கடந்த ஒன்றுகலப்புக்கு எதிராகவே சைவ வேளாள சாதித் தமிழர்களிள் சிந்தனையானது தோற்றம் பெறுகின்றது. இந்த அடிப்படையில் இந்தியாவின் உலகமயமாக்கமும் இணைந்து பயணிக்கின்றது. இவை அடிப்படைவாத சாதி மத சிந்தனையாக வெளிப்படுகின்றது.